ஏன் ஸந்நியாஸியாக அவதாரம்? : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

ஸந்நியாஸிதான் ஞானியாக இருக்கமுடியுமென்பதில்லை. “ஒரு சண்டாளன்கூட ஞானியாயிருக்கிற பக்ஷத்தில் அவனே என் குரு” என்று நம்முடைய ஆசார்யாளே ஸ்தோத்ரம் செய்திருக்கிறார். அந்தக் கதை அப்புறம் கேட்போம். ஆனாலும் இந்த மாதரி எங்கே வேண்டுமானாலும் ஞானி தோன்றுவதென்பது அபூர்வமாக நடப்பதுதான். அதில் நாம் பயிற்சி கொடுத்துப் பண்ணும்படியாக ஒன்றுமில்லை. உபதேச குரு என்றால் அவர் ஒரு ‘ஸிஸ்ட’ப்படி பயிற்சி கொடுத்தே சிஷ்யர்களை ஞானமடையச் செய்யணும். ஆகையால் இவரும் அப்படி ‘ஸிஸ்ட’த்தில், அதாவது ஸம்ப்ரதாய பூர்வமாக, அதாவது சாஸ்த்ரோக்தமான முறையில் போய் ஞானியானவராக இருந்தால்தான் பொருத்தமாயிருக்கும். அபூர்வமாக ஞானிகள் எந்தச் சூழ்நிலையில் வேண்டுமானாலும் தோன்றலாமென்றாலும், பொதுவாக அந்த பரிபக்வத்தைப் பெற சாஸ்த்ரங்கள் கூறியுள்ள விதி என்னவென்றால், உசந்த முறையில் ப்ரஹ்மசர்யமோ, க்ருஹஸ்தாச்ரமமோ வகித்த பிற்பாடு ஸந்நியாஸம் வாங்கிக்கொண்டு, உபநிஷத்துக்களில் ஜீவ-ப்ரஹ்ம ஐக்யத்தைப் பற்றிச் சொல்லும் மஹாவாக்யங்களை அநுஸந்தானம் பண்ணிப் பண்ணியே (தீர்க்கமாக த்யானம் செய்தே) ஞானம் அடையவேண்டும் என்பதுதான். அம்மாதிரி அவதாரத்தில் நடத்திக் காட்டுவதுதான் யுக்தம் என்று ஸ்வாமி நினைத்தார். எல்லாம் அசாஸ்த்ரீயமாகப் போய்க் கொண்டிருந்த காலத்தில் சாஸ்த்ரம், அதன் கட்டு ஆகியவற்றில் ஜனங்களுக்கு மதிப்பும் பிடிப்பும் ஏற்படுத்தித் தருவது தான் அவதார நோக்கம். அப்படியிருக்கும்போது, ஒரு சாஸ்த்ரமுமில்லாமல் எங்கே வேண்டுமானாலும் ஞானி தோன்றலாம் என்ற விதத்தில் அவதாரமே இருந்துவிட்டால் நோக்கத்திற்கே அது எதிராகத்தானே ஆகிவிடும்? ஒரு மநுஷ்ய ஜீவன் அடையக்கூடிய மிகவும் உச்ச நிலையான ஞானத்திற்கே சாஸ்த்ரம் வேண்டியதில்லையென்றால், அப்புறம் ஒரு உபதேசமும் வேண்டாம், அதைச் செய்யும் அவதாரமும் வேண்டாம் என்றாகிவிடும்! அல்லது அப்போது பரவியிருந்த அசாஸ்த்ரிய, அவைதிக மதங்கள் மாதிரி இன்னொன்றை உபதேசிக்கத்தான் அவதாரம் என்றாகிவிடும். ஆனால் அவதார லக்ஷ்யமே என்ன? வேத சாஸ்த்ரத்தை நிலை நாட்டுவதுதான். தர்ம ஸம்ஸ்தாபனம், தர்ம ஸம்ஸ்தாபனம் என்று சொன்னதெல்லாம் வேத ஸம்ஸ்தாபனத்தைத்தான். அதிலும் இந்த அவதாரம் முடிந்த முடிவாக வேதம் சொன்ன அத்வைதத்தையே தன்னுடைய சிகரமான பணியாக நிலைநாட்டி, நிவ்ருத்தி மார்க்க ஸந்நியாஸிக்கே அதில் அதிகாரம் என்று தெளிவாக வழி வகுத்துத் தரவேண்டுமென்று ஸ்வாமி ஸங்கல்பித்திருந்தார். அதனால் அவதார மூர்த்தியும் விதிவத்தாக ஸந்நியாஸம் வாங்கிக்கொண்டு ஞானம் பெற்றதாகவே காட்டவேண்டுமென்றாயிற்று.

