கடவுட்கொள்கை : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

வேடிக்கை என்னவென்றால், வைதிக கர்மாநுஷ்டானத்தை மட்டுமே சொன்ன (பூர்வ) மீமாம்ஸையும் ஈச்வரனைச் சொல்லவில்லை; வைதிக கர்மாநுஷ்டானத்தை அடியோடு ஆக்ஷேபித்த பௌத்த-ஜைன மதங்களும் ஈச்வரனைச் சொல்லவில்லை! இதைவிட வேடிக்கை: வைதிக கர்மா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், ‘கர்மக்கொள்கை’ என்றும் Karma theory என்றும் ஒன்றைச் சொல்கிறோமல்லவா? ‘ஒவ்வொரு செயலுக்கும் ப்ரதிச் செயல் உண்டு. ஒவ்வொரு வினைக்கும் விளைவு உண்டு. இதிலிருந்து யாரும் தப்பவே முடியாது. நாம் செய்யும் நல்ல கார்யம், கெட்ட கார்யம் ஒவ்வொன்றுக்கும் விளைவு உண்டு. இந்த விளைவுகளை அநுபவித்தேயாகவேண்டும். இதற்காகத்தான் ஒரு ஜீவனுக்கு ஒரு சரீரத்தில் மரணம் ஏற்பட்டாலும்கூட அது மறுபடி இன்னொரு சரீரத்தில் ஜன்மா எடுத்தும் அநுபவிக்க வேண்டி ஏற்பட்டு, இப்படியே ஸம்ஸார சக்ரம் என்பது சுற்றிக்கொண்டே போகிறது’ என்பதுதான் ‘கர்மா தியரி’. இப்படிக் கர்ம பல அநுபோகத்திற்காகப் பல ஜன்மாக்கள் எடுப்பதை கிறிஸ்துவ, இஸ்லாமிய மதங்கள் சொல்வதில்லை. ஆனாலும் தற்போதுள்ள அம்மதங்களில் இந்தக் கொள்கை இல்லாவிட்டாலும், அம் மதங்களின் மூலமான (ஒரிஜினல்) ரூபத்தில் இது இருக்கத்தான் செய்தது, அல்லது அந்த மதங்களுக்கு முந்தி அந்த தேசங்களிலிருந்த ஹீப்ரு மதங்களில் கர்மக் கொள்கை இருக்கவே செய்தது என்று சொல்கிறார்கள். இந்த விஷயம் நமக்கு ஸம்பந்தமில்லாதது. ஆசார்யாள் சரித்ரத்தில் கிறிஸ்துவ, இஸ்லாமிய மத ஸம்பந்தமாக எதுவுமில்லை. ஆனால், கர்மக் கொள்கையைப் பற்றி எதற்குச் சொல்ல வந்தேன் என்றால். ஆசார்யாளோடு நன்றாக ஸம்பந்தப்ட்ட — கண்டன ரூபமான ஸம்பந்தம் பெற்ற — மீமாம்ஸை, பௌத்தம், ஜைனம் மூன்றுமே கர்மா தியரியை ஒப்புக்கொண்டிருக்கின்றன.

மூன்றுமே கர்மா தியரியை ஒப்புக்கொண்டபோதிலும் கர்ம பல தாதாவாக இருக்கும் ஈச்வரனை ஒப்புக் கொள்ளாததுதான் ரொம்ப வேடிக்கை!

கர்மா என்பது அசேதனமான ஜட வஸ்து. அது எப்படி ஒழுங்காக ‘ப்ளான்’ போட்டுக்கொண்டு இதற்கு இன்ன பலன் என்று இத்தனை திட்டவட்டமாகவும், கண்டிப்பாகவும் ஏற்பாடு பண்ணமுடியும்? சைதன்ய சக்திமூலமாக இருக்கப்பட்ட ஒரு ஈச்வரன்தானே, ‘இப்படிப் பண்ணினால் இப்படி விளைவு’ என்று ஏற்படுத்திப் பலன் தரமுடியும்? ஆனாலும் ஒரு பக்கத்தில் மீமாம்ஸகர்களும் ஈச்வரனை மறுத்து, ‘கர்மா தனக்குத்தானே பலன் தந்து கொள்கிறது’ என்றார்கள். இன்னொரு பக்கத்தில் ஒரே அவைதிகமான பௌத்த ஜைனர்களும் கர்ம பலன் எப்படி, எவரால் விளைவிக்கப்படுகிறது என்றே சொல்லாமல், நிரீச்வர வாதம் பண்ணிக்கொண்டே, ஆனாலும் கர்ம பலன்படி ஜன்மாந்தரங்கள் உண்டு என்று அஸ்திவாரமில்லாமலே ஸித்தாந்தக் கட்டிடம் எழுப்பினார்கள்! பௌத்தத்தில் நிர்வாணம் என்ற சூன்ய நிலைதான் மோக்ஷம் என்று சொல்லி, லோக வியாபாரம் முழுக்க என்னவோ ஒரு மாய ஓட்டத்தில் பல ஸமாசாரங்கள் சேர்ந்து நடக்கிற மாதிரி தெரிவதே ஒழிய, ஒரே பொய்தான் என்று சொல்லியிருக்கிறது. இப்படி ஒரே பொய்யாக, ஏதேதோ சேருவதும் பிரிவதும் மாதரி எல்லாம் இருக்கிறபோது, எப்படி இவ்வளவு திட்டமாக ஒவ்வொரு கர்மாவுக்கும் தப்ப முடியாதபடி இன்ன பலன் என்று நிர்ணயித்து நடக்க முடியும்? ‘என்னவோ எல்லாம் மாய ஓட்டம்’ என்று தள்ள முடியாமல், ஒரு மஹா மதியானது ஸங்கல்பித்துத் தானே இப்படியெல்லாம் காரண கார்ய விளைவுகளை ஏற்படுத்துவதாக ஊஹிக்க முடிகிறது? அந்த மஹாமதிதான் ஈஸ்வரன் என்பது.

