ஈடுபாடு, சிரத்தை : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

ஈடுபாடு, சிரத்தை இந்த இரண்டும் இரண்டு நேத்ரங்கள் மாதிரி. சிரத்தை என்றால் ரொம்பவும் அக்கறையாக, கவனமாகச் செய்வது என்று பொதுவில் அர்த்தம் செய்து கொள்கிறோம். கவனக்குறைவாக இருந்தால் ‘அசிரத்தையாயிருக்கிறான்’ என்கிறோம். சிரத்தை என்றால் நம்பிக்கை, Faith என்று முக்யமான அர்த்தம். புத்தி பூர்வமாக நிரூபிக்கக்கூடியவற்றிலும், பிரத்யக்ஷமாகப் பலனைத் தருவதிலும் ‘நம்பிக்கை’ என்ற ஒன்றுக்கு இடமில்லை. இவற்றின் கீழ்வராத அத்ருஷ்ட, ஆத்மார்த்த விஷயங்களில் பெரியோர்கள் – மெய்பொருளைக் கண்டுணர்ந்த முன்னோர்கள் – ஏற்படுத்திக் கொடுத்திருக்கிற ஆசார, அநுஷ்டானங்களில் நம்பிக்கை ரொம்பவும் அவசியம். பகவான் “ச்ரத்தாவான் லபதே ஞானம்” – சிரத்தையுள்ளவன்தான் ஆத்மாவைப் பற்றிய அறிவு பெறுகிறான் – என்கிறார் [கீதை 4.39]. ‘ச்ராத்தம்’ (‘ச்ரார்த்தம்’ என்று தப்பாக ‘ர்’ போட்டுச் சொல்லுகிறார்களே, அது) என்றாலே ச்ரத்தையோடு செய்யப்படுவது என்றுதான் அர்த்தம். காரணம் கேட்காமல், நம்பிச் செய்ய வேண்டும். ஸயன்ஸ்படி ஸரியாய் வருகிறது, மனோதத்வத்துக்கு ஏற்றதாயிருக்கிறது. ஆரோக்யத்துக்கு உகந்ததாயிருக்கிறது என்றெல்லாம் காரணம் பார்த்துக் கொண்டு ஆசாரங்களை ஏற்பது என்றால், அநேக ஆசாரங்களுக்கு இன்று நாமுள்ள அறிவு வளர்ச்சி நிலையில் இப்படிப்பட்ட காரணங்களைக் காட்ட முடியாமலும் இருக்கும். அதனால் அவற்றைத் தள்ளி விடுவது என்றால் ஒரே அநாசாரத்தில்தான் முடியும். சிலதைப் பண்ணுவது, சிலதை விடுவது என்பது பாதிக் கிணறு தாண்டுகிற கதைதான்.

இது அவநம்பிக்கை யுகம் என்றே வர்ணிக்கிறார்கள். “தெரியாதவற்றை எப்படி நம்புவது?” என்று கேட்கிறார்கள். நமக்கு நேராகத் தெரியாத அதி ஸூக்ஷ்மமான விஞ்ஞான தத்வங்களையும் ரிஷிகள் எப்படியோ தெரிந்து வைத்துக்கொண்டு அநேக ஆசாரங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்று பார்த்தோமல்லவா? இப்போது நாம் வைத்திருக்கும் லாபரட்டரி, கருவிகள் ஆகியன இல்லாமலே இப்படித் தெரிந்து கொண்டிருந்தவர்கள்தான், அதாவது மர்மமானதையெல்லாம் தெரிந்து கொள்ள அதீந்திரிய சக்தி பெற்றிருந்தவர்களேதான், நம் விஞ்ஞானத்திலே வராத ஆசாரங்களையும் சொல்லியிருக்கிறார்களென்பதால், இது நிஜமாயிருப்பதால் அதுவும் நிஜமாகத்தான் இருக்கும் என்று நம்பலாம். ஆசாரங்களில் ‘த்ருஷ்ட’த்தில் தெரிகிற உண்மையே ‘அத்ருஷ்ட’மும் உண்மையாய்த் தானிருக்க வேண்டுமென்பதற்கு ஸாக்ஷியாயிருக்கிறது.

