தாம்பூல தாரணம் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

எப்போது பார்த்தாலும் குடிக்கணும், ‘ஊதணும்’ என்று இருப்பதுபோல வெற்றிலை போட்டுக் கொள்வதும் ஒரு ‘ஹாபிட்’ ஆகி, அதற்கு அநேகம் பேர் ‘அடிக்ட்’ ஆகிறார்கள். இதனால் நாக்குத் தடித்து, பசி மந்தித்துப் போய்விடுகிறது. இப்படி விடக்கூடாது. பார்க்கவே பிடிக்காமல், வாய் நிறைய வெற்றிலைச் சாற்றை வைத்துக் கொண்டு பேசுவது, நம் மேலே அது தெறிப்பது, தங்கள் மேலேயே ஒழுகுவது என்றெல்லாம் பண்ணுவது கௌரவமும் இல்லை; ஆசாரமும் இல்லை. பொடியும் இப்படித்தான். போகிற இடமெல்லாம் [வெற்றிலை] துப்புவதும், [பொடி] சிந்துவதும் ஸிவிக் ஸென்ஸுக்கே [நாகரிகக் குடிமை உணர்வுக்கே] விரோதம்.

கிருஹஸ்தர்கள், முக்யமாக ஸுமங்கலிகள் அளவாக வெற்றிலை போட்டுக் கொள்வதில் தப்பேயில்லை. தாம்பூலம் கொடுத்து உபசரிப்பதே மங்களம் என்று இருக்கிறது. பூஜையிலும் தாம்பூலம் அர்ப்பணம் பண்ண வேண்டும். அது ஸெளபாக்ய சின்னம்; அதோடு ஜீர்ணகாரி, ரத்த சுத்தி. சுண்ணாம்பில் கால்ஷிய ஸத்து இருக்கிறது. இத்தனையிருந்தாலும் அது ஸாத்விகம் இல்லை. அதனால்தான் பிரம்மச்சாரி, ஸந்நியாஸி இருவருக்கும் அது கூடாது என்று வைத்திருக்கிறது. லோக வியவஹாரங்களைக் கவனிக்க வேண்டிய க்ருஹஸ்தர்களுக்கு ராஜஸ குணமும் இருக்கலாமென்றே தாம்பூல தாரணம் அநுமதித்திருக்கிறது. அதற்காக ராஜஸ குணம் மட்டுமே இருக்கும்படியாக ஓயாமல் தாம்பூல சர்வணம் பண்ணக்கூடாது. நல்ல பதார்த்தம், கெட்ட பதார்த்தம் எதுவானாலும் ஓயாமல் தின்னும் பழக்கமாகப் பண்ணிக் கொள்ளக்கூடாது. நம்மை நம் கன்ட்ரோலில் இல்லாமல் பண்ணித் தன் வசப்படுத்திக் கொள்வதாக எந்தப் பதார்த்தத்தையும் விட்டு விடக்கூடாது.

ஸாத்விக ஆஹாரத்தைச் சேர்ந்த தித்திப்புப் பதார்த்தங்கள், நெய் முதலானவை தாமாகவே ஓரளவுக்கு மேல் தின்ன முடியாமல் திகட்டிப் போய்விடுவதாலேயே நமக்கு நன்மை செய்கின்றன!

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is பால் வஸ்த்துக்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  சாந்த லக்ஷ்யம் கெடலாகாது
Next