பௌத்த, ஜைன மதஸ்தர்களுங்கூட ஞானத்துக்கே தங்களை ‘டெடிகேட்’ செய்து கொள்பவர்கள் பிக்ஷுக்களாக வேண்டுமென்றுதானே வைத்திருந்தார்கள்?

ஸந்நியாஸியான குருவாக அவதாரம் செய்வதென்று முடிவாயிற்று.

ஸந்நியாஸியாயில்லாத க்ருஷ்ணரும் ஞானோபதேசம் செய்தாரென்றாலும் அது அவர் செய்த அநேக கார்யங்களில் ஒன்றுதான். அந்தக் காலத்தில் அந்தமட்டும் செய்ததே போதுமாயிருந்தது. ஜீவிதத்தின் பின் பாகத்தில் மாத்திரம் கொஞ்சம் உபதேசம் செய்தே அவர் ‘ஜகத்குரு’ பட்டத்தைத் தட்டிக்கொண்டு போய்விட்டார்! த்வாரகையில் ராஜ்யபாரம் வஹிப்பது, பதினாறாயிரம் பத்னிகளோடு குடும்பம் நடத்துவது, பாண்டவர்களைப் போய்ப் பார்த்துக் கொள்ளுவது, தூது போவது, தேரோட்டுவது, பக்தாநுக்ரஹம் பண்ணுவது, நரகாஸுராதிகளை வதம் பண்ணுவது — என்று அவர் பண்ணாத கார்யமில்லை. அதில் ஒன்றாக உபதேசமும் செய்தார். ‘இப்போது அப்படி முடியாது. ஆயுஸ் முழுக்க ஸந்நியாஸ குருவாக இருந்துகொண்டு உபதேசம் ஒன்றையே செய்தால்தான் முடியும்’ என்று ஸ்வாமி தீர்மானித்தார்.

க்ருஹஸ்தனுக்கு சாஸ்த்ரங்களில ஏகப்பட்ட கர்மாநுஷ்டானங்களைக் கொடுத்திருக்கிறது. அவனுக்கு எத்தனையோ குடும்பப் பொறுப்புகள். அதிதி ஸத்காரம் (விருந்தோம்பல்) , இன்னும் அநேக விதமான ஸமூஹத் தொண்டுகள் எல்லாம் அவன்தான் செய்யவேண்டும். இதெல்லாம் போகத்தான் உபதேசிப்பது என்றால் அன்றைய (ஆசார்யாள் காலத்திய) அபாயமான சூழ்நிலையில் போதவே போதாது. ஆகையினால் இந்தப் பொறுப்புகளும், இத்தனை கர்மாநுஷ்டானங்களும் இல்லாத ஸந்நியாஸிதான், ‘உபதேசமே கர்மா; அதுவே தன் பொறுப்பு’ என்று ‘டெடிகேட்’ செய்துகொண்டு ஞான ப்ரசாரத்திற்காக உழைத்துக் காட்டவேண்டும் என்று ஏற்பட்டது.

