பலனளிப்பவன் ஈச்வரனே ! : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

பக்தி செலுத்துவதால் முக்தி கிடைத்துவிடுமென்று சொன்னால் நாம் செலுத்தும் அந்த பக்தியே நேராக முக்தியைக் கொடுத்து விடுகிறது என்று அர்த்தமில்லை. நாம் செய்கிற எதுவுமே தானாக எந்தப் பலனையும் தருவதில்லை; பலன்களைத் தருகிற பலதாதாவாக ஈச்வரனே இருக்கிறான். அவன்தான் பாபபுண்யம் பார்த்து எல்லாருக்கும் எல்லாப் பலனையும் கொடுக்கிறான். அவ்விதத்தில் நாம் பண்ணுகிற பக்திக்குப் பலனாக அவன் பரம க்ருபை செய்து, ஞானத்தைத் தந்து, அந்த ஞானத்துக்குப் பலனாக மோக்ஷாநுபூதியைக் கொடுக்கிறான். ஆக, பலன் தருவது நாம் பண்ணும் பக்தியே அல்ல; அதற்குப் பிரதியாக ஈச்வரன் செய்யும் கிருபைதான் பலனைத் தருவது.

பக்தி நிஜமானதாக இருந்தால் பக்தி பண்ணுகிறவன் அதற்கு ப்ரதியே எதிர்பார்க்க மாட்டான். ப்ரதி ப்ரயோஜனம் எதிர்பார்த்து விட்டால் அது வியாபாரம்தானேயொழிய பக்தி இல்லை என்றே பாகவதாதி நூல்களில் சொல்லியிருக்கிறது. இப்படி பக்தன் (பிரதி வேண்டாமல்) இருந்தாலும் இவனிடமிருந்து நிஜமான பக்தியைப் பெற்றுக் கொண்ட பகவானுக்கு மனசு கேட்குமா? அதனால் அவன் க்ருபை பண்ணத்தான் பண்ணுவான். ஞானத்தை அநுக்ரஹிக்கத்தான் செய்வான். பக்தனை ஸம்ஸாரத்திலிருந்து விடுவித்து மோக்ஷத்தில் சேர்க்கத்தான் செய்வான்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is இரண்டு பக்திகளா?
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  இரண்டு க்ருபைகளா?
Next