தனக்கு மிஞ்சி! : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

இந்த உணர்ச்சி வந்து விட்டால் – பரோபகாரம் என்பது ஈஸ்வரனின் கட்டளையான கடன் என்று புரிந்து கொண்டு விட்டால் – நாம் எத்தனை கஷ்ட தசையிலிருந்தாலும் பரோபகாரத்தை விட்டுவிடாமல் செய்வோம். ”தனக்கு மிஞ்சி தர்மம் என்றுதானே சொல்லியிருக்கு? நீயே ச்ரம தசையிலிருக்கிறபோது மற்றவர்களுக்காக வேறு ஏன் ச்ரமப்படுகிறாய்?” என்று கேட்கத்தான் கேட்பார்கள். அப்போது, ”நான் ச்ரம தசையில் இருக்கிறேன் என்றால் பூர்வ ஜன்மாவில் ஈஸ்வராக்ஞைகளை ஸரியாகப் பண்ணாததற்கு இது தண்டனை என்றே அர்த்தம். போன ஜன்மத்தில் நான் பிறத்தியாருக்கு எந்த உபகாரமும், தொண்டும் பண்ணாததால் இப்போது கஷ்டப்படுகிறேன். அதனாலேயே இப்போதுதான் நிச்சயமாக நான் பரோபகாரம் செய்தாக வேண்டும். தனக்கு மிஞ்சி – போன ஜன்மாவின் [கர்ம] பாக்கியாக, அப்போதைய உடம்பு போன பிறகும் மிஞ்சி – இப்போது வந்து சேர்ந்திருக்கும் இந்தக் கஷ்டம்தான், ‘தனக்கு மிஞ்சி’. இது தீருவதற்காகவே தர்மம் செய்தாக வேண்டும். அதுதான் ‘தனக்கு மிஞ்சி தர்மம்’. நீர் அதற்கு வேறேதோ தப்பர்த்தம் பண்ணிக் கொண்டிருக்கிறீர். இப்போது நான் தன்னையும் மிஞ்சி – அதாவது என் சொந்தக் கஷ்டத்தையும் மிஞ்சி – தர்மம் பண்ணினால்தான் வருங்காலத்திலாவது நன்றாயிருப்பேன்” என்று பதில் சொல்ல வேண்டும்.

எத்தனையோ கஷ்டத்திலும் இளையான்குடிமாற நாயனாரைப் போலப் பரோபகாரம் பண்ணினவர்களின் ஞாபகம் நமக்குப் போகக்கூடாது.

தான் எத்தனை கஷ்டப்பட்டாலும் அதைப் பொருட்படுத்தாமல் அதற்கு மேம்பட்டு வெளியிலே வருவதுதான் தனக்கு மிஞ்சுவது. இப்படி வந்து லோகத்துக்கு உபகரிப்பதுதான் ”தனக்கு மிஞ்சி தர்மம்” என்று வைத்துக் கொள்ள வேண்டும்.

இது ரொம்ப ஹை லெவலில் [உயர் மட்டத்தில்]. லோயர் லெவலில் [அதற்கு கீழ்ப்பட்ட நிலையில்] பிறருக்கு திரவிய ஸஹாயம் செய்வதற்காகவே தான் மிச்சம் பிடிக்கும் விதத்தில் வரவுக்குள் செலவை அடக்கி, கடன் கஸ்தி இல்லாமல் சிக்கனமாக வாழவேண்டும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is பரோபகாரமே ஒரு ''கடன்''
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  சேமிப்புக்கு வழி
Next