உச்சநிலை உதாரணமாகாது : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

பிரஸங்கம் பண்ணின நாளில், ”ஊர்க்குழந்தையை ஊட்டி வளர்த்தால் தன் குழந்தை தானே வளரும்” என்று அடிக்கடி quote பண்ணித்தான் இருக்கிறேன். அதாவது உன் குழந்தையைப் பட்டினி போட்டுவிட்டாவது போய் ஊர்க் குழந்தையை ஸவரக்ஷணை பண்ணு என்று சொல்லித்தான் வந்திருக்கிறேன். அப்படிப் பழமொழி இருப்பதும் வாஸ்தவம். ஸத்யமாக இல்லாத ஒன்று பழமொழியாக ஆகிறதில்லை. ஆனால் இந்தப் பழமொழி ரொம்ப உசந்த நிலையில், தொண்டு மனப்பான்மையில் அப்படியே ஊறிப்போனவர்களைக் குறித்து ஏற்பட்டிருக்க வேண்டும். அவர்கள் மனஸறிந்து தன் குழந்தையைக் கதற விட்டுவிட்டு ஊர்க் குழந்தையைச் சீராட்டினார்களென்று அர்த்தமில்லை. பரோபகாரத்தில் அவர்களுக்குள்ள தீவிர உணர்ச்சி வேகம் அவர்களை இப்படி அடித்துக்கொண்டு போயிருக்கிறது. பக்தி வெறியில் ஒவ்வொரு நாயன்மார் லோக தர்மங்களுக்கு விரோதமாகக்கூடப் பண்ணவில்லையா? அப்படி இதுவும் ஒரு பரவச நிலையில் பண்ணுவது. அப்படி இவர்கள் தங்களுக்கு அதீதமான ஒரு சக்தியின் கீழ் ஊரிலே உள்ள அநாதைக் குழந்தைகளின் நலனுக்கே தங்களை அர்ப்பணம் பண்ணிக்கொண்டபோது, ஈஸ்வர பிரஸாதமாக வீட்டிலே இவர்களுடைய குழந்தைகள் கவனிப்பு இல்லாமலே (அல்லது ஈஸ்வரனின் கவனிப்பிலேயே) நன்றாக வளர்ந்திருக்கும். இது ஸாதாரணமாக லோகத்திலிருக்கப்பட்டவர்களுக்கு ‘எக்ஸாம்பிள்’ ஆகாது.

தன் குழந்தையைக் கவனிக்காமல் ஊர்க் குழந்தையைச் சீராட்டுவது பற்றி வேடிக்கையாக ஒருத்தர் சொன்னது கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தக் காலத்தில் ஸ்த்ரீகள் ஸோஷல் ஸர்வீஸ் என்று கிளம்பியிருப்பது பற்றிக் கேலியாக அவர் சொன்னாராம்: ஒரு பணக்கார வீட்டு அம்மாள் பெட்ரோலைச் செலழித்துகொண்டு ஏதோ ஒரு சேரிக்குப் போய், எநத தேசத்திலிருந்தோ வந்திருக்கிற பவுடர் பாலைக் கரைத்து அங்கே ஒரு குழந்தைக்குப் போட்டி [புகட்டி] விட்டு வருவாளாம். இங்கே இவளுடைய வீட்டில், இவள் எந்தக் குழந்தைக்கு பால் போட்டினாளோ அதனுடைய அம்மாக்காரியே இவளுடைய குழந்தைக்கு ஆயாவாகப் பால் கரைத்துப் போட்டிக் கொண்டிருப்பாளாம்!

அதாவது ஸோஷல் ஸர்வீஸ் செய்கிறோமென்று தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டுவிடக்கூடாது.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is வீட்டுக்குப் பின்பே வெளியுலகு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  கடமை தவறுவதற்குத் தண்டனை
Next