பிரபந்த காயத்திரி - இராமானுச நூற்றந்தாதி

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
ஸ்ரீ
திருவரங்கத்தமுதனார் அருளிச்செய்த

'பிரபந்த காயத்திரி' என்னும்

இராமானுச நூற்றந்தாதி

கட்டளை கலித்துறை

இராமானுசனின் திருநாமங்களைச் சொல்வோம்

பூமன்னு மாது பொருந்திய மார்பன், புகழ்மலிந்த

பாமன்னு மாறன் அடிபணிந் துய்ந்தவன், பல்கலையோர்

தாம்மன்ன வந்த இராமா னுசன்சர ணாரவிந்தம்

நாம்மன்னி வாழ,நெஞ் சே!சொல்லு வோமவன் நாமங்களே

இராமானுசனின் சீலத்தையே நினைப்பேன்

கள்ளார் பொழில்தென் னரங்கன், கமலப் பதங்கள்நெஞ்சிற்

கொள்ளா மனிசரை நீங்கிக், குறையல் பிரானடிக்கீழ்

விள்ளாத அன்பன் இராமா னுசன்மிக்க சீலமல்லால்

உள்ளாதென் னெஞ்சு,ஒன் றறியேன் எனக்குற்ற பேரியல்வே.

__BR__ மனமே என்னை இராமானுசன் அடியார்க்கு அடியவனாக்கினாயே!

உன்னை வணங்கினேன்

பேரியல் நெஞ்சே அடிபணிந் தேனுன்னைப், பேய்ப்பிறவிப்

பூரிய ரோடுள்ள சுற்றம் புலத்திப், பொருவருஞ்சீர்

ஆரியன் செம்மை இராமா னுசமுனிக் கன்புசெய்யும்

சீரிய பேறுடை யார்,அடிக் கீழென்னைச் சேர்த்ததற்கே.

__BR__ நான் திருமாலை வணங்கச் செய்தவன் இராமானுசன்இனி எனக்கு அழிவில்லை

என்னைப் புவியில் ஒருபொரு ளாக்கி, மருள்சுரந்த

முன்னைப் பழவினை வேரறுத்து ஊழி முதல்வனையே

பன்னப் பணித்த இராமா னுசன்பரன் பாதமுமென்

சென்னித் தரிக்கவைத் தான்எனக் கேதும் சிதைவில்லையே.

__BR__ இராமானுசனைப் பாடுவதால் என் கவியில் யாரும் குற்றம் காணமாட்டார்

எனக்குற்ற செல்வம் இராமா னுசனென்று, இசையகில்லா

மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழ்,அவன் மன்னியசீர்

தனக்குற்ற அன்பர் அவன்திரு நாமங்கள் சாற்றுமென்பா

இனக்குற்றம் காணகில் லார்,பத்தி ஏய்ந்த இயல்விதென்றே.

__BR__ இராமானுசனின் பெரும்புகழ் கூற முயல்கின்றேன்

இயலும் பொருளும் இசையத் தொடுத்து,ஈன் கவிகளன்பால்

மயல்கொண்டு வாழ்த்தும் இராமா னுசனை,மதியின்மையால்

பயிலும் கவிகளில் பத்தியில் லாதவென் பாவிநெஞ்சால்

முயல்கின் றனன்,அவன் றன்பெருங் கீர்த்தி மொழிந்திடவே.

__BR__ இராமானுசனைப் பாடுவதால் இனி எனக்கு வருத்தமில்லை

மொழியைக் கடக்கும் பெரும்புக ழான்,வஞ்ச முக்குறும்பாம்

குழியைக் கடக்கும்நம் கூரத்தாழ் வான்சரண் கூடியபின்,

பழியைக் கடத்தும் இராமா னுசன்புகழ் பாடியல்லா

வழியைக் கடத்தல், எனக்கினி யாதும் வருத்தமன்றே.

__BR__ பொய்கையாரை நினைக்கும் இராமானுசன் எம் இறைவன்

வருத்தும் புறவிருள் மாற்ற,எம் பொய்கைப்பி ரான்மறையின்

குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி,ஒன்றத்

திரித்தன் றெரித்த திருவிளக் கைத்தன் திருவுள்ளத்தே

இருத்தும் பரமன், இராமா னுசனெம் இறையவனே.

__BR__ பூதத்தாரைப் போற்றும் இராமானுசனையே போற்றுக

இறைவனைக் காணும் இதயத் திருள்கெட, ஞானமென்னும்

நிறைவிளக் கேற்றிய பூதத் திருவடி தாள்கள்,நெஞ்சத்

துறையவைத் தாளம் இராமா னுசன்புகழ் ஒதும்நல்லோர்

மறையினைக் காத்து இந்த மண்ணகத் தேமன்ன வைப்பவரே.

__BR__ இராமானுசனின் அடியார்க்கடியார் சிறப்படைவர்

மன்னிய பேரிருள் மாண்டபனி, கோவலுள் மாமலராள்

தன்னொடு மாயனைக் கண்டமை காட்டும், தமிழ்த்தலைவன்

பொன்னடி பேற்றும் இராமா னுசன்புகழ் ஓதும்நல்லோர்

மறையினைக் காத்துஇந்த மண்ணகத் தேமன்ன வைப்பவரே.

