நவநீத க்ருஷ்ணன்; வடபத்ரசாயி : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

‘நவநீதம்’ என்றால் புதுசாக எடுத்தது என்று அர்த்தம். ‘நவ’-புதுசாக; ‘நீதம்’- எடுக்கப்பட்டது. புத்தம் புதுசாகக் கார்த்தால வேளையில் பசும் பாலில் உறை குத்தி ஸாயங்காலமே அந்தத் தயிரைச் சிலுப்பி எடுக்கிற வெண்ணெய்தான் நவநீதம். முதல் நாள் ராத்ரி உறைகுத்தி மறுநாள் வெண்ணெய் எடுக்கிறது ‘பழம் பற்று’ என்கிற மாதிரிதான். ரா வேளையில் ஸூர்யனுடைய பரிசுத்தி செய்கிற வெளிச்சம் இல்லாததாலேயே ராத் தங்கின பண்டம் அவ்வளவு ச்லாக்யமில்லை என்பது.

நாமெல்லாம் பசுக்கள். நம் மனஸு வெள்ளை வெளேரென்று பாலாக இருக்கணும். அப்போதுதான் கன்னங்கரேலென்று இருக்கிறதால் கிருஷ்ணன் என்றே பேர் வைத்துக்கொண்டவன் நம்மிடம் வருவான். அது வெறுப்பைத் தருகிற கறுப்பு அல்ல; மோஹத்தை உண்டாக்குகிற மேகத்தின் கறுப்பு. கனச்யாம், கனச்யாம் என்கிற போது ‘கன’ என்றால் ‘மேகம்’ என்றே அர்த்தம். ‘கார்வண்ணன்’ என்று சொல்வார்கள். மேகம் எத்தனைக்கெத்தனை கறுப்போ அத்தனைக்கத்தனை அதிக ஜலத்தைக் கொட்டும். அந்த ஜலம் கறுப்பாகவா இருக்கிறது? இப்படிப் பரம ப்ரேம தாரையைப் பிரவாஹமாகக் கொட்டுகிறவனே கிருஷ்ணன். அடர்ந்த மேகத்திலிருந்தே மஹா ஜ்யோதிஸ்ஸான மின்னல்கள் தோன்றுகிற மாதிரி, ஞானப் பிரகாசம் பளிச்சுப் பளிச்சென்று வெட்ட கீதாசாரியனாக இருக்கிறான் அந்தக் கொண்டல் வண்ணன். இப்படியே அவன் வெளியிலே கபடும் சூதும் மாயமுமாகத் தெரிந்தாலும் நாம் மனஸைப் பால் வெளுப்பாக்கிக் கொண்டால் பரம சுத்தமான ப்ரேமையோடு நம்மைப் பாலிக்க, கோபாலனாக வருவான்.

அப்படியே அந்தப் பாலை எடுத்துக் குடிப்பதில்லை அவன். அது தயிராகி அதிலிருந்து புத்தம் புது வெண்ணெய் எடுத்தாகணும். அந்த நவநீதத்தை உண்ணத்தான் வருவான்; அதுவும் திருட்டுத்தனமாக!

பக்தி தாபத்திலே வெள்ளை மனஸைக் காய்ச்சினால் அது பொங்கும். அப்புறம் இந்த உணர்ச்சி வேகம் அடங்க அதைக் கொஞ்சம் ஆற்றி சாந்தத்தை உறை குத்தணும். பால் ஓடுகிறதுபோல, ஆடுகிறதுபோலத் தயிர் ஓடுவதில்லை, ஆடுவதில்லை. அப்படியே கெட்டியாக, சாந்தமாக இருந்து விடுகிறது. அவனுக்கு சாந்தமும் வேணும்; லீலையின் சலனமும் வேண்டும். அப்போதுதான் முடிவிலே சாந்தத்திலேயே எல்லா சலனமும் அடங்கியிருப்பதும், அத்தனை சலனத்துக்கும் அடிப்படையாக சாந்தமே இருந்து கொண்டிருப்பதும் தெரியும். உபநிஷத்தே “ச்யாமாத் சபளம் சபளாத் ச்யாமம்” என்று இரண்டையும் சேர்த்துச் சொல்கிறது*1.

