விதி விலக்கில்லாமையின் விளைவுகள் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

சாஸ்திர விதிகள் சிலவற்றுக்கு சாஸ்திரத்திலேயே விலக்குத் தந்திருப்பதும் மநுஷ்ய மனோபாவத்தைப் புரிந்து கொண்டு, நீக்குப்போக்கோடு அதை அபிவிருத்தி அடையப்பண்ணுவதற்குத்தான். ஸத்யம், அஹிம்ஸை மாதிரியான பெரிய தர்மங்களை, கொள்கைகளைக்கூட அதைவிடப் பெரிய ஸத்யமான ஒன்றுக்காக, ஒரு நிர்பந்தத்தில் கொஞ்சம் விட்டுக் கொடுக்கவும் நம் சாஸ்திரம் இடம் தருகிறது. ‘விட்டு கொடுப்பது’ என்று வெளியிலே தோன்றினாலும், உள்ளே பார்த்தால் இதுதான் உண்மையில் தர்மத்தின் ‘லெட்டரை ‘மட்டுமில்லாமல் ‘ஸ்பிரிட்’டைக் காப்பாற்றிக் கொடுப்பது என்று தெரியும். திருஷ்டாந்தமாக ஒரு அபலை ஸ்த்ரீயைப் போக்கிரிகளிடமிருந்து ரக்ஷிக்க வேண்டியபோது ‘வாய் ஸத்ய’த்துக்கு ஒரு ‘அமென்ட்மென்ட்’ போட்டு

“ஸத்யம் பூதஹிதம்”

– எது ஜீவ ஜந்துக்களுக்கு நல்லது பண்ணுமோ அதுதான் ஸத்யம் – என்று அதன் ஸ்பிரிட்டைக் காட்டி சாஸ்திரமாக எழுதி வைத்தார்கள்.

எதற்கும் ‘எக்ஸெப்ஷன்’ உண்டு. இதைப் பார்க்காமல் ரொம்பவும் தீவிரமாக ஒரு ரூலை ஒருவர் சொன்னால் அப்புறம் அவரே அதற்கு மாறாகப் பண்ண வேண்டிய எக்ஸெப்ஷனலான ஸந்தர்ப்பம் வருகிறபோது என்னவோ போலாகிறது.

காந்தி ஒரேயடியாக அஹிம்ஸை, அஹிம்ஸை என்றார். அவரே ஒரு ஸமயம் ஒரு கன்றுக்குட்டி உயிர் போகாமல் ரொம்பவும் அவஸ்தைப்பட்டபோது அதற்கு ஒரு ‘பாய்ஸன்’ மருந்தைக் கொடுத்து உயிர் போகும்படிப் பண்ணினார். அவர் ஏற்கெனவே தீவிர அஹிம்ஸாவாதம் பண்ணியதாலேயே அப்போது பல பேர், “அப்பேர்ப்பட்டவர் இப்படி கோஹத்தி பண்ணிவிட்டாரே!” என்று கண்டனம் தெரிவித்தார்கள்.

இன்னொன்று கூடப் பண்ணினார். ஒரு ஸமயம் தேசத்திலே பெரிய பஞ்சம் வந்தது. அப்போது எல்லா மாகாணத்துப் பிரதிநிதிகளும் அப்போதிருந்த டில்லி ராஜாங்கத்திடம் ஜாஸ்தி உணவுப்பண்ட உதவி வேண்டுமென்று ஒரு ஆலோசனைக் கூட்டத்தில் கேட்டுக் கொண்டார்கள். காந்தியும் அங்கே ‘அட்வைஸ் ‘பண்ணுவதற்காக இருந்தார். அப்போது அவர் சென்னை மாகாணத்திலிருந்தவர்களும் இப்படிக் கேட்கிறதைப் பார்த்து, “சுற்றி ஸமுத்ரம் இல்லாத யு.பி.க்காரர்கள், எம்.பி.க்காரர்கள்தான் அழுகிறார்களென்றால், மூன்று ஸமுத்ரங்களும் மூன்று பக்கம் சுற்றிக் கொண்டிருக்கிற, ‘மெட்ராஸ் ஸ்டேட்’டைச் சேர்ந்த நீங்களும் கூடச்சேர்ந்து அழுவதாவது?” என்றாராம்! என்ன அர்த்தமென்றால், “ஸமுத்ரத்தில்தான் நிறைய மத்ஸ்யம் கிடைக்குமே, பிடித்துத் தின்னுங்களேன்!” என்று அர்த்தம்.