நம்புவதற்கு இன்னொரு காரணம் சொல்கிறேன். ஸத்யமே பரம தர்மமென்று அத்தனை சாஸ்திரங்களும் சொல்கின்றன. பொய் சொல்வது மஹா பாபம் என்றும் அதற்காக எப்பேர்ப்பட்ட நரகாவஸ்தைகள் பட்டாக வேண்டுமென்றும் சாஸ்திரகாரர்கள் நிறையச் சொல்லியிருக்கிறார்கள். இப்படிச் சொன்னவர்களே, பொய்யாக ‘இது பாவம், இது புண்யம்’ என்று அத்ருஷ்டம் என்ற பெயரில் எதையாவது சொல்லித் தப்பித்துக் கொண்டுவிடலாம் என்று விதிகளை எழுதிவைத்திருக்க முடியுமா? தங்களுக்கு ஏதோ ஒரு Grace-ல் reveal-ஆகியிருந்தாலொழிய [தெய்வ கிருபையில் வெளிப்பட்டிருந்தாலொழிய] அல்லது intuition-ஆக ஹ்ருதயத்திலிருந்து ஸத்யம் ஸ்புரித்திருந்தாலொழிய, “ஸத்யான் நாஸ்தி பரோ தர்ம:” (ஸத்யத்துக்கு மேலே எந்த தர்மமுமில்லை) என்று சொல்கிற சாஸ்திரகாரர்கள் எந்த ஒரு விதியையும் செய்திருக்கமாட்டார்கள்.

என்னென்னமோ கொஞ்சங்கூட புரியாததாகவும் அநேக சாஸ்திர விதிகள் இருக்கிறதே என்று யோசிக்கக் கூடாது. இந்தப் புஸ்தகத்தை ஒரு புரட்டுப் புரட்டினால் எனக்கே கொஞ்சம் தலை சுற்றுகிற மாதிரிதான் இருக்கிறது!1. இதவ்வளவும் செய்கிறது ஸாத்யமா என்று இருக்கிறது. நான் மடாதிபதி. ஆசாரங்களை அநுஷ்டிக்க எனக்கு வசதி நிறைய உண்டு. நீங்களே [வசதி] செய்து கொடுக்கிறீர்கள். எனக்கே முடியுமா என்று இருந்தால், இந்தக் காலத்தில், டவுன் லைஃபில் மாட்டிக் கொண்டிருக்கிற உங்களைப் பற்றி என்ன சொல்வது? ஆனாலும் அவரவரும் முடிந்த மட்டும், utmost பிரயத்னம் பண்ணனும்; பாக்கியும் முடியவில்லையே என்று மனஸாரப் பச்சாத்தாபப் படணும்; ‘ரிடயர்’ ஆன விட்டாவது இன்னம் எவ்வளவு ஜாஸ்தி பண்ண முடியுமோ அவ்வளவு பண்ணனும் என்று த்ருட ஸங்கல்பம், சபதமே பண்ணிக் கொள்ள வேண்டும். அப்போது பரமேச்வரன் நாம் ஸின்ஸியராகக் கார்யத்தில் அநுஷ்டிக்கிற ஆசாரங்களை மட்டுமில்லாமல், மனஸில் ஸின்ஸியராக நினைக்கிறதையும், மொத்தத்தில் சாஸ்திரத்தில் நமக்குள்ள சிரத்தையையும் பார்த்து நம்மைக் கை தூக்கி விடுவான்.


1. தர்ம சாஸ்திர நூல் எதையோ புரட்டியபடி ஸ்ரீ பெரியவர்கள் இதையும், இனித் தொடர்ந்து வருவதையும் சொல்கிறார்கள். நூலின் பெயர் தெரியவில்லை.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is ஸ்நான வகைகள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  பட்டுத் துணி
Next