தெய்வங்களின் தொடர்பு : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

ஸங்கீத, நாட்யக் கலைகளுக்கு தெய்வங்களோடேயே இப்படி ஸம்பந்தம் ஏற்படுத்தியிருக்கிறது. நடராஜமூர்த்தி போல லோகத்திலே எதுவும் கிடையாது என்று இன்று லோகத்திலிருக்கிற அறிஞர்களெல்லாரும் சொல்கிறார்கள். நம் தேசத்துக்கு ரொம்ப உசந்த ‘ஸிம்ப’லாக வெளி தேசத்திலிருக்கிறவர்களுக்கு ஏதாவது ‘ப்ரெஸன்ட்’ பண்ணுவதென்றால் ராஜாங்கத்தினரே நடராஜ விக்ரஹம்தான் கொடுக்கிறார்கள். அந்நிய தேச ம்யுஸீயங்களுக்கு மில்லியன், இரண்டு மில்லியன் டாலர் விலைக்குப் போவது நம் கோவில்களிலிருந்து திருடின நடராஜாதானென்றால், அந்த நடராஜாவின் சிறப்பு முழுவதும் நடனத்தால் ஏற்படுவதுதான். நர்த்தன கணபதி, காளிங்க நர்த்தன மூர்த்தி, நடன ஸரஸ்வதி என்றெல்லாமும் நாட்டியமூர்த்திகளிருக்கின்றன.

வாத்யங்களை எடுத்துக் கொண்டாலும் ஒரே தெய்வ ஸம்பந்தந்தான். கலைத் தெய்வம் என்றே சொல்கிற ஸரஸ்வதி கையில் வீணை இருக்கிறது. வீணைதான் நம் ஸங்கீதத்துக்கே ஜீவநாடி என்பார்கள். அதனால் ஒவ்வொரு தெய்வத்துக்கும் உள்ள வீணைக்கென்று ஒரு பெயர் உண்டு. ‘கச்சபி’ என்பது ஸரஸ்வதியின் வீணை. ‘விபஞ்ச்யா காயந்தீ’ என்ற ‘ஸெளந்தர்ய லஹரி’ ஸ்லோகத்தில், ஸரஸ்வதியானவள் அம்பிகையின் ஸந்நிதியிலே சிவலீலைகளை வாயால் பாடிக்கொண்டே ‘விபஞ்சி’வாசிக்கிறாள் என்று ஆசார்யாள் வர்ணித்திருக்கிறார். ‘விபஞ்சி’ என்பது வீணைக்கு ஒரு பொதுப் பெயர்.

‘நாரத கானம்’ என்பதாக ஸங்கீதத்தில் பரம உத்க்ருஷ்டமானதைச் சொல்கிறோம். த்யாகராஜ ஸ்வாமிகளுக்கு ஸங்கீத சாஸ்த்ர புஸ்தகத்தைக் கொடுத்து அநுக்ரஹித்தவர் நாரதர்தான். “நாரத குருஸாமி” என்று அவர் மேலேயே தியாகையர்வாள் பாடியிருக்கிறார். நாரதர் கையிலும் வீணை இருக்கிறது. அந்த வீணைக்கு ‘மகதி’ என்று பேர். “எம் இறை நல் வீணை வாசிக்கும்மே” என்பதாக அப்பர் ஸ்வாமிகள் பரமசிவன் வீணாகானம் செய்து கொண்டிருப்பதைச் சொல்கிறார். கைலாஸத்துக்கு அடியிலே மாட்டிக் கொண்ட ராவணேச்வரன் அதிலிருந்து விடுபடுவதற்காகத் தன் சிரஸுகள், நரம்புகள் ஆகியவற்றை அறுத்து வீணை பண்ணி, அதில் ஸாமகானத்தை வாசித்தே ஈஸ்வரனைப் பிரீதி பண்ணி மீண்டானென்று கதை. கிருஷ்ண பரமாத்மா என்றாலே அவரோடு இணை பிரிக்க முடியாததாகப் புல்லாங்குழல் வந்து விடுகிறது. வேணுகோபாலன், முரளீதரன் என்றெல்லாம் அவருக்குப் பெயர்கள் ஏற்பட்டிருக்கின்றன.

