பெண்கள் உத்தியோகம் பார்ப்பது : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

அப்புறம், கல்யாணமும் ஆகாமல் வெறுமே வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கிற பெண், படித்து வேலைக்குப் போய் இரண்டு காசுதான் கொண்டு வரட்டுமே, கல்யாணச் செலவுக்கும் அது உதவுமே என்கிற எண்ணத்தில் பெண்களை உத்யோகத்துக்கு அனுப்புகிற வழக்கம் ஆரம்பித்தது. முதலில் வெட்கப்பட்டுக் கொண்டு, அவளே சம்பாதித்துக் கல்யாணம் பண்ணிக் கொள்ளும்படியாக விடுவது தகப்பனாருக்கு ரொம்ப அவமானம் என்ற உணர்ச்சியோடு வேலைக்கு அனுப்பினார்கள். நல்ல யௌவனத்தில் சித்த விகாரங்களைத் தூண்டி விடுகிற சூழ்நிலையில் இப்படிப் பெண்களை விடுகிறோமே என்று அப்போது கொஞ்சம் பயம், கவலை எல்லாமும் இருந்தது. ஆனாலும் போகப் போக என்ன ஆகியிருக்கிறது என்றால் ‘குளிர்’ விட்டு விட்டது. ஜனகர் மாதிரியான ராஜ ரிஷிகளே கன்யாப் பெண்ணைக் கல்யாணமாகாமல் வைத்துக் கொண்டிருப்பது வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கிற மாதிரி என்று பயந்ததாகப் புராணங்களில் பார்க்கிறோம். அந்த விவஸ்தை இப்போது கெட்டுவிட்டது; கட்டுவிட்டுப் போச்சு! அவமானமாக முதலில் நினைத்தே இப்போது நாகரிக முன்னேற்றத்துக்கு அடையாளமாக ஆகிவிட்டிருக்கிறது. பெண்ணைப் பெற்றவர்கள் தங்கள் பொறுப்பு உறைக்காமல், கூச்சம், கவலை, பயம் எல்லாவற்றையும் விட்டுவிட்டுத் தங்கள் பெண் பெரிய உத்தியோகம் பார்க்கிறாள் என்று பெருமைப்படுகிற அளவுக்கு நம் தர்மம் ஹீன ஸ்திதி அடைந்திருக்கிறது. உத்யோகம் பார்க்கிற பெண்கள் என்னிடம் ப்ரமோஷன் ஆவதற்கு அநுக்கிரஹம் கேட்கிறதும், நானும் கண்டும் காணாத மாதிரி இருந்து கொண்டு எல்லோருக்கும் நல்ல சாமியாராகப் பெயர் வாங்கிக்கொள்வதாகவும் ஆகியிருக்கிறது!

சீர்திருத்தக்காரர்கள், ‘ஸ்திரீகள் காலேஜில் படித்து உத்தியோகம் பண்ணுவது பெரிய முன்னேற்றம்; இதனால் முன்னே பண்ணின அநீதி போய்விட்டது’ என்கிறார்கள். முன்னே ஸ்திரீகளுக்கு அநீதி பண்ணவேயில்லை என்பது என் கட்சி. அப்படிப் பண்ணியிருந்தால், புருஷனுக்குத்தான் பண்ணியிருந்தது என்றுகூட வேடிக்கையாகச் சொல்வேன். ஏன்? ஒரு புருஷப் பிரஜையானவன் பிரம்மச்சரிய ஆசிரமம் முடித்ததிலிருந்தே கிருஹஸ்தாச்ரம தர்மங்களை மேற்கொண்டு ஒளபாஸனாதி ஸம்ஸ்காரங்களைப் பண்ணினால்தான் அவனுடைய