ஒற்றையடிப் பாதை : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

இன்னார், இன்ன காலத்தில் ஏற்படுத்தினார்கள் என்றே தெரியாமல் நம்முடைய ஆசாரங்கள் வந்திருக்கின்றன. ராமாநுஜர், மத்வர், சைதன்யர் என்று நமக்குப் பெயர் தெரிந்தவர்கள் ஓரொரு காலத்தில் ஏற்படுத்தின ஸம்பிரதாயத்திலிருப்பவர்களும் பின்பற்றுகிற ஆசாரங்களில் பெரும்பாலானவை இப்படிக் காலம் தெரியாததாக, கர்த்தா தெரியாதவராகத்தான் இருக்கின்றன. மற்ற மதங்களைப் பற்றித் திட்டவட்டமாக இன்னார் இன்ன காலத்தில் ஏற்படுத்தின ஆசாரம் என்று தெரிவதுபோல நமக்கு இல்லை.

அந்த மதங்கள் இந்த இன்ஜினீயர் இந்த வருஷத்திலே போட்டார் என்று சொல்லக்கூடிய தார் ரோடுகள் மாதிரியிருக்கின்றனவென்றால், நம் மதம்?

இது ஒற்றையடிப் பாதை மாதிரியிருக்கிறது! ஒற்றையடிப் பாதையை யார் எப்போது போட்டார்கள்? சொல்லத் தெரியவில்லை. மேல் பார்வைக்குத் தார் ரோட் உசத்தியாயிருக்கிறது. ஆனால் யோசனை பண்ணிப் பார்த்தால் தார் ரோடைவிட ஒற்றையடிப்பாதைதான் பல விஷயங்களில் மேல் என்று தெரிகிறது. தார் ரோடும் கொண்டு விடாத இடத்துக்கு இந்த ஒற்றையடிப் பாதை தானே கொண்டு சேர்க்கிறது? ஜனங்கள் நடக்க நடக்கத் தார் ரோட் ரிப்பேராகி வருஷா வருஷம் மராமத்து பண்ண வேண்டியிருக்கிறது. ஒற்றையடிப் பாதையோ நடக்க நடக்கத்தான் இன்னம் நன்றாக ஆகிறது. ரிப்பேர் என்ற பேச்சே கிடையாது. அதேபோல ஆக்ஸிடென்டும் தார் ரோட்டில் தானேயன்றி, ஒற்றையடிப்பாதையில் உண்டோ? மேலே வழியில்லை என்று blind alley -யாகச் சிலர் தார் ரோட் மொட்டையாக முடிகிற மாதிரி எந்த ஒற்றையடிப் பாதையாவது முடியுமா? நன்றாகத் திறந்து விட்ட மார்க்கம், கூட்டங், கூட்டமாகப் பூர்விகர்கள் போயே புல் பூண்டு இல்லாமல் பாலிஷ் ஆன மார்க்கம், ஆக்ஸிடென்டே இல்லாத மார்க்கம், தார் ரோட் மாதிரிப் பார்க்கப் பகட்டு இல்லாவிட்டாலும், பரம ஸெளகர்யமாக, நிதானமாகக் கால் நடையிலேயே பரமாத்மாவிடம் கொண்டு விடுகிற மார்க்கம் – இப்படிப்பட்ட ஒற்றையடிப் பாதைதான் நம்முடைய பூர்வாசாரம். ‘தார் ரோடானால் கார் ஸவாரி பண்ணிச் சுருக்க [விரைவில்] போய்ச் சேர்ந்து விடாலமே’ என்றால், ஒற்றையடிப் பாதையிலோ அப்படிச் சுற்றிக் கொண்டு போகாததால், குறுக்கு வழியில் நடந்தே, அதே நேரத்தில் ஆக்ஸிடென்ட் எதுவுமில்லாமல் போய்ச் சேர்ந்து விடலாம். ரோடே போட முடியாத இடங்களில் – காட்டிலே, மலையிலே கூட – இதுதான் மார்க்கமாயிருக்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is அன்று கண்ட அபிவிருத்தியும் இன்று காணும் சீரழிவும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  மனநெறி இயற்கை நெறியை ஆள்வது
Next