ஆனைக்கா ஆனைமுகன் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

பிள்ளையாருடைய மனஸ் எத்தனை நல்லது என்பதற்கு ஒன்று சொல்லிவிட்டால் போதும். ஒருத்தரின் கிட்டேயே கோபம் நெருங்க முடியாது; மஹா கோபிஷ்டர்கூட அவருக்கு முன்னால் தானாகவே சாந்தமாகிவிடுவாரென்றால் அப்படிப்பட்டவர் வெகு நல்ல மனம், உயர்ந்த அன்புள்ளம் படைத்தவராகத்தானே இருக்க வேண்டும்? இப்படி ஒரு உதாஹரணம் பிள்ளையார் விஷயமாக இருக்கிறது. நம் எல்லோரிடமும், ஈ எறும்பிலிருந்து ஆரம்பித்து அத்தனை ஜீவராசிகளிடமும் பரம கிருபையோடு இருக்கக்கூடிய ஒருவர் யார்? ஸாக்ஷாத் அம்பாள் தான். இத்தனை ஜீவராசிகளுக்கும் தாயாக இருக்கப்பட்ட அகிலாண்ட ஜனனி அவள்தானே? அப்படிப்பட்ட அந்த அகிலாண்டேச்வரியே ஒரு ஸமயம் உக்ர ரூபம் கொண்டிருந்தாள். ஜம்புகேச்வரத்தில் (திருவானைக்காவில்) இருக்கப்பட்ட அகிலாண்டேச்வரி கலிகாலத்தில் ஜனங்கள் போகிற போக்கைப் பார்த்து இப்படி உக்ரக் கோலமாக ஆகிவிட்டாள். ஸகல சக்தியும் அவள்தானாகையால் அன்பில் பரம ஸெளம்யமான லலிதாம்பாளாக இருக்கப்பட்ட அவளே கோபம் வந்தால் அதன் உச்சியில் காளியாயிருப்பாள். இப்போது அப்படித்தான் ஆகியிருந்தாள்.

கலியைக் கட்டுப்படுத்தி வைப்பதற்காக அவதாரம் செய்திருந்த நம்முடைய ஆசார்யாள் அங்கே வந்தார். பரமேச்வராவதாரமானதால் அவரால் உக்ரகோலத்திலிருக்கிற அம்பாளிடமும் போகமுடியும். ஆனாலும் அவர் இந்த ஸந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு பிள்ளையாரின் அன்பு மனப்பெருமையை உலகத்துக்குத் தெரிவிக்க நினைத்தார். அதனால் அம்பாளுக்கு நேர் எதிரே, கோவில் முடிந்து மதில் வந்துவிடுகிற அவ்வளவு தூரத்திலே, பெரிசாக ஒரு பிள்ளையாரை ப்ரதிஷ்டை பண்ணிவிட்டார்!

அவ்வளவுதான்! செல்லப்பிள்ளை எதிரே இருக்கிறான் என்றதும் அம்பாளுடைய அத்தனை உக்ரமும் போன இடம் தெரியாமல் போய்விட்டது! அநேக விநாயக மூர்த்தங்களில் ஒன்றுக்கு ‘செல்லப் பிள்ளையார்’ என்றே பெயர்! அப்படிப்பட்ட பிள்ளையின் அன்பு மன விசேஷத்தால் அம்பாளுக்கும் கோபம் போய் வாத்ஸல்யம் பிறந்தது.

அப்போது அம்பாளை விட்டுப் போயிருந்த கோபம் மறுபடியும் ஒருபோதும் அவளிடம் திரும்பிவிடக் கூடாதென்று ஆசார்யாள் நினைத்தார். அதனால் அந்த உக்ர கலைகளை அப்படியே யந்த்ராகாரமான இரண்டு தாடங்கங்களில் ஆகர்ஷித்து சமனம் செய்தார் (அடக்கினார்). அந்தத் தாடங்கங்களை அம்பாளின் காதுகளிலேயே அணிவித்தார்.

