செய்ய வேண்டிய பணி : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

தங்கள் க்ராமத்தில் அல்லது பேட்டையில் ஒருத்தன் சாகிற நிலையில் இருக்கிறான் என்று தெரிந்தால் அங்கே ஸங்கத்திலிருந்து ஒருத்தரோ சிலரோ போக வேண்டும். வீட்டிலே இல்லாமல் ஆஸ்பத்திரியிலோ ஜெயிலிலோ உயிரை விடுகிறவர்களும் உண்டு. எனவே இப்பேர்ப்பட்ட இடங்களுக்கும் தங்களை அனுமதிக்கும் படியாக அந்தந்த அதிகாரிகளிடம் பெர்மிஷன் வாங்கி வைத்திருக்க வேண்டும். அங்கே வெறும் கையோடு போகக்கூடாது. நாமம்தான் ஸர்வரோக நிவாரணி என்பது வாஸ்தவமே. அதற்கு வெளி வஸ்து ஒன்றும் வேண்டியதில்லைதான். ஆனால் ஸ்தூலமாக ப்ரஸாதம் என்று ஒன்றைக்கொண்டுபோய்க் கொடுத்தால் அதற்கும் ஒரு தனி உத்ஸாஹ சக்தி உண்டுதான்; அது சாகிற ஜீவனுக்கு ஜாஸ்தி ஆறுதலாக இருக்கும். ஆனதால், முதலிலேயே கையில் சிவன்கோவில் விபூதி, பெருமாள் கோயில் துளசி ‘ஸ்டாக்’ வைத்திருக்கவேண்டும். அம்பாள் கோயில் குங்குமம், முருகன் அல்லது பிள்ளையார் கோயில் விபூதி என்று எது இருந்தாலும் ஸரி. சிவபரமாகவும், விஷ்ணுபரமாகவும், ஏதாவது இரண்டு கோயில் ப்ரஸாதம் ஸ்டாக் இருக்கவேண்டும். கங்கா ஜலம் ஸர்வ பாப சமனம் ஆனதால் சங்கா தீர்த்தமும் வைத்திருக்க வேண்டும். மரணமடைகிற ஜீவன் சைவ மதமோ, வைஷ்ணவ மதமோ அதைப்பொறுத்து அந்தந்த ப்ரஸாதத்தை எடுத்துப்போக வேண்டும். கங்கா தீர்த்தம் எல்லோருக்கும் பொது. அநேக சைவர்கள் துளஸி ப்ரஸாதத்தையும் ஆக்ஷேபிக்க மாட்டார்கள். இப்போதெல்லாம் வைஷ்ணவர்கள்கூட, ஈசுவரன் கோயில் ப்ரஸாதம் என்றால் விபூதி ப்ரஸாதம் கேட்டு வாங்கிக்கொண்டு போகிறார்கள். ஆனால் நாம் அவரவர் அபிப்ராயத்துக்கு அநுகூலமாகத்தான் ப்ரஸாதத்தைத் தரவேண்டும். மரண ஸமயத்திலே ஓர் இடத்தில் போய் ஸித்தாந்தச் சண்டைகளைக் கிளப்பக் கூடாது. யாருக்கு எது ஹிதமாக இருக்குமோ, அப்படிப்பட்ட ப்ரஸாதமாக எடுத்துப்போக வேண்டும்.

விபூதிப்ரஸாதம் என்பது சிவன் கோயிலில் இருக்கும் தக்ஷிணாமூர்த்திக்கோ, அல்லது தனிக் கோயிலில் இருக்கிற பிள்ளையாருக்கோ, ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமிக்கோ அபிஷேகம் பண்ணப்பட்ட விபூதியாக இருக்க வேண்டும். ஸாக்ஷாத் பராசக்தியான அம்பாள் பாதத்தில் அபிஷேகம் செய்யப்பட்ட தீர்த்தமும் கங்கா ஜலத்துடனோ, கங்கா ஜலம் கிடைக்காவிட்டால் அதற்குப் பதிலாகவோ வைத்திருந்து, மரிக்கிறவனுக்குக் கொடுக்கலாம். இதேபோல் விஷ்ணுபரமாக, பெருமாளுக்கு அர்ச்சனை செய்த துளஸியைக்கொண்டு வந்து உலர்த்தி ஸ்டாக் வைத்துக்கொள்ள வேண்டும். பெருமாள் பாதத்தில் அபிஷேகமான தீர்த்தமும் கொடுக்கலாம். கங்கை கிடைக்காவிட்டால், அதற்கு பதில் வைஷ்ணவர்களுக்குப் பெருமாள் பாத தீர்த்தம் தரவேண்டும். பெருமாளுக்கு நித்யப்படி முழு அபிஷேகம் இராது. திருமஞ்சனம் என்று சில நாட்களில்தான் செய்வார்கள். அதனால் மூர்த்தியின் பாதத்தில் மட்டும் அபிஷேகம் பண்ணுவித்து அந்தத் தீர்த்தத்தை வாங்கி ஸ்டாக் வைத்துக்கொள்ள வேண்டும். எதற்கும் கங்கை கைவசம் இருப்பது நல்லது.

