கையார்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

ஐந்தாம் பத்து

கையார்

ஆழ்வார் தாம் செய்த உபதேசத்தினால் உலகம் திருந்துவதைக் கண்டு 'பொலிக பொலிக' என்று மங்களாசாஸனம் பண்ணுகிறார் ; 'எம்பெருமான் இவர்களைப் போலவே நம்மையும் இருக்கச் செய்து, இவர்களுக்கு உபதேசம் பண்ணும்படி வைத்துள்ளதும் அவனது திருவருளே!பகவத் விஷயத்தை வாயால் சொன்னேன். இவ்வாறு சொன்னதையே பற்றாகக் கொண்டு பகவான் என்னை ஆட்கொண்டானே!' என்று வியந்து பேசுகிறார்.

எம்பெருமானின் கருணைத் திறத்தை உரைத்தல்

கலிவிருத்தம்

கண்ணா!நீ என்னை விட்டுப் போய் விடாதே!

3117. 'கையார் சக்கரத்தென்

கருமாணிக்க மே!'என்றென்று,

பொய்யே கைம்மைசொல்லிப்

புறமேபுற மேயாடி,

மெய்யே பெற்றொழிந்தேன்

விதிவாய்க்கின்று காப்பாரார்,

ஐயோ கண்ணபிரான்!

அறையோ இனிப் போனாலே.

எம்பெருமான், என் சொற்படி நடப்பவனாகிவிட்டான்

3118. 'போனாய் மாமருதின்

நடுவேயென்பொல் லாமணியே,

தேனே!இன்னமுதே!'

என்றென்றேசில கூற்றுச்சொல்ல,

தானே லெம்பெருமான்

அவனென்னா கியழிந்தான்,

வானே மாநிலமே

மற்றுமுற்றுமென் னுள்ளனவே.

கண்ணா உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தேன்

3119. உள்ளன மற்றுளவாப்

புறமேசில மாயஞ்சொல்லி,

வள்ளல் மணிவண்ணனே!

என்றென்றேயுனை யும்வஞ்சிக்கும்,

கள்ளம னம்தவிர்ந்தே

யுனைக்கண்டுகொண் டுய்ந்தொழிந்தேன்,

வெள்ளத் தணைக்கிடந்தா

யினியுன்னைவிட் டென்கொள்வனே?

கண்ணா!என்னைக் கூவி அருளாய்!

3120. என்கொள்வ னன்னைவிட்டென்

னும்வாசகங் கள்சொல்லியும்,

வன்கள்வ னேன்மனத்தை

வலித்துக்கண்ண நீர்கரந்து,

நின்க ணெருங்கவைத்தே

எனதாவியை நீக்ககில்லேன்,

என்கண் மலினமறுத்

தென்னைக்கூவி யருளாயகண்ணனே!

கண்ணா!இந்த உடற்சுமை எனக்கு எதற்கு?

3121. கண்ணபி ரானைவிண்ணோர்

கருமாணிக்கத் தையமுதை,

நண்ணியும் நண்ணகில்லேன்

நடுவேயோ ருடம்பிலிட்டு,

திண்ண மழுந்தக்கடடிப்

பலசெய்வினை வன்கயிற்றால்,

புண்ணை மறையவரிந்

தெனைப்போரவைத் தாய்புறமே.

கருமேனியம்மானைக் கண்டு அனுபவித்தேன்

3122. புறமறக் கட்டிக்கொண்

டிருவல்வினை யார்குமைக்கும,

முறைமுறை யாக்கைபுக

லொழியக்கண்டு கொண்டோழிந்தேன்,

நிறமுடை நால்தடந்தோள்

செய்யவாய்செய்ய தாமரைக்கண்,

அறமுய லாழியஙகைக்

கருமேனியம் மான்றன்னையே.

ஆதிமூலமே என்றேன் : அவனருள் கிடைத்தது

3123. அம்மா னாழிப்பிரான்

அவனெவ்விடத் தான்?யானார்?,

எம்மா பாவியர்க்கும்

விதிவாய்க்கின்று வாய்க்கும்கண்டீர்,

'கைம்மா துன்பொழித்தாய்!'

என்றுகைதலை பூசலிட்டே,

மெய்ம்மா லாயழிந்தே

னெம்பிரானுமென் மேலானே.

என் பெற்றோரும் உறவினரும் திருமாலே

3124. மேலாத் தேவர்களும்

நிலத்தேவரும் மேவித்தொழும்,

மாலார் வந்தினநாள்

அடியேன்மனத் தேமன்னினார்,

சேலேய் கண்ணியரும்

பெருஞ்செல்வமும் நன்மக்களும்,

மேலாத் தாய்தந்தையும்

அவரேயினி யாவாரே.

சங்கு சக்கரதாரி என்னோடு கூடினான்

3125. ஆவா ரார்துணையென்

றலைநீர்க்கட லுளழுந்தும்

நாவாய் போல்,பிறவிக்

கடலுள்நின்று நான்துளங்க,

தேவார் கோலத்தொடும்

திருச்சக்கரம் சங்கினொடும்,

ஆவா வென்றருள்

தடியேனொடு மானானே.

தசாவதாரம் எடுத்தவன் என்னுள் கலந்தான்

3126. ஆனான் ஆளுடையா

னென்றஃதேகொண் டுகந்துவந்து,

தானே யின்னருள்செய்

தென்னைமுற்றவும் தானானான்,

மீனா யாமையுமாய்

நரசிங்கமு மாய்க்குறளாய்,

கானா ரேனமுமாய்க்

கற்கியாமின்னம் கார்வண்ணனே.

இவற்றைப் பாடுக : கண்ணன் கழலிணை கிட்டும்

3127. கார்வண்ணன் கண்ணபிரான்

கமலத்தடங் கண்ணன்றன்னை,

ஏர்வள வொண்கழனிக்

குருகூர்ச்சட கோபன்சொன்ன,

சீர்வண்ண வொண்டமிழ்கள்

இவையாயிரத் துளிப்பத்தும்

ஆர்வண்ணத் தாலுரைப்பார்

அடிக்கீழ்புகு வார்பொலிந்தே.

நேரிசை வெண்பா

கண்ணனின் பேரருளைப் போற்றினான் மாறன்

கையாரும் சக்கரத்தோன் காதலின்றிக் கேயிருக்கப்,

பொய்யாகப் பேசும் புறனுரைக்கு,-மெய்யான

பேற்றை யுபகரித்த பேரருளின் றன்மைதனைப்,

போற்றினனே மாறன் பொலிந்து.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is ஒன்றுந்தேவும்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  பொலிக
Next