தொண்டு மனத்தின் தன்மை : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

இரண்டு மூன்று பழமொழி சொன்னேன். முடிவாக இன்னொன்று தோன்றுகிறது: ”தன் கையே தனக்கு உதவி” தன் கை பிறருக்கும் உதவியாகப் பரோபகாரப் பணிகளைச் செய்யத்தான் வேண்டும். ஆனால் தன் கை தன் கார்யத்துக்கு உதவியாக இல்லாமல், தன் கார்யத்துக்கு அகத்தின் மற்ற மநுஷ்யர்களின் கையை எதிர்பார்த்துக்கொண்டு அவர்கள் கையில் நம் கார்யப் பொறுப்பை போட்டுவிட்டு, நாம் ஊருக்கு உபகாரம் பண்ணுவது என்பது தப்பு.

ஊருக்குப் பண்ணினால் நாலு பேர் நம்மைக் கொண்டாடுவார்கள். வீட்டுக்கு நாம் செய்ய வேண்டிய கடமையைச் செய்வதற்காக, வீட்டார் நம்மைக் கொண்டாடமாட்டார்கள்தான். வீட்டுக்குப் பண்ணாமல், தன் சொந்தக் கார்யத்தைப் பண்ணிக்கொள்ளாமல், ஊருக்கு ஒருத்தன் பண்ணுகிறான்;அதற்கு இடைஞ்சலாகச் சொல்கிறார்களே என்று வீட்டுக்காரர்களிடம் எரிந்து விழுந்து கொண்டிருக்கிறானென்றால் அவனுக்கு வாஸ்தவமான தொண்டு உள்ளமே இல்லை, பேர் வாங்குவதற்காகத்தான் ஸோஷல் ஸர்வீஸ் என்று பண்ணுகிறான் என்றே அர்த்தம்.

தொண்டு உள்ளத்துக்கு லக்ஷணம் அன்பும் அடக்குமும்தான். ”தொண்டர் தம் பெருமை”என்று அதைப் பெரியதற்கெல்லாம் பெரியதாக மற்றவர்கள் கொண்டாடலாமேயொழிய, தொண்டு செய்கிறவனுக்குத் ‘தான் பெரியவன்’என்ற எண்ணம்லவலேசங்கூட இருக்கக்கூடாது. தான் ரொம்பவும் சின்னவன் என்ற எண்ணமே இருக்க வேண்டும். பேருக்கு ஆசைப்பட்டுக் கொண்டு தொண்டு செய்வதென்றால் அந்தத் தொண்டையே அழுக்குப் பண்ணினதாகத்தான் அர்த்தம். அடக்கமும் அன்பும் இருந்தால் வீட்டிலே இருக்கிறவர்களை எதிர்த்துக் கொண்டும் அவர்களிடம் எரிந்து விழுந்து கொண்டும் எவனும் வெளியிலே தொண்டு செய்யப் போகமாட்டான்.

தான் பிறர் பாரத்தைத் தாங்குகிறவனாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, தன் பாரத்தை இன்னொருவரிடம் தள்ளினால் அது தனக்கு அவமானம்;தன் கை பிறருக்கு உதவுவதாக இருக்க வேண்டுமேயொழியத் தானே இன்னொரு கையை உதவிக்கு எதிர்பார்த்தால் அது தனக்கு ரொம்பவும் கௌரவஹீனம் என்ற உணர்ச்சி பரோபகாரத்தில் ஈடுபடுகிற எவனுக்கும் basic -ஆக ஏற்பட்டுவிட்டால் இப்போது கம்ப்ளெய்ன்ட் வந்தது போலக் கோளாறாக ஆகவே ஆகாது. லோக ஸேவைக்குப் போகிறவர்கள்,‘ என் கார்யம் பூராவையும் நானே பார்த்துக் கொண்டுதான் பொதுத்தொண்டுக்குப் போவேன் ‘ என்று பிரதிக்ஞை பண்ணிக் கொண்டுவிட்டால் எல்லாம் ஸரியாய்விடும்.

தன் கார்யம் என்பதில் தன் வீட்டுக் கார்யம், மாதா-பிதா-பத்னி-புத்ரர்-ஸஹோதரர் முதலான வீட்டு மநுஷ்யர்களின் கார்யம் அடக்கந்தான்.

என் கடமையில் தப்பாமல், குடும்பத்துக்குச் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டே உன் குடும்பமான — வஸுதைவ குடும்பகம் : லோகமெல்லாம் ஒரு குடும்பம் என்கிறபடி — ஸகல மக்களுக்கும் என்னாலான பணியைச் செய்ய அருள் பண்ணப்பா” என்று ஈஸ்வரனைப் பிரார்த்தனை பண்ணிக்கொண்டால் அவன் அப்படி அனுக்ரஹம் செய்வான். அதுதான் நாம் பண்ணிக்கொள்ள வேண்டிய வேண்டுதல்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is கடமை தவறுவதற்குத் தண்டனை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  கண்டனமே பாராட்டு
Next