சாவு என்றால் எவனுக்கும் பயம்தான். ஆயுஸ் முழுக்க நாஸ்திகனாக இருந்தவன்கூட அந்திம காலத்தில் ஏதோ ஒரு பெரிய சக்தியின்கையில் தானிருக்கிறோம் என்று கொஞ்சமாவது தெரிந்து கொள்ளாமலிருக்கமாட்டான். அந்த நேரத்திலே பயத்தைப்போக்க அந்த சக்திதான் கதி என்ற எண்ணம் எவனுக்கும் வராமல் இருக்காது. எவனுமே ஈசுவர த்யானத்தோடுதான் சாக விரும்புவான் என்றே எனக்குத் தோன்றுகிறது. ஆனதால், நாம் அவனுக்கு உபகரிப்பதை அவன் நிச்சயம் ஏற்றுக்கொள்வான். அவனுடைய பந்துக்களும் இந்தக் கைங்கர்யத்தை வரவேற்பார்கள். சில கிழம் கட்டைகள் போகாதா என்று இருக்கும்போது, வைத்யம் பார்க்கிறோம் என்று நாம் போனால் ஒருக்கால் பந்துக்கள் அசட்டை பண்ணக்கூடும் ஆனால் ‘புறப்பாடு’ நன்றாக நடப்பதற்கே நாம் உபகாரம் பண்ணுகிறோம் என்றால் எவரும் ஆக்ஷேபிக்கமாட்டார்கள்! அதிலும் நாம் அவர்களுக்குச் எந்தச் செலவும் சிரமமும் வைக்காததால் நிச்சயம் ஆக்ஷேபிக்கமாட்டார்கள் ஆனதால் நாம் இப்படிப்பட்ட தொண்டு செய்கிறோம் என்று தெரிந்துவிட்டால், அவர்களே நம்மைக் கூப்பிடுவார்கள். கூப்பிடாவிட்டாலும் நாம் போகவேண்டும். அவர்கள் கடும் நாஸ்திகர்களாக இருந்து ஆக்ஷேபித்தால் கொஞ்சம் எடுத்துச் சொல்லிப் பார்க்கலாம். அப்படியும் கேட்காவிட்டால் திரும்பிவிடலாம். ஆனால் அப்போதுகூடக் கோபம் இல்லாமல் சாகிற ஜீவனுக்கான ப்ராத்தனையை நமக்குள் செய்துகொள்ள வேண்டும். மொத்தத்தில் மான, அவமானம் பார்க்காமல் நம்மால் முடிந்த தொண்டைச் செய்யப் பாடுபட வேண்டும். மான அவமானம் பார்க்க ஆரம்பித்துவிட்டால் அது தொண்டே இல்லை.

செய்யவேண்டியது என்னவென்றால், ப்ராணா வஸ்தையில் இருக்கிறவர்களிடம் கோயில் ப்ரஸாதத்துடன் போகவேண்டும். அவர்களுக்கு கங்கா தீர்த்தம் கொடுக்க வேண்டும். விபூதி இடவேண்டும். துளஸியை வாயில் போடவேண்டும். அவர்கள் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு ‘சிவ சிவ சிவ சிவ’ என்றோ ‘ராம ராம ராம ராம’ என்றோ உரக்கச் சொல்ல வேண்டும். உரக்கச் சொல்லவேண்டியது அவசியம். ஜீவன் காதிலே அதுபட்டு மனஸைத் திருப்ப வேண்டுமாதலால், உயிர்போகும் வரையில் இப்படி நாம ஜபம் செய்வதுதான் ச்ரேஷ்டம். ஆனால் ப்ராணாவஸ்தையிலேயே ஒரு ஜீவன் மணிக்கணக்காக இழுத்துக் கொண்டிருந்தால் என்ன பண்ணுவது? நமக்கு மற்றக் கார்யம் இருக்கத்தானே செய்யும்? அதனால் பக்கத்திலே பந்துக்களில் யாராவது ஒருத்தர் முறைபோட்டுக்கொண்டு உட்கார்ந்து நாம ஜபம் பண்ணும்படியாக ஏற்பாடு செய்துவிட்டு நாம், ‘நம் கடமையைக் கொஞ்சமாவது செய்தோம்’ என்று புறப்பட வேண்டும். குறைந்த பக்ஷம் சிவநாமாவோ, ராமநாமாவோ 1008 தடவையாவது நாம் ஒரு ஜீவனுக்காகச் சொல்லவேண்டும். இப்படிப் பலபேர் சொன்னது அந்த ஜீவனுக்குள்ளே போய் தானாக அது உள்நினைவில் பகவானை நினைத்துக்கொண்டிருக்கும் படியாகப் பண்ணியிருக்கும் என்று வைத்துக்கொள்ளலாம். ஆனால் இது இரண்டாம் பக்ஷந்தான். நாம் கடைசிவரை இருக்கமுடியாமல் வந்துவிட்டாலும்கூட, ஒரு ஜீவன் பிரிகிறபோது அங்கு பகவந்நாம சப்தம் இருக்கும்படியாக அவனுடைய பந்துக்களையாவது ஜபிக்கும்படி ஏற்பாடு செய்துவிட்டு வருவதே ச்லாக்யம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is உயிர் பிரிகிறவனுக்கு உயர் பதவி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  திவ்யஸ்மரணைக்குப் பின் திவஸம் ஏன்?
Next