அவர் போனவிட்டு [காலமான பிறகு] நேருவானால் “பாகிஸ்தான் ‘அக்ரஷன்’ (ஆக்கிரமிப்பு) செய்தால் நாம் படையெடுப்பதற்கு பாபுவிடமிருந்தே அநுமதி வாங்கி வைத்துக் கொண்டிருக்கிறேன்” என்று சொல்லியிருக்கிறார்!

சாஸ்திர ரூல் டிஸ்க்ரிமினேஷன் செய்கிறது என்று சொல்லிக்கொண்டு எல்லாருக்கும் பொது ரூல் பண்ணினவர்கள் தங்கள் ரூலில் சாஸ்திரம் காட்டுகிற நீக்குப் போக்குக்கூட இல்லாமல் ரொம்பவும் தீவிரமாக ஆரம்பிப்பதையும் கடைசியில் சாஸ்திரம் சொல்கிறபடியே அதிகாரபேதம், ஸந்தர்ப பேதம் பார்த்து அதை இளக்கிக் கொள்ளும்படியாவதையும் பார்க்கிறோம். அல்லது இளக்கிக் கொள்ளாதபோது அந்த ரூலை அவர்களுடைய ‘ஃபாலோயர்’கள் காலக்கிரமத்தில் அடியோடு விட்டுவிடும் படியாகிறது. இவற்றைக் காட்டுவதற்காகவே புத்தரையும் காந்தியையும் சொன்னேன். புத்தர் அவதாரந்தான் காந்தி என்றுகூடச் சொல்கிறார்களே!

