அபரிக்ரஹம் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

நமக்காக ஸம்பாதனம் செய்துகொள்வது, செலவழித்துக் கொள்வது இரண்டிலுமே ரொம்பவும் கணக்காயிருப்பதுதான் இதற்கு அடிப்படை. இதைத்தான் ‘அபரிக்ரஹம்’ என்று பெரிய தர்மமாக சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறது. ‘பரிக்ரஹம்’ என்றால் உடைமை சேர்த்துக் கொள்வது;அப்படிச் சேர்த்துக் கொள்ளாமலிருப்பதே ‘அபரிக்ரஹம்’நீ ஜீவிப்பதற்கு எது அத்யாவச்யமோ அதற்கு அதிகமாக ஒரு துரும்புகூடச் சேர்த்துக் கொள்ளாதே’என்பதுதான் அபரிக்ரஹ தர்மம். இதை யோக சாஸ்திரத்தில் ஸாதகன் அடிப்படையாகக் கொள்ள வேண்டிய ஐந்து ‘யம’ங்களிலேயே ஒன்றாகப் பதஞ்ஜலி (யோக ஸூத்ரத்தில்) சொல்லியிருக்கிறார். ‘யமம்’ என்றால் அடங்கி வைப்பது. மஹா பாபிகளையும் அடக்கி வைத்துத் தண்டிப்பதால் யமனுக்கு அப்படிப் பெயர். மனஸை அடக்குகிறதற்குப் பதஞ்ஜலி யோக ஸூத்ரம் எழுதினார். அதிலே ஐந்து யமங்களாக அஹிம்ஸை, ஸத்யம், அஸ்தேயம் (திருடாமை) , பிரம்மசர்யம் ஆகியவற்றோடு அபரிக்ரஹத்தையும் சொல்லியிருக்கிறது. ‘அது வேணும், இது வேணும்’ என்று பொருளைச் சேர்த்துக் கொள்கிற ஆசை அடங்கணும் என்றே இதைச் சொல்லியிருக்கிறார். இந்த ஆசை அடங்கினால், பணத்தாசை, அதற்காக எந்த தேசத்துக்கு வேண்டுமானாலும் போய் என்ன தொழில் வேண்டுமானாலும் செய்யலாம் என்ற பறப்பு, எந்தப் பொய் புரளி வேண்டுமானாலும் பண்ணிப் பணம் பண்ணலாம் என்ற அரிப்பு எல்லாமே போய்விடும்.

மநு தர்மசாஸ்திரத்தில் ஐந்து தர்மங்களை அடிப்படையாகச் சொல்லுமிடத்தில் அஹிம்ஸை, ஸத்யம், அஸ்தேயம் இந்த மூன்றையும் சொல்லிவிட்டு நாலாவதாக ‘சௌசம்’ என்னும் சுத்தத்தையும், கடைசியில் இந்த்ரிய நிக்ரஹத்தையும் கூறியிருக்கிறார். ‘பிரம்மசர்யம்’ என்று பதஞ்ஜலி சொன்னதைக் கொஞ்சம் விஸ்தாரம் பண்ணினால் அதுவே இந்திரிய நிக்ரஹம். பதஞ்ஜலி சொன்ன அபரிக்ரஹத்துக்குப் பதில் மநு சௌசத்தைச் சொல்லியிருக்கிறார். தனக்கு அத்யாவச்யமானதற்கு அதிகமாக ஒன்றைச் சேர்த்துக் கொண்டால் அதுவே திருட்டுதான் என்று மநு நினைத்திருப்பார் போலிருக்கிறது. அதனால் ‘அஸ்தேயம்’என்று (திருடாமையைச்) சொன்னதிலேயே அபரிக்ரஹமும் அடக்கம் என்று அவர் அபிப்ராயப்பட்டிருக்கலாம்.

திருட்டுக்குப் பல டெஃபனிஷன்! “உள்ளங்கவர் கள்வன்“, “சித்த சோர்” என்றெல்லாம் பகவானுக்கே திருட்டுப் பட்டங்கள்! வரவு சிறுத்து செலவு பெருகினால் அதுவே ஒரு திருடு என்று வசனமிருக்கிறது. கீதையில் பகவான் லோக வாழ்க்கைக்கானவற்றை தேவ சக்திகளிடமிருந்தே பெறுகிற மனிதனானவன் அவற்றை அவர்களுக்கு அர்ப்பணிக்காமல் அநுபவித்தால் அதுவே ஒரு திருட்டு தான் என்கிறார்*.

ஜீவாதாரத் தேவைக்கு ஜாஸ்தியாக எதைச் சேர்த்துக் கொண்டாலும் அது கொள்ளையடித்து வைத்துக் கொள்கிற தோஷம்தான் என்று கருதி, அபரிக்ரஹ தர்மத்தைப் பின்பற்ற முயலவேண்டும்.

