முந்நீர் ஞாலம்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

மூன்றாம் பத்து

முந்நீர் ஞாலம்

ஆழ்வார், தரித்திருக்கமாட்டாத துடிப்புடன் (பகவானிடம்) கூறும் வார்த்தைகள் நிரம்பிய பகுதி.

அழகரை முற்ற முடிய அனுபவிக்க இயலாமல்

ஆழ்வார் கலங்க, அவரது கலக்கத்தை அழகர் தீர்த்தல்

கலி விருத்தம்

அழகா!யான் உன்னை எந்நாள் கூடுவேனா?

2908. முந்நீர் ஞாலம்

படைத்தவெம் முகில்வண்ணனே,

அந்நாள்நீ தந்த

ஆக்கையின் வழியுழல்வேன்,

வெந்நாள்நோய் வீய

வினைகளைவேர் அறப்பாய்ந்து,

எந்நாள்யான் உன்னை

இனிவந்து கூடுவனே?

வாமனா!நின் தாள் அடைந்து நிற்பது என்றோ?

2909. வன்மா வையம்

அளந்தஎம் வாமனா,நின்

பன்மா மாயப்

பல்பிறவியில் படிகின்றயான்,

தொன்மா வல்வினைத்

தொடர்களை முதலரிந்து,

நின்மாதாள் சேர்ந்து

நிற்பதெஞ் ஞான்றுகொலோ?

கண்ணா!நான் உன்னை அடையும் வழி கூறு

2910. கொல்லா மாக்கோல்

கொலைசெய்து பாரதப்போர்,

எல்லாச் சேனையும்

இருநிலத் தவித்தவெந்தாய்,

பொல்லா ஆக்கையின்

புணர்வினை அறுக்கலறா,

சொல்லாய்யா னுன்னைச்

சார்வதோர் சூழ்ச்சியே.

எந்தாய் நின் திருவடி சேரும் வகையை அருள்க

2911. சூழ்ச்சி ஞானச்

சுடரொளி யாகி,என்றும்

ஏழ்ச்சிக்கே டின்றி

எங்கணும் நிறைந்தவெந்தாய்,

தாழ்ச்சிமற் றெங்கும்

தவிர்ந்துநின் தாளிணைக்கீழ்

வாழ்ச்சி,யான் சேரும்

வகையருளாய் வந்தே.

எந்தாய் நான் உன்னை எங்கு வந்து அனுகுவேன்?

2919. வந்தாய்போ லேவந்தும்

என்மனத் தினைநீ,

சிந்தாமல் செய்யாய்

இதுவே யிதுவாகில்,

கொந்தார்கா யாவின்

கொழுமலர்த் திருநிறத்த

எந்தாய்,யா னுன்னை

எங்குவந் தணுகிற்பனே?

பரமா நின் தாள்களைக் கிட்டுவது என்றோ?

2913. கிற்பன் கில்லேன்

என்றிலன் முனநாளால்,

அற்பசா ரங்கள்

அவைசுவைத் தகன்றொழிந்தேன்,

பற்பல லாயிரம்

உயிர்செய்த பரமா,நின்

நற்பொற்சோ தித்தாள்

நணுகுவ தெஞ்ஞான்றே?

மனமே!கண்ணனை என்றைக்கு அடைவது!

2914. எஞ்ஞான்று நாமிருந்

திருந்திரங்கி நெஞ்சே!

மெய்ஞ்ஞான மின்றி

வினையிய் பிறப்பழுந்தி,

எஞ்ஞான்றும் எங்கும்

ஒழிவற நிறைந்துநின்ற,

மெய்ஞ்ஞானச் சோதிக்

கண்ணனை மேவுதுமே?

கண்ணா நின்னை எங்கேயாவது காணவேண்டும்

2915. மேவு துன்ப

வினைகளை விடுத்துமிலேன்,

ஒவுத லின்றி

உன்கழல் வணங்கிற்றிலேன்,

பாவுதொல் சீர்க்கண்

ணா!என் பரஞ்சுடரே,

கூவுகின்றேன் காண்பான்

எங்கெய்தக் கூவுவனே?

உலகளந்தவனை எங்கு அடைவேன்?

2916. கூவிக்கூவிக் கொடுவினைத்

தூற்றுள் நின்று,

பாவியேன் பலகாலம்

வழிதிகைத் தலமர்கின்றேன்,

மேவியன் றாநிரை

காத்துவ னுலகமெல்லாம்,

தாவிய அம்மானை

எங்கினித் தலைப்பெய்வனே?

கண்ணனைக் கண்டபின் என் உயிர் நிலை பெற்றது

2917. தலைப்பெய் காலம்

நமன்றமர் பாசம்விட்டால்,

அலைப்பூ ணுண்ணுமவ்

வல்லலெல் லாமகல,

கலைப்பல் ஞானத்தென்

கண்ணனைக் கண்டுகொண்டு,

நிலைப்பெற்றென் னெஞ்சம்

பெற்றது நீடுயிரே.

இப்பாடல்கள் நம் பிறப்பை ஒழிக்கும்

2918. உயிர்க ளெல்லா

உலகமு முடையவனை,

குயில்கொள் சோலைத்

தென்குருகூர்ச் சடகோபன்,

செயிரில்சொல் இசைமாலை

ஆயிரத்து ளிப்பத்தும்,

உயிரின் மே லாக்கை

ஊனிடை ஒழிவிக்குமே.

நேரிசை வெண்பா

சடகோபனின் கலக்கத்தைக் கண்ணன் ஒழித்தான்

முன்னம் அழகரெழில் மூழ்குங் குருகையர்கோன்,

இன்னஅள வென்ன எனக்கரிதாய்த் - தென்ன,

கரணக் குறையின் கலக்கத்தை,கண்ணன்

ஒருமைப் படுத்தான் ஒழித்து.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is முடிச்சோதி
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  ஒழிவில் காலம்
Next