ஜன்மா கடைத்தேறும். ஸ்திரீப் ப்ரஜைக்கோ புருஷன் பண்ணுகிற ஸம்ஸ்காரங்களுக்கெல்லாம் மேலாக அவனிடம் இவள் மனஸை அர்ப்பணம் பண்ணி பதிவிரதையாயிருப்பதே ஜன்மாவைக் கடைத்தேறச் செய்கிறது. இது பெண்களுக்கு இழைத்த அநீதி என்று சீர்திருத்தக்காரர்கள் சொன்னாலும், எனக்கோ புருஷனைவிட பெண்ணுக்குத் தான் ரொம்பவும் ஸாதகமாக நம் சாஸ்திரத்தில் பண்ணியிருக்கிறது என்று தோன்றுகிறது. ஏனென்றால் அநேக ஸம்ஸ்காரங்களையும், அப்புறம் சிரவண, மனன, நிதித்யாஸனாதிகளையும் பண்ணித்தான் ஒரு புருஷனுக்கு மனோநாசம் உண்டாகி ஆத்ம ஸாக்ஷாத்காரம் ஸித்திக்கிறது. அந்த ஸாதனையின் முடிவான மனோநாசம் ஒரு பதிவிரதைக்குப் பதியிடம் சரணாகதி பண்ணுவதாலேயே ரொம்ப சீக்கிரத்தில் ஈஸியாக ஏற்பட்டு விடுகிறது. பதியின் இஷ்டத்தை அநுஸரிப்பதால் இவளுக்குத் தன்னிஷ்டம், மானாவமானம் எல்லாம் போய் அஹங்காரம் கரைந்து, மனோநாசத்துக்கு ரொம்பவும் கிட்டே போய் விடுகிறாள். மனஸை எங்கேயோ பூர்ணமாக அர்ப்பணம் பண்ணி, சரணாகதி என்று இருந்துவிட்டால் அப்புறம் மனோநாசம் பக்கத்திலேயே தானே? இன்றைக்கு உத்தியோகம் பார்க்கிற பெண்கள் பெறுகிற ப்ரமோஷனுக்கெல்லாம் மேலான ப்ரமோஷன் இப்படி அவளை ஆத்மபரிசுத்தி பண்ணி உச்சத்துக்குத் தூக்குவதுதான். இப்படி பதியிடம் மனஸை அர்ப்பணம் பண்ணியே தான் மஹா பெரிய ரிஷிகளை விட அதிகமான சக்திகளை நம் தேசத்து பதிவிரதா ஸ்திரீகள் பெற்றிருக்கிறார்கள். அவள் பெய் என்றால் மழை பெய்கிறது என்று திருவள்ளுவர் சொல்கிறார். ஸூரியனை உதிக்காதே என்று அவள் சொன்னால் உதிப்பதில்லை! செத்த புருஷனை யமதர்ம ராஜாவிடமிருந்து அவளால் திரும்பவும் வாங்கிக் கொண்டு வர முடிகிறது. எந்த ரிஷிக்கும், தெய்வத்துக்குமே கூட கொடுக்காத உசந்த ஸ்தானத்தை இப்பேர்ப்பட்ட பதிவிரதைகளுக்குத்தான் நம் சாஸ்திரமும் சம்பிரதாயமும் தருகிறது. அவள் தெய்வங்களின் மேலேயே தண்ணியைத் தெளித்து தன் குழந்தைகளாக்கிக் கொண்டு விடுகிறாள் என்று புராணத்தில் பார்க்கிறோம். ஆகையால் பெண் எப்படியிருந்தால் நிஜமான உயர்வைப் பெறுவாளோ, அதைச் சொல்லி அப்படிப்பட்டவளைக் கோவில் எடுத்துக் கும்பிடுகிற நம் சாஸ்திரம் ஒரு நாளும் ஸ்திரீயை மட்டம் தட்டவில்லை. சீர்திருத்தவாதிகள்தான் அவளை அப்படி வளர முடியாதபடி மட்டப்படுத்துகிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது.

