அநாதைப் பிரேதம் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

உறவுக்காரர்கள் என்றால் அபர கார்யம் ஏதோ ஒரு தினுஸில் செய்துவிடுகிறோம். செய்வதில் குறையிருக்கலாம். ஆனால் அடியோடு செய்யாமலே விடுவதில்லை அமாவாஸைத் தர்ப்பணம், ச்ராத்தம் முதலியவற்றை நிறுத்திவிட்டவர்களாக இருந்தாலும், ஹிந்துக்களாகப் பிறந்தவர்களில் நாஸ்திகர்களைத் தவிர எவரும் பந்துக்களுக்கு ப்ரேத ஸம்ஸ்காரம் (அவரவர் குலாசாரப்படி தஹனமோ, அடக்கமோ) செய்ய மட்டும் தவறுவதில்லை.

ஸரி, உறவுக்காரர்கள் இல்லாமல் நிராதரவாக இருக்கிறவர்களின், இறக்கிறவர்களின் கதி என்ன? அநாதைகள் செத்துப்போகும்போது, அவர்களுடைய சரீரம் என்கிற பகவான் படைத்த மெஷினின் கதி என்னவாகிறது? ஸமூஹமேதான் இவர்களுடைய ப்ரேத ஸம்ஸ்காரத்துக்கு ஏற்பாடு பண்ணவேண்டும் என்பது சாஸ்த்ரம்.

இவ்விஷயத்தில் நம் ஹிந்து மதத்தின் அவல நிலைமை எனக்கு வேதனையாக இருக்கிறது. இப்போது நான் சொல்லிச் சொல்லிக் கொஞ்சம் வேதனை தணியும்படியான ஏற்பாடுகள் அங்கங்கே நடந்தாலும், இது போதாது. முன்னெல்லாம் எனக்கு இன்னமும் ரொம்ப வேதனையாக இருந்திருக்கிறது. அப்போதெல்லாம் ஆஸ்பத்திரியிலோ, ஜெயிலிலோ அல்லது நடுத்தெரு ஒன்றிலோ ஒரு ஹிந்து அநாதை செத்துப்போனான் என்றால், எடுத்து ஸம்ஸ்காரம் செய்ய எந்த ஏற்பாடும் இல்லாமல் இருந்தது. இப்போதுகூட அநேக ஊர்களில் இப்படித்தான் இருக்கிறது. ஆஸ்பத்திரிக்காரர்களே போஸ்ட் மார்டம் பண்ணி, ஆராய்ச்சிக்காகப் பண்ண வேண்டியதைப் பண்ணிப் புதைத்துவிடுவது, முனிஸிபாலிடி அல்லது பஞ்சாயத்துக்காரர்கள் கொண்டுபோய்ப் புதைத்துவிடுவது என்றுதான் நடந்துவருகிறது. சாஸ்த்ர ப்ரகாரமான ஸம்ஸ்காரமில்லாமல் இப்படி ஒரு சரீரத்தை விடுவது நம் ஸமூஹத்துக்கே களங்கம், பாபம்.

இதர மதஸ்தர்கள் இந்த விஷயத்தில் தக்க ஏற்பாடுகள் பண்ணியிருக்கிறார்கள். அவர்களுடைய சாஸ்த்ரப்படி பகவானிடம் ஒரு சரீரத்தை ஒப்பிக்காமல் விடுகிற தோஷம் அந்த ஸமூஹங்களுக்கு வருவதேயில்லை.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is ப்ரேத ஸம்ஸ்காரம்:சரீரத்தின் சிறப்பு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  ஹிந்து ஸமூஹத்தின் தோஷம்
Next