நோக்கத்துக்கே குந்தகம் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

இதிலே ஸைகலாஜிகலாக ஒன்று கவனிக்க வேண்டும். ஒருத்தன் தன் வேலை, வீட்டு வேலைகளை மற்றவர்களிடம் விட்டுவிட்டுப் பொதுப்பணிக்குப் போகிறான் என்னும்போது, வீட்டின் மற்ற பேருக்கு இவனிடம் ஏற்படுகிற அதிருப்தியில் ஸமூஹத்தொண்டே பிடிக்காமல் போய்விடுகிறது. ”போதும், இன்னொருத்தன் ஊர்க்கார்யம் என்று உழப்பறித்துக்கொண்டு அகத்துக் காரியத்தை விட்டிருப்பது. நமக்கு இந்த ஸேவையும் கீவையும் வேண்டாம்” என்று அவர்களுக்கு ஒதுங்கிப்போகத் தோன்றிவிடும். அதுவே அவன் அளவறிந்து அகத்துக் காரியத்தையும் கவனித்துக் கொண்டு பொதுக் காரியமும் பண்ணினானென்றால் அப்போது வீட்டின் மற்ற மநுஷ்யர்களும் இவனோடுகூட வெளித்தொண்டுக்கு வந்து தங்களாலானதைச் செய்வார்கள் வீட்டுக் காரியத்தைக் கவனிப்பதால் இவனொருத்தன் செய்யும் ஸோஷல் ஸர்வீஸ் குறைந்து போகிறதென்றால், இப்போது அதைவிட ஜாஸ்தியாக மற்றவர்களின் ஸர்வீஸ் ஸொஸைட்டிக்குக் கிடைத்துவிடும். இவன் அதியாகப் போய் வீட்டு மநுஷ்யர்களின் அதிருப்தியை ஸம்பாதித்துக் கொள்ளும்போதோ, தன் நோக்கத்துக்கே பாதகமாக, அவர்களால் ஏற்படக்கூடிய ஸோஷல் ஸர்வீஸைத் தடுத்துவிடுகிறான்!

தொண்டுக்குப் போகிறவர்களுக்கு ஒரு ‘ட்ரிக்’ சொல்லித் தருகிறேன். அன்போடு பதவிசாக நடப்பதுதான் ‘ட்ரிக்’! வெளி மநுஷ்யர்களிடம் மட்டுமில்லை, அகத்துப் பேரிடமும் இப்படிப் பரிவாக, பணிவாக இருந்தானானால் அவர்களே, ”நாம்தான் வீட்டையே கட்டிக்கொண்டு அழுகிறோம். இவனாவது லோகத்துக்குப் பண்ணி, நமக்கும் சேர்த்துப் புண்யம் ஸம்பாத்தித்து தரட்டும்” என்று நினைத்து அவனிடம் வீட்டு வேலைகளைக் கூடிய மட்டும் காட்டாமல் தாங்களே பண்ணுவார்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is மனைவி மக்கள் விஷயம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  வீட்டுக்குப் பின்பே வெளியுலகு
Next