அர்த்த சாஸ்திரம் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்கிற நாலில் தர்மத்துக்கு அடுத்தது அர்த்தம். ‘அர்த்தம்’ என்பதற்கு இங்கே அர்த்தம், ‘நடைமுறை வாழ்க்கை நடத்துவதற்குப் பிரயோஜனமாகிற பொருட்கள்’ என்பதே. வாழ்க்கை நடப்பதற்கு வீடு, வஸ்திரம், ஆஹார தானியம் முதலிய என்னவெல்லாம் வாங்குகிறோமோ அவையெல்லாம் ‘அர்த்த’த்தில் சேர்ந்தவைதான். இப்படி வாங்குவதற்காக நாம் சம்பாதிக்கிற பணத்துக்கும் ‘அர்த்தம்’ என்று பெயர். நடைமுறை வாழ்க்கை வாழ்ந்து என்றைக்கோ ஒருநாள் செத்துப்போய்விட்டு, மறுபடி இதே மாதிரி பிறந்து கொண்டிருப்பதற்கே இந்த ‘அர்த்தம்’என்று ஆக்கிக் கொண்டுவிட்டோமானால் அப்போது அது அனர்த்தந்தான். “அர்த்தம் அநர்த்தம் பாவய நித்யம்” என்பதாக இந்த உண்மையைத்தான் எப்போதும் நினைவூட்டிக் கொள்ளும்படி ஆசார்யாள் உபதேசிக்கிறார்*1. ‘இதில்லாவிட்டால் வாழ முடியவில்லை;ஆத்மாவை, பரமாத்மாவைத் தெரிந்துகொள்வதற்காக எல்லாரும் ஸந்நியாஸியாகப் போய்விட்டால் யார் அவர்களுக்கு பிக்ஷை பண்ணுவது? அதனால் சம்பாதித்துத்தான் ஆகவேண்டும்’என்பதற்காகவே ‘அர்த்த’த்தில் ஈடுபட வேண்டும். சாதாரண மநுஷ்யர்களாக இருக்கப்பட்ட எல்லாருக்கும் இருக்கக்கூடிய நியாயமான ஆசைகளை மிஞ்சி அதியில் போகும்படி விடாமல் அளவோடு அந்த ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காகவும் ‘அர்த்த’த்தை நாடி சேர்த்துக் கொள்ளத்தான் வேண்டும். இங்கே ‘அர்த்தம்’என்பது அதற்கு அடுத்ததாக வரும் ‘காம’த்துடன் சேர்கிறது. ஆனால் அதோடோயே நின்றுவிடக் கூடாது. முடிவாக உள்ள புருஷார்த்தமான ‘மோக்ஷ’த்தை மறந்து ‘அர்த்த-காமம்’என்பதிலேயே தலை தெறிக்கப்போய் விழப்படாது. இதற்கெல்லாம் அடிப்படையாக முதலில் வரும் ‘தர்ம’த்தில் ஆரம்பத்திலிருந்தே பிடிப்பு இருக்க வேண்டும்.

முதலில் தர்மத்தைச் சொன்னதற்குக் காரணம், இந்த லோகமாகிற மாயா நாடகத்தில் அர்த்த-காமங்கள் இல்லாமலிருக்க முடியாதென்றாலும், இந்த மாயை என்றைக்காவது ஒரு நாளாவது விலகிப்போய் ஞானமும் மோக்ஷமும் ஏற்பட வேண்டுமென்றால் அப்போது அர்த்த-காமங்களிலும்கூட அதர்மத்தைச் சேர்த்துவிடக்கூடாது என்பதற்காகத்தான். (அப்பர்) “பல பல காமத்தராகி” என்கிறாற்போல எத்தனையோ காமங்களிருந்தாலும் இப்படி ஏதோ ஒரு பொருளிடம் ஆசை இருக்கிறதென்றால், அந்த ஆசையையே தீய்த்துக் கொள்கிற வைராக்யமில்லாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் அந்தப் பொருளைத் திருடிப் பெறக்கூடாது; இன்னொருத்தனை வஞ்சித்துப் பெறக்கூடாது. ரதி ஸுகம் தர்மபத்னியுடன் அநுபவிக்கலாமாயினும் நிஷேத தினங்களில் (சாஸ்த்ரங்களில் விலக்கப்பட்ட நாட்களில்) கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்; பர ஸ்திரீகளை மனஸாலும் நினைக்கப்படாது. பண ஸம்பாத்யம் பண்ணலாமாயினும் அதற்காக லஞ்சம் வாங்கக்கூடாது; இன்னொருத்தன் வயிற்றில் அடிக்கக் கூடாது. இப்படியெல்லாம் அர்த்த காமங்களுக்கும் தர்ம வேலி போட்டால்தான் என்றைக்கோ ஒரு நாளாவது ஞானப் பழம், மோக்ஷப் பழம் பழுக்க முடியும்.