__BR__ இராமானுசனின் அடியார்க்கடியார் சிறப்படைவர்

மன்னிய பேரிருள் மாண்டபின், கோவலுள் மாமலராள்

தன்னொடு மாயனைக் கண்டமை காட்டும், தமிழ்த்தலைவன்

பொன்னடி போற்றும் இராமா னசற்கன்பு பூண்டவர்தாள்

சென்னியிற் சூடும், திருவுடை யாரென்றும் சீரியரே.

__BR__ இராமானுசனின் அன்பர் பெருமை அளவிடமுடியாதது

சீரிய நான்மறைச் செம்பொருள், செந்தமி ழாலளித்த

பாரிய லும்புகழ்ப் பாண்பெரு மாள்,சர ணாம்பதுமத்

தாரியல் சென்னி இராமா னுசன்றனைச் சார்ந்தவர்தம்

காரிய வண்மை.என் னால்சொல்லொ ணாதிக் கடலிடத்தே.

இராமானுசனின் அடியார்கட்கே யான் அன்பு செய்வேன்

இடங்கொண்ட கீர்த்தி மழிசைக் கிறைவன், இணையடிப்போ

தடங்கும் இதயத் திராமா னுசன்,அம்பொற் பாதமென்றும்

கடங்கொண் டிறைஞ்சும் திருமுனி வர்க்கன்றிக் காதல்செய்யாத்

திடங்கொண்ட ஞானியர்க் கேஅடி யேனன்பு செய்வதுவே.

__BR__ இராமானுசன் திருவடிகளே எனக்குக் கதி

செய்யும் பசுந்துள பத்தொழில் மாலையும், செந்தமிழில்

பெய்யும் மறைத்தமிழ் மாலையும், பேராத சீரரங்கத்

தையன் கழற்கணி யம்பரன் தாளன்றி ஆதரியா

மெய்யன், இராமா னுசன்சர ணேகதி வேறெனக்கே.

__BR__ இராமானுசன் என்னைக் கைவிடமாட்டான்

கதிக்குப் பதறிவெங் கானமும் கல்லும் கடலுமெல்லாம்

கொதிக்கத் தவம்செய்யும் கொள்கையற் றேன்,கொல்லி காவலன் சொல்

பதிக்கும் கலைக்கவி பாடும் பெரியவர் பாதங்களே

துதிக்கும், பரமன் இராமா னுசனென்னைச் சோர்விலனே.

__BR__ இராமானுசனைச் சேராதவரை யான் சேரேன்

சோராத காதல் பெருஞ்சுழிப் பால்,தொல்லை மாலையன்றும்

பாரா தவனைப்பல் லாண்டென்று காப்பிடும், பான்மையன்தாள்

பேராத வுள்ளத் திராமா னுசன்றன் பிறங்கியசீர்

சாரா மனிசரைக் சேரேன், எனக்கென்ன தாழ்வினியே?

__BR__ ஆண்டாள் திருவருளால் வாழ்பவன் இராமானுசன்

தாழ்வொன்றில் லாமலை தாழ்ந்து, தலமுழு தும்கலியே

ஆள்கின்ற நாள்வந் தளித்தவன் காண்மின், அரங்கர்மௌலி

சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல்லருளால்

வாழ்கின்ற வள்ளல், இராமா னுசனென்னும் மாமுனியே.

__BR__ இராமானுசனை அடைந்தோர் இன்பதுன்பங்களை மதியார்

முனியார் துயரங்கள் முந்திலும், இன்பங்கள் மொய்த்திடிலும்

கனியார் மனம்கண்ண மங்கைநின் றானைக், கலைபரவும்

தனியா னையைத்தண் டமிழ்செய்த நீலன் றனக்குலகில்

இனியானை, எங்கள் இராமா னுசனைவந் தெய்தினரே.

__BR__ இராமானுசனே எனக்குப் பெருந்துணை

எய்தற் கரிய மறைகளை, ஆயிரம் இன்தமிழால்,

செய்தற் குலகில் வரும்சட கோபனைச், சிந்தையுள்ளே

பெய்தற் கிசையும் பெரியவர் சீரை உயிர்களெல்லாம்

உய்தற் குதவும், இராமா னுசனெம் உறுதுணையே.

__BR__ திருவாய்மொழியின் பெருமையை விளக்கிய

இராமானுசனே ஆரமுது

உறுபெருஞ் செல்வமும் தந்தையும் தாயும்,உயர்குருவும்

வெறிதரு பூமகள் நாதனும், மாறன் விளங்கியசீர்

நெறிதரும் செந்தமிழ் ஆரண மேயென்றிந் நீணிலத்தோர்

அறிதர நின்ற, இராமா னுசனெனக் காரமுதே.

__BR__ நாதமுனியை ரசிக்கும் இராமானுசன் என் பெருஞ்செல்வம்

ஆரப் பொழில்தென் குருகைப்பி ரான்,அமு தத்திருவாய்

ஈரத் தமிழின் இசையுணர்ந் தோர்கட்கு, இனியவர்தம்

சீரைப் பயின்றுய்யும் சீலங்காள் நாத முனியைநெஞ்சால்

வாரிப் பருகும், இராமா னசனென்றன் மாநிதியே.

