மோசடி; போலித்தனம் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

தன் வேலையை இன்னொருத்தனிடம் விட்டுவிட்டு தான் ‘ஊரானுக்குத் தொண்டு செய்கிறேன்’ என்று போனால் அது பரிஹாஸந்தான், fraud[மோசடி] தான். தாயார், தகப்பனார், ஸஹோதரர், பத்னி, புத்ரர் இருந்தால் அவர்கள் – ஆகியவர்களுக்குச் செய்ய வேண்டிய ட்யூட்டிகளைச் செய்யாமல் லோகத்துக்கு உபகாரம் செய்கிறேன் என்றால் அது ‘ஹிபாக்ரிஸி’ [போலி வேஷம்] தான். இப்படியெல்லாம் பண்ணிவிட்டு பந்துக்கள் எடுத்துக்காட்டினால் கோபம் வருகிறது, எரிச்சல் வருகிறது என்றால் பரோபகாரத்தால் இவனுக்கு எந்த அபிவிருத்தியும் ஏற்படவில்லை என்றுதான் அர்த்தம். ‘எல்லாரிடமும் அன்பாயிருக்கணும், மதுரமாய்ப் பழகணும்’ என்பதுதான் தொண்டு செய்கிறவனுக்கு லக்ஷணம். பொதுத்தொண்டு என்பதற்காகவே வீட்டு மநுஷ்யர்களிடம் அன்பு போய், எரிந்து விழுந்து கொண்டிருக்கிறானென்றால் இவன் தொண்டு செய்து என்ன புண்யம்? இவனுக்கு என்ன சித்த சுத்தி ஏற்பட முடியும்? குளிக்கப்போய்ச் சேற்றைப் பூசிக்கொள்கிற மாதிரி பண்ணிக்கொள்ளக் கூடாது.

தன் லிமிடேஷனை எவனும் எப்போதும் உணர வேண்டும். மநுஷ்யராய்ப் பிறந்துவிட்டோம். அதனால் நாம் பல திநுஸில் கட்டுப்பட்டுதான் கிடக்கிறோம். ஆசைகள், ஆஸ்தைகள் பெரிசாய் இருக்கலாம். அவை நல்லதாகவும் இருக்கலாம். லோகத்துக்கு நல்லது பண்ணணும் என்றே ஆர்வமிருந்தாலும் நமக்கும் நம் குடும்பத்துக்கும் செய்தேயாக வேண்டும் என்ற நிர்பந்தம் இருப்பதை உணர்ந்து இந்த ட்யூட்டிக்கு ஹானியில்லாமல்தான் லோக ஸேவை செய்ய வேண்டும்.

”தன்னைப்பெற்ற தாயார் கிண்ணிப்பிச்சை எடுக்கிறபோது கோதானம் பண்ணினானாம்” என்று சொல்வதுண்டு. முதலில் தன் குடும்பத்தைக் கவனிக்க வேண்டும். தன் சொந்தக் கார்யங்களை ஒருகாலும் பிறத்தியாரிடம் காட்டிக்கொடுக்கவே கூடாது. இதுதான் சாஸ்திரம். அவனவன் தன் வஸ்திரத்தை தானேதான் தோய்துக்கொள்ள வேண்டும். ‘டயார்க்கி’யில் [இரட்டையாட்சியில்] ராஜகோபலாச்சாரி மெட்றாஸ் ப்ரஸிடென்ஸிக்கு ப்ரைம் மினிஸ்டராக (அப்போது டில்லியில் ப்ரைம் மினிஸ்டர் இல்லாததால் ப்ரெஸிடென்ஸியில் பிரதான மந்திரியாக இருக்கப்பட்டவரை ப்ரைம் மினிஸ்டர் என்று சொல்வார்கள். இப்போது பிரெஸிடென்ஸியை ஸ்டேட் என்றும், இதன் ப்ரைம் மினிஸ்டரை சீஃப் மினிஸ்டர் என்றும் சொல்கிறார்கள். இப்படி அவர் ப்ரைம் மினிஸ்டராக) இருந்துபோதுகூடத் தன் துணியைத் தானேதான் தோய்த்துக் கொண்டார். இப்படியே பல பேர் பெரிய ஸ்தானத்திலிருந்தபோதுகூடத் தன் பூட்ஸுக்குத் தானேதான் பாலிஷ் போட்டுக்கொண்டார்கள் என்று சொல்கிறார்கள். நம் கார்யத்தை நாமே செய்து கொள்கிறதிலே கௌரவக் குறைச்சலே இல்லை. பிறத்தியாரிடம் இவற்றை விடுவதுதான் கௌரவக் குறைச்சல். நாம் பரோபகாரி என்று வெளியிலே ‘ஷோ’ பண்ணிக்கொண்டு ஊராரிடம் நல்ல பேர் வாங்கிக் கொள்வதற்காக வீட்டுக்காரர்களெல்லாம் நமக்கு பரோபகாரம் பண்ணும்படியாகத் தாழந்து போய் அவர்களுக்கு ச்ரமத்தைக் கொடுத்து நல்லெண்ணத்தையும் போக்கிக் கொள்வது நமக்கே நாம் பண்ணிக்கொள்கிற கௌரவக் குறைச்சல்தானே?

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is என் ஜாக்ரதைக் குறைவு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  சாஸ்திரக் கட்டளை
Next