ப்ரதோஷ ஸ்தோத்ரம் என்று ஒன்று உண்டு. அதிலே அத்தனை தெய்வங்களையும், கீத வாத்யங்களோடு ஸம்பந்தப்படுத்திச் சொல்லியிருக்கிறது. ஸாக்ஷாத் பரமேஸ்வரன் ப்ரதோஷ காலத்தில் அம்பாளை ரத்ன பீடத்தில் உட்கார்த்தி வைத்துவிட்டு அவளுக்கெதிரே, கைலாஸ மலையிலே நடனம் செய்கிறானாம். அவனுடைய டான்ஸுக்குத்தான் ஆர்க்கெஸ்ட்ராவாக அத்தனை தேவர்களும் வாத்யம் வாசிக்க வந்திருக்கிறார்களாம். வாக்தேவியான ஸரஸ்வதி வீணை வாசிக்கிறாளாம், வீணைக்கு ‘வல்லகி’ என்று ஒரு பேர். அந்தப் பேரைதான் இங்கே சொல்லியிருக்கிறது. இந்த்ரன் புல்லாங்குழல் ஊதுகிறானாம். பிரம்மா ஜால்ரா போடுகிறாராம். லக்ஷ்மி வாய்ப்பாட்டுப் பாடுகிறாளாம். விஷ்ணு ம்ருதங்கம் வாசிக்கிறாராம். நந்திகேச்வரைத்தான் பொதுவில் ம்ருதங்கத்துக்கு சொல்வது வழக்கம். ஆனால் ப்ரதோஷ தாண்டவத்தின் போது நந்திகேச்வரர் யஜமானனின் லாவண்யத்தில் தன்னையே மறந்து போய்விட்டார் போலிருக்கிறது*1. அதனால் மஹாவிஷ்ணு ம்ருதங்கம் வாசித்திருக்கிறார். பரமேஸ்வரனோடு மஹாவிஷ்ணுவுக்கு எத்தனை விதமான உறவுகளிருக்கின்றன என்று நம் ஆசார்யாள் ‘சிவாநந்தலஹரி’யில் “பாணத்வம் ரிஷபத்வம்” என்ற ஸ்லோகத்தில் அடுக்கிக் கொண்டு போகிறபோதும் அவர் சிவ தாண்டவத்துக்கு மத்தளம் கொட்டுவதை “ம்ருதங்க வஹதா” என்று குறிப்பிடுகிறார்.

ப்ரதோஷ நாட்யத்தில் அம்பிகையை சிவ தாண்டவத்தை வெறுமே பார்த்துக்கொண்டு ரஸிப்பவளாக மாத்திரம் சொல்லியிருக்கிறது. இந்த ஆனந்த தாண்டவத்தை மட்டுமின்றிக் கல்பப் பிரளயத்தில் எல்லாவற்றையும் தன்னில் ஒடுக்கிக் கொண்டு ஈஸ்வரன் ஸம்ஹார தாண்டம் செய்யும்போதும் அம்பாள் ஒருத்தி மட்டும் அழிந்து போகாமல் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று லலிதா ஸஹஸ்ர நாமத்தில் சொல்லியிருக்கிறது:

மஹேச்வர மஹா கல்ப மஹா தாண்டவ ஸாக்ஷிணீ.

அந்தப் பரதேவதையையே ஸங்கீத தேவதையாகச் சொல்லும்போது ராஜ மாதங்கி, ராஜ ச்யாமளா என்று பெயர். “மீநாக்ஷி மே முதம் தேஹி … ராஜ மாதங்கி” என்று தீக்ஷிதர் பாடியிருக்கிறபடி மதுரையிலே நித்ய வாஸம் பண்ணுகிற மீநாக்ஷியானவள் பராசக்தி ஸங்கீதத்தின் அதி தெய்வமாக இருக்கப்பட்ட அவஸரம் (கோலம்) தான். காஞ்சீபுரத்தில் காமாக்ஷி கோயிலிலும் இவளுக்குத் தனி ஸந்நதி இருக்கிறது. ‘ச்யாமளா தண்டகம்’ இப்படி ஸங்கீதமூர்த்தியாக இருக்கப்பட்ட பராசக்தியைப் பற்றியதே. ‘நவரத்னமாலா‘ என்பதாக ‘ஓம்கார பஞ்ஜர சுகீம்‘ என்று ஆரம்பிக்கிற – ஸ்துதி ஒன்றைக் காளிதாஸன் செய்திருக்கிறான். அதுவும் இந்த ச்யாமளா தேவியைப் பற்றியதுதான். அதிலே இவளும் ஸரஸ்வதியைப் போலவே கையில் வீணை வைத்துக் கொண்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறது. “வீணா ஸங்க்ராந்த காந்த ஹஸ்தாம்”. நிறத்தில் மட்டும் அவளுக்கும் இவளுக்கும் நேர் வித்யாஸம். ஸரஸ்வதி நல்ல வெளுப்பு. இவளே சாம்பல் கறுப்பு. அதனால்தான் ‘ச்யாமளா’ என்று பெயர். இவளுடைய லாவண்யம் நிறைந்த கையின் நுனிவிரல் வீணையின் தந்திகளில் எப்போதும் ஸஞ்சாரம் பண்ணிக் கொண்டிருக்கிறது. அவள் இப்படி இருக்கிறாளென்றால் நாமும் ஸங்கீத உபாஸனையால் அவளைப் பிடித்துவிடலாம் என்று அர்த்தம். நிறைய சாஸ்த்ராப்யாஸம் பண்ணி, யோகாதிகளால் சித்தத்தை நிறுத்தி வசப்படுத்த முடியாத நாமும் ஸ்வரங்களில் லயிப்பதால் மனஸை நிறுத்தி அவளுடைய சரணார விந்தத்தில் அதைக் கிடத்திவிடலாம். ஸுலபமாக அவள் கடாக்ஷத்தைப் பெற்றுவிடலாம்.