நம்முடைய ஆசார்யாளும் “விவேக சூடாமணியி” ல் இதைச் சிறப்பித்துச் சொல்லியிருக்கிறார். யோகத்தின் முதல் வாசல் மௌனம் என்று சொல்லிவிட்டு அடுத்ததாக அபரிக்ரஹத்தையே கூறுகிறார்:

யோகஸ்ய ப்ரதமம் த்வாரம் வாங்நிரோதோ (அ)பரிக்ரஹ:

ரூபாய் என்று ஒன்று ஏற்பட்ட நாளாகத்தான் சொந்தத்துக்கு ஜாஸ்தி சேர்த்து மூட்டை கட்டிவைத்துக் கொள்வது, தன்னுடைய துராசைகளுக்கே கன்னா பின்னா என்று செலவழிப்பது இதெல்லாம் அதிகமாகி, தானதர்மங்கள் பண்ணுவதற்கும், அபரிக்ரஹ தர்மத்துக்கும் ஹானி உண்டாகி வந்திருக்கிறது. ரூபாய் என்று ஒன்று இல்லாத நாள் உண்டா என்று தோன்றலாம். அப்படி ஒரு நாள் இருந்திருக்கிறது. ஆதியில் எல்லா இடத்திலும் barter என்று ஒரு பொருளுக்குப் பதில் இன்னொரு பொருளை ‘எக்ஸ்சேஞ்ஜ்’ (பரிவர்த்தனை) பண்ணிக்கொள்வதுதான் இருந்ததே தவிர ரூபாயோ ஸ்டெர்லிங்கோ டாலரோ இல்லை. அப்புறந்தான் ஒவ்வொரு சீமையிலும் ஸமுதாயங்கள் ஒரு அமைப்பாகக் கெட்டிப்பட்டு, அங்கங்கே ராஜாங்கம் தோன்றி ஒரு ஆட்சி முறையின் கீழே வந்த பிற்பாடு நாணயம், கரென்ஸி என்பது தோனறிற்று. எந்தப் பொருளானாலும் இதைக் கொண்டு மதிப்பை நிர்ணயம் பண்ணுவது ஸுலபமாயிருந்தது. கையடக்கமாக எடுத்துப் போகும்படியாகவும், வைத்துக் காக்கும்படியாகவும் இப்படி ஒன்றை ஏற்படுத்திக்கொண்டார்கள். ஆனாலும் ஈஸ்ட் இண்டியா கம்பெனி ஆட்சி வருகிறவரை கூட நம் நாட்டில் எல்லா ஜனங்களிடையேயும் விசேஷமாக நாணயப் பழக்கம் இருந்துவிடவில்லை. மேல்மட்டங்களில் சில கார்யங்களுக்கு மட்டுந்தான் நாணய மாற்றத்தில் கொடுக்கல் வாங்கல் நடந்தது. ஒரு நாணயத்துக்கு நிஜமாகவே அதன் மதிப்பு இருக்கும்படியாகத் தங்கம், வெள்ளி இவற்றிலேயே காசு இருந்தால், அதிமாகக் கிடைக்காத இந்த லோஹங்களில் அளவாகவே நாணயம் போடுவார்கள். அப்புறமதான் நாணயத்துக்கும் அதன் மதிப்புக்கும் ஸம்பந்தமேயில்லாமல் நிக்கல், செம்பு, வெறும் காகிதம் என்று ஏற்பட்டபின் இஷ்டத்துக்கு அச்சடித்து எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் விநியோகிப்பதாக ஆகிவிட்டது. இதற்கு முன்னாடி, ஸமீப நூற்றாண்டுகளில் கூட பொதுஜனங்களுக்கிடையே பண்ட மாற்று முறையில் தான் பெரும்பாலும் வியாபாரம் நடந்தது. அரசாங்கத்திற்குக்கூட விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு தான்யமாகவே தான் கொடுக்கப் பட்டு வந்தது. பாக்கி தான்யத்தைப் பணமாக்க முடியாது. வியவஸாய நாடு அல்லவா இது?இங்கே உற்பத்தியாகிற பண்டங்களில் தான்யம்தான் மிகவும் அதிகம். அநேகமாக ஒவ்வொருவனுக்கும் சொந்தமாகத் துண்டு நிலமாவது இருக்கும்; அல்லது வர்ணாச்ரம பரிபாலனம் ராஜாங்கக் கடமையாக இருந்ததால் தன் குலத்தொழிலைச் செய்கிற அநேகத் துறையினருக்கு ராஜமான்யமாக நிலமோ, தான்யமோ கிடைத்து வந்தது. தவிர பாக்கியை விற்றுப் பணம் பண்ணுவதற்குப் பெரும்பாலும் இடமில்லாமலே இருந்தது. அதனால் வருகிற போகிற யாத்ரிகர்களுக்கெல்லாம் அன்ன சத்திரம், கோயிலில் முக்குறுணி நாலுகுறுணி என்று நிவேதனம் பண்ணிப் பிரஸாதமாக விநியோகிப்பது, லக்ஷ பிராம்மண போஜனம் என்கிற மாதிரி தானதர்மம் என்றெல்லாம் செய்தே தீரவேண்டியிருந்தது. அப்புறம் பணமாய்ப் பண்ணிப் பாங்கில் போட்டுக் கொள்ளலாம் என்று ஏற்பட்ட பின்தான் தனக்கென்று எத்தனை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம் என்பதாக பரிக்ரஹத்தின் உச்சிக்குப் போய், தான தர்மம் என்பதையே அடைத்து விட்டதாக ஏற்பட்டிருக்கிறது.