__BR__ ஆளவந்தார் திருவடிகளை வணங்கும் இராமானுசனே என்னைக் காத்தான்

'நிதியைப் பொழியும் முகில்'என்று, நீசர்தம் வாசல்பற்றித்

துதிகற் றுலகில் துவள்கின்றி லேன்,இனித் தூய்நெறிசேர்

எதிகட் கிறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம்

கதிபெற் றுடைய, இராமா னுசனென்னைக் காத்தனனே.

__BR__ இராமானுசனே என் பொக்கிஷம்

கார்த்திகை யானும் கரிமுகத் தானும், கனலும்முக்கண்

மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதுகிட்டு, 'மூவுலகும்

பூத்தவ னே!'என்று போற்றிட வாணன் பிழைபொறுத்த

தீர்த்தனை யேத்தும், இராமா னுசனென்றன் சேமவைப்பே.

__BR__ இராமானுசனையே முப்போதும் வாழ்த்துவேன்

'வைப்பாய வான்பொருள்' என்று,நல் லன்பர் மனத்தகத்தே

எப்போதம் வைக்கும் இரமா னுசனை, இருநிலத்தில்

ஒப்பார் இலாத உறுவினை யேன்வஞ்ச நெஞ்சில்வைத்து

முப்போதும் வாழ்த்துவன், என்னாம் இதுஅவன் மொய்புகழ்க்கே!

__BR__ இராமானுசனைக் கண்டு உயர்ந்தேன்

மொய்த்தவெந் தீவினை யால்பல் லுடல்தொறும் மூத்து,அதனால்

எய்த்தொழிந் தேன்முன நாள்களெல் லாம்,இன்று கண்டுயர்ந்தேன்

பொய்த்தவம் போற்றும் புலைச்சம யங்கள் நிலத்தவியக்

கைத்தமெய்ஞ் ஞானத்து,இராமா னுசனென்னும் கார்தன்னையே.

__BR__ இராமானுசன் என்னை என்றும் ஆட்கொள்வான்

திக்குற்ற கீர்த்தி இராமா னுசனை,என் செய்வினையாம்

மெய்க்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை, மேவும்நல்லோர்

எக்குற்ற வாளர் எதுபிறப் பேதியல் வாகநின்றோர்

அக்குற்றம் அப்பிறப்பு, அவ்வியல் வேநம்மை யாட்கொள்ளுமே.

__BR__ இராமானுச!நின் வள்ளல் தன்மை என்னே!

கொள்ளக் குறைவற் றிலங்கிக், கொழுந்துவிட் டோங்கியவுன்

வள்ளல் தனத்தினால் வல்வினை யேன்மனம் நீபுகுந்தாய்,

வெள்ளைச் சுடர்விடும் உன்பெரு மேன்மைக் கிழுக்கிதென்று

தள்ளற் றிரங்கும், இரமா னுச!என் தனிநெஞ்சமே!

__BR__ இராமானுசனையே என் வாய் புகழும்

நெஞ்சில் கறைகொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன்,நங்கள்

பஞ்சித் திருவடிப் பின்னைதன் காதல்ன், பாதம்நண்ணா

வஞ்சர்க் கரிய இராமா னுசன்புகழ் அன்றியென்வாய்

கொஞ்சிப் பரவகில் லாது,என்ன வாழ்வின்று கூடியதே!

__BR__ இராமானுசனின் அடியார்களைச் சேரும் நாள் எந்நாளோ?

கூட்டும் விதியென்று கூடுங்கொ லோ,தென் குருகைப்பிரான்

பாட்டென்னும் வேதப் பசுந்தமிழ் தன்னைத்,தன் பத்தியென்னும்

வீட்டின்கண் வைத்த இராமா னுசன்புகழ் மெய்யுணர்ந்தோர்

ஈட்டங்கள் தன்னை,என் நாட்டங்கள் கண்டின்ப மெய்திடவே?

__BR__ இராமனுசனே என்னை ஆண்டவர்

இன்பந் தருபெரு வீடுவந் தெய்திலேன்? எண்ணிறந்த

துன்பந் தருநிர யம்பல சூழிலென்? 'தொல்லுலகில்

மன்பல் லுயிர்கட் கிறையவன் மாயன்' எனமொழிந்த

அன்பன் அனகன், இராமா னுசனென்னை ஆண்டனனே.

__BR__ மனமே இராமானுசனைப் பொருந்திவிட்டோமே

ஆண்டுகள் நாள்திங்க ளாய்நிகழ் காலமெல் லாம்மனமே!

ஈண்டுபல் யோனிகள் தோறுழல் வோம்,இன்றோ ரெண்ணின்றியே

காண்டகு தோளண்ணல் தென்னத்தி யூரர் கழலிணைக்கீழ்ப்

பூண்டவன் பாளன், இராமா னுசனைப் பொருந்தினமே.

__BR__ இராமானுசனை அடைபவர்க்கு எல்லாப் பயன்களும் சேரும்

பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும்,நல்ல

திருந்திய ஞானமும் செல்வமும் சேரும், செறுகலியால்

வருந்திய ஞாலத்தை வண்மையி னால்வந் தெடுத்தளித்த

அருந்தவன், எங்கள் இராமா னுசனை அடைபவர்க்கே.