இந்த அவதாரத்திலே பாரத தேசம் முழுக்க ஸஞ்சாரம் செய்து நாடு பூரா பரவியிருந்த தப்பான மதங்களை வாதங்களினால் நிராகரணம் பண்ணி, ஸத்யமான வேதாந்த மதத்தை ஸ்தாபிக்க வேண்டியிருந்தது. அதாவது அவதாரமாக வருகிறவர் ஸதா காலமும் ஸஞ்சாரம் பண்ணிக் கொண்டேயிருக்க வேண்டும் என்ற அவச்யம் ஏற்பட்டிருந்தது. குடும்பப் பொறுப்புள்ள க்ருஹஸ்தன் எப்படி இந்த மாதிரி எப்பவும் ஊர் சுற்றிக்கொண்டே இருக்கமுடியும்? மாறாக, ஸந்நியாஸிக்குத்தான் ‘எப்பவும் ஸஞ்சாரம் பண்ணிக்கொண்டே இருக்கணும்; ஒரே இடத்தில் அதிக நாள் இருந்தால் ‘லோகல் அட்டாச்மென்ட்’கள் உண்டாகி விடுமாதலால் இடம் மாறிக்கொண்டே இருக்கணும்’ என்று சாஸ்த்ரமே விதி செய்திருக்கிறது. இதுவும் இப்போது ஸந்நியாஸ அவதாரம் ஏற்படுவதற்கு ஒரு முக்ய காரணமாயிற்று. நாலு ஆச்ரமங்களில் ஸந்நியாஸாச்ரமம்தான் ஸஞ்சாரத்திற்கு யோக்யமான ஆச்ரமம். பிரம்மசாரியாகப்பட்டவன் ‘அந்தேவாஸி’ என்பதாக குருவோடு கூடவே சேர்ந்து வஸிக்க வேண்டியவன். குருகுலவாஸமே விதிக்கப்பட்ட அவன் ஸஞ்சார வாழ்க்கை நடத்தமுடியாது. க்ருஹஸ்தன் மற்ற ஆச்ரமிகளை ஆதரிப்பதும், தன்னுடைய குடும்ப பரணம் செய்வதுமான கடமையை ஸ்வக்ருஹத்திலேயே இருந்து கொண்டுதான் செய்யமுடியும். அவனும் ஸஞ்சாரம் பண்ணிக்கொண்டே இருக்க முடியாது. வானப்ரஸ்தனும் காட்டில் ஒரே இடத்தில் இருந்துகொண்டுதான் வ்ரத நியம தபோநுஷ்டானங்களைப் பண்ணவேண்டும் என்று சாஸ்த்ரம். ஸந்நியாஸி மட்டுந்தான் சாஸ்த்ர விதிப்படியே ஒரே இடத்தில் ஜாஸ்தி நாள் தங்காமல் ஸஞ்சரித்துக்கொண்டே இருக்கவேண்டியவன். ஆகையினால் அப்படிப்பட்ட ஒரு அவதாரத்தினால்தானே தேசம் பூராவுக்கும் உபதேசம் தருவதான கார்யம் நடக்க முடியும்?

க்ருஷ்ணர் க்ருஹஸ்தராக இருந்துகொண்டு ஞானோபதேசம் செய்தாரென்றாலும் ஊர் ஊராகப் போய் தேசத்தின் ஸகல வித்வத் ஸமூஹத்துக்குமா உபதேசித்தார்? ஒரு அர்ஜுனனுக்கும் ஒரு உத்தவருக்கும் மட்டுமே ஓரோரு ஸமயத்தில் மாத்திரம் உபதேசம் பண்ணினார். தாமே ஸ்வாமி என்று உபதேசத்திற்கு நடுவிலேயே அர்ஜுனனுக்கு விச்வரூபம் காட்டி நிச்சயப்படுத்தினார். உத்தவருக்குத் தனக்காகவே தெரியும், இவர் ஸ்வாமி என்று. ஸ்வாமி என்ற பிறகு க்ருஹஸ்தாச்ரமியா, அதுவா இதுவா என்றெல்லாம் பார்க்கமால் அந்த இரண்டு பேரும் உபதேசத்தை பக்தியோடு ஏற்றுக்கொண்டார்கள்.