அதனால் ஓடாமல் ஆடாமல் சாந்தமாக இருக்கிற தயிரைப் போட்டுக் கடை கடை என்று கடைய வேண்டியிருக்கிறது. ஹ்ருதயப் பானைக்குள் இருக்கிற தயிரில் ஸத்யத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை (இதை ஞான விசாரம், ஆத்ம விசாரம் என்பார்கள்) மத்தாகப் போட்டு, ஒருமுக சிந்தனை என்ற கயிற்றால் கடைந்தால் பூர்ணத்வம் என்ற வெண்ணெய் வரும். அதைத் துளிக்கூடப் பழசாகவிடாமல், அது நவநீதமாக இருக்கிறபோதே வந்து எடுத்துக்கொண்டு விடுவான். பூர்ணத்வம் இந்த நம்முடைய சரீரப் பானைக்குள் எப்படி இருக்க முடியும்? அதனால் பூர்ணனான அவனிடமே போய்விடும். தனியாக நாம் என்று இல்லாமல் அவனுக்குள் அவனாகவே போய்விடுவோம் என்று அர்த்தம்.

திருட்டுத்தனமாக எடுத்துக் கொள்கிறான் என்று ஏன் சொல்ல வேண்டும்? பகவான் ஸாதாரண அதிதி மாதிரி வந்தால் அவனை வேறாயாக வைத்து ராஜோபசாரம் பண்ணி conscious -ஆகத்தானே (புத்தி பூர்வமாகத்தானே) வெண்ணெயைத் தருவோம்? அப்படி புத்தி பூர்வமாக நம்மை அவனிடம் சரணாகதி பண்ணிக் கொள்ள நமக்கு அப்போது புத்தி வருமோ, வராதோ? ‘சரணாகதி பண்ணுகிறேன்’ என்கிறபோதே அப்படிச் சொல்கிற ஒரு ‘நான்’ தனியாக வந்துவிடுகிறதே! இதனால்தான் நமக்குத் தெரியாமல் நாம் unconscious -ஆக இருக்கிற போதே நம்மை எடுத்துக் கொண்டால்தான் உண்டு என்று திருடனாக வருகிறான்.

வெண்ணெய் பரப்பிரம்மம் மாதிரி. சுத்த ஸத்வ வெளுப்பாக இருப்பது. துளி உருக்கினால், அந்த வெளுப்பும் போய் ஸ்படிகம் மாதிரி colourless ஆகிவிடுகிறது. ‘வெண்ணெய்’ என்பதில் ‘வெண்’ என்கிற அடையாளமும் போய் ‘நெய்’ மாத்திரம் நிற்கிற நிலை. எந்தக் கலரிலும் அது சேராது. அதன் ருசியும் இப்படித் தான். மதுரம், மதுரம் என்று சொன்னாலும் வெண்ணெய் வாஸ்தவத்தில் தித்திப்பு இல்லை – சர்க்கரை, தேன் மாதிரி இல்லை. ஷட்-ரஸம் என்கிற ஆறு சுவைகளில் அது எதுவும் இல்லை. அதன் கலர், ருசி எல்லாம் சாந்தம் என்றுதான் சொல்ல வேண்டும். ஸம்ஸார ஆட்டம் போக, எதிர்த் திசையில் பலவிதமான ஸாதனைகளில் அழுகை, மயிர்க்கூச்சு, பாட்டு, நர்த்தனம் என்று ஒரே ஆட்டமாக ஆட்டிச் சிலுப்பிய பின் உண்டாகிற இந்தப் பரம சாந்தத்தை நாம் அடைகிறபோது நம்மை நாமறியாமலே தனக்குள்ளேயே கொண்டுபோய் வைத்துக்கொள்கிற பரமாத்மாதான் கிருஷ்ணன்.

வெண்ணெய் ஜலத்திலிருந்து கொண்டே அதில் ஒட்டாமலிருக்கிற மாதிரி – பால் ஜலத்தோடு அப்படியே கலந்துவிடும்; அப்படியில்லாமல் வெண்ணெய் தனியாக மிதக்கிறதே, அந்த மாதிரி – நாம் லோகத்திலிருந்து கொண்டே அதில் ஒட்டாமலிருந்தால் நம்மை அவன் எடுத்து அப்படியே முழுங்கித் தனக்குள் வைத்துக் கொண்டு விடுவான். ஆக நம் உள்ளம்தான் அவனுக்கு வேண்டிய வெண்ணெய். ‘நவநீத சோர்’, சித்த சோர் என்று இரண்டு விதமாயும் அவனையே சொல்வதால் என்ன ஏற்படுகிறது? நம் சித்தம்தான் அவன் அபஹரிக்கக்கூடிய நவநீதமாக மாறவேண்டும் என்றே ஏற்படுகிறது.

