த்ரிபுர ஸம்ஹார ஸ்லோகம் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

நாலீகாஸநம் ஈச்வர: சிகரிணாம் தத்-கந்தரோத்தாயிநோ

கந்தர்வா: புநர்-ஏதத்-அத்வ-பதிகௌ சக்ரே ச தத்-தாரக: |

பத்ரீ-தத்-ப்ரபு-வைரிணாம் பரிப்ரூடோ ஜீவா ச யஸ்யாபவத்

ஜீவாந்தேவஸதாம் ரிபு-க்ஷய-விதௌ தேவாய தஸ்மை நம: ||

இப்படியாகப் பரமேச்வராம்சமான அப்பைய தீக்ஷிதர் பரமேச்வரனின் த்ரிபுர ஸம்ஹாரத்தைப் பற்றி ஸ்லோகம் செய்திருக்கிறார்.

என்ன அர்த்தமென்றால்: “ஜீவாவின் சிஷ்யர்களுடைய விரோதிகளின் ஸம்ஹாரத்தின்போது எந்த தேவனுக்கு சிகரங்களின் ஈச்வரன் நாலீகாஸனமாகவும், அதன் (நாலீகாஸனத்தின்) கண்டத்திலிருந்து வெளிவந்தவை கந்தர்வர்களாகவும், அவர்களுடைய (கந்தர்வர்களுடைய) மார்க்கத்தில் செல்லும் இரண்டு யாத்ரிகர்கள் சக்ரமாகவும், அதை (சக்ரத்தை) தரிக்கிறவர் பத்ரீயாகவும், அந்த பத்ரீக்கு ப்ரபுவின் சத்ருக்களுடைய தலைவன் ஜீவாவாகவும் பயனாயிற்றோ அந்த தேவனுக்கு நமஸ்காரம்”இப்படி அர்த்தம்.

அர்த்தமாவது? ஒரு அர்த்தமும் ஆகவில்லையே? ஜீவாவாவது, நாலீகாஸனமாவது, பத்ரீயாவது! ஒன்றுக்கொன்று என்ன ஸம்பந்தம்? ஜீவா சிஷ்யர் ஸம்ஹாரத்தில் பத்ரீ சத்ருத் தலைவன் ஜீவாவாக ஆவதாவது? மஹாபெரியவராகச் சொல்லப்படும் அப்பைய தீக்ஷிதரா இப்படித் தலைகால் புரியாமல் பண்ணியிருக்கிறார்?

இரண்டு அர்த்தமுள்ளதாகப் பல வார்த்தைகள் இருக்கின்றன அல்லவா? இவற்றை உபயோகித்து வார்த்தை விளையாட்டுப் பண்ணுவதில் அப்பைய தீக்ஷிதர் ரொம்ப நெருடலாகச் செய்த ஸ்லோகமே இது. வேதாந்தத்துக்கு மூலப்ரமாணமாக இருக்கப்பட்ட ‘ப்ரஹ்ம ஸூத்ர’த்தின் ஆரம்ப பாகத்துக்கு அவர் ‘ந்யாய ரக்ஷாமணி’என்று வ்யாக்யானம் செய்திருக்கிறார். அதிலே ‘தத்-ஹேது வ்யபதேசாச்ச’ (1.1.14) என்று வரும் ஸூத்ர விரிவுரையிலே இந்த ஸ்லோகம் வருகிறது. எதற்காக என்பதைப் புரியவைப்பது இப்போது அவசியமில்லை. ‘ஏதோ ஒரு intellectual exercise இதிலும் குஷி இருக்கிறது’ என்றுதானே சமத்கார ஸ்லோகங்களைப் பார்க்கிறோம்? அப்படிப்பட்டதான ஸ்லோகத்தைப் பற்றி மாத்திரம் சொல்கிறேன்.

இதில் ஒரு வார்த்தையை முதலில் பெயர்ச் சொல்லாகச் சொல்லியிருக்கும். உடனே ‘அதன்’, ‘அதற்கு’, என்கிறாற்போல relative pronoun, adjectival pronoun என்பதாகவெல்லாம் அதே வார்த்தையைப் பற்றி ‘தத்’, ‘ஏதத்’ என்று மறுபடி வரும். இப்படி மறுபடி அந்த வார்த்தை வரும்போது, வார்த்தை அதுவேதான் என்றாலும் அர்த்தம் வேறாக இருக்கும்.

இப்படி ஐந்து வார்த்தைகளை இரண்டு அர்த்தத்தில் இந்த ஸ்லோகத்தில் சொல்லியிருக்கிறது. ‘நாலீகாஸநம்’ என்பது ஒன்று. நாலீகம் என்றால் பாணம், தாமரை என்று இரண்டு அர்த்தம். அதனால் பாணத்தை வைத்து இழுக்கிற ஆஸனமாயுள்ள தநுஸுக்கு நாலீகாஸநம் என்று பேர். தாமரையில் உட்கார்ந்திருக்கும் பிரம்மாவுக்கும் நாலீகாஸநர் என்று பேர். ‘கந்தர்வ’ என்பது இரண்டாவது வார்த்தை. அதற்கு தேவ ஜாதியான கந்தர்வர் என்பதோடு, குதிரை என்றும் ஒரு அர்த்தம். ‘சக்கரம்’ என்பது மூன்றாவது வார்த்தை. அது தேர்ச் சக்கரத்தையும், இன்னொரு அர்த்தத்தில் விஷ்ணுவின் கையிலுள்ள சக்ராயுதத்தையும் குறிக்கும். நாலாவது வார்த்தை ‘பத்ரீ’என்பது. இதற்கு பாணம் என்றும் பக்ஷி என்றும் இரண்டு அர்த்தம். இரண்டு அர்த்தமுள்ள ஐந்தாவது வார்த்தை ‘ஜீவா’என்பது – நாண்கயிற்றுக்கு ஜீவா என்று பெயர்; தேவகுருவான ப்ருஹஸ்பதிக்கும் ‘ஜீவ’ என்று ஒரு பெயர்.

