அகண்ட சப்தமும், கண்ட சப்தமும் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

ஆதியாய், அநாதியாய், ஸர்வ வியாபகமாய் இருந்து வருவது சப்தமே. நம்முடைய காது என்கிற இந்த்ரியத்தின் குறைபாட்டால்தான் நமக்கு அது புரியாமலிருப்பது. அதீந்த்ரிய சக்தி உள்ளவர்களுக்கு அகண்ட ஆகாசம் பூராவும் வியாபித்துள்ள சப்தம் அநுபவ ஸித்தியாகும். இப்போது நமக்குள்ள காதுக்குக் கேட்டாலே சப்தமிருப்பதாகவும், கேட்காவிட்டால் சப்தமில்லை என்றும் நாம் நினைக்கிறோம். நம் பார்வை, நம் கேள்வி இவற்றால்தான் அகண்டமாயுள்ள விஷயங்கள் கண்டிதமாக, குறுக்கப்பட்டதாக ஆவது. நம் பார்வையை வைத்துத்தான் ஸூர்யன் உதயமானான், அஸ்தமித்தான் என்று சொல்வதுகூட. வாஸ்தவத்தில் ஸூர்யன் இருக்கிற படியேதான் இருக்கிறான். பூமி அவனைச் சுற்றி வருவதால் நம் த்ருஷ்டியில்தான் உதயாஸ்தமனங்கள் ஏற்படுவது. இந்தப் பந்தலில் ஒரு த்வாரத்தின் வழியாக ஸூர்ய வெளிச்சம் வந்தால்தான் அது நமக்கு எடுப்பாகத் தெரிகிறது. பந்தலுக்கு வெளியிலே இந்த சின்ன beam (ஒளிக்கற்றை) தானே விஸ்தாரமாகப் பிரகாசிக்கிறது? அங்கே நமக்கு இத்தனை ஸ்பஷ்டமாகத் தெரிவதில்லையே! அப்படித்தான் அகண்ட சப்தம் நமக்குப் பிடிபடுவதில்லை;அதைக் கண்டம் பண்ணினால் பிடிபடுகிறது.

இன்னொன்றுகூட. பந்தலிலே த்வாரம் வட்டமாயிருந்தால் உள்ளே விழுகிற வெளிச்சமும் வட்டமாயிருக்கிறது. த்வாரம் சதுரமாய், முக்கோணமாய் இருந்தால் வெளிச்சமும் அந்தந்த வடிவங்களையே எடுத்துக் கொள்கிறது. இதனால் ஒரு குழந்தை என்ன நினைக்குமென்றால், ஒளி என்பதே வட்டமாயோ, சதுரமாயோ, முக்கோணமாயோ தானிருக்கிறது என்று நினைக்கும். வாஸ்தவத்தில் ஒளிக்கு ஏது ரூபம்? ரூபம் என்றால் space-ல் கட்டுப்படுவது. ஒலியும் ஒளி மாதிரி இந்தக் கட்டுப்பாட்டைத் தாண்டி பூர்ணமாயிருப்பது.

த்வாரத்தின் வழியே 45 டிகிரியில் ஸூர்ய வெளிச்சம் வருகிறதென்று வைத்துக்கொள்ளுங்கள் – அப்போது நாமும் அந்த டிகிரியில் பார்வையைச் சாய்த்துப் பார்த்தால்தான் ஓட்டை வழியாக ஸூர்யனைப் பார்க்க முடியும். வேறே டிகிரிக்களில் பார்த்தால் ஸூர்யன் தெரியாது; நீல ஆகாசம்தான் தெரியும். ஆனால் அப்போது நம் பார்வையெல்லையிலுள்ள ஆகாசப் பகுதியில் ஒரு கழுகு பறந்தால் அப்போது அதன்மேல் ஸூர்ய வெளிச்சம் தடுக்கப்பட்டுப் பிரதிபலிப்பதைப் பார்த்து, ‘ஓஹோ, அங்கே ஒளி பரவியிருக்கிறது’ என்று புரிந்து கொள்வோம். அதாவது அகண்டமாயிருப்பதைப் புரிந்து கொள்ள முடியாத நமக்கு அது புரிகிற மாதிரி குறுக்கித் தரவும் இன்னொரு உபகரணம் (agency) தேவைப்படுகிறது. உதாரணமாக, ரொம்பவும் புழுங்குகிறது என்று நாம் சொல்லும்போதுகூட நம்மைச் சுற்றி அகண்டமான வாயு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் விசிறி என்கிற ஒரு உபகரணத்தை ‘ஏஜென்ஸி’யைக் கொண்டு அதைக் குறுக்கிக் கண்டமாக்கினால்தான் காற்று இருப்பது நமக்கு அநுபவத்தில் தெரிகிறது. இப்படி அகண்ட ஒளியில் அல்லது காற்றில் கழுகு, விசிறிபோல் ஏதோ ஒரு ‘ஆப்ஜெக்ட்’ குறுக்கிட்டு அதைத் துண்டித்தே நமக்குப் புரிய வைப்பதற்கு ‘அபிகாதம்’ என்று பெயர். ‘அபிகாதம்’ என்றால் அடிப்பது. அகண்டத்தை disturb பண்ணி நாம் புரிந்து கொள்ள வைப்பது அபிகாதம்.