இப்படி ஒரே திருட்டு விளையாட்டு, பரக்கப் பரக்க ஒவ்வொரு இடைச்சி வீட்டுக்குள்ளும் ஓடி, உறியிலே ஏறி தாழி உடைத்து நிர்தூளி பண்ணுகிற விளையாட்டு செய்கிறவனே ஸா … துக் குழந்தையாக ஆலிலை மேலே படுத்துக் கொண்டிருக்கிறது! கோகுலத்திலா இப்படி ஆலிலைப் படுக்கைப் போட்டு வைத்திருந்தது? இல்லை. க்ருஷ்ணனாக மதுராவிலே அவதாரம் பண்ணி நடத்தின கதையில் அவன் ஆலிலைப் படுக்கையில் படுத்துக் கொள்ளவில்லை. வேறே எப்போதோ மார்க்கண்டேயருக்குத் தன் மாயா விலாஸத்தைக் காட்டுவதற்காக ப்ரளயத்தைக் காட்டினான். அந்த ப்ரளய வெள்ளத்திலே தான் ஒரு ஆலிலை மேலே படுத்துக்கொண்டு குழந்தையாக தர்சனம் தந்தான்.

ஆல மரத்தின் கீழே உட்கார்ந்து கொண்டு ஞானோபதேசம் பண்ணுகிறவர் பரமேச்வரன்; வட வ்ருக்ஷ மூல நிவாஸி.மஹாவிஷ்ணு ஆலிலை மேலே படுத்துக் கொண்டு ஞான உபதேசத்துக்கு நேர் ஆப்போஸிட்டாகத் தோன்றும் மாயா விலாஸத்தைக் காட்டுகிற வட பத்ரசாயி. மாயா விலாஸத்தைக் காட்டியே ஞானம் கொடுத்து விடுகிறார்! ப்ர-லயம் என்பதாக அத்தனை மாயா லோகமும் ஸ்ருஷ்டியும் தன்னிலே லயித்துப் போய் விடுவதைத் தானே காட்டுகிறார். மாயையிலிருந்து நம்மை விடுவித்து முக்தி தரவே இப்படி தர்சனம் தருகிறார். அதனால்தான் இந்த அவஸரத்திலே (ரூப பேதத்திலே) அவரை ‘முகுந்தன்’ என்பது ‘முகுந்தன்’ என்றால் ‘முக்தி தருகிறவன்’ என்று அர்த்தம்.

கராரவிந்தேந பதாரவிந்தம் முகாரவிந்தே விநிவேசயந்தம்.

வடஸ்ய பத்ரஸ்ய புடே சயாநம் பாலம் முகுந்தம் மநஸா ஸ்மராமி..

‘தாமரைப் பூ மாதிரி இருக்கிற கால் கட்டை விரலைத் தாமரைப் பூ மாதிரியே இருக்கிற கையினால் பிடித்திழுத்து தாமரைப் பூ மாதிரி இருக்கிற வாய்க்குள்ளே போட்டுக் கொண்டு ஆலிலை மேல் சயனித்திருக்கும் குழந்தை முகுந்தனை முழு மனஸோடு ஸ்மரிக்கிறேன்’ என்று அர்த்தம்.

கால் கட்டை விரலை எதற்காக வாயில் போட்டு கொண்டு சப்ப வேண்டும்?

மாந்தாதா என்று ஸூர்ய வம்சத்தில் ராமருக்கு ரொம்பவும் முந்தி ஒரு ராஜா இருந்தார். அவர் நேராக அவருடைய தகப்பனாரிடமிருந்து பிறந்து விட்டார். அதனால் அவருக்கு பால் கொடுப்பதற்கு அம்மா இல்லை. அந்த ஸமயத்தில் இந்த்ரனே, “நான் கொடுக்கிறேன் – மாம் தாதா” என்று சொல்லிக் குழந்தையின் கைக் கட்டை விரலை எடுத்து அதன் வாய்க்குள் வைத்தான். மநுஷ்ய சரீரத்தில் ஒவ்வொரு அங்கத்திலும் ஒரு தேவதை வஸிப்பதில், கைக்கு உரிய தேவதை இந்த்ரன்தான். தான் சாப்பிட்டிருக்கிற அம்ருதம் இந்தக் கையின் கட்டை விரலால் குழந்தையின் வாய்க்குப் போகும்படி இந்த்ரன் அநுக்ரகித்தான். அநேகக் குழந்தைகள் வாயில் விரல் போட்டுக் கொள்வது அதனால்தான்.