இங்கே ஒரு விஷயத்தைக் குறிப்பிடவேண்டும். முக்யமான ஸமாசாரம். ஆசார்யாளும், ‘லோக வ்யாபாரமெல்லாம் மாயை; ப்ரஹ்மம்தான் ஸத்யம்’ என்றே சொல்லியிருப்பதை வைத்துக்கொண்டு சில பேர் இதுவும் பௌத்தத்தை அப்படியே ‘காப்பி’ அடித்ததுதான் என்று நினைத்துக்கொண்டு விடுகிறார்கள். இவர்கள் ஒரு முக்யமான பாகுபாட்டைப் புரிந்துகொள்ளவேண்டும். லோகம் மாயை என்று சொல்லும்போது ஆசார்யாள் அது ஏதோ தலை கால் இல்லாமல் பல ஸமாசாரங்கள் சேர்ந்த மாதிரி இருக்கிற ஓட்டம் என்று பௌத்தர்கள் மாதிரிச் சொல்லவே இல்லை. மாயையைத் தன் குணமாகக் கொண்ட ஒரு ஈச்வரன், அல்லது மாயா சக்தி படைத்த ஈச்வரன்தான் இந்த லோகம் என்ற தோற்றத்தை ப்ரஹ்மத்திலிருந்தே தோற்றுவித்து அதை நடத்தியும் வருகிறான், கர்ம பலன்களைத் தருகிறான் என்றே ஆசார்யாள் ஸ்தாபித்திருக்கிறார். இன்னொரு விதமாகச் சொல்வதானால், கார்யம், குணம் எதுவுமில்லாத ப்ரஹ்மத்தை நிர்குண ப்ரஹ்மம் என்று அவர் சொல்லி, அதுவே மாயா சக்தியோடு கூடிக் கார்யமும் குணமும் உள்ள ஈச்வரன் என்ற ஸகுண ப்ரஹ்மமாகி லோக வ்யாபாரத்தைச் செய்கிறது என்று கூறியிருக்கிறார். இதிலிருந்து தப்பி, ஸகுணத்திலிருந்து நிர்குணத்துக்குப் போய், அதோடு அபேதமாக ஐக்யமாகிவிடுவதுதான் அவருடைய அத்வைதத்தின் லக்ஷ்யம். அதற்கு ஸகுண ப்ரஹ்மமான, மாயை ஸஹிதனான ஈச்வரனின் அநுக்ரஹம் வேண்டுமென்றும், அத்வைத ஞான மார்க்கத்தில் போவதற்கு முதல்படியாக ஈச்வர பக்தி செய்ய வேண்டுமென்றும் ஸாதனா மார்க்கம் அமைத்துத் தந்திருக்கிறார்.

இன்னொரு பாகுபாடு: மாயை என்றால் அடியோடு பொய் என்று அர்த்தமில்லை. அடியோடு பொய்யாயிருப்பதை ஆசார்யாள் ‘அத்யந்த அஸத்’ என்று சொல்வார். பூர்ண ஸத்யமாயிருப்பது ப்ரஹ்மம், அதாவது நிர்குண ப்ரஹ்மம். இரண்டுக்கும் நடுவில் இருப்பது, ‘ப்ராதிபாஸிக ஸத்யம்’ என்பது. அதாவது நடைமுறை வ்யவஹாரத்தில் நிஜம் போலவே இருப்பது. ஆனாலும் ஞானம் வந்த நிலையில் நிஜமாக இல்லாமல் மறைந்து போய்விடுவது. மாயா லோகம் என்பது இப்படிப்பட்ட ப்ராதிபாஸிக ஸத்யம் என்ற தாற்காலிக நிஜத்தோற்றம் என்றே ஆசார்யாள் சொல்லியிருக்கிறார். அடியோடு பொய்யான அத்யந்த அஸத் என்று அல்ல. ஜகத் ‘அஸத்யம்’ அல்ல. அது ‘மித்யை’ என்னும் தற்கால ஸத்யம்.