ஆக விவாஹம் என்பது புருஷனை சுத்தப்படுத்துகிற அநேக ஸம்ஸ்காரங்களில் ஒன்று என்றால், ஸ்திரீயையோ அத்தனை ஸம்ஸ்காரங்களும் இல்லாமலே அவற்றின் முடிந்த பயனான பூர்ணத்துவத்தைப் பெறப் பண்ணுவதாகும். இப்பேர்ப்பட்ட ஸம்ஸ்காரத்தின் ஸாரத்தை விட்டுச் சக்கையாக ஒப்புக்கு ஏதோ இப்போது நடக்கிறது. விவாஹம் என்ற ஸம்ஸ்காரமும் கிருஹஸ்தாச்ரமும் லாவண்யம், வீர்யம், இந்திரிய ஸெளக்யம் இவற்றை மட்டும் குறித்த விஷயமல்ல என்பதையும், ஜன்மா கடைத்தேற வழியாகவே அது வகுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் புரிந்து கொண்டால் சாஸ்திரம் சொல்லியிருப்பதே சரி என்ற அறிவு உண்டாகும்.

பெண்கள் உத்தியோகம் பார்ப்பதால் பொருளாதார ரீதியிலேயே உண்டாகியிருக்கிற ஒரு அனர்த்தத்தை யாரும் கவனித்ததாக தெரியவில்லை. Employment problem [வேலையின்மைப் பிரச்சனை] -ஐ தான் சொல்கிறேன். சில வருஷங்களுக்கு முந்தி ‘கலியாணமாகிற வரையில் பெண் வேலைப் பார்க்கட்டும்; இதனால் அவள் கல்யாணமாகவில்லையே என்பதை நினைத்து நினைத்து அழுது கொண்டு வீட்டோடு இருக்காமல் அவளுக்கு ஒரு போக்காக இருக்கும். அதோடுகூட, பணசம்பந்தமானதாகப் பண்ணப்பட்டுவிட்ட கல்யாணத்தில் வரதக்ஷிணை, மற்ற செலவுகளுக்கு அவளுடைய சம்பாத்தியத்திலிருந்தே மிச்சம் பிடித்துச் சேமிக்கலாம்’ என்ற எண்ணத்தில் ஒரு பெண்ணை விவாஹம் வரையில் வேலைக்கு விடுவதாகவும், அப்புறம் நிறுத்தி விடுவதாகவும் இருந்தது. புக்ககத்துக்காரர்களும் புருஷனும் அந்தப்பெண் கல்யாணத்துக்குப் பிறகு வேலைக்குப் போவதை நிஷித்தமாக [இழுக்காக] நினைத்தார்கள். ஆனால் வரவர இந்த பிராம்மண சமூகத்துக்கு இந்த ஒரு நூற்றாண்டாக ஏற்பட்டிருக்கிற பணத்தாசையில் இதுவும் மாறி, இப்போது கல்யாணமான பிற்பாடும் அவள் உத்தியோகத்திற்குப் போவது என்ற வழக்கம் வந்திருக்கிறது. இதனால் சிசு ரக்ஷணை [குழந்தை வளர்ப்பு] முதலான தாய்க் குலத்தின் உயர்ந்த கடமைகள் கெட்டுப்போய், வெள்ளைக்கார தேசங்கள் மாதிரி குடும்பம், பெற்றோர், குழந்தை என்பதெல்லாமே ஹ்ருதயபூர்வமாகக் கட்டுப்பட்டில்லாமல் பிஸினஸ் போல் ஆகியிருப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். எகனாமிக் [பொருளாதார] ரீதியில் இதனால் உண்டாகியிருக்கிற கெடுதலைப் பார்க்கலாம். இப்போது வேலையில்லை, வேலையில்லை என்று லட்சக்கணக்கில் ஆண்கள் திண்டாடுகிறார்கள். அதே சமயம் இன்னொரு பக்கம் பல குடும்பங்களில் புருஷன் உத்தியோகம் பார்ப்பது மட்டும் இல்லாமல் ஸ்திரீயும் வேலைக்குப் போகிறாள். அவன் மட்டில் வேலைக்குப் போய் இவள் வீட்டிலிருந்தால் இவள் பார்க்கிற வேலை உத்யோகமில்லாத ஒரு ஆணுக்கு கிடைக்குமல்லவா? ஆனாலும் தன் பொண்டாட்டியைத் தன் சம்பாத்தியத்துக்குள்ளேயே கட்டும் செட்டுமாக வைத்துக் காப்பாற்றுவதுதான் கௌரவம் என்றில்லாமல் புருஷன் அவளையும் வேலைக்கு விட்டு அவளும்தான் காசு கொண்டு வரட்டுமே என்று இருக்கிறான். முதலில் தாயார் தகப்பனார் மானமில்லாமல் பெண்களை வேலைக்கு விடுகிறார்கள். அப்புறம் புருஷனும் அதையே பண்ணுகிறான். அந்த பெண்ணும் இதை ஒரு பெருமையாகவே நினைக்கிறது. ஆபீஸுக்குப் போய் உத்தியோக புருஷியாக இருந்த பிறகு வீட்டில் அடைபட்டுக் கிடக்கப் பிடிக்க மாட்டேன் என்கிறது. ஸ்வயமாக ஸம்பாதித்தால் புருஷன் தட்டிக் கேட்காமல் தன் இஷ்டப்படி செலவழித்துக் கொள்ளலாமே என்று இருக்கிறது.