ஆனால் இங்கே பகவான் வாயில் போட்டுக் கொண்டிருப்பது கைக் கட்டை விரல் அல்ல; கால் கட்டை விரல். அவர் சரீரத்தில் இன்ன இடமென்றில்லாமல் தலையோடு கால் அம்ருத மயமானவர். ‘அம்ருதவபு:‘ என்றே (விஷ்ணு) ஸஹஸ்ரநாமத்தில் பெயரிருக்கிறது. அதனால் இந்திராதி தேவர்கள் கையால் செய்வதைத் தாம் காலால் செய்ய முடியும் என்று காட்டுகிறாற்போலக் கால் விரலைச் சப்பிக் கொண்டிருக்கிறார். “சாப்பிடுவது ப்ரம்மம், சாப்பிடப்படுவது ப்ரம்மம், சாப்பாடு போடுவதும் ப்ரம்மம்” என்பது மந்த்ரம். அந்த உண்மையையும் நிரூபித்துக் காட்டுகிறார். தன் விரலைத் தானே வாயில் எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிட்டும் கொள்கிறார். அப்படியே சாப்பிடவில்லை; சப்புகிறார்; சப்பிடுகிறார்!

இடது கால் கட்டை விரல்தான் அவர் சப்புவது. நடராஜாவின் தூக்கிய திருவடியும் இடதுதான்.

பகவானைப் போல சரீரம் பூரா அம்ருதமயமாக நாம் இல்லாவிட்டாலும் நமக்கும் இடது பக்கத்தில் சந்த்ரநாடி என்று ஒன்றை அவர் அநுக்ரஹித்திருக்கிறார். சந்த்ரன் அமிருதம் பெருக்குகிறவன். அநுஷ்டானம், யோகஸாதனை செய்தால் சந்த்ர நாடியிலே அம்ருதம் ஓடுவது தெரியும். அதைக் காட்டவுந்தான் இடக்கால் கட்டை விரலை ருசி பார்க்கிறார்.

கால் மட்டமானது, இடது பக்கம் மட்டமானது என்றெல்லாமில்லாமல் எல்லாம் உசத்தி, எல்லாம் அம்ருதம் என்று காட்டுகிறார்.

இப்படி அவருக்குள்ளேயே அம்ருதம், அவரே அம்ருதமாயிருந்தும் வெளியேயிருந்து வெண்ணெயைத் திருடிச் சாப்பிட்டுவிட்டு அடி வாங்கிக்கொண்டு அதற்காகப் பொய் சொல்லிக்கொண்டு இருந்திருக்கிறாரென்றால், இது மட்டத்திலும் மட்டமான நம்முடன் விளையாடி லீலாம்ருதமும் ப்ரேமாம்ருதமும் கொடுக்க வேண்டும் என்ற க்ருபாம்ருத ஸாகரமாக அவர் இருப்பதால்தான்!

எப்போதோ ப்ரளயத்தில் வடபத்ரசாயியாக வந்தவனை நவநீத க்ருஷ்ணனாக எப்படிச் சொல்லலாம்? யோசித்தால் இதற்குக் காரணம் தெரிகிறது. மஹா விஷ்ணுவுக்கும் க்ருஷ்ண பரமாத்மாவுக்கும் துளிக்கூட வித்யாஸமே சொல்லப்படாது. ‘அவதாரம்’ என்று சும்மாவுக்காகத்தான் சொல்லுகிறது; அவர் அசல் மஹாவிஷ்ணுவேதான்: “க்ருஷ்ணஸ்து பகவான் ஸ்வயம்*2. இன்னம் சொல்லப் போனால், மஹாவிஷ்ணு என்று சொல்வதுங்கூட அவரைக் குறுக்குவதுதான்! அவரே தம்மை*3ஆதித்யானாம் அஹம் விஷ்ணு:” -‘ஆதித்யர்களுக்குள் நான் விஷ்ணு’ என்கிற மாதிரி “ருத்ராணாம் சங்கரச்சாஸ்மி“- ‘ருத்ரர்களில் நான் சங்கரன்’ என்று சிவ ரூபமாகவுந்தான் சொல்லிக் கொள்கிறார். “ராமன், ஸ்கந்தன் எல்லாமே நான்தாண்டா” என்கிறார். ‘நான் நான்’ என்று எல்லோர் ஹ்ருதயத்தில் இருப்பதும் தான் தான் என்றே ஆரம்பிக்கிறார். “என்னையன்றி சராசரம் எதுவும் கிடையாது” என்று ஸாக்ஷாத் பரப்ரஹ்ம ஸ்வரூபமாகவேதான் தம்மை தெரிவித்துக் கொள்கிறார். அதனால்தான் கிருஷ்ண பரமாத்மா என்றே அவரைச் சொல்வதும், “பூர்ணம் ப்ரஹ்ம ஸநாதநம்” என்பதும்.

