உடலுழைப்பாலேயே ஆண்மை : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

சரீர உழைப்பால் தேஹ சக்தியை விருத்தி செய்து கொண்டு பௌருஷம் பெறுவதே மனஸின் பௌருஷத்துக்கும் காரணமாக ஆகும். இப்போது பேப்பரைப் படித்து விட்டுக் காரஸாரமாக வாய் வார்த்தையில் அக்ரமங்களைக் கண்டிக்கிறோமே தவிர, நிஜமான ஆண்மையோடு நம் தர்மத்தைக் காப்பாற்றுவதற்காக உயிரை வேண்டுமானாலும் கொடுப்பது என்று கார்யத்தில் இறங்குகிற தீரம் போய் விட்டிருக்கிறது. இப்படி, ஒரு பக்கம் ஸ்த்ரீகள் புருஷர்களாகிக் கொண்டு வரும்போதே இன்னொரு பக்கம் புருஷர்களுக்கு ஸ்த்ரீத்வம் விருத்தியாகி வருகிறது!

நல்ல ஸத் விஷயங்களில் பிடிமானம், படிப்பு, பயிற்சி, பக்தி, பூஜை, த்யானம் உள்ளவர்களைத் தவிர மற்ற பெரும்பாலாரின் மனஸு கெட்டதுகளில் போகாமல் தடுப்பதற்குச் சரீர உழைப்புதான் ஸாதனமாகிறது. நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு ஏதோ எழுதுகிறோம், யோசனை பண்ணுகிறோமென்றால் அப்போதும் மனஸ் அது பாட்டுக்கு அவ்வப்போது இதை விட்டுவிட்டு ஓடிக் கொண்டுதானிருக்கும். அதுவே சரீரத்தால் கார்யம் செய்கிறோமென்றால் அப்போது அப்படிப்பட்ட கார்யத்திலேயே மனஸ் அதிகம் ஈடுபட்டுவிடுகிறது. அதனால் கண்ட கண்ட நினைப்புகளுக்கு ஓடாமலிருக்கிறது. அதாவது சரீர உழைப்பால் சித்தம் கெட்டதில் போகவில்லையே தவிர, நல்லதில் ஈடுபட்டு உத்தம அநுபவங்களைப் ‘பாஸிடிவ்’-ஆகப் பெறவில்லைதான். ஆனால் முதலில் இந்த நெகடிவ் ஸ்டெப்பில் அடி வைத்துத் தான் பாஸிடிக்குப் போயாகவேண்டியிருக்கிறது. ஆசார்யாள் அதனால்தான் முதலில் கர்மாநுஷ்டானம், அப்புறம் இதனால் ஏற்படும் சித்தசுத்தியினால் மனஸ் உத்தமமாகவே போகிற பக்தி, அதற்கப்புறம் மனஸே போய்விடுகிற ஞானம் என்று படிவரிசை போட்டுக் கொடுத்தார்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is சரீர உழைப்பும் ஸந்ததியும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  சரீரஸாதனை, ஆத்ம ஸாதனை இரண்டும் வேண்டும்
Next