தனக்குத் மிஞ்சித் தர்மம் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

“தனக்குத் மிஞ்சித் தர்மம்” என்பதற்கு நான் புது வியாக்யானம் செய்கிறேன்: எது உயிர் வாழ்வதற்கு அத்யாவச்யமோ, எதெல்லாம் இல்லாவிட்டால் உயிர் வாழ முடியாதோ, அந்த bare necessities-க்குத் தேவயானதைத் தான் ‘தனக்கு’ என்று இங்கே சொல்லியிருப்பதாகப் புரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், ‘தனக்கு’ என்று சொல்லிக்கொண்டு, ஆடம்பரச் செலவுகள் பண்ணிக் கொண்டே போய் எத்தனை வருமானம் வந்தாலும் தானம் பண்ண ஒன்றுமே இல்லாமல் ஆக்கிக் கொள்வதாகத்தான் முடியும். ஸொந்தச் செலவுகளை அவசியத்திற்கு அதிகமாக எவரும் வைத்துக்கொள்ளாவிட்டால்தான் தனக்கு மிஞ்சிக் கையில் தர்மத்துக்குப் பணமே இருக்கும். முடிவில்லாமல் தனக்கென்று ஆடம்பர போக்யங்களை (லக்ஷரிகளை)ப் பெருக்கிக் கொண்டே போய்விட்டு, ”தனக்கு மிஞ்சித் தர்மம் பண்ண எதுவுமே இல்லை” என்று கைவிரித்தால் அது நியாயமில்லை. ஆனதால், தனக்கென்று எவ்வளவு குறைவாகச் செலவழிக்க முடியுமோ, அப்படி எளிமையாக வாழ்ந்து, மிச்சம் பிடித்து, அதைத் தர்மத்துக்குச் செலவழிப்பதுதான் ”தனக்கு மிஞ்சித் தர்மம்”. ”தர்மம் பண்ணியே ஆகவேண்டுமே! வேதத்தில் ‘தர்மம் சர’ என்றும், படிப்பு ஆரம்பத்திலேயே அவ்வை ‘அறம் செய விரும்பு’ என்றும் சொல்லியிருப்பதைச் செய்தேயாக வேண்டுமே! ஆனதால், நமக்கு வரும்படி எவ்வளவு குறைச்சலாயிருந்தாலும் அதற்குள் தர்மம் பண்ணும்படியாகவும் செலவைக் கட்டுப்படுத்திக்கொண்டு ‘தனக்கு மிஞ்சும்’ படிப் பண்ண வேண்டும்” என்றே இந்த வசனத்தை அர்த்தம் பண்ணிக்கொள்ள வேண்டும்* அப்படிச் செய்தால் எவனுமே தர்மத்துக்காகச் சேமித்துத்தான் ஆகவேண்டும் என்றாகும். அதாவது, எவனுமே கடன்படமாட்டான்! இது ஒரு பெரிய ஸ்வய உபகாரம்!

இப்போது ஸர்க்காரே கடன் வாங்குவதாக ஆகிவிட்டிருக்கிறது! அதே வழியில் வேண்டாத வஸ்துக்களையெல்லாம் ஜனங்களும் அத்யாவச்யமாக்கிக் கொண்டால் எல்லாரும் கடனாளியாக வேண்டியதுதான். கடன் வாங்காமலிருப்பதே பெரிய உபகாரம். ஏனென்றால் நாம் கடன் வாங்கிச் செலவழிக்கிறபோது, நாம் தர்மம் பண்ண முடியாது என்பதோடு மற்றவர்களையும் கடன் வாங்கி டாம்பீகம் செய்யத் தூண்டுகிறோம். பிறத்தியாருக்கும் ஸாத்யமில்லாத ஆசைகளைக் கிளப்பிவிடுகிற விதத்தில் எவனொருத்தனும் டாம்பீகமாக வாழ்கிறதுதான் பெரிய ஸமூஹ த்ரோஹமான கார்யம். அநாதியான நம் சாஸ்த்ரங்களிலிருந்து நேற்று காந்தி வரையில் சொல்லி வந்த எளிய வாழ்க்கையை (simple living) வசதியுள்ளவர்களும் மேற்கொண்டால் எந்தக் கம்யூனிஸமும், வர்க்கப் போராட்டமும் வரவே வராது. எளிய வாழ்க்கையால் இவன் நிறைய மிச்சம் பிடித்து தர்மமும் பரோபகாரமும் செய்வது ஒரு பக்கம்; இதைவிட முக்யமாக மற்றவர்களுக்கு ஆசை அஸூயை, கடன் இவற்றை ஏற்படுத்தாமல் இருக்கிறானே, இதுதான் பெரிய உபகாரம். ‘வரவே சிறுத்து, செலவே பெருகினால் அது திருடு’ என்றே ஆன்றோர் மொழி இருக்கிறது. கடன் வாங்கின பணம் இன்னொருத்தனுடையதுதானே? அந்தப் பணம் தனக்கு வருமா, வருமா என்று இவன் திருப்பிக் கொடுக்கிற வரையில் அவன் திருட்டுக் கொடுத்துவிட்டது போல அவஸ்தைப் பட்டுக் கொண்டுதானே இருப்பான்? அதனால்தான் இதைத் திருடு என்றே சொல்லியிருக்கிறது. ”கடன் பட்டார் நெஞ்சம்” மட்டுமில்லாமல் ”கடன் கொடுத்தார் நெஞ்ச”மும் கலங்கும்படியாக இப்படி இரண்டு சாராருக்கும் அபகாரம் பண்ணுகிற இரவல் பழக்கத்தை விடுவதே பெரிய உபகாரந்தான்.


* இதே வசனத்திற்கு வேறோரு விதமான விளக்கம் ‘சிக்கனமும் பரோபகாரம்’ என்ற உரையில் ‘தனக்கு மிஞ்சி‘ என்ற பிரிவில் காண்க.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is பதி-பத்தினி ஒத்துழைப்பு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  வரதக்ஷிணை பெரும் கொடுமை
Next