மங்கள மயமான தெய்வகுரு : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

லோகத்தின் பெரிய பாக்யம், குரு ஸ்வரூபமாக அவதாரம் ஏற்படுவதென்று ஸங்கல்பமாயிற்று. சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அவன்தான் (பரமாத்மாதான்) குரு. உபநிஷத் பாட க்ரமத்தில் முதலில் அப்படித்தான் அவனை குரு ஸ்வரூபமாகச் சொல்லி நமஸ்காரம், சரணாகதி செய்வது. ஸகல உபதேசங்களுக்கும் உறைவிடமாயிருப்பது வேதம். அந்த வேதத்தை லோகத்துக்குத் தந்தது ப்ரம்மா. வேத மந்த்ரங்களைக் கொண்டே ஸ்ருஷ்டி பண்ணி, நாலு வாய்களாலும் நாலு வேதத்தைச் சொல்லிக்கொண்டு ப்ரம்ம வித்யையைத் தருபவர் அவர். ஆனால் அவரையும் படைத்து அவருக்கும் இந்த வேதத்தைப் பூர்வத்திலே தந்தவன் பரமாத்மா. அவனேதான் நம் புத்திக்குள்ளும் ப்ரம்மஞான ப்ரகாசத்தை உண்டாக்குபவன். ‘மோக்ஷ நாட்டமுள்ள நான் அவனை சரணடைகிறேன்’ என்று (உபநிஷத் பாராயணம்) ஆரம்பிப்பது வழக்கம்:

யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்
யோ வை வேதாச்ச ப்ரஹிணோதி தஸ்மை |
த(க்)ம் ஹ தேவம் ஆத்ம புத்தி ப்ரகாசம்
முமுக்ஷுர்வை சரணமஹம் ப்ரபத்யே ||

இது ‘ச்வேதாச்வதர உபநிஷத்’தில் வருவது1. பரமாத்ம குருவைப் பரமசிவ ஸ்வரூபமாகக் காட்டுவதற்கும் இந்த உபநிஷத்திலேயே ச்ருதி ப்ரமாணம் இருக்கிறது. வித்யா மூலமான வேதத்தை ஸதா ஓதிக் கொண்டிருக்கும் ப்ரம்மா (இவரை ஹிரண்யகர்பன் என்று உபநிஷத் சொல்லும்) பிறந்ததையும் மஹர்ஷியான ருத்ரன் பார்த்துக்கொண்டிருந்தார் என்று அந்த உபநிஷத்தில் ஒரு இடத்திலும், அவரே தான் அந்த ப்ரம்மாவைப் படைத்தவர் என்று இன்னோரிடத்திலும் சொல்லியிருக்கிறது2. ‘மஹர்ஷி’ என்றதால் உபதேசம் பண்ணும் ஆசார்யன் என்று ஆகி விடுகிறது. ‘நமக்கு அவர் சுபமான புத்தியை அநுக்ரஹிக்கட்டும்’ என்று இரண்டு இடத்திலும் பிரார்த்திக்கப்படுகிறது. சுபமான புத்தி — நல்லறிவு — ஆசார்யன்தானே அநுக்ரஹிப்பது? ‘சுபம்’ என்றாலும் ‘சிவம்’ என்றாலும் ஒரே அர்த்தந்தான். மங்களமானது, கல்யாணமானது என்று அர்த்தம். ப்ரம்மம் பரம கல்யாண ஸ்வரூபமானது, ஸ்மரிக்கிறவர்களுக்கு வரம் அருளுவது, மங்களம் என்றே அறியப்படுவது என்று (உபநிஷத் பாராயண) மங்கள பாட ச்லோகம் இருக்கிறது:

அதிகல்யாண ரூபத்வாத்
நித்ய கல்யாண ஸம்ச்ரயாத் |
ஸ்மர்த்ரூணாம் வரதத்வாச்ச
ப்ரஹ்ம தந்-மங்கலம் விது: ||

அந்த சுபம், கல்யாணம், மங்களம் எல்லாமாக இருக்கப்பட்டவர் வரம் அருள்வது என்றால் என்ன வரம்? ஞானத்துக்கேயான உபநிஷத் பாட க்ரமத்தில் இந்த வரத்தைச் சொல்வதால், இது ஞானத்தைத் தவிர வேறென்னவாயிருக்க முடியும்? கொடுக்கிற ஆஸாமி சிவம். அவர் தரும் வரமான ஞானமும் சிவம் — சுபம், கல்யாணம், மங்களம். இந்தப் பரம மங்கள ஸ்வரூபமே நம்முடைய ஆசார்யாள். சிவம், கல்யாணம், சுபம் எல்லாம் அவரே. ஆதி சிவமே ஆசார்ய சிவமாக இப்படி அவதாரம் செய்தது.

“அவதாரமாகி விட்டதா? அப்படியென்றால் அப்பா, அம்மா யார்? எந்த ஊரில் அவதாரம்? ஒன்றும் சொல்லவில்லையே!”

கொஞ்சம் பொறுத்துக்கணும். பரமாத்ம ஸங்கல்பம் ஆகிவிட்டாலே கார்யம் ஆன மாதிரிதான் என்ற அபிப்ராயத்திலேயே அவதாரம் ஆன மாதிரி சொல்லிவிட்டது! ஸங்கல்பம் செய்தபோதிலும் உடனே ஈச்வரன் தானாகவே எங்கேயோ ஒரு ஊரில், யாரோ ஒரு அப்பா அம்மாவுக்குப் பிறந்துவிடவில்லை.


1 VI.18

2 III.4, IV.12

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is சாக்தர், சைவர், வைஷ்ணவர் மூன்றுமான ஆசார்யாள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  அவதாரத்திற்குப் பூர்வாங்கம்
Next