__BR__ திருமாலின் பஞ்சாயுதங்களே இராமானுசனாக அவதரித்தன

அடையார் கமலத் தலர்மகள் கேள்வன்,கை யாழியென்னும்

படையடு நாந்தக மும்படர் தண்டும்,ஒண் சார்ங்கவில்லும்

புடையார் புரிசங் கமுமிந்தப் பூதலம் காப்பதற்கென்று.

இடையே இராமா னுசமுனி யாயின இந்நிலத்தே.

__BR__ இராமானுசனின் புகழ்தான் என்னே?

நிலத்தைச் செறுத்துண்ணும் நீசக் கலியை, நினைப்பரிய

பலத்தைச் செறுத்தும் பிறங்கிய தில்லை,என் பெய்வினைதென்

புலத்தில் பொறித்தவப் புத்தகச் சும்மை பொறுக்கியபின்

நலத்தைப் பொறுத்தது, இராமா னசன்றன் நயப்புகழே.

__BR__ இராமானுசனின் திருவடிகளையே யான் போற்றுவேன்

நயவேன் ஒருதெய்வம் நானிலத் தேசில மானிடத்தைப்

புயலே' எனக்கவி போற்றிசெய் யேன்,பொன் னரங்கமென்னில்

மயலே பெருகும் இராமா னுசன்மன்னு மாமலர்த்தாள்,

அயரேன், அருவினை என்னையெவ் வாறின் றடர்ப்பதுவே?

__BR__ இராமானுசன் அருள் நிறைந்தவன்

அடல்கொண்ட நேமியன் ஆருயிர் நாதன்,அன் றாரணச்சொல்

கடல்கொண்ட ஒண்பொருள் கண்டளிப் பப்,பின்னும் காசினியோர்

இடரின்கண் வீழ்ந்திடத் தானுமவ் வொண்பொருள் கொண்டவர் பின்

படரும் குணன்,எம் இராமா னசன்றன் படியிதுவே.

__BR__ இராமானுசனின் அடியார்களே எனக்கு நல்வழி காட்டினர்

படிகாண்ட கீர்த்தி இராமா யணமென்னும் பத்திவெள்ளம்,

குடிகொண்ட கோயில் இராமா னசன்குணங் கூறும்,அன்பர்

கடிகொண்ட மாமலர்த் தாள்கலந் துள்ளங் கனியும்நல்லோர்

அடிகண்டு கொண்டுகந்து, என்னையும் ஆளவர்க் காக்கினரே.

__BR__ இராமானுசனின் அருள் அளவிடமுடியாதது

ஆக்கி யடிமை நிலைப்பித் தனையென்னை, இன்று,அவமே

போக்கிப் புறத்திட்ட தென்பொரு ளா?முன்பு, புண்ணியர்தம்

வாக்கிற் பிரியா இராமா னுச!நின் அருளின் வண்ணம்

நோக்கில் தெரிவரி தால்,உரை யாயிந்த நுண்பொருளே.

__BR__ மனமே!இராமானுசனே நமக்குக் காவல்

பொருளும் புதல்வரும் பூமியும் பூங்குழ லாருமென்றே

மருள்கொண் டிளைக்கும் நமக்குநெஞ் சே!மற்று ளார்தரமோ?

இருள்கொண்ட வெந்துயர் மாற்றித்தன் ஈறில் பெரும்புகழே

தெருளும் தெருள்தந்து,இராமா னுசன்செய்யும் சேமங்களே.

__BR__ எல்லாம் கண்ணனுக்கே அர்ப்பணம் என்றவன் இராமானுசன்

சேமநல் வீடும் பொருளும் தருமமும், சீரியநற்

காமமும் என்றிவை நான்கென்பர், நான்கினும் கண்ணனுக்கே

ஆமது காமம் அறம்பொருள் வீடிதற் கென்றுரைத்தான்

வாமனன் சீலன், இராமா னுசனிந்த மண்மிசையே.

__BR__ இராமானுசனால் யாவரும் நாரணன் அன்பர்களாயினர்

மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து,எங்கள் மாதவனே

கண்ணுற நிற்கிலும் காணகில் லா,உல கோர்களெல்லாம்

அண்ணல் இராமா னுசன்வந்து தோன்றிய அப்பொழுதே

நண்ணரு ஞானம் தலைக்கொண்டு, நாரணற் காயினரே.

__BR__ இராமானுசன் என் சிற்றின்ப ஆசையை அகற்றினான்

ஆயிழை யார்கொங்கை தங்கும்அக் காதல் அளற்ழுந்தி

மாயுமென் ஆவியை வந்தெடுத் தானின்று, மாமலராள்

நாயகன் எல்லா வுயிர்கட்கும் நாதன் அரங்கனென்னும்

தூயவன், தீதில் இராமா னுசன்தொல் லருள்சுரந்தே.

__BR__ இராமானுசன் என்று சொல்லுங்கள் பற்று நீங்கும்

சுரக்கும் திருவும் உணர்வும், சொல்ப்புகில் வாயமுதம்

பாக்குமூ இருவினை பற்றற வோடும், படியிலுள்ளீர்!

உரைக்கின் றனனுமக் கியானறஞ் சீறும் உறுகலியைத்

துரக்கும் பெருமை, இராமா னுசனென்று சொல்லுமினே.

