அவதாரத்தில் மனிதத்தன்மையும் தெய்வத்தன்மையும் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

தர்மோத்தரணம் செய்ய வேண்டுமென்ற லக்ஷ்யத்துக்காக இப்படி அவன் அவதாரம் எடுப்பதில் அநேக ஸாரமான விஷயங்களை உள்ளே சேர்த்துப் பிசைந்து வைத்திருக்கிறான். தர்மத்தை உபதேசம் செய்வதோடு, வாழ்ந்தும் காட்ட வேண்டும். வாழ்க்கையில் ஊறாத தர்மம் எத்தனை அழகாக உபதேசிக்கப்பட்டாலும் பயன் தராது. ஆதர்ச புருஷர்களாக ஸொந்த வாழ்க்கையில் நடத்தி வழிகாட்டுபவர்கள் இருந்தால்தான், ‘அடாடா! இவர்கள் இப்படியிப்படிப் பண்ணி எத்தனை சுத்தர்களாக, சாந்தர்களாக இருக்கிறார்கள்! தாங்களும் ஆனந்தமாக இருந்துகொண்டு, லோகத்துக்கும் ஆனந்தமூட்டுகிறார்கள்! நாமும் இந்தப்படி பண்ணிப் பார்க்கவேண்டும்’ என்ற எண்ணம் ஜனங்களுக்கு உண்டாகும். இம் மாதிரி ஆதர்ச வாழ்க்கை நடத்தி வழி காட்டுவதற்கும் அவனே அவதாரமாக வரவேண்டியிருக்கிறது.

ஆனாலும் ‘ஆதர்சம்’ என்பதற்காக நடைமுறையில் ஜனங்களுக்கு இருக்கிற அத்தனை போக்குகளும் தனக்கு அடியோடு இல்லை என்று அவதார புருஷன் ஒரே உச்சாணியாக இருந்துவிடலாமா? நம்முடைய உணர்ச்சி மோதல்கள் எதுவும் அவனுக்கு இல்லை, நம்முடைய ஆசைகள் எதுவும் அவனுக்கில்லை என்று எப்போதும் அதீத லெவலிலேயே அவன் இருந்து கொண்டிருக்கலாமா? கூடாது. அப்படி இருந்துவிட்டால் அவன் வழிகாட்டியாக, ‘மாட’லாக, இருக்கவே மாட்டான். அதீத லெவலிலேயே இருப்பவன் எப்படி மற்ற லெவல்கள் இருப்பவர்களுக்கு லக்ஷ்ய புருஷனாக ஆக முடியும்? ஸாண்டோ யானையை மார் மேலே ஏற்றி நிறுத்திக் கொள்கிறானென்றால் நாம் கை தட்டி ஸந்தோஷப்படுவோம், ப்ரமிப்போமே ஒழிய அந்த மாதிரி நாம் பண்ணிப் பார்க்க நினைப்போமா? “அவனுக்கு அது முடிகிறது. நம்மால் முடியுமா?” என்றுதானே சொல்வோம்? அப்படித்தான், அவதார புருஷனொருவன் நம்முடைய பூலோக வாஸனைகளை இல்லாமல் உச்ச மட்டத்தில் பரம தார்மிகமாக எல்லாம் செய்துகொண்டிருந்தானென்றால், ‘இவன் நம்முடைய மநுஷ்ய ஜாதியைச் சேர்ந்தவனேயில்லை. நமக்கு இருக்கிற மனஸின் இழுபறிப் போராட்டங்கள், ஆசாபாசங்கள் எதுவும் இவனுக்கு இல்லை’ என்று அவனுக்கு நமஸ்காரம் வேண்டுமானால் நிறையச் செய்வாமே தவிர அவன் வழியிலேயே நாமும் சென்று பார்க்கலாம் என்ற உத்ஸாஹத்தைப் பெற மாட்டோம்.

ஆகையால் அவனும் நம் மாதிரி இருப்பதுபோலவே தன்னை மநுஷ்யத்வத்தில் ஓரளவு கட்டுப்படுத்திக் கொண்டாற்போல நடித்து நடித்தே, ஆனாலும் தப்புக்கும் ரைட்டுக்கும் ஒரு போராட்டம் வரும்போது தப்பில் போகாமல் ரைட்டிலேயே போய், ‘தர்மம்தான் செய்ய வேண்டியது. அதுதான் நிலைத்த இன்பத்தையும் சாந்தியையும் தருவது’ என்று நமக்குக் காட்டிக்கொடுப்பான். நம் மாதிரியே பல அம்சங்களில் இருந்தும், நாம் ஃபெயில் ஆகிற இடத்திலெல்லாம் அவன் பாஸ் பண்ணிக் காட்டுவான். அப்படியிருந்தால்தான் நமக்கு, ‘நாமும் இவன் மாதிரி நடக்கமுடியும் — தர்மமாக வாழமுடியும். சாஸ்த்ரம் போட்டுக்கொடுத்திருக்கும் பாடத்தில் பாஸ் பண்ணமுடியும்’ என்ற உத்ஸாஹம் உண்டாகும்.

