“சுன்னம் அதிகம்” : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

ஒரு ஸ்லோகத்தில் வருகிற அத்தனை ‘த’வையும் தட்டிவிடும்படி ஸீதை சொன்னாள். காளிதாஸனோ ஒரே ஒரு புள்ளியைத் தட்டிவிட்டே ஒரு ஸ்லோகத்தின் ரஸத்தை ஒரே தூக்காகத் தூக்கிவிட்டான்.

பவபூதி என்று ஏறக்குறைய காளிதாஸனுக்கு ஸமதையாக ஒரு மஹாகவி. அவனுடைய காலத்திலேயே இவரும் இருந்தார் என்றும், இந்த இரண்டு பேருக்கும் போட்டி, மூக்கறுபட்டது என்றெல்லாமும் கதைகள் இருக்கின்றன. நான் சொல்லப் போகிற கதை அப்படிப்பட்டதில்லை. ஒருவர் அபிப்ராயத்தை இன்னொருவர் கலந்தாலோசித்துத் தாம் எழுதியதைத் திருத்திக் கொண்டதாக இந்தக் கதை.

உத்தர ராமாயணத்தை “உத்தர ராம சரிதம்” என்று ஹ்ருதயத்தை கவ்விக்கொள்ளுகிற மாதிரி பவபூதி நாடகமாக எழுதி அந்தச் சுவடியைக் காளிதாஸனுடைய ‘அப்ரூவ’லுக்காக எடுத்துக்கொண்டு போய்ப் படித்தார். காளிதாஸன் தனக்கு ப்ரியமான ஸ்த்ரீ தாம்பூலம் மடித்துக் கொடுக்க கொடுக்க அதை ருசி பார்த்துக்கொண்டே உத்தரராம சரிதத்தையும் ருசித்துக்கொண்டு போனான்.

அதிலே முதல் ஸீனில் ராமர் தண்டகாரண்யத்தில் ஸீதையோடு தாம் கழித்த ஆனந்தமான நாட்களைப் பற்றிய நினைவுகளைச் சொல்கிறார். அதனிடையில், “எப்படிப் பொழுது போச்சு என்றே எங்களுக்குத் தெரியாமல் ராத்ரி நேரம் இவ்வாறு பேச்சில் போய்விடும்” என்று வருகிறது.

“அவிதித-கத-யாமா ராத்ரிரேவம் வ்யரம்ஸீத்”

இந்த வரியை பவபூதி படித்தவுடன் காளிதாஸன் “சுன்னம் ஜாஸ்தி” என்றான். அவனுக்குத் தாம்பூலம் கொடுத்துக் கொண்டிருந்தவள், ‘ஜாஸ்தி சுண்ணாம்பு வைத்துக் கொடுத்துவிட்டோம்; அதைத்தான் சொல்கிறார்’ என்று நினைத்துக்கொண்டுவிட்டாள். அவளுக்கெதிரே தான் பவபூதிக்கு அட்வைஸ் பண்ணுவது மரியாதை இல்லை என்பதால் வேண்டுமென்றேதான் காளிதாஸன் இப்படி பூடகமாகச் சொன்னது. மேதையானதால் பவபூதிக்குப் புரிந்துவிட்டது. ஸுன்னம் என்றால் ஸைஃபர், அல்லது புள்ளி. ‘ராத்ரிரேவம்’ என்பதில் ‘ம்’ என்று உள்ள புள்ளியைத்தான் காளிதாஸன் ஜாஸ்தி என்று சொல்வதை அவர் புரிந்துகொண்டு* இந்த நுட்பமான கரெக்ஷனை ரொம்பவும் கொண்டாடி, ஸுன்னத்தை எடுத்தவிட்டு ‘ராத்ரிரேவ’ என்று மாற்றிவிட்டார். ‘ராத்ரிரேவம் வ்யரம்ஸீத்’ என்றால் ‘ராத்திரி இவ்வாறு போச்சு’. ‘ராத்ரி ரேவ வ்யரம்ஸீத்’ என்றால் ‘ராத்ரிதான் முடிந்தது’ என்று அர்த்தம். அதாவது ‘ஸீதையும் தானும் பேசுகிற பேச்சு அப்போதும் முடிந்திருக்காது; ராத்ரி மட்டுமே முடிந்திருக்கும்’ என்று வ்யங்கியமாக (உள்ளுறை பொருளாக) ராமர் சொன்னதாக ஆகிவிடும்!

பவபூதியிடம் காளிதாஸன் ‘அநுஸ்வாரம் ஜாஸ்தி’ என்று சொன்னதாகப் பொதுவிலே சொல்வார்கள். அநுஸ்வராம் என்றால் ‘ம்’. ஆனால் இப்படி வெளிப்படையாகச் சொன்னானென்பதைவிட இரண்டு அர்த்தம் தருமாறு ‘ஸுன்னம் ஜாஸ்தி’ என்று சிலர் சொல்லுகிற கதை அந்த இருவருடைய ஸூக்ஷ்ம ரஸனைக்கும் பொருத்தமாயிருக்கிறது.

இப்படிக் காளிதாஸன் சொல்லியிருந்தால் அவன் ஆந்திர தேசத்தைச் சேர்ந்தவனாயிருக்க வேண்டும். ஏனென்றால் தெலுங்கு பாஷையில்தான் ‘ஸுன்னம்’ என்று இந்த இரண்டு அர்த்தமும் கொடுக்கும்படியான வார்த்தை இருக்கிறது. இது ஒன்றை மாத்திரம் கொண்டு தெலுங்கன் என்று சொல்லக்கூடாதென்றால் இன்னொன்று சொல்கிறேன். ‘ராமகிரி’ என்ற இடத்திலிருந்துதான் காளிதாஸனின் ‘மேக ஸந்தேச’ காவ்யத்தில் வரும் யக்ஷன் மேகத்தை தூது அனுப்பினானென்று இருக்கிறது. மத்ய ப்ரதேஷில் நாக்பூருக்குப் பக்கத்திலிருக்கிற ராம்டேக்தான் ராமகிரி என்று அபிப்ராயப்படுகிறார்கள். ஆனால் ஆந்திராவிலும் நாகலாபுரம் தாண்டி ஒரு ராமகிரி இருக்கிறது.


*‘வம்’ என்பது தேவநாகரி லிபியில் ‘வ’ என்ற எழுத்துக்குமேல் புள்ளி வைப்பதாகும். க்ரந்த லிபியில் ‘ம்’ என்பது ஸைஃபரைப் போலவே வட்டமாயிருப்பதாகும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is ஒர் எழுத்தை எடுப்பதில் அர்த்த விநோதம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  மாலை மாற்றம்
Next