அப்புறம் அவர் பரமபதம் போய், லோகமெல்லாம் அவர் ஸ்வாமிதான் என்று புரிந்துகொண்ட பிறகு, பரீக்ஷித்து, ஜனமேஜயன் ஆகியவர்களின் காலத்தில் அந்த உபதேசங்கள் வ்யாஸாசார்யாளின் பாகவத, பாரதங்களின் மூலம் லோகத்துக்கு ப்ரசாரமாயின*. ஸாக்ஷாத் பகவதவதாரத்தின் உபதேசம் என்பதால் எந்த ஆச்ரமத்திலிருந்துகொண்டு அவர் உபதேசித்தார் என்று கேள்வி கேட்டுக் கொண்டிருக்காமல் எல்லோரும் உபதேசங்களை ஏற்றுக்கொண்டார்கள். அவதாரமாக லோகத்தில் வாழும்போது, அவதார லக்ஷணப்படி எல்லாருக்கும் எல்லாக் காலத்திலும் தம்மை தெய்வமாகத் தெரிவித்துக் கொள்ளாமல், மாநுஷமாகவே நிறைய வேஷம் போட்டு விட்டு, அப்புறம் ஒரு தலைமுறை, இரண்டு தலைமுறைக்குப் பிற்பாடு லோகம் தம்மை தெய்வமாகத் தெரிந்துகொண்ட பிறகே தம்முடைய ஞானோபதேசம் எல்லாருக்கும் ப்ரகாசிக்கும்படியாக க்ருஷ்ண பரமாத்மா செய்தார்.

இப்போதோ வீடு பற்றி எரிகிறபோது உடனே ஜலத்தைக் கொட்டி அணைக்க வேண்டுமென்பது போன்ற நிலையாக இருந்தது. ஒரு காலத்தில் அவதாரமாகி உபதேசம் செய்வது, ஆனாலும் அந்த உபதேசம் அப்போதே ப்ரசாரமாகாமல், லோகத்தைக் காக்க வைத்து அவதாரத்தை அவதாரமென்று அது புரிந்துகொண்ட அப்புறமே ப்ரசாரமாகச் செய்வது என்று காலஹரணம் செய்ய முடியாத சூழ்நிலையாயிருந்தது. அதர்ம அஞ்ஞான நெருப்புப் பிடித்துக் கொண்டிருந்த லோகத்தில் அப்போதேதான் ஞானோபதேசத்தை வர்ஷித்து அணைக்கவேண்டும் என்றிருந்தது. ஆனால் அவதார காலத்திலேயே ஆச்ரமத்தைப் பார்க்காமல் ஈச்வராவதாரமென்று எல்லாருக்கும் எப்போதும் தெரியும்படி இருப்பதென்றாலோ, ஒரு அவதாரமென்றால் அது மாநுஷமாகவும் இருந்துதானாக வேண்டும் என்று நாம் பல காரணங்களைக் கொண்டு தெரிந்துகொண்டாமே, அந்தப்படி பண்ணமுடியாமலாகி, அவதாரத்தின் லக்ஷணங்கள் லக்ஷ்யங்கள் இரண்டிற்குமே பாதகம் ஏற்படும். ஆனபடியால் ஸந்நியாஸாச்ரமத்தில்தான் அவதாரம் இருக்க வேண்டுமென்றும், அவதார புருஷர் லோகத்தில் உள்ள போதே எல்லாருக்கும் ப்ரகாசமாக உபதேசம் செய்துவிட வேண்டுமென்றும் ஆயிற்று.