ஆகையால் பால ரூபத்திலே வந்து மனஸைக் கொள்ளை கொள்வது முக்கியமாக க்ருஷ்ணருடைய கார்யமாயிருப்பதால், இப்படிப் பச்சைக் குழந்தையாய் அவர் பச்சையிலை மேலே மனமோஹனமாக மிதக்கிறபோது அவரை க்ருஷ்ணனாகவே நினைக்கிறோம்.

அம்ருதத்தை உண்டு காட்டுவதாலேயே நமக்குள்ளே அவர் அம்ருதத்தை ஊட்டி விடுவதால் நாம் சாவிலிருந்து விடுபட்டு அமரத்தன்மை பெறுகிறோம். அதனாலேயே அவரை இந்த ரூபத்திலே அமரமான முக்தி நிலையைத் தரும் முகுந்தனாகச் சொல்லுவது. இந்த முகுந்த நாமாவும் முக்யமாக க்ருஷ்ணனுக்குத்தானுண்டு.

பீஷ்ம முக்தி ப்ரதாயகாய நம:” என்று அவருக்கு அஷ்டோத்தர (சத)த்தில் அர்ச்சனை பண்ணுகிறோம். ராமர் கூடத்தான் ஜடாயுவுக்கு மோக்ஷம் தந்தார். ஆனாலும் முகுந்தன் என்றாலே க்ருஷ்ணன் என்று ஏன் ஆக வேண்டும்? ஏன் அப்படி என்றால், க்ருஷ்ண பரமாத்மாதான் அதி பால்யத்திலே அவரை மனஸறிந்து கொல்லணும் என்று வந்த பூதனை; அப்புறம் கடைசியிலே, அவருடைய அவதார காரியம் பூர்த்தியான முடிவு கட்டத்திலே, அவர் மேலே அறியாத்தனத்தால் அம்பு போட்டு அவர் சரீர யாத்ரையை முடிக்கும்படிப் பண்ணின ஜரா என்கிற வேடன்; இரண்டுக்கும் நடுவிலே அவரை பொது ஸபையில் வாயில் வந்தபடியெல்லாம் தூஷித்த சிசுபாலன் ஆகியவர்களுக்குக்கூட முக்தி அளித்த பரம க்ருபாமூர்த்தி.

ஒரு அவஸரத்திலே வெண்ணெய் தின்கிறார் – ம்ருக வர்க்கத்திலே மிக உயர்ந்த பசு தருகிற பால் காய்ந்து (அதாவது முதிர்ந்து) தயிராகி அப்புறமும் கனிந்து முதிர்ந்து கடைசியில் நவநீதமாகிறது. இதை ஆஹாரம் பண்ணுகிறார். ஆஹாரம் மாதிரியே சயனமும் ஒரு ஆதாரத் தேவை. இவற்றை அசனம், சயனம் என்பார்கள். அசனம் நவநீதம். சயனம் ஆலிலை. (இப்போதும் அசனத்தை விடாமல் கால் கட்டை விரலால் ருசி பார்க்கிறான்!)