இப்படி ஜகத்திற்கும் ஒருவிதமான (இடைநிலை) மெய்ம்மையைத் தரும்போதுதான், நல்லது கெட்டது என்று இனம் பிரித்து மாயியான ஈச்வரன் பலன் தருவதைச் சொல்லமுடிகிறது. அதனால், நல்லதே செய்துதான் அதன் வழியாக ஈச்வராநுக்ரஹத்தில் சித்த சுத்தி பெற்று நிவ்ருத்தி (ஞான) மார்க்கத்திற்குப் போகமுடியும் என்று சொல்ல முடிகிறது. நல்லது செய்வது என்றால் என்ன? ஒழுக்கமாயிருப்பது, தர்மப்படி நடப்பது. பௌத்தத்தில் ‘சூன்யமாக ஒரு மோக்ஷம் இருக்கிறது, பாக்கி எல்லாமே ஒரே பொய்ம்மாய ஓட்டம்’ என்று சொல்லிவிட்டு, ஆனால், அஹிம்ஸை ஸத்யம் முதலான ஒழுக்கங்களை வலியுறுத்தும்போது ‘எல்லாம் பொய் என்கிறபோது ஹிம்ஸையானாலென்ன, அஹிம்ஸையானா லென்ன? ஸத்யமானாலென்ன, அஸத்யமானாலென்ன? தர்மம் எதற்கு? ஒழுக்கம் எதற்கு?’ என்று எதிர்கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியாமலிருக்கிறது. ஆசார்யாள் ஸித்தாந்தத்திலோ, முழுப் பொய்யாயுமில்லாமல், முழு நிஜமாயுமில்லாமல் நடுவிலிருக்கிற மித்யையாக மாயா ஜகத்தைச் சொல்லி, இதை நிர்வஹிக்கும் ஈச்வரன் கர்மாப்படியே பலன் தருவதில் ஒரு ஜீவன் ஒழுங்காக, தர்மமாக ஒழுகினால்தான் அதற்கு சித்த சுத்தி தந்து ஞான மார்க்கத்துக்கு உயர்த்துவான் என்று பதில் சொல்ல முடிகிறது. இந்த தர்ம ஒழுக்கத்துக்கு உதவும் உபயமாகவே மீமாம்ஸை சொல்லும் வைதிக கர்மாநுஷ்டானங்களையும் ஆசார்யாள் ஏற்றுக்கொண்டார்.

ஆசார்யாளுடைய மதத்தின் பெருமையே அதில் மீமாம்ஸையின் கர்மாநுஷ்டானம், பௌத்தத்தின் மாயைக் கொள்கை, ஜைனத்தின் அஹிம்ஸை முதலிய எல்லாவற்றிற்கும் ஒவ்வொரு நிலைகளில் இடம் கொடுத்து அங்கீகரித்திருப்பதுதான்!

மொத்தத்தில் நான் சொல்ல வந்தது, ஈச்வரனைச் சொல்லாத பௌத்தம், சமணம் ஆகிய இரண்டும் கர்மக் கொள்கையை மட்டும் ஒப்புக்கொண்டு, அதன் அங்கமாக தர்ம ஒழுக்கங்களை விதிப்பதானது அஸ்திவாரமில்லாமல் கட்டிடம் எழுப்புகிற மாதிரி இருக்கிறது என்று காட்டத்தான். ‘எல்லாம் பொய் ஓட்டம்’ என்று பௌத்தம் தள்ளுவதுபோலத் தள்ளினாலும் ஸரி, அல்லது, ‘எதைப் பற்றியும் எதுவும் இப்படியென்றோ அப்படியென்றோ வரையறுத்துச் சொல்லமுடியாது’ என்று ஜைனம் நிச்சயமில்லாமல் முடிப்பதுபோல முடித்தாலும் ஸரி, இரண்டிலும் இத்தனை திட்டவட்டமாக ஒவ்வொரு கர்மாவிற்கும் பலனைப் பிணைத்துக்கொடுத்து ஸம்ஸார சக்ரத்தைத் தொடர்ந்து உருட்டிக் கொண்டுபோகும் ஏற்பாட்டிற்குத் தக்க விளக்கம் கிடைக்கவில்லை. மாயாலோகத்தை நடத்துபவனாகவும் கர்ம பல தாதாவாகவும் உள்ள ஈச்வரன்தான் விளக்கமாக அமைவது.

பொதுவாகவே ஜன ஸமுதாயத்திற்கு ஈச்வரன் என்ற ஒருவன் இல்லாத மதம் ஒட்டுவதில்லை.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is இதர மதங்களைப் பற்றி
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  பௌத்த-ஜைனமும் பொது ஜனங்களின் மனப் போக்கும்
Next