சப்தமும் இப்படியேதான், அதன் அகண்ட ஸ்வரூபம் நமக்குப் புரிவதில்லை. கையை ஒன்றோடொன்று அடித்து ‘அபிகாதம்’ பண்ணினால் அப்போது நமக்கு சப்தம் கேட்கிறது. இப்படியே நம் தொண்டையிலுள்ள உறுப்புக்கள் பல தினுஸாக அசைந்து காற்றை அடிக்கிறபோது அகண்டக் காற்று கண்டமான சின்ன அலைகளாகி நாம் போடுகிற எல்லா சப்தங்களாகவும் வெளிப்படுகிறது. அகண்ட ரூபத்தில் சாந்த ஸமுத்ரமாக அடங்கியிருக்கிற நித்யமான சப்தத்தில் நம்முடைய தொண்டைக்குள் உள்ள உறுப்புக்களாலும், நாக்கு, பல், உதடு ஆகியவற்றாலும் ‘அபிகாதம்’ உண்டாக்கிப் பலவித ஒலிகளை ஏற்படுத்துவது ஸமுத்ரத்திலே பல குமிழ்களை உண்டாக்குகிற மாதிரியாகும். இதற்கு ‘ஸ்போடம்’ என்று பெயர் சொல்லியிருக்கிறது. ‘ஸ்போடம்’ என்பதற்குள்ள பல அர்த்தங்களில் ஒன்று கொப்புளம் உண்டாக்குவது. சாந்த சப்த ஸமுத்ரத்தில் பலவித ஒலிக் குமிழ்களை உண்டுபண்ணுவதால் இது ஸ்போடம்.

அபிகாதத்தால் உண்டாகிற சப்தத்துக்கு ‘ஆஹத சப்தம்’ என்று பெயர். ‘ஆஹத’ என்றாலும் ‘அடிக்கப்பட்ட’ என்றே அர்த்தம். இங்கே அடிப்பது, அடிக்கப்படுவது என்று இரண்டு இருந்தாக வேண்டும். அகண்ட சப்தமென்பது இப்படியில்லாமல், தன்னை அடித்து எழுப்ப இன்னொன்று இல்லாமலிருந்தால்தான் ‘அகண்டம்’, ‘பூர்ணம்’ என்ற லக்ஷணங்களுக்குப் பொருந்தியதாக இருக்க முடியும். இப்படி, அடித்து எழுப்பாமல், தன்னில் தானேயாய் உண்டாகி இருக்கிற அகண்ட சப்தம் வெளி ஆகாசத்தில் இருப்பது போலவே ஜீவனின் ஹ்ருதயாகாசத்திலும் இருக்கிறது. இங்கே நிலவுகிற பிராண சப்தத்தை ‘அநாஹத த்வனி’, அதாவது ‘அடிக்காமலே உண்டாகிற ஒலி’ என்று சொல்லியிருக்கிறது. பேச்சு, வாய்ப்பாட்டு, வாத்ய ஸங்கீதம் என்று எதுவானாலும் நாம் ஆஹதமாக ஸ்போடத்தின் மூலமே சப்தம் உண்டாக்குகிறோம்.

க, ங, ச, ஞ என்கிற மாதிரி அக்ஷரங்களாக இருக்கிற பல சப்தங்கள் உண்டாக்குவது ஒருவித ஸ்போடம். ஸப்த ஸ்வரங்கள் என்னும் சப்தங்களை உண்டு பண்ணுவது இன்னொரு வித ஸ்போடம். நாம் பேசும்போது ஸப்த ஸ்வரங்களோடு சேர்க்காமலே க, ங, ச, ஞ முதலான அக்ஷர ஒலிகளையும் உண்டு பண்ணுகிறோம். வீணை, ஃப்ளூட், ஃபிடில், நாயனம் முதலிய வாத்யங்களில் அக்ஷர சப்தமில்லாமல் ஸ்வர ஸ்தானத்தில் வெவ்வேறு ஒலிகளை மாத்திரம் உண்டாக்குகிறோம். அக்ஷர சப்தங்கள் கொண்ட பேச்சு மநுஷ்ய வர்க்கம் ஒன்றுக்கே உரித்தானது.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is நாத மஹிமை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  ஒலி விஞ்ஞானத்தில் பூர்விகரின் ஞானம்
Next