பரோபகாரத்துக்காகவே சிக்கனம் * : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

சொந்த வாழ்க்கையில் சிக்கனமாக இருந்தால் தான் பிறத்தியாருக்கு உதவியாக திரவிய ஸஹாயம் செய்ய முடியும். அநாவசியங்களையெல்லாம் அத்யாவசியமாக்கிக் கொண்டு மேல்நாடுகளைப் பார்த்து material comfort, luxury என்று மேலே மேலே போய்க் கொண்டிருந்தால் தனக்கும் ஒரு நாளும் த்ருப்தி இராது;பிறத்தியாருக்கும் தான தர்மம் பண்ண முடியாது. மோட்டார் ஸைகிளுக்கு மேலே கார் வேணும், அப்புறம் அந்தக் காரிலும் இன்னம் பெரிசாக வேணும், அதற்கப்புறம் அதையே ஏர்-கன்டிஷன் பண்ணணும் என்கிறது போல, ஸிமென்ட் மொஸெய்க் ஆகணும், மொஸெய்க் மார்பிள் ஆகணும் என்கிறதுபோல ஒன்றுக்கு மேல் ஒன்று ஸெளகர்யத்தைத் தேடிக் கொண்டேயிருப்பதால் எப்போது பார்த்தாலும் அதிருப்தி என்ற பெரிய அஸெளகர்யத்திலேதான் ஒருத்தன் இருந்து கொண்டிருப்பான்! அது மட்டுமில்லை. எத்தனை ஸம்பாத்யம் வந்தாலும் போதவும் போதாது. அதனால்தான் இன்றைக்கு அத்தனை பணக்காரர்களும் கடனாளியாக – கடன் என்கிறதையே ஓவர்-ட்ராஃட் என்று கௌரவமான பெயரில் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இவனே கடனாளியாக இருந்தால் மற்றவர்களுக்கு எங்கேயிருந்து தர்மம் பண்ணுவது?

இப்போது பொதுவாக உள்ள பரிதாப நிலை என்னவென்றால், ஒன்று, சிக்கனமாக இருப்பவன் தானும் அநுபவிக்காமல் பிறத்தியானுக்கும் உதவி பண்ணாமல் கருமியாக இருக்கிறான்; செலவாளியாக இருப்பவனோ ஸெளகர்யம், இன்னும் ஸெளகர்யம்’ என்று பறப்பதில் தனக்கே போதாமல் கடனாளியாக நிற்பதால் இவனாலும் பரோபகாரம் நடப்பதில்லை.

பிறருக்குச் செய்வதற்காகவே சொந்த விஷயத்தில் சிக்கனமாயிருக்கவேண்டும் என்ற உயர்ந்த கொள்கையை ஒவ்வொருவனும் கடைப்பிடித்தால் எவ்வளவோ புண்யத்துக்குப் புண்யம், நிம்மதிக்கு நிம்மதி, எத்தனையோ தீனர்களும் க்ஷேமமடைவார்கள்.

சிக்கனமாயிருந்தாலொழிய, இப்போது இருக்கிற போக போக்ய இழுப்பில், எவனுக்குமே மிச்சம் பிடிக்க முடியாது. அதனால் சிக்கன வாழ்க்கை நடத்தினால்தான் ‘தனக்கு மிஞ்சி’தர்மம் பண்ண முடியும். அதாவது எத்தனை சிக்கனமாயிருக்க முடியுமோ அப்படியிருந்து தனக்கு மிஞ்சும்படியாகப் பண்ணிக்கொண்டு தர்மம் பண்ணணும்.

கீதை முதல் ஸ்லோகத்தில் வருகிற தர்ம க்ஷேத்ரம் என்பது இந்த சரீரம்தான். ஒரு வயல் என்றால் அதில் விளைச்சல் பண்ணுவதற்கு பூஸாரம் வேண்டும்; அப்புறம் ஒவ்வொரு தானியத்துக்குரிய பருவகாலம் பார்க்க வேண்டும். க்ஷேத்ரம் என்றால் வயல். நம்முடைய சரீர வயலுக்கு எது பூஸாரம்? புத்தி பிரஸன்னமாயிருப்பது; இந்திரியங்கள் பழுதாகாமல் சுத்தமாயிருப்பது; விஷயங்களைக் கிரஹித்துக் கொள்ளும் ஞானேந்திரியங்கள், கார்யங்கள் பண்ணும் கர்மேந்திரியங்கள் இரண்டும் தீக்ஷண்யமாயிருப்பது — இதுதான் பூஸாரம். ஓடியாடவும் தளர்ச்சியில்லாமல் ஆலோசிக்கவும் சக்தி இருப்பதுதான் பருவ காலம். இதையெல்லாம் பொருத்து இந்த சரீர வயலில் தர்மப் பயிரை வளர்த்து, தர்ம க்ஷேத்ரமாக்க வேண்டும். அந்தப் பயிரை வளர வொட்டாமல் ஹானி செய்கிற களைதான் தனக்காக அவசியத்துக்கு மீறிச் செலவழிப்பது. வயல் நிறையக் களை மண்டியிருப்பதைப் பார்த்து நல்ல விளைச்சலென்று ஸந்தோஷிப்பது போலத்தான், தனக்காகச் செலவழித்து அதில் ஏற்படும் ஸெளகர்யங்களைப் பார்த்து ஸந்தோஸிப்பது! களை பிடுங்குவதில் எத்தனை கவனமாயிருக்கிறோமோ அத்தனை கவனமாக அத்யாவச்யத்துக்கு மேலான செலவுகளைப் பிடுங்கிப் போட வேண்டும்.


* சிக்கன வாழ்க்கை பற்றி ”தெய்வத்தின் குரல்”முதற் பகுதியில் ” ” என்ற பகுதியிலுள்ள ‘வாழ்க்கைத் தரம்‘, ‘எளிய வாழ்வு‘, ‘கணக்காயிருக்கணும்‘ என்ற உரைகளில் காண்க. இங்கு காணும் இவ்வுரையிலுள்ள சில விஷயங்கள் இப்பகுதியிலுள்ள ‘ ‘ என்ற உரையிலும் கூறப்பட்டிருப்பினும், விஷய முக்யத்வத்தினால் இங்கு பூர்ண உருவில் தனியே கொடுக்கப்பட்டிருக்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is கண்டனமே பாராட்டு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  கடன் அனைவருக்கும் தீங்கு
Next