புகழுநல் ஒருவன்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

மூன்றாம் பத்து

புகழுநல் ஒருவன்

பகவான் உலகிலுள்ள எல்லாப் பொருள்களாக இருக்கிறான் என்பதை இப்பகுதி கூறுகிறது.

ஆன்மாக்கள் அனைத்தும் கண்ணனே எனல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

கண்ணனை என்னவென்று கூறியழைப்பேன்?

2930. புகழுநல் ஒருவன் என்கோ!

பொருவில்சீர்ப் பூமி யென்கோ,

திகழும்தண் பரவை என்கோ!

தீயென்கோ!வாயு என்கோ,

நிகழும்ஆ காச மென்கோ!

நீள்சுடர் இரண்டும் என்கோ,

இகழ்விலிவ் வனைத்தும் என்கோ

கண்ணனைக் கூவு மாறே!

எல்லாமாக இருப்பவனை என்ன சொல்லி அழைப்பது?

2931. கூவுமா றறிய மாட்டேன்

குன்றங்கள் அனைத்தும் என்கோ,

மேவுசீர் மாரி என்கோ!

விளங்குதா ரகைகள் என்கோ,

நாவியல் கலைகள் என்கோ!

ஞானநல் லாவி என்கோ,

பாவுசீர்க் கண்ணன் எம்மான்

பங்கயக் கண்ண னையே!

சக்கரதாரியை நான் எப்படி வர்ணிப்பேன்?

2932. பங்கயக் கண்ணன் என்கோ!

பவளச்செவ் வாயன் என்கோ,

அங்கதிர் அடியன் என்கோ!

அஞ்சன வண்ணன் என்கோ,

செங்கதிர் முடியன் என்கோ!

திருமறு மார்வன் என்கோ,

சங்குசக் கரத்தன் என்கோ!

சாதிமா ணிக்கத் தையே!

அச்சுதனை நான் எப்படிப் புகழுவேன்?

2933. சாதிமா ணிக்கம் என்கோ!

சவிகொள்பொன் முத்தம் என்கோ,

சாதிநல் வயிரம் என்கோ,

தவிவில்சீர் விளக்கம் என்கோ,

ஆதியஞ் சோதி என்கோ!

ஆதியம் புருடன் என்கோ,

ஆதுமில் காலத் தெந்தை

அச்சுதன் அமல னையே!

அறுசுவை அமிழ்து அன்னவன் அச்சுதன்

2934. அச்சுதன் அமலன் என்கோ

அடியவர் வினைகெ டுக்கும்,

நச்சுமா மருந்தம் என்கோ!

நலங்கடல் அமுதம் என்கோ,

அச்சுவைக் கட்டி என்கோ!

அறுசுவை அடிசில் என்கோ,

நெய்ச்சுவைத் தேறல் என்கோ!

கனியென்கோ!பாலென் கேனோ!

கண்ணனை முற்றமுடியப் புகழமுடியாது

2935. பாலென்கோ!நான்கு வேதப்

பயனென்கோ, சமய cF

நூலென்கோ!நுடங்கு கேள்வி

இசையென்கோ, இவற்றுள் நல்ல

மேலென்கோ!வினையின் மிக்க

பயனென்கோ, கண்ணணன் என்கோ!

மாலென்கோ!மாயன் என்கோ

வானவர் ஆதி யையே!

தேவர்கட்கெல்லாம் தலைவன் மணிவண்ணன்

2936. வானவர் ஆதி என்கோ!

வானவர் தெய்வம் என்கோ,

வானவர் போகம் என்கோ!

வானவர் முற்றும் என்கோ,

ஊனமில் செல்வம் என்கோ!

ஊனமில் சுவர்க்கம் என்கோ,

ஒளிமணி வண்ண னையே!

கண்ணனே மும்மூர்த்தி ஸ்வரூபன்

2937. ஒளிமணி வண்ணன் என்கோ!

ஒருவனென் றேத்த நின்ற

நளிர்மதிச் சடையன் என்கோ!

நான்முகக் கடவுள் என்கோ,

அளிமகிழ்ந் துலக மெல்லாம்

படைத்தவை ஏத்த நின்ற,

களிமலர்த் துளவ னெம்மான்

கண்ணனை மாய னையே!

கண்ணனை உள்ளவாறு உணர்ந்து நினைத்தல் அரிது

2938. கண்ணனை மாயன் றன்னைக்

கடல்கடைந் தமுதங் கொண்ட,

அண்ணலை அச்சுதனை

அனந்தனை அனந்தன் றன்மேல்,

நண்ணிநன் குறைகின் றானை

ஞாலமுண் டுமிழ்ந்த மாலை,

எண்ணுமா றறிய மாட்டேன்,

யாவையும் யவரும் தானே.

ஞான ஸ்வரூபியைக் கூடும் வழி

2939. யாவையும் யவரும் தானாய்

அவரவர் சமயந் தோறும்,

தோய்விலன் புலனைந் துக்கும்

சொலப்படான் உணர்வின் மூர்த்தி,

ஆவிசேர் உயிரின் உள்ளால்

ஆதுமோர் பற்றி லாத,

பாவனை அதனைக் கூடில்

அவனையும் கூட லாமே.

இவற்றைப் படித்தால் சுவர்க்க போகம் கிட்டும்

2940. கூடிவண் டறையும் தண்டாரக்

கொண்டல்போல் வண்ணன் றன்னை

மாடலர் பொழில்கு ருகூர்

வண்சட கோபன் சொன்ன,

பாடலோர் ஆயி ரத்துள்

இவையும்ஓர் பத்தும் வல்லார்,

வீடில போக மெய்தி

விரும்புவர் அமரர் மொய்த்தே.

நேரிசை வெண்பா

திருமலை உள்ளவாறு காண்டியவன் மாறன்

புகழொன்று மாலெப் பெருள்களுந் தானாய்,

நிகழ்கின்ற நேர்காட்டி நிற்க - மகிழ்மாறன்,

எங்கும் அடிமைசெய இச்சித்து வாசிகமாய்,

அங்கடிமை செய்தான்மொய்ம் பால்

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is ஒழிவில் காலம்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  மொய்ம்மாம்
Next