ஆசாரம் என்பதன் இலக்கணம் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

ஸமயாசாரம், மதாசாரம் என்று சொல்லும்போது ஒரு மதத்தின் நெறி முழுவதையும் “ஆசாரம்” என்பது குறிப்பிடுகிறது. ஆனால் பொதுவிலே ஒருத்தர் ஆசாரமாயிருக்கிறார். என்றால், மடி-விழுப்பு என்று இரண்டு சொல்லிக் கொண்டிருக்கிறோமே (வார்த்தையிலாவது இன்றைக்கு வரையில் இருக்கிற ‘மடி’ அடியோடு மறந்து போய்விடக் கூடாதென்றுதான் இந்த உபந்நியாஸமெல்லாம் பண்ணுவது) அதிலே மடியாயிருப்பது என்றுதான் வைத்துக் கொண்டிருக்கிறோம். மடி, விழுப்பு பார்க்கிறதுதான் ஆசாரம்; சாஸ்திரத்தில் சொன்ன பிரகாரம் ஒருத்தர் சிகை வைத்துக் கொண்டிருக்கிறார். கச்சம் போட்டு வேஷ்டி கட்டிக் கொண்டிருக்கிறார். புண்ட்ர தாரணம் [நெற்றிக்கிடுதல்] பண்ணிக் கொண்டிருக்கிறார், நாள் நக்ஷத்ரம் பார்த்துக் காரியம் பண்ணுகிறார், க்ளப்புக்கு [ஹோட்டலுக்கு]ப் போவதில்லை, எவர்ஸில்வரில் சாப்பிடுவதில்லை என்றால் அவரை ஆசாரமாயிருக்கிறார், orthodox என்கிறோம்.

இப்படியாக ஒரு மதத்தின் எல்லா நெறிகளுமே அதன் ஆசாரந்தானென்றாலும், வெளி வாழ்க்கையில் அதன் கட்டுப்பாட்டுப்படி நடந்து கொண்டு, அதில் சொல்லியிருக்கிற வெளியடையாளங்களான சின்னங்கள் முதலியவற்றை மேற்கொண்டு நடந்து காட்டுவதே குறிப்பாக ஆசாரம், ஆசாரம் என்று வழங்குகிறது.

ஆனால் ஆசாரம் என்பது முழுக்க வெளி விஷயந்தான் என்று நினைத்து விட்டால் அது தப்பு. வெளி ஸமாசாரங்களாலேயே உள் ஸமாசாரங்களை, உள்ளத்தை உயர்த்திக் கொள்ள உதவுகிறதுதான் ஆசாரம்*. அதோடுகூட நேராக உள்ளத்தின் ஸமாசாரங்களையும், வாழ்க்கை நெறிகளையுங்கூட ஆசார சாஸ்திரங்களிலே சொல்லியிருக்கிறது.

‘ஆசாரம்’ என்பதைத் தமிழிலே நேராக ‘ஒழுக்கம்’ என்று சொல்லிவிடலாம். “உயிரினும் ஓம்பப்படும்” என்று திருவள்ளுவர் எதைச் சொல்லியிருக்கிறாரோ, அப்படி நம் பிராணனைவிட உசந்ததாகக் கருதி எதை ரக்ஷிக்க வேண்டுமோ அந்த தர்ம வழியே ஆசாரம். தர்மம் என்கிறது அகம், புறம் எல்லாவற்றிலும் எல்லா அம்சங்களையும் தழுவுகிற விஷயமல்லவா?

இங்கிலீஷில் ‘ character’ என்பதாக ஒருத்தனின் உள் ஸமாசாரமான குணத்தையும், ‘conduct’ என்று அவனுடைய வெளி ஸமாசாரமான நடத்தையையும் சொல்கிறார்கள். ஆசாரம் என்பதும் ஒழுக்கம் என்பதும் காரெக்டர், கான்டக்ட் ஆகிய இரண்டையும் ஒன்றாக்கிச் சேர்த்துக் கொடுப்பது. இது வெறுமனே morality,ethics என்று சொல்கிற இஹ வாழ்க்கைக்கான நன்னெறிகளாக மட்டுமில்லாமல் பர லோகத்துக்கும் உதவுவதான காரியங்களை, ஸம்ஸ்காரங்களை, சின்னங்களை, விதி நிஷேதங்களை (இன்ன செய்யலாம், இன்ன செய்யக்கூடாது என்பவற்றை)யும் சொல்கிறது.

புற விஷயம் மாதிரியிருந்தாலும் அக விஷயத்துக்கும் உபகாரம் பண்ணும்படியாகவும், இம்மைக்கு மட்டுமில்லாமல் மறுமைக்கும் உதவுவதாகவும் நம்முடைய ஆன்றோர்கள் வகுத்துத் தந்திருக்கிற முறையே ‘ஆசாரம்’.


* “தெய்வத்தின் குரல்” முதற்பகுதியிலுள்ள ‘உள்ளும் புறமும்‘, ‘சடங்குகள்‘ என்ற உரைகளும், இரண்டாம் பகுதியிலுள்ள ‘ ‘ என்ற உரையில் ‘சின்னங்கள்‘ என்ற பிரிவும் பார்க்கவும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is மதாபிமானிகளின் கடமை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  புறத்திலிருந்து அகத்துக்கு
Next