குறிப்பாக இந்திரியக் கட்டுப்பாடு போதாத இந்தக் கலிகாலத்தில் க்ருஹஸ்தன் ஞானோபதேசம் செய்தால் ஸந்தேஹத்திற்கும் பரிஹாஸத்திற்கும் இடமாகும். ஜனங்களெல்லாம் பலவிதத்தில் ஹிபாக்ரிஸி பண்ணிக்கொண்டிருக்கும்போது, ‘பார்த்தால் க்ருஹஸ்தாச்ரமம், பண்ணுவதோ ஞானோபதேசம் என்று தங்களைப் போலவே அந்த ஆஸாமியும் ஒன்று என்று, ஜனங்கள் பரிஹாஸமாக நினைப்பார்கள். இந்திரியக் கட்டுப்பாடு இந்த யுகத்தில்போதவே போதாது, சபலத்தின் இழுப்பு இப்போது ஜாஸ்தி என்பதால்தான் ஐம்பது வயஸுக்கு மேற்பட்டு பத்னியோடுகூட இருந்து கொண்டே, ஆனாலும் தாம்பத்ய போகம் இல்லாமல், தபோ வ்ரதங்கள் செய்வதான வானப்ரஸ்தம் கலியில் வேண்டியதில்லை என்று சாஸ்த்ராபிப்ராயம் இருக்கிறது. நன்றாகப் பதமாகிறமட்டும் க்ருஹஸ்தாச்ரமத்திலேயே இருந்துவிட்டு நேரே ஸந்நியாஸம் வாங்கிக்கொள்ளும்படியாக இந்த யுகத்துக்கு ஏற்பட்டிருக்கிறது.

முக்யமாக இந்த அவதாரம், நிவ்ருத்தி மார்க்கத்தில் ஞானம் பெற்றே மோக்ஷமடையமுடியும் என்ற உபநிஷத அபிப்ராயத்தை முடிவாகச் சொல்லவந்தது. எனவே அது ஸந்நியாஸியாயில்லாமல் வேறெப்படியும் இருக்கமுடியாதென்று ஆகிவிட்டது. ப்ரவ்ருத்தியிலிருப்பவர் நிவ்ருத்தியை அந்தரங்க ஸாதனமாகச் சொல்வது பெரிய முரண்பாடல்லவா?

இப்படிப் பல காரணங்களால், கலி பிறந்து ஸுமார் 2500 வருஷத்துக்கப்புறம், ஈச்வரன் குருவாக அவதாரம் பண்ண வேண்டுமென்றும், அப்படி ஞானாவதாரமாக வருபவர் ஸந்நியாஸியாகவே இருக்கவேண்டும், ஆயுஸ் முழுக்க அப்படியிருந்து உபதேசம் பண்ணவேண்டும் என்றும் முடிவாயிற்று. பகல் வேளையில் எப்போதோ ஒரு ஸமயம் மானம் (வானம்) மூடிக்கொண்டு இருட்டிப்போவது போல க்ருஷ்ணர் காலத்தில் ஏற்பட்டதால் அப்போதைக்கு அவர் ஒரு தீபத்தை ஏற்றி வைத்தால் போதுமானதாயிருந்தது. இப்போது ஒரே ராக்காலமாகவே ஆகிவிட்டதால் அவதார புருஷர் ஆயுஸ்காலம் பூராவும் நிறைய விளக்குப் போட்டாகவேண்டும் என்றாயிற்று. மனோ விகாரங்களும், விகல்பமான எண்ணங்களும் ஜனங்களுக்கு ஜாஸ்தியாகிவிட்டதால் அவதாரம் தாம்பத்ய வாழ்க்கையே இல்லாமல் இருக்கவேண்டுமென்றும் ஆயிற்று.

