இயற்கையை மதிக்கும் இல்லறம் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

தூய்மைக் குறைவுக்கெல்லாம் காரணமானது சிற்றின்பம் என்று மஹான்களெல்லாம் பாடி வைத்திருந்தாலும், அதிலும் கூட ஒரு நெறியை ஏற்படுத்திக் கொடுத்து, அதையே ஆத்மாவை தூய்மைப்படுத்துகிற ஒரு ஸம்ஸ்காரமாக்கி நமக்கு வேத தர்ம சாஸ்திரங்கள் கொடுத்திருக்கின்றன. சாதாரணமாக ஒரு ஜீவனை, ‘காட்டுக்குப் போ; ஸந்நியாஸியாய் இரு’ என்று சொன்னால் அவனால் முடியாது. லோக வாழ்க்கையில் அடிபட்டுத்தான் அவனுக்குப் பக்குவம் உண்டாக வேண்டும். பிஞ்சாகக் கசக்கிற காலத்தில் கசந்து, வடுவாக துவர்க்கிற காலத்தில் துவர்த்து, காயாகப் புளிக்கிற காலத்தில் புளித்து, அப்புறம்தான் பழமாகப் பழுத்து மதுர பூர்ணமாவதற்கு ஸாமானிய ஜீவர்களால் முடியும். தானாக பழுக்காததைத் தடி கொண்டு அடித்துப் பழுக்கப் பண்ண முடியாது! அப்படி இயற்கை வேகத்தை மீறிப் பண்ணினால் ராமலிங்க ஸ்வாமிகள் சொன்னபடி “வெம்பி விழ” வேண்டியதுதான் என்பது ரிஷிகளுக்குத் தெரியும். அதனால்தான் விவாஹத்தையும் கிருஹஸ்த (இல்லற) தர்மங்களையும் வைத்திருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல், பூர்வ கர்மாவுக்காக அநேக ஜீவர்கள் பிறந்தாக வேண்டுமே? தாம்பத்தியம் இல்லாமல் இது எப்படி முடியும்?

கிருஹஸ்தாச்ரமத்தில் இவன் முன்பு கற்றுக்கொண்ட வேதத்தைத் தொடர்ந்து ஓதியும் பிறர்களுக்கு ஓதுவித்தும் (கற்றுக் கொடுத்தும்) வரவேண்டும். அநேக யக்ஞங்களையும், ஒளபாஸனையையும் அக்னிமுகமாகப் பண்ண வேண்டும். பிரம்மசர்யத்தில் ஒருத்தனைச் சேர்ந்த ஸந்தியா வந்தனமும் கிருஹஸ்தாச்ரமத்தில் தொடர்கிறது.

தற்போது மற்ற யக்ஞாநுஷ்டானம், வேதாத்யயனம் இரண்டுமே ரொம்ப ரொம்பக் குறைந்து விட்டாலும் ஸந்தியாவந்தனமும், அதில் முக்யமான காயத்ரீ ஜபமும் துளி இருப்பதால் அதைப்பற்றிச் சொல்கிறேன்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is வயசு நிர்ணயத்துக்குக் காரணம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  காயத்ரீ
Next