இரட்டை அர்த்த வார்த்தைகளைத் தவிர ஒற்றை அர்த்தமுள்ளதிலேயே புரியாததாயிருக்கிறவற்றைப் பார்ப்போம். சிகரங்களின் ஈச்வரன் என்பது மேரு பர்வதம். நர்லீகாஸனத்தின் கண்டத்திலிருந்து வெளிவந்தவை என்பது பிரம்மாவின் வாக்கிலிருந்து வந்த வேதங்கள். கந்தர்வர்களுடைய மார்க்கம் என்பது ஆகாச வீதி. அதிலே யாத்ரை பண்ணும் இருவர் ஸூர்ய சந்திரர்கள். சக்ரத்தை தரிப்பவர் மஹா விஷ்ணு. பத்ரீக்கு ப்ரபு பக்ஷிகளின் ராஜனான கருடன். அந்த ப்ரபுவின் சத்ருக்கள் ஸர்ப்பங்கள். ஆகையால் சத்ருக்களின் தலைவன் என்பது ஆதிசேஷனை, தமிழில் அர்த்தம் சொல்லும்போது முதலில் ‘ஜீவாவின் சிஷ்யர்கள்’என்று சொன்னது ஸ்லோகத்தில் கடைசியில் வருகிறது. இது ப்ருஹஸ்பதியின் சீடர்களான தேவகணத்தைக் குறிக்கும். இவர்களுடைய விரோதிகளின் ஸம்ஹாரம் என்பது த்ரிபுரா ஸுரர்களின் ஸம்ஹாரத்தைத் தான்.

இந்த அர்த்தங்களை ஞாபகமாக மனஸில் வைத்துக்கொண்டு, இரண்டு அர்த்தமுள்ள ஐந்து வார்த்தைகளில் ஒவ்வொன்றும் இரண்டு இடங்களில் வரும்போது முதலில் ஒரு அர்த்தத்தையும், மறுபடி வருகையில் இன்னொரு அர்த்தத்தையும் எடுத்துக் கொண்டால், இந்த puzzle பண்ணுகிற ஸ்லோகத்துக்கு ‘மீனிங்’ வரும். “ஜீவா என்கிற பிருஹஸ்பதியின் சீடர்களான தேவர்களின் சத்ருக்களான த்ரிபுரரின் ஸம்ஹாரத்திலே எந்த தேவனுக்கு (மஹாதேவன் என்கப்பட்ட பரமேச்வரனுக்கு) மேரு பர்வதம் நாலீகாஸனம் என்னும் வில்லாகவும், நாலீகாஸனர் என்ற பெயரையே கொண்ட பத்மாஸனரான பிரம்மாவின் கண்டத்திலிருந்து வந்த வேதங்கள் ‘கந்தர்வ’ என்று பொருள்படும் குதிரைகளாகவும், கந்தர்வ ஜாதியின் மார்க்கமான ஆகாசத்தில் செல்லும் இரு யாத்ரிகர்களான சந்த்ர-ஸூர்யர்கள் தேர்ச் சக்ரமாகவும் சக்ராயுதபாணியான மஹாவிஷ்ணு பத்ரீ என்னும் பாணமாகவும், பத்ரீ என்றே பெயர் கொண்ட பக்ஷிகளின் ராஜாவான கருடனின் சத்ருக்களுக்குத் தலைவனான ஆதிசேஷன் ஜீவா என்னும் நாண்கயிறாகவும் பயனாயினவோ அந்த மஹாதேவனுக்கு நமஸ்காரம்.”

அர்த்தமாகிவிட்டதல்லவா? த்ரிபுர ஸம்ஹாரத்திலே ஈச்வரனுடைய ரத சக்கரங்கள் ஸூர்யனும் சந்தரனுமே!அந்த ரதத்தில் வேதங்களையே அச்வ ரூபத்தில் பூட்டியிருந்தது. ஈச்வரன் அப்போது மேரு பர்வதத்தை தநுஸாக்கி அதற்கு நாண்காயிறாக ஆதிசேஷனைப் பிடித்துக் கட்டி, ஸாக்ஷாத் மஹாவிஷ்ணுவையே அம்பாகத் தொடுத்திருந்தார்.

இந்தப் புராண விஷயங்களை வேதாந்த வ்யாக்யான புஸ்தகத்தில் தர்க்க வ்யாகரண ரீதியாக தத்வத்தையும் வார்த்தையையும் விளக்கும் பொருட்டுச் சமத்கார கவிதையாக தீக்ஷிதர் கொடுத்திருக்கிறார். கவிதை என்பது இத்தனை சாஸ்திரங்களையும் இணைத்து, அவற்றுக்குக் கைகொடுக்கிறது!


Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is இருபொருளில் ஒரே சொல்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  வேற்று பாஷைகளில் ஒரே சொற்றொடர்
Next