__BR__ இராமானுச!நின் சரணே எனக்குப் பெரும்பேறு!

பேறொன்று மற்றில்லை நின்சரண் அன்றி,அப் பேறளித்தற்

காறென்று மில்லைமற் றச்சரண் அன்றி, என் றிப்பொருளைத்

தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத்தந்த செம்மைசொல்லால்

கூறும் பரமன்று, இராமா னுச!மெய்ம்மை கூறிடிலே.

__BR__ மாறன் மறையை உணர்ந்த இராமானுசனை வணங்குக

கூறும் சமயங்கள் ஆறும் குலையக். குவலயத்தே

மாறன் பணித்த மறையுணர்ந் தோனை, மதியிலியேன்

தேறும் படியென் மனம்புகுந் தானைத் திசையணைத்தும்

ஏறும் குணனை, இராமா னுசனை இறைஞ்சினமே.

__BR__ இராமானுசனையே நினைக்கின்றேன் எனக்கு நிகரே இல்லை

இறைஞ்சப் படும்பரன் ஈசன் அரங்கனென்று, இவ்வுலகத்

தறம்செப்பும் அண்ணல் இராமா னசன்,என் அருவினையின்

திறம்செற் றிரவும் பகலும் விடாதென்றன் சிந்தையுள்ளே

நிறைந்தொப் பறவிருந் தான்,எனக் காரும் நிகரில்லையே

__BR__ இராமானுச!என் இழிகுணத்திற்கு நின்னருளே கதி. நின்னருளுக்கும் நானே இடம்

நிகரின்றி நின்றவென் நீசதைக்கு, நின்னரு ளின்கணன்றிப்

புகலொன்று மில்லை அருட்குமஃ தேபுகல், புன்மையிலோர்

பகரும் பெருமை இராமா னுச!இனி நாம்பழுதே

அகலும் பொருளென், பயனிரு வோமுக்கு மானபின்னே?

__BR__ இராமானசனால் அறநெறி தழைத்தது

ஆனது செம்மை அறநெறி, பொய்ம்மை ஆறுசமயம்

போனது பொன்றி யிறந்தது வெங்கலி, பூங்கமலத்

தேனதி பாய்வயல் தென்னரங் கன்கழல் சென்னிவைத்துத்

தானதில் மன்னும், இராமா னுசனித் தலத்துதித்தே.

__BR__ இராமானுசனின் திருவடிப் பெருமையே பெருமை

உதிப்பன வுத்தமர் சிந்தையுள், ஒன்னலர் நெஞ்சமஞ்சிக்

கொதித்திட மாறி நடப்பன, கொள்ளைவன் குற்றமெல்லாம்

பதித்தவென் புன்கவிப் பாவினம் பூண்டன பாவுதொல்சீர்

எதித்தலை நாதன், இராமா னுசன்றன் இணையடியே.

__BR__ என்னை ஆட்கொள்ளவே இராமானுசன் அவதரித்தான்

அடியைத் தொடர்ந்தெழும் ஐவர்கட், காய்அன்று பாரதப்போர்

முடியப் பரிநெடுந் தேர்விடுங் கோனை, முழுதுணர்ந்த

அடியர்க் கமுதம் இராமா னுசனென்னை ஆளவந்திப்

படியிற் பிறந்தது, மற்றில்லை காரணம் பார்த்திடிலே.

__BR__ அற்புதச் செயல்களைச் செய்தவன் இராமானுசன்

பார்த்தான் அறுசம யங்கள் பதைப்ப,இப் பார்முழுதும்

போர்த்தான் புகழ்கொண்டு புன்மையி னேனிடைத் தான்புகுந்து

தீர்த்தான் இருவினை தீர்த்தரங் கன்செய்ய தாளிணையோ

டார்த்தான், இவையெம் இராமா னுசன்செய்யும் அற்புதமே.

__BR__ யாவும் திருமாலினுடையவை என்று நாட்டியவன் இராமானுசன்

அற்புதன் செம்மை இராமா னுசன்,என்னை ஆளவந்த

கற்பகம் கற்றவர் காமுறு சீலன், கருதரிய

பற்பல் லுயிர்களும் பல்லுல கியாவும் பரனதென்னும்

நற்பொருள் தன்னை,இந் நானிலத் தேவந்து நாட்டினனே.

__BR__ இராமானுசனால் விளைந்த பயன்கள் எண்ணில

நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன, நாரணனைக்

காட்டிய வேதம் களிப்புற் றது,தென் குருகைவள்ளல்

வாட்டமி லாவண் டமிழ்மறை வாழ்ந்தது மண்ணுலகில்

ஈட்டிய சீலத்து, இராமா னுசன்றன் இயல்வுகண்டே.

__BR__ இராமானுசனைத் தொழுவதே எங்கள் குடியின் இயல்பு

கண்டவர் சிந்தை கவரும், கடிபொழில் தென்னரங்கள்

தொண்டர் குலாவும் இராமா னுசனைத், தொகையிறந்த

பண்டரு வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தருளும்

கொண்டலை மேவித் தொழும்,குடி யாமெங்கள் கோக்குடியே.

__BR__ இராமானுசனை அடைந்தேன் இனி மற்றொன்றை நினையேன்

கோக்குல மன்னரை மூவெழு கால்,ஒரு கூர்மழுவால்

போக்கிய தேவனைப் போற்றும் புனிதன், புவனமெங்கும்

ஆக்கிய கீர்த்தி இராமா னுசனை அடைந்தபின்என்

வாக்குரை யாது,என் மனம்நினை யாதினி மற்றொன்றையே.