வீட்டோடு இருந்தால் அடைபட்டுக் கிடப்பது என்று அர்த்தமேயில்லை. நம்முடைய சாஸ்திரங்கள், புராணங்கள் தாய் பாஷையிலும் ஸம்ஸ்கிருதத்திலும் இருப்பதற்குக் குறைவேயில்லை. அவற்றிலே ஒரு ருசியை ஏற்படுத்திக் கொண்டால் நாளெல்லாம் படித்தாலும் போதாமல் ஜன்மா முழுதும் படித்துக் கொண்டு ஸந்தோஷமாக இருக்கலாம். பல பெண்கள் ஸத்ஸங்கமாகச் சேர்ந்து ஒவ்வொரு வீட்டில் இவற்றைப் படிக்கலாம். கிளப் என்றோ ஸ்தாபனம் என்றோ போர்டு போட்டுக் கொண்டு காரியாலயம் மாதிரி இல்லாமல் வீடுகளிலேயே இதைச் செய்யவேண்டும். மெம்பர், பிரஸிடென்ட் மாதிரிப் பதவிகள் உண்டாகாமல், இவற்றுக்காகப் போட்டிச் சண்டைகள் இல்லாமல் இருக்க வேண்டுமென்பதால் [இப்படிச்] சொல்கிறேன். இதோடுகூட மடம், ஆலயம் முதலியவற்றுக்காக சுத்தமான மஞ்சள் குங்குமம் பண்ணிக் கொடுப்பது, முனை முறியாத அக்ஷதை பொறுக்கிக் கொடுப்பது போன்ற காரியங்களைச் செய்தால் பெரிய சமூகத் தொண்டாகவும் இருக்கும். ஸ்திரீத்வம் [பெண்மை] என்ற உயர்ந்த சரக்கு பறிபோகாமலே இப்படிப் பட்ட ஸத்காரியங்களைப் பண்ணி வந்தால் வீட்டோடு இருப்பது அடைபட்டிருப்பதாக இருக்காது. ஆத்ம ஸ்வதந்திரத்துக்கு வழியாக ஆனந்தமாகவே இருக்கும். ஸ்திரீத்வத்தையும் இழந்து கொண்டு துராசைகளைப் பெருக்கிக் கொண்டு உத்யோகத்திற்குப் போவதைவிட இதுதான் சிரேயஸ். ஸ்வாபாவிகமாகவும் [இயல்பாகவும்] பெண்களுக்கு எடுத்தது இதுவே. வீட்டில் அடைபட்டில்லை என்று ஆபீஸுக்குப் போவதால் எத்தனை தப்புக்களுக்கு இடம் கொடுத்துப் போகிறது? ‘பெண் விடுதலை’ என்று பெரியதாகச் சொன்னாலும் ஆபீஸில் எத்தனை பேருக்கு அடங்கிப் பதில் சொல்லும்படி இருக்கிறது? இப்படி- யிருப்பதில் வாழ்க்கையில்தான் நிம்மதி உண்டா? நிம்மதியாகச் சமைத்துப் போட்டுச் சாப்பிடுவது; குழந்தை குட்டிகளின் வாத்ஸல்யத்தை பூர்ணமாக அநுபவிப்பது என்பதெல்லாம் இந்த ‘விடுதலை’ யில் உண்டா?