அபரிக்ரஹத்துக்கு எங்கேயோ போகவேண்டியதில்லை. நாலைந்து தலைமுறைக்கு முன்னால் எப்படியிருந்தார்கள் என்று பார்த்தால் போதும். மண்பானை, கல்சட்டி, ஓலை, பாக்குப்பட்டை இதுகள்தான் அவர்களுடைய சொத்து. கருகமணிதான் நகை. நாலு கீற்றை வேய்ந்து கொண்டால் அந்தப் பர்ணசாலைதான் அரண்மனைக்கு மேலே. அரண்மனைக்காரனான திலீபன் முதலான சக்ரவர்த்திகள் இப்படிப் பர்ணசாலைகளில் வசித்து வந்த வஸிஷ்டர் முதலானவர்களின் காலில்தான் வந்து விழுந்தார்கள்.

நம் ஸமீபகால முன்னோர்கள்கூட இப்படி எளிமையாயிருந்து கொண்டே நிம்மதியாகக் காலக்ஷேபம் நடத்தியிருக்கிறார்கள். இப்போது நாம் பணத்தாலும் உடைமைகளாலும் லக்ஷரிகளாலுந்தான் அந்தஸ்து என்று ஆக்கிக்கொண்டு, இதைத் தேடிக் கொண்டே போவதில் சீலங்களை இழந்து, சீலத்தாலேயே நம் முன்னோர்கள் எந்தச் சொத்துமில்லாமலும் பெற்றிருந்த ஸமூஹ கௌரவத்தையும் அடியோடு இழந்து, ரொம்பக் குறைந்தவர்களாக நிற்கிறோம்.

உடைமைகளைச் சேர்த்துக்கொள்ளக் கொள்ள பயந்தான் ஜாஸ்தியாகிறது. அபரிக்ரஹத்தின் நிம்மதி இங்கே ஒருகாலும் கிடைக்காது.

இதிலே நானே ஒன்று பண்ணிக்காட்ட வேண்டியதாயிருக்கிறது. எனக்குப் பட்டுப் பொன்னாடை போர்த்தி மரியாதை பண்ணுவது என்று ஒரு வழக்கம் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். பக்திக்கு ஸ்தூலமாக அடையாளம் காட்டணுமென்ற எண்ணத்தில் பஹு காலமாகவே இப்படிப் பெரியவர்களுக்குப் பண்ணுவது என்று நடந்து வந்திருக்கிறது. அதெல்லாம் தேசம் ஸுபிக்ஷமாக ஸம்ருத்தியாக இருந்த காலம். பொன்னாடை மரியாதைக்குப் பாத்திரமான அந்தக் கால பூர்வாசார்யார்களுக்கும் நிரம்ப யோக்தை இருந்தது. அதைப் பார்த்து நானும் இந்த ரேஷன-நாள், ஸ்கார்ஸிடி-காலத்தில் பொன்னாடை அலங்காரம் பண்ணிக்கொள்வது ஸரியேயில்லை. ரொம்ப நாளாக எனக்கு இந்த அபிப்ராயமிருந்தபோதிலும், பிரியமாக “மரியாதை பண்ணுகிறோம்” என்று வருகிறவர்களைத் தடுத்தால் மனோ வ்யாகுலப்படுவார்களே என்று பேசாமலிந்து வந்திருக்கிறேன். ஆனால் இப்போது ‘அபரிக்ரஹம்’ என்று உங்களுக்கு நீட்டி முழக்கி உபதேசிக்கிறபோது, ‘நாம் ஸந்நியாஸி;இப்படி ஐந்நூறு, ஆயிரம் விலைக்குச் சாதரா போர்த்திக்கலாமா?’ என்று மனஸை உறுத்துவதால், குறிப்பாக இப்போது யாரும் சாதரா கொண்டு வராததால், இனிமேலே எனக்குப் பொன்னாடை போர்த்த வேண்டாமென்று எல்லாரையும் கேட்டுக்கொள்கிறேன். அபரிக்ரஹத்தில் எனக்கும் ஒன்று செய்யணும் என்ற ஆசையிருக்காதா?அதற்காக இதை ஆரம்பிக்கிறேன்.