முழுக்க ஸாமானிய ஆளாகவே இருந்துவிட்டால் அவன் என்ன செய்கிறான், தர்மத்தில் போகிறானா இல்லையா என்பதையெல்லாமே நாம் கவனிக்க மாட்டோம். இப்போதுங்கூடப் பெயர் தெரியாமலே பல பேர் நல்லவர்களாக, தர்மத்திலேயே செல்கிறவர்களாக அங்கங்கே இருந்து கொண்டிருக்கலாம். ஆனால் இது எப்படி உலகத்துக்குத் தூண்டுகோலாக உதவ முடியும்? ‘ஸத்யமாகவே இருப்பது, மனஸ் ஸாக்ஷிப்படியே செய்வது’ என்று ஸமீப காலத்தில் காந்தி ஒருவர்தானா முயற்சி பண்ணியிருப்பார்? இன்னம் பலபேர் இருந்திருப்பார்கள். ஆனாலும் தேசம் பூராவுக்குமான ஒரு லெவலில் அவர் கார்யங்கள் செய்பவராக இருந்ததாலேயே ‘காந்தீயம்’ என்று மற்றவர்களுக்கும் ஒரு வழி ஏற்பட்டு, அவருடைய காலத்தில் நிஜமாகவே பல பேர் அந்த வழியில் போகவும் பாடுபாட்டார்கள். ஆகையினால், தன்னுடைய காலத்தோடு முடியாமல், வரப்போகிற காலத்திலும் தன்னுடைய ‘இன்ஃப்ளுயென்ஸ்’ இருக்கும்படியாக ஸ்வாமி அவதாரம் செய்யும்போது மாநுஷமாக ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் மநுஷ்யர்களையெல்லாம் தன்னிடம் ஆகர்ஷிக்கும்படியாக ஓரளவு திவ்யாம்சங்களையும், தெய்வ சக்திகளையும் கைக் கொள்ளுவான். அஸாத்யமான ஒரு கார்யத்தைப் பண்ணுவான். பாலனாக இருந்துகொண்டே தாடகை, ஸுபாஹு போன்ற ராக்ஷஸர்களை வதம் செய்வான். அல்லது நம்மால் முடியாத ஒரு பெரிய த்யாகத்தைச் செய்து — பட்டாபிஷேகம் நிச்சயம் பண்ணின நாளிலேயே, “காட்டுக்குப் போ!” என்றால் “ஆஹா!” என்று சிரித்த முகமாகப் புறப்பட்டுப்போய் — மநுஷ்யர்களை ஆகர்ஷிப்பான். ஆனால், ‘இவன் தெய்வாம்சம்; இவன் செய்வது நமக்கு மாடலாகாது’ என்று நாம் ஒரேயடியாகத் தள்ளி நின்றுவிடாமல், இவனே நம் மாதிரி மூக்கைச் சிந்திப் போட்டுக்கொண்டு, ‘மரமே கண்டாயா? மட்டையே, கண்டாயா?’ என்று திண்டாடியும் காட்டுவான். தெய்வமாகவும் மாநுஷமாகவும் மாறி மாறி இருந்து காட்டி மொத்தத்தில் தர்ம வழியில் நாம் செல்ல ஊக்கம் தருவான்.

தெய்வ சக்திக்கு மநுஷ சக்தி குறைவானதுதான். தேவர்களைவிட மனிதர்கள் சக்தியில் குறைந்தவர்கள்தான். ஆனாலும் மநுஷ்யர்கள் தங்களைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்கிற அளவுக்கு அல்ப சக்தர்களில்லை. இந்த்ரிய நிக்ரஹம் செய்து சுத்தமாக வாழ்க்கை நடத்தினால் மநுஷ்யர்களும் எவ்வளவோ சக்தியுடன் கார்யங்கள் செய்யலாம். யோகேச்வரர்களாகப் போனால் தேவர்களைப் போலவும், அவர்களை விடவும்கூட சக்தியை ஸம்பாதித்துக் கொள்ளலாம். தங்களைப்பற்றி ரொம்பக் குறைவாக நினைத்துக்கொண்டிருக்கும் மநுஷ்யர்களுக்கு, ‘தாங்களும் இத்தனை சக்தர்களாக, இப்படியிப்படிப் பெரிய கார்யங்களைப் பண்ணமுடியும்’ என்ற நம்பிக்கையையும் உத்ஸாஹத்தையும் ஊட்டுவதற்காகவும் பகவான் பகவானாகவே இருந்துகொண்டு தர்ம ஸம்ஸ்தாபனம் பண்ணாமல் மநுஷ்யனாக வந்து பண்ணுகிறான்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is ஏன் ஸங்கல்ப மாத்திரத்தால் கூடாது?
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  கலந்து பழகும் ஆசைக்காகவும்
Next