__BR__ இராமானுசனைச் சேர்ந்தேன் பிறவற்றை அறியேன்

மற்றொரு பேறு மதியாது, அரங்கன் மலரடிக்காள்

உற்றவ ரேதனக் குற்றவ ராய்க்கொள்ளும் உத்தமனை,

நற்றவர் போற்றும் இராமா னுசனையிந் நானிலத்தே

பெற்றனன், பெற்றபின் மற்றறி யேனொரு பேதைமையே.

__BR__ பிற சமயங்களை வாதில் வென்றவன் இராமானுசன்

பேதையர் வேதப் பொருளிதென் னுன்னிப், பிரமம்நன்றென்

றோதிமற் றெல்லா உயிரும் அஃதன்று, உயிர்கள்மெய்விட்

டாதிப்பரனொடொன் றாமென்று சொல்லுமவ் வல்லலெல்லாம்

வாதில்வென் றான்,எம் இராமா னுசன்மெய்ம் மதிக்கடலே.

__BR__ நாரணன் தன்மையை உணர்த்தியவன் இராமானசன்

கடலள வாய திசையெட்டி னுள்ளும், கலியிருளே

மிடைதரு காலத் திராமா னுசன்,மிக்க நான்மறையின்

சுடரொளி யாலவ் விருளைத் துரத்தில னேல்உயிரை

உடையவன், நாரணன் என்றறி வாரில்லை உற்றுணர்ந்தே.

__BR__ இராமானுசனே எங்கள் குலக்கொழுந்து

உணர்ந்தமெய்ஞ் ஞானியர் யோகந் தொறும், திரு வாய்மொழியின்

மணந்தரும் இன்னிசை மன்னும் இடந்தொறும், மாமலராள்

புணர்ந்தபொன் மார்பன் பொருந்தும்ட பதிதொறும் புக்குநிற்கும்

குணந்திகழ் கொண்டல், இராமானுசனெங் குலக்கொழுந்தே.

__BR__ இராமானுசன் புகழால் இவ்வுலகு அதிசயம் கண்டது

கொழுந்துவிட் டோடிப் படரும்வெங் கோள்வினை யால்,நிரயத்

தழுந்தியிட் டேனைவந் தாட்கொண்ட பின்னம், அருமுனிவர்

தொழுந்தவத் தோனெம் இராமா னுசன்தொல் புகழ்சடர்மிக்

கெழுந்தது,அத் தால்நல் லதிசயங் கண்ட திருநிலமே.

__BR__ இராமானுசனைப் பணிந்து இருவினைப் பாசம் போக்கினேன்

இருந்தேன் இருவினைப் பாசம் கழற்றிஇன் றியான்இறையும்

வருந்தேன் இனியெம் இராமா னுசன்,மன்னு மாமலர்த்தாள்

பொருந்தா நிலையுடைப் புன்மையி னோர்க்கொன்றும் நன்மைசெய்யாப்

பெருந்தே வரைப்பர வும்,பெரி யோர்தம் கழல்பிடித்தே.

__BR__ இராமானுச நின் அடியைத் தொடர எனக்கு அருள் செய்

பிடியைத் தொடரும் களிறென்ன, யானுன் பிறங்கியசீர்

அடியைத் தொடரும் படிநல்க வேண்டும், அறுசமயச்

செடியைத் தொடரும் மருள்செறிந் தோர்சிதைந் தோடவந்திப்

படியைத் தொடரும், இராமா னுச!மிக்க பண்டிதனே!

__BR__ இராமானுசனால் வாதியர் வாழ்வு வீழ்ந்துவிட்டது

பண்டரு மாறன் பசுந்தமிழ், ஆனந்தம் பாய்மதமாய்

விண்டிட எங்கள் இராமா னுசமுனி வேழம்,மெய்ம்மை

கொண்டநல் வேதக் கொழுந்தண்ட மேந்திக் குவலயத்தே

மண்டிவந் தேன்றது, வாதியர் காள்!உங்கள் வாழ்வற்றதே.

__BR__ இராமானுசன் தந்த ஞானத்தின் பயன்

வாழ்வற் றதுதொல்லை வாதியர்க்கு, என்றும் மறையவர்தம்

தாழ்வற் றதுதவம் தாரணி பெற்றது, தத்துவநூல்

கூழற் றதுகுற்ற மெல்லாம் பதித்த குணத்தினர்க்கந்

நாழற் றது,நம் இராமா னுசன்தந்த ஞானத்திலே.

__BR__ சரண் கொடுத்து வானம் கொடுப்பவன் இராமானுசன்

ஞானம் கனிந்த நலங்கொண்டு, நாடொரும் நைபவர்க்கு

வானம் கொடுப்பது மாதவன், வல்வினை யேன்மனத்தில்

ஈனம் கடிந்த இராமா னுசன்தன்னை எய்தினர்க்கத்

தானம் கொடுப்பது, தன்தக வென்னும் சரண்கொடுத்தே.

__BR__ உயிர்களுக்கு இராமானுசனே காவல்

சரணம் அடைந்த தருமனுக் காப்,பண்டு நூற்றுவரை

மரணம் அடைவித்த மாயவன், தன்னை வணங்கவைத்த

கரணம் இவையுமக் கன்றென்றி ராமா னுசனுயிர்கட்

கரணங் கமைத்தில னேல்,அர ணார்மற்றிவ் வாருயிர்க்கே?