‘ப்ரதோஷ ஸ்தோத்ர’த்தைப் போல அந்த ப்ரதோஷ கால நடராஜ தாண்டவத்தை வர்ணிப்பதாக ‘சம்பு நடன அஷ்டகம்’ என்று ஒன்று உண்டு. இது பதஞ்ஜலி பண்ணின ஸ்தோத்ரம். அவர் ஆதிசேஷன் அவதாரம். அவரைப் போலவே நடராஜாவோடு ஸதா இருக்கும் வ்யாக்ர பாதர் புலிக்கால் பெற்றவர். பாம்பு, புலி முதலான க்ரூர ஜந்துக்களையும் ஸங்கீத நாட்யங்கள் ப்ரேமையாய், சாந்தமாய் பண்ணிவிடுகிறதென்று அர்த்தம். இந்த ‘அஷ்டக’ ஸ்லோகங்களின் சொல்லமைப்பாலும், கதியாலும், சொல்கிறபோதே எதிரே நாட்டியம் நடக்கிறது போன்ற ப்ரமை தட்டும். இதை ப்ரதோஷ பூஜையில் ந்ருத்யோபசாரம் பண்ண வேண்டிய இடத்தில் வாஸ்தவமாகவே சந்த்ர மௌளீச்வரருக்கு நாட்டியமாக அர்ப்பணிக்க வேண்டுமென்று எனக்கு ஆசையாயிருந்தது. மடத்திலே ஸ்த்ரீகள் ஆடுவதற்கு இடமில்லை. அதனால், த்ரவியத்தையோ கீர்த்தியையோ முன்னிட்டதாயில்லாமல் பூஜாங்கமாக ஈஸ்வரனுக்கு ஸமர்ப்பணமாவதுதானே என்பதால் நம்முடைய ஆஸ்தான (ஸங்கீத) வித்வானையே*2 இந்த ஸ்தோத்திரத்துக்கு அபிநயம் பிடிக்கும்படி சொன்னேன். அவர் முதலில் பயந்தேபோய்விட்டார். ‘எத்தனையோ வருஷம் நாட்ய சிக்ஷை சொல்லிக் கொண்டால்தானே இது வரும்? தமக்குப் பாட்டில் உள்ளது போல டான்ஸில் பரிசயமில்லையே’ என்பதால் பயப்பட்டார். நான்தான் “ஒன்றும் பயப்பட வேண்டாம்! நடராஜாவை நினைத்துக் கொண்டு, குயவன் களிமண்ணைத் துவைக்கிற மாதிரி காலாலே பண்ணிக்கொண்டு, சொல்போகிற போக்கில் கையைக் காட்டிக்கொண்டு போ. ஸரியாய் வந்துவிடும்” என்று தைரியம் கொடுத்தேன். அப்படியே நன்றாக அமைந்தது. சிதம்பரத்திலே சுத்த மத்தளம் என்கிற ‘ஸ்பெஷல் டைப்’மத்தளம் நடராஜாவுக்கு வாசிக்கப்படுகிறது. அதனால் இந்த சம்பு நடன அபிநயத்தின் போதும் இங்கே சுத்தமத்தளம் வாசிக்குமாறு ஏற்பாடு செய்தது. சங்க நாதத்தையும் சேர்த்துக் கொண்டது. இதனால் பூஜையிலேயே ஸாந்நித்யம் கூடுதலாகி விட்டாற்போல இருந்தது.

இதற்கெல்லாம் என்ன அர்த்தமென்றால் ச்ருதி-லய சங்கீதம், ந்ருத்யம் எல்லாமே உபஸனையாக அப்யஸிக்கப்பட்டால் நம்மை ஈஸ்வர ஸந்நிதானத்திலேயே கொண்டுபோய் நிறுத்திவிடும். முடிவிலே அந்த ஸந்நிதானம் எங்கே இருக்கிறது? நம் ஹ்ருதயத்துக்குள்ளேயேதான். அதற்குள்ளே அடங்கி ஆத்மானந்தத்தை அடைய ஸங்கீதம் ஒரு வழி.


*1நந்திகேச்வரரின் இரு கொம்புகளுக்கிடையேதான் ஈசன் ப்ரதோஷத் தாண்டவம் செய்வது.

*2ஸ்ரீவாஞ்சியம் ராமசந்திரய்யர்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is வாத்திய, நாட்டிய வகைகள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  இசையால் அன்பும், அமைதியும்
Next