அஸ்த்ரம், சஸ்த்ரம் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

அஸ்த்ரம், சஸ்த்ரம் என்று ஆயுதங்கள் இரண்டு வகைப்படும். ஆயுதத்தின் சக்தி, அதைப் பிரயோகிக்கிறவனின் ஸாமர்த்யம் ஆகியவற்றைக் கொண்டு மட்டுமே சத்ருவை அடிப்பது சஸ்த்ரம். “எல்லா ஆயுதங்களுமே இப்படிப்பட்டவைதானே?” என்று தோன்றலாம். வாஸ்தவந்தான். தற்காலத்தில் ஆயுத சக்தி, அதைப் போடுகிறவனின் யுத்த தந்த்ரம் இந்த இரண்டு மாத்திரந்தான் யுத்தத்தில் வெளியாகிறது. ஆனால் முற்காலத்தில் இதோடு மந்த்ர சக்தியும் யுத்தத்தில் பிரயோஜனப்பட்டு வந்தது. மந்த்ர சக்தியோடு பிரயோகிக்கப்படும் ஆயுதமே அஸ்த்ரம். பெரிய ரிஷிகளாக, அவதாரங்களாக, உத்தம புருஷர்களாக இருக்கப்பட்டவர்கள் மந்த்ரத்தைச் சொல்லி ஒரு தர்ப்பையை, புல்லைப் பிரயோகித்தால்கூட அது சத்ருவை ஸைன்யத்தோடே கூண்டோடு அழித்திருக்கிறது. ஆனாலும் பொதுவில் ஆயுதங்களிலேயே மந்த்ரங்களையும் சேர்த்து, அதாவது சஸ்த்ரங்களையே அஸ்த்ரங்தளாக்கித்தான் யுத்தம் செய்திருக்கிறார்கள். இந்த சஸ்த்ரங்களில் முக்கியமாயிருப்பதும் தநுஸ்தான். பிரம்மாவைக் குறித்த மந்திரசக்தி கொண்ட பிரம்மாஸ்த்ரம், விஷ்ணுவைக் குறித்த மந்த்ர சக்தியுடன் கூடிய நாராயணாஸ்த்ரம், பரமசிவனைக் குறித்த பாசுபதாஸ்த்ரம், இப்படியே தேவதைகளைக் குறித்த வருணாஸ்த்ரம், ஆக்நேயாஸ்த்ரம், கருடாஸ்த்ரம், நாகாஸ்த்ரம் என்கிறவைகளைப் புராண கதாபாத்ரங்கள் இந்த அஸ்த்ரங்களாக்கி விட்டதாகப் போட்டிருக்கிறது. இப்போது ‘ஆட்டம் பாம்(ப்)’ போட்டவுடன் எத்தனை உத்பாதம் உண்டாயிற்றோ அதைவிட அதிகமாக இந்த அஸ்த்ர ப்ரயோகங்களின் போது உண்டானதாகப் புராணங்களிலிருந்து தெரிகிறது. “ஒரு ஆயுதத்தை வீசினானாம், உடனே ஆகாசம் வரை புகை எழும்பிற்றாம்! அக்னி ப்ரவாஹம் வந்து ஜலாசயங்கள் வற்றிற்றாம்! பட்சிகளே முதற்கொண்டு செத்து விழுந்ததாம்! கர்ப்பத்திலிருந்த பிண்டங்கூட சேதமாயிற்றாம்! இதெல்லாம் வெறும் புரளி” என்று புராண வர்ணனைகளை நம்பாமலிருந்தவர்களுக்கும் ‘ஆட்டம் பாமி’ ன் பவரும், ரேடியேஷனும் புராணத்தில் சொல்லியிருப்பது வாஸ்தவமாகவே இருந்திருக்கணும் என்ற நம்பிக்கையை உண்டாக்கியிருக்கின்றன. ஒரு சின்னஞ்சிறிய அணுவைப் பிளப்பதால் பிறக்கும் சக்தியைவிட ஸகல ஸ்ருஷ்டிக்கும் பீஜமான மந்த்ர சப்தங்களைப் பிளப்பதில் உண்டாகும் சக்தி எவ்வளவோ அதிகமாகும்*.