ம்ருக வர்க்கத்தில் பசுபோல தாவர வர்க்கத்தில் ஆல் உயர்ந்தது. ‘ந்ய்க்ரோதம்’ என்பதும் ‘வட வ்ருக்ஷம்’ என்பது போல அதற்குப் பெயர். ஸஹஸ்ரநாமத்தில் ‘ந்யக்ரோதன்’ என்பது மஹாவிஷ்ணுவின் பெயராக வருகிறது. கயா ச்ராத்தம் என்று முக்யமாகச் சொல்லி ‘அக்ஷய வடம்’ என்று ஆலமரத்துக்குக் கீழே பிண்டம் போடுவதையே விசேஷித்திருக்கிறது. இது கர்ம காண்டம். மௌனத்தினால் ஆத்மாவை அநுபவிக்கும்படி அநுக்ரஹிக்கின்ற தக்ஷிணாமூர்த்தியும் அந்த மரத்தின் கீழேதான் இருக்கிறார். இது ஞான காண்டம். இப்படி ஆல் இரண்டிலும் முக்யமுள்ளதாயிருக்கிறது. கர்மா எத்தனை உசத்தியானாலும் மாயா ஸம்பந்தமானது. அதனால்தான் மார்க்கண்டேயருக்கு மாயா தர்சனமும் பண்ணுவித்து, பரம ஞானத்தையும் கொடுக்கிற போது பகவான் இரண்டுக்கும் பொதுவான வட வ்ருக்ஷத்தின் பத்ரத்திலே வந்து படுத்துக் கொண்டார். ஆதிசேஷனின் மேலே லக்ஷ்மிநாயகனாக, பிரம்மாவின் பிதாவாக சயனிப்பவர் ஆலிலை மேல் பாலனைப் போல வந்தார்.

பசுவின் முதிர்ந்த ஸாரத்தை இவனுடைய ஆஹாரமான வெண்ணெய் காட்டுகிறதென்றால், ஆல விருக்ஷத்தின் ஆரம்ப ஸ்தானத்தை இலை காட்டுகிறது. முதலில் இலை. அப்புறம்தான் பூப்பது காய்ப்பது பழுப்பது எல்லாம்.

ஸாரஸாரமாக முதிர்ந்த நவநீதத்திலிருந்து இளசான வடபத்ரம் வரை எல்லாம் அவருடைய ரேஞ்ஜில் இருப்பவைதான் – தான் நிறைந்திராத லெவலே இல்லை – என்று காட்டுகிறார்.

ஆலிலைக்கு ஒரு விசேஷமுண்டு. அதிலே ஜீவஸாரம் ரொம்ப அதிகம். அதனால்தான் அது எத்தனை வாடினாலும் மற்ற இலைகள் மாதிரி வற்றிப்போய் நெறுங்குவதில்லை. சரகாகிறபோதுகூட மெத்தென்றே இருக்கும். அதனாலேயே பகவான் குழந்தையாக வருகிறபோது அதி ஸொகஸாக உள்ள தனக்கு மெத்தையாக அதை ‘சூஸ்’ பண்ணிக் கொண்டிருக்கிறான். மரத்திலிருந்து வாடி உதிர்ந்த ஒரு ஆலிலையின் மேல் கொஞ்சம் ஜலத்தைத் தெளித்தால் போதும், மறுபடி அது பசுமை பெற்றுவிடுவதைப் பார்க்கலாம். அவன் எப்போதும் வாடாத வதங்காத ஆத்மா. ‘ப்ரணவம்’ என்றாலும் எப்பவும் ‘நவம்’; சாப்பிடுவது ‘நவநீதம்’! பகவான் ஜரா மரணம் கடக்கப்பண்ணி எப்பவும் யௌவனமாக வைத்திருக்கும் அம்ருத நிலையைக் கட்டைவிரலைச் சப்பிக் காட்டுவதால் மாத்திரமின்றி, ஸூக்ஷ்மமாய் இந்த வட பத்ர சயனத்தாலேயே சூசிப்பித்து விடுகிறான். வட வ்ருக்ஷ மூலத்தில் உட்கார்ந்திருக்கும் தக்ஷிணாமூர்த்தியின் மாறாத யௌவனமும் அஜர, அமரத் தன்மையைக் காட்டுவதுதான். அதைவிட இளைய குழந்தையாகவே, ஆலங் கொழுந்தைப் போலவே தானும் கொழுந்துப் பிராயமாக, ‘ஆயர்தம் கொழுந்தே!‘ என்று (தொண்டரடிப் பொடி ஆழ்வாரால்) பாடப்பட்டவன் இருக்கிறான். வேர் ஆடாமல் அசையாமலிருப்பதுபோல, ‘வ்ருக்ஷ இவ ஸ்தப்த:‘ என்று ச்ருதி சொன்னபடி*4 ஞான காம்பீர்யத்தோடு தக்ஷிணாமூர்த்தி இருக்கிறார். இவனோ ஒரு இலை கொஞ்சம் காற்றானால்கூட சலசல என்று ஆடுகிறதுபோல ஒரே விளையாட்டாய் விளையாடிக் கொண்டு ப்ரேம ஸெளகுமார்யத்தோடு இருக்கிறான்.