‘அர்த்தம்’ தமிழில் ‘பொருள்’ எனப்படுகிறது. தர்ம-அர்த்த-காம-மோக்ஷங்கள் அறம்-பொருள்-இன்பம்-வீடு எனப்படுகின்றன. திருவள்ளுவர் திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் மூன்றும் மூன்று பகுதிகளில் சொல்லியிருக்கிறார். மோக்ஷத்தைப் பற்றித் தனியாக இப்படிப் பெரிய பகுதி இல்லாவிட்டாலும், அறத்துப் பாலிலேயே ‘இல்லற இயல்’என்பதற்கு அப்புறம் ‘துறவற இயல்’என்று சில அதிகாரங்கள் பண்ணி, அதில் நூற்றுக்கு மேற்பட்ட குறள்களில்*2 மோக்ஷம் ஸித்திப்பதற்கான வழிகளைச் சொல்லியிருக்கிறார். அதிலே, “மோக்ஷ லோகம் போவதற்கு அருள் ரொம்ப அவசியம்; எவ்வளவு அவசியமென்றால் இந்த பூலோகத்தில் வாழ்வதற்குப் பொருள் எவ்வளவு அவசியமோ, அவ்வளவு”என்று சொல்லி, லோக யாத்ரைக்கு அர்த்தம் எப்படி இன்றியமையாதது என்பதை புரிய வைக்கிறார்:

அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லை -பொருளிலார்க்கு

இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

வெயில், மழையால் உபத்ரவப்படாமலிருக்க வீடு வேணத்தான் வேண்டும். சரீரத்துக்குப் பசி முதலிய துன்பம் ஏற்படாமலிருக்க ஆஹாரம் வேணத்தான் வேண்டும். மானத்தை ரக்ஷித்துக்கொள்ள வஸ்திரம் வேணத்தான் வேண்டும். இப்படிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள பணம் வேணத்தான் வேண்டும். அதனால் மநுஷ்யாளுக்கு இதற்கான வழிகளைச் சொல்லித் தரத்தான் வேண்டும். அதுதான் ‘அர்த்த சாஸ்திர’ என்கிற நான்காவதான உபவேதம்.

ஆனால் அர்த்த சாஸ்திரத்தைப் பார்த்தால் அதில் பொருளாதாரத்தை, எகனாமிக்ஸைவிட அதிகமாக ராஜ நீதியை, ஸ்டேட்-க்ராஃப்ட், பாலிடிக்ஸ் ஆகியவற்றையே சொல்லியிருக்கும். திருக்குறளிலும் பொருட்பாலில் எடுத்தவுடனேயே அரசாட்சியைப் பற்றித்தான் வருகிறது. அப்புறம் பல அதிகாரங்களில் செங்கோல் ஆட்சியின் தன்மை, கொடுங்கோன்மை, நீதியோடு கூடிய தண்டனை முறை, அமைச்சர்கள்-ஒற்றர்கள்-தூதர்கள் பின்பற்ற வேண்டிய முறைகள், படை மாட்சி, கோட்டை கொத்தளங்களின் அவசியம், யுத்த தந்திரங்கள், வரி போட வேண்டிய நீதிகள் என்று ராஜாங்க விஷயங்களைப் பற்றியே நிறையச் சொல்லியிருக்கிறார்.