தாடங்கம் ஸெளமங்கல்யத்துக்கு (ஸுமங்கலித் தன்மைக்கு)ச் சின்னம். அமிருதத்தைச் சாப்பிட்டவர்களாயிருந்தபோதிலும் மற்ற தேவர்களெல்லாம் அழிவடைகிற மஹாப்ரளயத்திலுங்கூட, அவர்கள் அமிருதம் சாப்பிட்ட போது தான் ஒருத்தன் மட்டும் காலகூட விஷத்தைச் சாப்பிட்டானே, அந்தப் பரமேச்வரன் மட்டும் எப்படி அழியாமலிருக்கிறான் என்று ஆசார்யாள் ‘ஸெளந்தர்ய லஹரி’யில் ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறார்.* உடனே அதற்கு ரத்னச் சுருக்கமாகப் பதிலும் சொல்லிவிடுகிறார். “தவ ஜநநி தாடங்க மஹிமா: அம்மா! இது உன் தாடங்கத்தின் மகிமைதான்” என்கிறார்.

இப்படி அவளுடைய பாதிவ்ரத்ய (கற்பு நெறி) ப் பெருமைக்குரிய தாடங்கத்தில் உத்ரகலையை ஆகர்ஷித்ததோடு, அதற்கு முந்தியே அவளுடைய வாத்ஸல்யப் பெருமையைக் காட்டுவதாக ப்ரிய வத்ஸனான பிள்ளையாரை அவளுக்கு முன்னால் ப்ரதிஷ்டை பண்ணிவிட்டார்.

ஜம்புகேச்வரம், திரு ஆனைக்கா என்ற இரண்டு பேர்களிலுமே பிள்ளையார் ஸம்பந்தமிருக்கிறது. ஜம்பு என்பது நாவல் மரம். அந்த க்ஷேத்ரத்தில் வெண்ணாவல் மரம்தான் ஸ்தல வ்ருக்ஷம். பிள்ளையாருக்கு ரொம்பப் பிடித்தது நாவல் பழம். ‘கபித்த ஜம்பூபல ஸார பக்ஷிதம்’ என்று ஸ்தோத்ரம் சொல்கிறோம். பிள்ளையாரின் பரம பக்தையான அவ்வையாருக்கு ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமி போட்ட சுட்ட பழமும் நாவல்தான்.

‘திரு ஆனைக்கா’ என்கிறபோதும் அதிலே ‘ஆனை’ வந்து உட்கார்ந்து கொண்டு கஜானன மூர்த்தியை ஞாபகப்படுத்துகிறது.

ஈச்வரனே ஆசார்ய ரூபத்தில் அவதாரம் செய்தபோது ஈச்வரிக்கு, அகிலாண்ட ஈச்வரிக்கு முன்னால் சிவ-சக்தி தம்பதியரின் ப்ரிய ஸுதனான பிள்ளையாரை ப்ரதிஷ்டை செய்தது விசேஷம்.

கருணாமூர்த்தியாக இருக்கப்பட்ட பராசக்திக்குமே கூடக் கோபம் ஏற்பட்டாலும், அது போய் அவள் குளிர்ந்த மனஸோடு லோகத்துக்கு அநுக்ரஹம் பண்ணும்படியாக மாற்றிவிடும் சக்தி பிள்ளையாருக்கு இருக்கிறது. ‘சக்தி’ என்றால் அவர் ஏதோ பெரிசாக மந்த்ரம் போட்டோ, அல்லது வேறே ஏதாவது பண்ணியோ அந்தப் பராசக்தியை மாற்றவேண்டுமென்றில்லை. இவர் அவள் கண்ணிலே பட்டுவிட்டால் அதுவே போதும். அன்பே வடிவமான விநாயக ரூபத்தைப் பார்த்தமாத்திரத்தில் அம்பாளின் கண் வாத்ஸல்ய வர்ஷம் பொழியத் தொடங்கிவிடும்.

அத்தனை நல்ல மனஸ் அவருக்கு! ஸுமனஸாகிய அவரை வாகீசாதி ஸுமனஸர்கள் நமஸ்கரித்தே ஸகல கார்ய ஸித்தி பெறுகிறார்கள்.


*ச்லோகம் 28

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is மலரும் மனமும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  வாகீசர் யார்?
Next