ஆல விருக்ஷத்துக்கு எத்தனையோ உபயோகங்கள். ஒரு பெரிய ஸைன்யமே அதன் கீழே தண்டு இறங்கலாம். பரோபகாரத்துக்கு அது ஒரு ரூபகம். அத்தனாம் பெரிய மரத்துக்கு இத்தனூண்டு விதை. இந்த அணு மாத்ர விதையில் அந்தப் பெரிய மரமே இருப்பது, அணுவில் அணுவாயுள்ள பரமாத்மாவே அகண்ட ப்ரம்மாண்டமாயும் இருக்கிறார் என்பதை நினைப்பூட்டுகிறது. எல்லா மரத்துக்குந்தானே இப்படி என்றாலும் மற்ற மரங்களைவிடவும் விஸ்தாரமாக வளர்கிற ஆலுக்குத்தான் அவற்றின் விதைகளைவிடவும் சின்ன விதையாயிருக்கிறது. மற்ற மரம் போல ஆலுக்கு எவரும் விதை ஊன்றுவதில்லை. அதுவாகவே எப்படியோ முளைத்துக் கொள்கிறது. இது ஈச்வரன் ஸ்வயம்பு, தான்தோன்றி என்ற தத்வ விளக்கமாய் இருக்கிறது. தானே விழுதுவிட்டுத் தன்னைத் தாங்கிக் கொண்டு, அந்த பலத்தில் மேலும் மேலும் விஸ்தாரமாகிக் கொண்டே போகிறது. அடையாற்றில் ஆல மரத்தைப் பார்க்கவே கூட்டம் கூட்டமாகப் போகிறது. ஈச்வரன் பிறர் தாங்குதல் வேண்டாத நிராலம்பன் என்பதற்கு இது எடுத்துக்காட்டுப் போல இருக்கிறது. ஒரு பாகம் பட்டுப் போனாலும் மற்ற விழுதுகள், விழுதிலிருந்து தோன்றும் விழுதுகள் என்ற பிற பாகங்கள் பசுமையாக இருந்து கொண்டே இருப்பதால் ஈச்வரனின் நித்யத்வத்தையும் காட்டியதாகிறது. ஒரே தாயும் தந்தையுமான அவனிடமிருந்தே ஸகல ஜீவ ஜகத்துக்களும் விஸ்தாரமாயிருப்பதற்கு த்ருஷ்டாந்தம் போல வடவ்ருக்ஷமானது ஒரே தாய் மரத்திலிருந்து விஸ்தாரமாகிக் கொண்டே போகிறது.

இப்படியாக, ஸம்ஸார ஸாகரத்தில் அலை பாய்கிற நமக்கு ஆலிலையைக் காட்டி நிலையான நித்யத்வத்தை, நிராலம்ப தத்வத்தை உணர்த்துகிறான் வடபத்ரசாயி.

மரத்தைவிட எத்தனையோ அகன்ற அகண்ட தத்வம் அவன். அந்த மரம் எத்தனை பெரிசாயிருந்தாலும், எத்தனை காலமிருந்தாலும் அதன் பரப்புக்கு எல்லை உண்டு. அதன் காலத்துக்கும் முடிவு உண்டு. அவனோ முடிவேயில்லாத அகண்டன், அனந்தன். ஆனாலும் இந்த மஹா ப்ரபாவத்தை மறைத்துக்கொண்டு, நாம் அவனை எடுத்து வைத்துக்கொண்டு கொஞ்சுகிற விதத்தில் ஸரள ஸ்வபாவத்துடன் கூடிய குழந்தையாக இருக்கிறான். “ஒண்ணும் கவலைப்படாதேயப்பா! என் மாதிரி குழந்தை உள்ளத்தோடு இரு. ஸம்ஸார வெள்ளத்திலேயே அப்போது நீ அலையில் அடி படாமல் உன் பாட்டுக்கு ஆனந்தமாக, அதை ஒரு விளையாட்டாக எடுத்துக் கொண்டு மிதந்து கொண்டிருக்கலாம்” என்று சொல்லாமல் சொல்கிறான். சிலுப்புவதாலே கொந்தளிக்கிற மோரிலே வெண்ணெய் பட்டுக் கொள்ளாமல் மிதப்பதுபோல ஸம்ஸார ஸாகரத்தில் அவனே வெண்ணெய்க் கட்டியாக மிதப்பது, நாமும் அப்படி ஆக வேண்டும் என்று நம்மை நினைக்கச் செய்வதற்குத்தான்.