ஏனிப்படி என்றால், ஒரு மநுஷ்யன் ஆஹாரம், வஸ்திரம், வீடு, வயல், பணம் முதலிய ‘அர்த்த’ங்களால் வாழ்க்கை நடத்த வேண்டுமென்னும்போது அவனுக்கு இந்தப் பொருள்களை எல்லாம் தானே ரக்ஷித்துக் கொள்ள முடியாததால், ரக்ஷித்துத் தருவதற்கென்றே ஒரு பெரிய ஸ்தாபனம் தேவையாயிருக்கிறது. தேசமென்றிருந்தால் துஷ்டர்கள் இருக்கத்தான் இருப்பார்கள். அவர்கள் தாங்களாகப் பாடுபட்டு ஸம்பாதனம் பண்ணாமல் இன்னொருத்தனை அடித்துப் பிடித்து, கொலைகூடப் பண்ணி அவனுடைய உடைமையைக் கவரப் பார்ப்பார்கள். அப்படி விடக்கூடாது. அவனவனுக்கும் உடைமையைக் காப்பாற்றிக் கொடுக்க சக்தி வாய்ந்த ஒரு ஸ்தாபனம் தேவை. பலிஷ்டர்கள் பலஹீனர்களை இப்படியெல்லாம் கஷ்டப்படுத்தாமல், ஸாதுக்கள் நிம்மதியாக வாழ்க்கை நடத்த முடியாதபடி கொலை, கொள்ளை, பெண்களை மானபங்கம் செய்வது என்றெல்லாம் செய்யாமல் தடுப்பதற்கு ஒரு அமைப்பு வேண்டும். அந்நிய தேசத்தினர் ஒரு தேசத்துக்குக் கூட்டமாக வந்து அதன் ஜனங்களைக் கஷ்டப்படுத்தி, அவர்களுடைய ‘அர்த்தம்’, மதம், கலாசாரத்தைச் சிதைத்துச் சேதம் பண்ணாமலும் தடுக்க வேண்டும். தடுத்தும், இந்த உள்நாட்டு-வெளிநாட்டு துஷ்டர்கள் கைவரிசையைக் காட்டிவிட்டால் அவர்களைத் தண்டித்து சிக்ஷை பண்ணுவதற்கும் அந்த அமைப்புக்கு அதிகாரமும், செல்வாக்கும், ஆள் பலமும் இருக்க வேண்டும். ஜனங்களுக்கு அர்த்தத்தை சேகரம் பண்ணிக் கொள்வதற்கும், லௌகிக ரீதியில் ஜீவனம் நடத்துவதற்கும் அதிகம் சொல்லித் தரவேண்டியதில்லை. self-interest -ல் அவர்களே கொஞ்சம் சொல்லிக் கொடுத்தாலும் இந்த விஷயங்களில் விருத்தி பண்ணிக்கொண்டு விடுவார்கள். பிறன் interest -ஐக் கெடுக்காமல், தங்களுடைய சாச்வதமான interest -ஐயும் கெடுத்துக் கொள்ளாமல் அவர்களை இவ்விஷயங்களில் கட்டுப்படுத்தவே சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கிறது. அது தர்ம சாஸ்திரத்தின் காரியம். அர்த்த சாஸ்த்ரம் என்று வருகிறபோது, இப்படி தனித்தனிப் பிரஜைகள் அர்த்தத்தைச் சேர்த்துக் கொள்விதைவிட, அத்தனை பிரஜைகளுமாகச் சேர்த்ததை ரக்ஷித்துக் கொடுப்பதற்கான ஸ்தாபனத்தைப் பற்றித்தான் நிறையக் சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கிறது. அதோடு, அவர்களுடைய லௌகிக வாழ்க்கையைக் காப்பாற்றித் தருவதோடு அவர்களுடைய அத்யாத்ம வாழ்க்கை, கலாசாரம் இவற்றையும் பேணிக் காத்துத் தரும் ஸ்தாபனமாயும் இதுவே இருந்துவிட்டால், அது இத்தனை பெரிய கார்யங்களை, ஒரு பெரிய தேச ரீதியில் இதற்காக நடத்த வேண்டிய நிர்வாஹங்களை எப்படிச் செய்ய வேண்டும் என்பதைப் பற்றித்தானே விஸ்தாரமாகச் சொல்ல வேண்டியதாயிருக்கும்?ராஜாங்கம் என்பது இப்படிப்பட்ட ஸ்தாபனம் தானே? ஒவ்வொரு தேசத்திலும் இப்படித்தானே எத்தனையோ ஆயிரம் வருஷங்களுக்கு முந்தியே ராஜாங்கம் என்பதை ஏற்படுத்தி, ஜனங்கள் முறையான வழியில் தாங்கள் ‘அர்த்தம்’ தேடுவதற்குக் குந்தகம் இல்லாமலிருப்பதற்காகவும், தேடிப் பெற்ற அர்த்தத்தையும் அதோடு தங்கள் ஜீவனையும் உள் சத்துருக்களிடமிருந்தும் வெளி சத்துருக்களிடமிருந்தும் ரக்ஷித்துக் கொள்வதற்காகவும், தங்களுடைய தேசிய கலாசாரம், மதம் முதலியவற்றைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் வழி கண்டிருக்கிறார்கள்? பின்னாடி பல ஸித்தாந்தங்கள் வந்து ஜனநாயகம் என்று சொல்லிக்கொண்டு ராஜாங்கமே மெஜாரிட்டியாயிருக்கிற பலிஷ்டர்களின் பக்கம் இருந்துகொண்டு துர்பலர்களாயிருக்கிற மைனாரிட்டிகளின் உடைமைகளை நியாயா நியாயம் அவ்வளவாகப் பார்க்காமல் பறிப்பதாகவும், தேசாசாரங்களைச் சிதைப்பதாகவும் ஆனாலுங்கூட வாயளவில், எழுத்தளவில் இப்படிப்பட்ட ராஜாங்கமும் ஸர்வஜனங்களையும் தர்மப்படி ரக்ஷிப்பதற்காகவும், தேச தர்மத்தையும் இப்படியே போஷித்துத் தருவதற்காகவும் தான் இருப்பதாகப் பிரகடனம் பண்ணிக் கொள்வது வழக்கமாயிருக்கிறது. இங்கே ஐடியாலஜி, கொள்கை என்பவை வந்து மோதுகிறபடியால் ஜெனரலாகச் சொல்கிறேன். அர்த்த சாஸ்திரத்தில் ராஜாங்கத்துக்கு, ஆட்சி முறைக்கு முக்யமான இடம் கொடுத்ததற்குக் காரணம் ராஜாங்கந்தான் தேச ஜனங்களின் ‘அர்த்த’த்தை தர்மப்படி ரக்ஷித்துத் தருவதற்காக ஏற்பட்ட அமைப்பு என்பதால்தான்.


*1“பஜகோவிந்த”த்தில்

*2அறத்துப்பால் 25-37 அதிகாரங்களிலுள்ள 130 குறட்பாக்கள்

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is லக்ஷ்யம் மறக்கலாகாது
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  அர்த்த சாஸ்த்ரமும் தர்ம சாஸ்த்ரமும்
Next