ஆசார்யாள் பூர்ணமாக மநுஷாயுஸ் பூலோகத்தில் இருக்கவில்லை, முப்பத்திரண்டே வயஸுதான் இருந்தாரென்று தெரிந்திருக்கும். அதாவது இத்தனை கலி ப்ரவாஹத்தையும் அடக்குவதற்கு அத்தனை ஸ்வல்ப காலமே போதும்படியாக அப்பேர்ப்பட்ட ஞான சக்தியோடும் க்ரியா சக்தியோடும் அவதாரம் ஏற்பட முடிந்தது என்று தெரிகிறது. முப்பத்திரண்டு வருஷமென்ன, சொடக்குப்போடும் நாழியிலேகூட ஈச்வர சக்தியால் ஸாதிக்க முடியாததாக எதுவாவது உண்டா? ஆனால் நரலீலைக்காக அவதாரம் என்று ஆடிக் காட்டுவதில் இப்படி 32 வருஷமென்று ஸங்கல்பம் செய்யப்பட்டது. அதை ரொம்பவுமே லீலா விநோதமாகப் பண்ணினார். எப்படியென்றால், முதலில் தம்முடைய ஸ்வய ஸங்கல்பப்படி எட்டே வயஸு இருக்கிறமாதிரியும், அப்புறம் முதலை வாயிலிருந்து தப்புகிறபோது எட்டைப் பதினாறாக்கிக் கொண்டாற்போலவும், பதினாறு முடிந்போது வ்யாஸர், ப்ரம்மா ஆகியவர்களுடைய விருப்பப்படி இன்னும் ஒரு பதினாறு கூட்டிக்கொண்ட மாதிரியும் விளையாட்டுப் பண்ணினார். ஆனால் முதலிலேயே பரமேச்வரன் ப்ளான் போட்டதுதான், — தாம் முப்பத்திரண்டு வருஷம் ஸந்நியாஸ குருவாயிருந்தே அத்வைத க்ரந்தங்களை எழுதி அவற்றை தேசம் பூரா ஸஞ்சாரம் பண்ணிப் பிரசாரம் செய்ய வேண்டுமென்பது.

ஸரி. ஆனால் 32 வருஷம் என்பது புருஷாயுஸ் இல்லை. புருஷாயுஸ் (என்பது) நூறு வருஷம். இந்த அவதாரம் அப்படிப் பூர்ணாயுஸ் கொண்டதாகவோ, அல்லது எண்பது தொண்ணூறு வயஸ் ஜீவிப்பதாகவோ இருந்து, அதில் முதலில் மற்ற ஆச்ரமங்களை வஹித்துவிட்டுக் கடைசி 32 வருஷம் மட்டும் ஸந்நியாஸியாயிருக்க முடியுமல்லவா? ‘அப்படியெல்லாம்கூட க்ருஹஸ்தாச்ரமக் கலப்பு இருக்கவே கூடாது. அவதார கார்யத்தைப் பண்ணுவதற்கு 32 வருஷம் போதுமா? அப்படியானால் அந்த 32 வருஷமும் ஸந்நியாஸியாயிருந்துவிடவேண்டும். ஜீவிதம் பூராவும் ஞானோபதேசமே கார்யமாயிருந்துடணும். இந்தக் கலியுகத்தில் அவதாரமாக வரும்போது க்ருஹஸ்தாச்ரம வாடையே காட்டப்படாது’ என்று பரமேச்வர ஸங்கல்பமாயிற்று.


* பஞ்ச பாண்டவர்களை அடுத்துப் பட்டமேற்ற பரீக்ஷித்தின் இறுதிக் காலத்தில் வியாசரின் புதல்வரான சுகர் அவனுக்கு உபதேசித்த பாகவதத்தில் ‘உத்தவ கீதை’ இடம் பெறுகிறது. பரீக்ஷித்தை அடுத்துப் பட்டமேற்ற ஜனமேஜயனின் ஸர்ப யாகசாலையில் வியாசரின் சிஷ்யரான வைசம்பாயனர் உபந்நியசித்த மஹாபாரதத்தில் அர்ஜுனனுக்கு உபதேசமான பகவத் கீதை இடம்பெறுகிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is கீதாவாக்ய பரிபாலனம்:பிரச்னையும் தீர்வும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  ப்ரம்மசர்ய ஆச்மரமத்திலும்
Next