திருவாய்மொழித் தனியன்கள்

ஸ்ரீ
ஸ்ரீமதே ராமாநுஜாய நம

திருவாய்மொழித் தனியன்கள்

நாதமுனிகள் அருளிச் செய்தது

பக்தர்களுக்கு அமுதம்

பக்தாம்ருதம் விஸ்வஜநாநுமோதநம்

ஸர்வார்த்தம் ஸ்ரீஸடகோப வாங்மயம்

ஸஹஸ்ரஸா கோபநிஷத்ஸமாகமம்

நமாம்யஹம்த்ராவிடவேத ஸாகரம்.

நேரிசை வெண்பா

ஈஸ்வரமுனிவர் அருளிச்செய்தது

நம்மாழ்வாரையே சிந்தித்திரு

திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,

மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்

அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,

சிந்தியாய் நெஞ்சே தெளிந்து.

சொட்டை நம்பிகள் அருளிச்செய்தது

ஆழ்வார் திருவடிகளே நமக்குத் தஞ்சம்

மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்

இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்

ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,

பாதங்கள் யாமுடைய பற்று.

அனந்தாழ்வான் அருளிச்செய்தது

இராமானுசனின் திருவடிகளையே வணங்குகிறேன்

ஏய்ந்தபெருங் கீர்த்தி யிராமா னுசமுனிதன்

வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்த

சீரார் சடகோபன் செந்தமிழ்வே தந்தரிக்கும், பெருஞ்

பேராத வுள்ளம் பெற.

பட்டர் அருளிச்செய்தவை

முதல் தாய் சடகோபன், இதத்தாய் இராமானுசன்

வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்,

ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற

முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த

இதத்தா யிராமானுசன்

நம்மாழ்வார் அர்த்த பஞ்சகத்தைக் கூறுகிறார்

மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,

தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,

ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,

யாழினிசை வேதத் தியல்,

ஆழ்வார் திருவடிகளே சரணம்

மணவாள மாமுனிகள் அருளிச்செய்தவை

நேரிசை வெண்பா

திருவாய்மொழி நூற்றந்தாதியின் தனியன்கள்

சொல்லும் பொருளம் தொகுத்துரைத்தார் மணவாள மாமுனிகள்

அல்லும் பகலும் அனுபவிப்பார் தங்கட்குச்,

சொல்லும் பொருளுந் தொகுத்துரைத்தான், - நல்ல

மணவாள மாமுனிவன் மாறன் மறைக்குத்,

தணவாநூற் றந்தாதி தான்.

திருவாய்மொழி நூற்றந்தாதி தேனேதான்

மன்னு புகழ்சேர் மணவாள மாமுனிவன்,

தன்னருளா லுட்பொருள்காள் தம்முடனே - சொன்ன

திருவாய் மொழிநூற்றுந் தாதியாந் தேனை,

ஒருவா தருந்துநெஞ்சே உற்று.

  Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  உயர்வு
Next