நாம் ஏதோ இருக்கிற அசட்டு ஸ்திதியில் நமக்குத் தெரிந்த அளவில், ஆனால் பக்தி ச்ரத்தா விச்வாஸங்களோடு, அந்தக் குழந்தையை சவுடால் பண்ணும் திருட்டுக் குழந்தையாகவும், சாந்தமாகச் சயனித்துக் கொண்டிருக்கிற ஆலிலைக் குழந்தையாகவும் ஸ்மரிக்க ஆரம்பித்துவிட்டால், ஸ்மரிக்க ஸ்மரிக்க நம் மனஸின் சொர சொரப்பு, வாடல், வதங்கல் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகப் போய் வட பத்ரம் மாதிரி எப்போதும் பசுமையாய், எப்போதும் மிருதுவாய் ஆகும். அப்போது அவனே வந்து இந்த மனஸிலும் சயனித்துக் கொண்டு விடுவான். ‘வட பத்ர சாயி, க்ஷீராப்தி சாயி, ஸ்ரீரங்கசாயி‘ என்றெல்லாம் கூப்பிட்டு, “ரமதாம் மநோ மே” என்று பிரார்த்தனை செய்கிறபோது அவனை நம் மனஸிலே வந்து சயனித்துக் களிக்கும் படியாகத்தான் வேண்டுகிறோம். அதனால்தான் (அந்த ப்ராத்தனை ஸ்லோகம்) ஸத்-சித்த சாயி – ‘ஸாது ஜனங்களில் சித்தத்தில் சயனிப்பவன்’ – என்று ஆரம்பித்திருக்கிறது*5 அந்தக் குழந்தையின் மெத்து உடம்பு, மாறாத பால்ய சரீரம் நம் மனஸிலே பட்டால் இதுவும் அப்படி ஆகிவிடும். இதன் அழுக்கும், கெட்ட ருசி எல்லாமும் போய் வெள்ளை வெளேரென்று சாந்த மதுரமான வெண்ணெயாகிவிடும். இப்படி நம்மைத் தன்னுடைய ஸ்மரணையால் குழைத்துக் குழைத்து (“குழைத்த பத்து” என்றே மாணிக்கவாசகர் பண்ணியிருக்கிறார்) தொண்டைக்குக் கொஞ்சங்கூட ச்ரமம் தராமல் விழுங்கக்கூடிய வெண்ணெயாக ஆக்கினபின் அவன் அப்படியே உட்கொண்டு விடுவான். அவனுக்குள்ளேயே போய் ஸ்வஸ்தமாய் இருந்துவிடலாம்.

முதலிலே பண்ண வேண்டியது அவன் ஸ்மரணை. அதனால் நம்முடைய உள்ளத்தை வெளுப்பான பாலாக்கிக் கொண்டால், பால் ஸமுத்ரத்தில் படுத்துக் கொண்டிருப்பவனே நம்முடைய பிரேமை அலை மோதும் உள்ளத்தில் தானே வெண்ணெய்க் கட்டியாக வந்து மிதப்பான். அப்புறம் நம்மையும் வெண்ணெயாக்கித் தனக்குள் வைத்துக் கொண்டு விடுவான்.


*1 சாந்தோக்யம் 8.13.1.

*2 பாகவதம் 1.3.28

*3 அடுத்து வரும் கண்ணனின் கூற்றுகள் கீதையில் “விபூதியோகம்” எனும் பத்தாம் அத்யாயத்தில் வருவன.

*4 மஹாநாராயணோபநிஷத் 12.3.3

*5 ஸச்சித்த சாயீ புஜகேந்த்ர சாயீ நந்தாங்க சாயீ கமலாங்க சாயீ |

க்ஷீராப்தி சாயீ வடபத்ர சாயீ ஸ்ரீரங்க சாயீ ரமதாம் மநோ மே ||

(ஆசார்யாள் அருளியதாகக் கருதப்படும் ஸ்ரீரங்கநாதாஷ்டகம் கடைசி ஸ்லோகம்)

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is ஈசனின்றி இயற்கை இயங்குமா?
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  சிவ நாம மஹிமை!சிவன் தரும் மஹிமை
Next