ஒன்று ஞாபகம் வருகிறது. இங்கே (ஸ்ரீ மடத்தில்) நாங்களும் வித்வான்கள், புலவர்களுக்குப் பொன்னாடையோ சால்வையோ போர்த்தி ஸம்மானிப்பது என்று வழக்கிமிருக்கிறதல்லவா? அதன்படி உ.வே. ஸ்வாமி நாதய்யர் அழைத்துக்கொண்டு வந்திருந்த ஒரு தமிழ்ப் புலவருக்குப் போர்த்துவதற்காக சால்வை கொண்டு வரச் சொல்லி, ஸ்வாமிநாதய்யர் கையாலேயே அதை அவருக்குப் போடச் சொன்னேன். அந்தப் புலவரின் கொள்கைகள் சிலது எனக்குப் பிடிக்காது. இது அவருக்கும் தெரிந்திருக்கிறது. ஸ்வாமிநாதய்யர்தான் எங்கள் இரண்டு பேருக்கும் இருக்கிற மனோ வித்யாஸத்தைப் போக்கணும் என்று அக்கறை எடுத்துக்கொண்டு இரண்டு பக்கமும் பேசி அவரை அழைத்துக் கொண்டு வந்திருந்தார். இப்போது நான் அவருக்கு சால்வை போர்த்த வேண்டும் என்றவுடன் அவர், “பெரியவங்க என்னை இரண்டு விதமாகவும் போத்தணும், போத்தணும்” என்று பெரிசாக விஞ்ஞாபனம் பண்ணிவிட்டார்! போர்த்துவது, போற்றுவது இரண்டையுமே பேச்சிலே ‘போத்துவது’ என்றுதானே சொல்கிறோம்? அந்த அர்த்தத்தில்தான் அவர் சிலேடையாக, நான் சால்வை போர்த்தினால் மட்டும் போதாது மனஸில் பேதம் போய் அவரைப் போற்றவும் வேண்டும் என்று சொல்லிவிட்டார்!

என்னைப் போத்தறதுக்கு (போற்றுவதற்கு) இனிமேல் எவரும் பொன்னாடை போத்த (போர்த்த) வேண்டாம் என்று சொல்கிறேன்!

சொந்தச் சொத்து, சொந்தச் செலவு ஆகியவற்றில் கணக்காய் இருப்பதற்காக (இதவ்வளவும்) சொன்னேன். காந்தியும் இந்த அபரிக்ரஹத்தை ரொம்பவும் சொல்லி, அநுஷ்டானம் பண்ணியும் வந்தார். அப்புறம் இப்போது (1958ல்) விநோபாவும் சொல்லிக்கொண்டிருக்கிறார். தலைவர்கள் எனப்பட்டவர்கள் இந்த இரண்டு பேருக்கும் நமஸ்காரம் பண்ணிக் கொண்டே ‘ஆப்போஸிட் டைரக்ஷனில்’ தேசத்தை வேகமாக இழுத்து விட்டுக்கொண்டிருக்கிறார்கள். மேல் நாடுகளுக்கு நாம் பிற்பட்டு நிற்கவில்லை என்று ‘ப்ராக்ரஸ்’ காட்ட வேண்டாமா?

ராஜாங்கங்கள், அவற்றின் ஐடியாலஜிகள் எதுவும் சாச்வதமில்லை. ஸநாதன தர்மந்தான் சாச்வதம். சாச்வத ஸெளக்யத்துக்கு வழி காட்டுவதும் அதுதான். அதனால் அதைப் பார்த்து ஜனங்கள் வாழ்க்கையின் அம்சங்கள் எல்லாவற்றிலும் ஒரு அளவுக்கு, கணக்குக்குக் கட்டுப்பட்டு நடந்து கொண்டு இங்கே இந்த உலகத்திலேயே நிம்மதியும், அதோடு பாரமார்த்திகமான ச்ரேயஸும் அடைய வேண்டும்.

இதைப்பற்றி இன்னமும் பேசிக்கொண்டே போனால் நானே, சொல்கிறமாதிரி அளவறிந்து நிறுத்திக் கொள்கிறேனோ என்று ஸந்தேஹம் வந்துவிடும்!


*கீதை 3.12

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is பலவித வரவு செலவுகளில் கணக்கு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  உபவேதங்கள் எதற்கு?
Next