__BR__ கீதையின் செம்மைப் பொருளை விளக்கியவன் இராமானுசன்

ஆரெனக் கின்று நிகர்சொல்லின், மாயனன் றைவர்தெய்வத்

தேரினிற் செப்பிய கீதையின், செம்மைப் பொருள்தெரியப்

பாரினிற் சொன்ன இராமா னுசனைப் பணியும்நல்லோர்

சீரினிற் சென்று பணிந்தது,என் னாவியும் சிந்தையுமே.

__BR__ என்னை ஆட்கொண்டவன் இராமானுசன்

சிந்தையி னோடு கரணங்கள் யாவும் சிதைந்து,முன்னாள்

அந்தமுற் றாழ்ந்தது கண்டு,இவை என்றனக் கன்றருளால்

தந்த அரங்கனும் தன்சரண் தந்திலன் தானதுதந்து,

எந்தை இராமா னுசன்வந் தெடுத்தனன் இன்றென்னையே.

__BR__ இராமானுச எனக்கு அருள் செய்வதுதன் நலன்

என்னையும் பார்த்தென் இயல்வையும் பார்த்து, எண்ணில் பல் குணத்த

உன்னையும் பார்க்கில் அருள்செய்வ தேநலம், அன்றியென்பால்

பின்னையும் பார்க்கில் நலமுள தே?உன் பெருங்கருணை

தன்னையென் பார்ப்பர், இராமா னுச!உன்னைச் சார்ந்தவரே?

__BR__ இராமானுச உன் தாளிளணைக்கீழ் என் சிந்தை சார்ந்தது

சார்ந்ததென் சிந்தையுன் தாளிணைக் கீழ்,அன்பு தான்மிகவும்

கூர்ந்ததத் தாமரைத் தாள்களுக்கு, உன்றன் குணங்களுக்கே

தீர்ந்ததென் செய்கைமுன் செய்வினை நீசெய் வினையதனால்

பேர்ந்தது, வண்மை இராமா னுச!எம்பெருந்தகையே.

__BR__ புகழோருடன் என்னைச் சேர்த்துவைத்தவன் இராமானுசன்

கைத்தனன் தீய சமயக் கலகரைக், காசினிக்கே

உய்த்தனன் தூய மறைநெறி தன்னை, என் றுன்னியுள்ளம்

நெய்த்தவன் போடிருந் தேத்தும் நிறைபுக ழோருடனே

வைத்தனன் என்னை, இராமா னசன்மிக்க வண்மைசெய்தே.

__BR__ இராமானுசனை நினைப்பதே எனக்கு நிலை

வண்மையி னாலுந்தன் மாதக வாலும், மதிபுரையும்

தண்மையி னாலுமித் தாரணி யோர்கட்குத், தான்சரணாய்

உண்மைநன் ஞானம் உரைத்த இராமா னுசனையுன்னும்

திண்மையல் லாலெனக் கில்லை,மற் றோர்நிலை தேர்ந்திடிலே.

__BR__ சேராதவரைச் சிதைத்தவன் இராமானுசன்

தேரார் மறையின் திறமென்று, மாயவன் தீயவரைக்

கூராழி கொண்டு குறைப்பது, கொண்டல் அனையவண்மை

ஏரார் குணத்தெம் இராமா னுசனவ் வெழில்மறையில்

சேரா தவரைச் சிதைப்பது,அப் போதொரு சிந்தைசெய்தே.

__BR__ இராமானுச நின் புகழே என்னை மெய்க்கின்றது

செய்த்தலைச் சங்கம் செழுமுத்தம் ஈனும், திருவரங்கர்

கைத்தலத் தாழியும் சங்கமு மேந்தி,நங் கண்முகப்பே

மெய்த்தலைத் துன்னை விடனென் றிருக்கிலும் நின்புகழே

மொய்த்தலைக் கும்வந்து, இராமா னுச!என்னை முற்றுநின்றே.

__BR__ இராமானுச எனக்கு எல்லாச் செல்வங்களும் அருள்

நின்றவண் கீர்த்தியும் நீள்புனலும்,நிறை வேங்கடப்பொற்

குன்றமும் வைகுந்த நாடும் குலவிய பாற்கடலும்,

உன்றனக் கெத்தனை இன்பந் தரும்உன் இணைமலர்த்தாள்

என்றனக் கும்அது,இராமா னுச!இவை யீந்தருளே.

__BR__ ஒருவரும் ஈயாத இன்னருள் ஈர்ந்தவன் இராமானுசன்

ஈந்தனன் ஈயாத இன்னருள், எண்ணில் மறைக்குறும்பைப்

பாய்ந்தனன் அம்மறைப் பல்பொரு ளால்,இப் படியனைத்தும்

ஏய்ந்தனன் கீர்த்தியி னாலென் வினைகளை வேர்பறியக்

காய்ந்தனன், வண்மை இராமா னுசற்கென் கருத்தினியே?