சொல்லி என்ன பிரயோஜனம்? அவரவர்க்கும் ஸ்வயநலம் என்று அவரவரும் நினைத்துக் கொண்டிருக்கிற ஒன்று தான் முக்கியமாக இருக்கிறதே தவிர சமூகத்தில் பிறத்தியார் கஷ்டப்பட நாம் காரணமாய் இருக்கக் கூடாது என்ற நியாய உணர்ச்சி கொஞ்சங்கூட இல்லை. புருஷன் பெண்டாட்டி என்று சில குடும்பங்களில் இரட்டை சம்பாத்தியமும், வேறு சில குடும்பங்களிலோ இரண்டு பேரில் ஒருத்தருக்கும் உத்தியோகம் இல்லாமல் பரிதாபமாகவும் இருக்கிற நிலையில் கல்யாணமான பிறகாவது பெண்கள் வேலைக்குப் போவதை நிறுத்திக் கொண்டால், அத்யாவசியமாக வேலை பார்த்தே ஜீவிக்க வேண்டிய ஒரு புருஷனுக்கு அந்த வேலை கிடைத்து அந்தக் குடும்பம் உருப்படுமே என்ற பிரக்ஞை வரவேண்டும். பெண்களை சரி-சமம் பண்ணுகிறோம் என்கிறவர்களும் இந்த விஷயத்தைக் கவனிக்க வேண்டும்.

சரி நிகர் சமம் என்கிற வாதம் எதில் வரலாம், எதில் வரக்கூடாது என்ற வியவஸ்தையே இக்காலத்தில் தெரியவில்லை. ஒவ்வொன்றும் ஒரு விதமாக இருக்க வேண்டும். அப்படித்தான் பிரபஞ்ச வாழ்க்கை ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. ‘எல்லாம் ஒரே விதமாக ஆகவேண்டும்; அதுதான் சரி சமம்’ என்ற வாதமே அடியோடு தப்பு. அப்படி ஆக்கினால் இயற்கையான வாழ்க்கைமுறையே பாழாகிவிடும். ஒன்றொன்றும் இயற்கைப்படி, ஸமூஹத்தின் மொத்த வாழ்வுக்கு அநுகூலமாக எப்படியிருக்க வேண்டுமோ அப்படியிருப்பது தான் அதற்கு நிறைவு. அதிலேதான் அதற்கு நிஜமான ஸெளக்கியம் உண்டு. இந்த நிறைவை விட்டு விட்டு, செயற்கையாக ஸமத்வம் என்று ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு அதற்காக ஓடுவதில் individual ஆகவும் [தனி நபரளவிலும்] நிஜமான நிறைவு அவரவர்க்கு உண்டாவதில்லை; குடும்பம், ஸமூஹம் இவற்றின் வாழ்க்கையும் இதனால் கெட்டே போகிறது.

இயற்கைப்படி பெண்கள்தானே பிள்ளை பெற வேண்டும் என்று வைத்திருக்கிறது? நாம் எவ்வளவு ஸமத்வச் சண்டை போட்டாலும் அதை மாற்றமுடியாதல்லவா? பிள்ளையைப் பெற்றவளே அதை சவரக்ஷணை பண்ணுவது, அதற்காக கிருஹலக்ஷ்மியாக இருப்பது என்பதுதான் பெண்களுக்கு ஸ்வாபாவிக (natural) தர்மம். அதைப் பண்ணுவதால் அவர்களுக்கு ஒரு குறைவும் இல்லை. அதை விட்டதால் உயர்வும் இல்லை. அதனால் ஸமப்படுத்துகிற பேச்சுக்கு இங்கே அர்த்தமேயில்லை.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is வாஸ்தவமான சீர்திருத்தம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  எடுத்துச் சொல்லிப் பயணுண்டா?
Next