எதையும் எல்லாருக்கும் பொதுவாய் வைப்பதற்கில்லை என்பதால் வர்ணாச்ரமப்படி தர்மாசாரங்களை வித்யாஸமாய் வைத்திருக்கிறது. எதையும் எல்லா ஸந்தர்பத்துக்கும் பொதுவாக வைப்பதற்கில்லை என்பதால் அதற்கு விலக்குத் தந்து ‘ஆபத் [து] தர்மம்’, ‘யாத்ரா தர்மம்’ என்றெல்லாமும் சாஸ்திரங்கள் ‘ரிலாக்ஸ்’ பண்ணியிருக்கின்றன. இதெல்லாம் கூடாது என்று நல்ல எண்ணத்தோடேயே மாற்றினாலும் அது நடைமுறையில் ஸரியாய் வருவதில்ல்லையென்பதற்கு திருஷ்டாந்தமாகத் தான் இந்த இரண்டு பேரையும் சொன்னேன். அவர்களைக் குற்றம் சொன்னதாக அர்த்தமில்லை. தனி வாழ்க்கையில் ரொம்ப சுத்தர்களாக இருந்துகொண்டு, நல்ல தியாகிகளாக ஸர்வ ஜன க்ஷேமத்தையே நினைப்பவர்களாக இருந்த இந்த இரண்டுபேர்கூட நம் வைதிக வழிக்கு வித்யாஸமாகச் செய்தபோது அவர்கள் நினைத்தபடி நல்லது நடக்கவில்லை, அவர்களாலேயே அந்தக் கொள்கைகளைத் தீவிரமாக நடத்திக் காட்ட முடியவில்லை என்று நான் எடுத்துக் காட்டினது, இவர்கள் பண்ணினது தப்பா ஸரியா என்று இவர்களை ‘இன்டிவிஜுவலாக’ [தனி மநுஷ்யர்களாக] வைத்து முடிவு செய்வதற்காக இல்லை; அப்படியானால் நான் செய்கிறவை ஸரியா, தப்பா என்றும் சர்ச்சை செய்ய வேண்டிவரும். அதனாலே இங்கே இன்டிவிஜுவலைப் பற்றிப் பேச்சில்லை. அந்த வாதம் வேண்டாம். ‘சாஸ்திரம்’ என்கிறதில் சொல்லியிருக்கிற அதிகார பேதமும், அதையொட்டி ஏற்படுகிற ஆசார அநுஷ்டான பேதமும் ஸரியா தப்பா என்று எடைபோட்டு, அதை மாற்றி வேறு விதமாய் பண்ணப்போனால் கடைசியில் இப்படிப் புதிசாகப் பண்ணினது பூர்ணமாக நடைமுறைக்கு ஸாத்யப்படாமல் போவதைத்தான் பார்க்கிறோம் என்று நிதர்சனமாகக் காட்டவே இந்த இரண்டு பேர் செய்யததை ஒரு எக்ஸாம்பிளாகக் காட்டினேன். நல்ல அறிவும், அன்பு மனஸும், ஸ்வய நல நோக்கமில்லாத குணமும் கொண்ட இரண்டு பேர் செய்ததே ஸரிப்பட்டு வரவில்லை என்பது சாஸ்திரத்தின் பெருமையை ‘அன்டர்லைன்’ பண்ணிக் காட்டுவதற்காகச் சொன்னதேயன்றி, அவர்களுக்குக் குறைவு சொல்வதற்காக அல்ல. வேறு யாரைச் சொல்லியிருந்தாலும் இவர்களைப் போல எல்லாருக்கும் தெரிந்தவர்களாக இருக்க முடியாது என்பதால் இந்த இரண்டு பேரைச் சொன்னேன்.

பார்ஸிகளையும், ஜைனர்களையும் போலச் சின்ன கம்யூனிடிகளாக இருந்தால் ஒரே ரூலை அதைச் சேர்ந்த எல்லாருக்கும் பொதுவாக வைத்தாலும் அதை அத்தனை பேரும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு நடக்க முடிவதைப் பார்க்கிறோம். பௌத்தத்தை விட ஜைனர்களுக்கு அஹிம்ஸையில் இன்னும் ‘ஸ்ட்ரிக்ட்’ ரூல் இருந்தாலும் அவர்கள் அதிலிருந்து விலகவில்லையென்று பார்க்கிறோம். இதற்கு வித்யாஸமாக, ஏராளமான ஜன ஸமூஹத்தைப் பெற்றிருந்தும் எத்தனையோ ஆயிரம் வருஷங்களாக மற்ற எந்த மதஸ்தரையும் விட உயர்ந்த பண்புகளைக் கொண்டவர்களாக நம்முடைய மதஸ்தர்கள் இருந்து வந்திருக்கிறார்களென்றால் அதற்குக் காரணம் அதில் ஐடியல் ரூல், ஸாமான்ய ஜனங்களுக்கு ஸாத்யமான நடைமுறை வழி ஆகிய இரண்டிற்கும் இடம் கொடுத்து, ஐடியலைச் சிலருக்கு மட்டும் ‘கம்பல்ஸரி’யாக்கி அதன் மூலமே அது மற்றவர்களையும் ‘இன்ஃப்ளுயென்ஸ்’ பண்ணி அவர்களிடமும் கணிசமான அளவு ‘ஆப்ஷன’லாகப் பரவும்படி நம் சாஸ்திரங்கள் வசதி பண்ணிக் கொடுத்திருப்பதுதான்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is அதிகார பேதமின்மையின் தோஷங்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  ஆசாரத்தில் நீக்குப்போக்கு
Next