ஒரு அஸ்த்ரத்துக்கு எதிராக இன்னொரு மந்திரத்தால் எதிர் அஸ்த்ரம் விடுவதுண்டு. இப்படி நாகாஸ்த்ரம் ‘பவ’ரைக் காட்டாமல் நியூட்ரலைஸ் செய்வது கருடாஸ்த்ரம்; பாம்பை ஜயிப்பது கருடனில்லையா? அதனால் ஆக்நேயாஸ்தரத்துக்கு எதிர் வாருணாஸ்த்ரம்.

மந்த்ரசக்தி ஆயுத சக்தியைவிட எவ்வளவோ பெரிது என்பதாகக் காளிதாஸன் ‘ரகுவம்ச’த்தில் திலீபன் வாய்மொழியாக அழகாகத் தெரிவிக்கிறான். குலகுருவான வஸிஷ்டரின் ஆச்ரமத்துக்கு ஸூர்யகுல ராஜனான திலீபன் போகிறான். அவர் அவனிடம் ராஜ்யத்தின் க்ஷேமத்தைப் பற்றி விசாரிக்கிறார். அதற்கு அவன், “தாங்கள் குல குருவாக இருந்து ஆசீர்வாதம் பண்ணிக் கொண்டிருக்கும் போது ராஜ்யத்தின் க்ஷேமம் எப்படிக் குறைவுபடும்? என்னுடைய அம்பு ஏதோ நேரே இருக்கிற சில பேரை அடிக்கிறது என்றால் தங்களுடைய மந்திரமோ எங்கெங்கேயோ இருக்கிற கெட்ட சக்திகளையெல்லாம் அடித்து, என் அம்பையே பிரயோஜனமில்லாமல் பண்ணி விடுகிறது. ராஜ்யம் நன்றாயிருக்கிறதென்றால் அதற்குக் காரணம் என் க்ஷத்ர பலமில்லை. அந்த பலத்துக்கும் ஆதாரமாயிருக்கிற தங்களுடைய பிரம்ம தேஜஸ்தான்” என்கிறான்.

அஸ்த்ரத்தில் சஸ்த்ரம், மந்த்ரம் இரண்டும் சேர்ந்திருக்கிறது. க்ஷத்ரிய பலம், பிரம்மரிஷிகள் கண்டுபிடித்த மந்திரத்தின் சக்தி இரண்டும் சேர்ந்திருப்பதை நினைக்கும்பொழுது ஒன்று நினைவுக்கு வருகிறது. ஒரு ராஜாவும், பிராம்மணோத்தமர் ஒருவரும் சேர்ந்தாற்போல் ஒரே ஸிம்ஹாஸனத்தில் உட்கார்ந்து கொண்டு ஆட்சி பண்ணினார்கள். அந்த ராஜாவின் பேர் அச்சுதப்ப நாயக். தஞ்சாவூரை ஆண்ட நாயக் வம்ச ராஜாக்களில் இரண்டாவதாக வந்தவன் அவன். அவனுடைய பிதா ஸேவப்ப நாயக். ஸேவப்பன் இந்த வம்சத்துக்கு முதல் ராஜாவாகத் தஞ்சாவூரில் புது ராஜ்யம் ஸ்தாபிப்பதற்குக் காரணமாயிருந்தவர் கோவிந்த தீக்ஷிதர் என்ற மஹான். அந்த பிராம்மணோத்தமர் சொன்ன ப்ரகாரமே செய்துதான் ஸாமான்ய தசையில் இருந்த ஸேவப்பன் தஞ்சாவூரில் ராஜ்யம் ஸ்தாபித்து ராஜாவானது. ஸேவப்பனின் ஆயுஸ் முடிந்த பிற்பாடும் கோவிந்த தீக்ஷிதர் ஜீவ்யவந்தராயிருந்தார். ஸேவப்பனின் புத்ரனான அச்யுதப்பன் அவரைப் பிரதம மந்திரியாக மட்டுமின்றி. ‘குல கூடஸ்த புரோஹிதர்’ என்று கௌரவம் கொடுத்து, உயர்ந்த ஸ்தானத்தில் வைத்திருந்தான். எத்தனை உயர்ந்த ஸ்தானம் என்றால், ‘அர்த்தாஸனர்’ என்பதாக அவரை ஸிம்ஹாஸனத்திலேயே தன் பக்கத்தில் உட்கார்த்தி வைத்துக் கொண்டிருந்தான். இந்தக் காட்சியைப் பார்த்து விட்டு ஒரு கவி சொன்னார்:

த்ரிநாமாத்யந்த நாமாநௌ மஹீக்ஷித் தீக்ஷிதாவுபௌ |

சஸ்த்ரே சாஸ்த்ரே ச குசலௌ ஆஹவேஷு ஹவேஷு ச ||

பகவானுக்கு த்ரிநாமா – நாம த்ரயம் என்ற மூன்று பெயர்கள் – முக்யம். அவற்றைச் சொல்லித்தான் ஆசமனம் பண்ணுவது, அச்யுத, அனந்த, கோவிந்த என்பதே அந்த நாமத்ரயம். இதில் முதல் (‘ஆதி’) நாமா ‘அச்யுத’. முடிவு (‘அந்த’) நாமா ‘கோவிந்த’. ஒரே ஸிம்ஹாஸனத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிற இரண்டுபேரில் ‘மஹீக்ஷித்’ அதாவது பூபாலனம் பண்ணும் ராஜாவுக்கு ‘ஆதி’ நாமம் – அச்யுதப்ப நாயக்; இன்னொருத்தரான தீக்ஷிதருக்கு ‘அந்த’ நாமம் – கோவிந்த தீக்ஷிதர். இதிலே முதலாமவன் சஸ்த்ரத்தில் கெட்டிக்காரன்; இரண்டாமவர் சாஸ்த்ரத்தில் கெட்டிக்காரர். அவன் ‘ஆஹவம்’ என்ற யுத்த தந்த்ரத்தில் பெயர் வாங்கினவன்; இவர் ‘ஹவம்’ என்னும் யஜ்ஞ அநுஷ்டானத்தில் சிறந்தவர்:

சஸ்த்ரே சாஸ்த்ரே ச குசலௌ ஆஹவேஷு ஹவேஷு ச |

சஸ்த்ர சக்தி வெறும் முரட்டுத் தேஹபலமாய் மட்டுமில்லாமல் த்வேஷ குணத்தையும் கோபத்தையும் மட்டும் காட்டுவதாயில்லாமல், சாஸ்த்ரத்தோடு, தர்ம நெறிகளோடு சேர்ந்திருக்க வேண்டும். தெய்வ சக்தியும், ஞான சக்தியும் கூடிய பிரம்ம தேஜஸையே க்ஷத்ரிய பலம் ஆதாரமாக கொள்ள வேண்டும். இதெல்லாம் அர்த்த சாஸ்திரத்தில் வரும் விஷயங்கள். ராஜாவின் புரோஹிதரையும் மந்திரிகளையும் பற்றி சொல்லும்போது இந்த விஷயங்கள் கூறப்பட்டிருக்கும்.

சஸ்த்ரம் என்பது தெய்வபலம் பெற்ற அஸ்த்ரமாவது பெரும்பாலும் தநுர்பாணங்களை வைத்துத்தான் என்று சொன்னேன். எத்தனையோ ஆயுதங்கள் இருக்கிறபோது யுத்த அப்யாஸ வித்யைக்கு ஏன் தநுர்வேதம் என்று பேர் இருக்கிறது என்பதற்குக் காரணம் தநுஸுக்கு உள்ள இப்படிப்பட்ட சிறப்புகள்தான்.


*சப்தம்-ஸ்ருஷ்டி குறித்த விளக்கம் “தெய்வத்தின் குரல்” இரண்டாம் பகுதியில் “வேதம்” என்ற உரையில் “ஒலியும் படைப்பும்” என்ற உட்பிரிவில் உள்ளது.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is 'தநுர்'என்பது ஏன்?
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  தெய்வங்களின் வில்கள்
Next