__BR__ இராமானுச!என்னைப் பெரும் பக்தனாக்கினாயே!

கருத்திற் புகுந்துள்ளிற் கள்ளம் கழற்றிக், கருதரிய

வருத்தத்தி னால்மிக வஞ்சித்து, நீயிந்த மண்ணகத்தே

திருத்தித் திருமகள் கேள்வனுக் காக்கிய பின்னென்னெஞ்சில்

பொருத்தப் படாது,எம் இராமா னுச!மற்றோர் பொய்ப்பொருளே.

__BR__ இராமானுசனே நம்மை உய்யவைப்பவன்

பொய்யைச் சுரக்கும் பொருளைத் துறந்து,இந்தப் பூதலத்தே

மெய்யைப் புரக்கும் இராமா னுசன்நிற்க, வேறுநம்மை

உய்யக் கொளவல்ல தெய்வமிங் கியாதென் றுலர்ந்தவமே

ஐயப் படாநிற்பர், வையத்துள் ளோர்நல் லறிவிழந்தே.

__BR__ இராமானுசனின் அடியார்களுக்கே நான் தாஸன்

நல்லார் பரவும் இராமா னுசன்,திரு நாமம்நம்ப

வல்லார் திறத்தை மறவா தவர்கள் எவர்,அவர்க்கே

எல்லா விடத்திலும் என்றுமெப் போதிலும் எத்தொழும்பும்,

சொல்லால் மனத்தால் கருமத்தி னால்செய்வன் சோர்வின்றியே.

__BR__ இராமானுச!நின் அருளுக்குப் பதிலுதவியே இல்லை

சோர்வின்றி உன்றன் துணையடிக் கீழ்த்,தொண்டு பட்டவர்பால்

சார்வின்றி நின்ற எனக்கு,அரங் கன்செய்ய தாளிணைகள்

பேர்வின்றி யின்று பெறுத்தும இராமா னுச!இனியுன்

சீரொன் றியகரு ணைக்கு,இல்லை மாறு தெரிவுறிலே.

__BR__ இராமானுசனே பெரும் புண்ணியன்

தெரிவுற்ற ஞாலம் செறியப் பெறாது,வெந் தீவினையால்

உருவற்ற ஞானத் துழல்கின்ற என்னை, ஒருபொழுதில்

பொருவற்ற கேள்விய னாக்கிநின் றானென்ன புண்ணியனோ!

தெரிவுற்ற கீர்த்தி,இராமா னுசனென்னும் சீர்முகிலே.

__BR__ இராமானுசனின் திருவடிகளே பேரின்பம் தரும்

'சீர்கொண்டு பேரறம் செய்து,நல்வீடு செறிதும்'என்னும்

பார்கொண்ட மேன்மையர் கூட்டனல் லேன் உன் பதயுகமாம்

எர்கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் உன்னுடைய

கார்கொண்ட வண்மை, இராமா னுச!இது கண்டுகாள்ளே.

__BR__ இராமானுசனைக் கண்டு அவன் அடியார்க்கடியனாயினேன்

கண்டுகொண் டேனெம் இராமா னுசன்றன்னை, காண்டலுமே

தொண்டுகொண் டேன்அவன் தொண்டர்பொற் றாளில்என் தொல்லை வெந்நோய்

விண்டுகொண் டேன்அவன் சீர்வெள்ள வாரியை வாய்மடுத்தின்

றுண்டுகொண் டேன்,இன்னம் உற்றன ஒதில் உவப்பில்லையே.

__BR__ இராமானுசன் அடியாரின் திருவடிகளே எனக்குப் பற்று

ஓதிய வேதத்தின் உட்பொரு ளாய்,அதன் உச்சிமிக்க

சோதியை நாதன் எனவெளி யாதுழல் கின்றதொண்டர்,

பேதைமை தீர்த்த இராமா னுசனைத் தொழும்பெரியோர்

பாதமல் லாலென்றன் ஆருயிர்க்கு, யாதொன்றும் பற்றில்லையே.

__BR__ இராமானுச பக்தர்களே எம்மை ஆள்பவர்

பற்றா மனிசரைப் பற்றி,அப் பற்று விடாதவரே

குரியசொல் என்றும் உடையவன் என்றென்று, உணர்வில்மிக்கோர்

தெரியும்வண் கீர்த்தி இராமா னுசன்மறை தேர்ந்துலகில்

புரியுநண் ஞானம், பொருந்தா தவரைப் பொரும்கலியே.

__BR__ இராமானுச ஞானம் பெற்றோரே சிறந்தவர்கள்

கலிமிக்க செந்நெல் கழனிக் குறையல், கலைப்பெருமான்

ஒலிமிக்க பாடலை உண்டுதன் னுள்ளம் தடித்து,அதனால்

வலிமிக்க சீயம் இராமா னுசன்மறை வாதியராம்

புலிமிக்க தென்று,இப் புவனத்தில் வந்தமை போற்றுவனே.

__BR__ இராமானுச!நின்னைத் துதியாமல் என்னால் இருக்கமுடியவில்லை

போற்றருஞ் சீலத் திராமா னுச,நின் புகழ்தெரிந்து

சாற்றுவ னேலது தாழ்வது தீரில்,உன் சீர்தனக்கோர்

ஏற்றமென் றேகொண் டிருக்கிலு மென்மனம் ஏத்தியன்றி

ஆற்றகில் லாது,இதற் கென்னினை வாயென்றிட் டஞ்சுவனே.

__BR__ இராமானுச பக்தர்களைப் பூசியாதவர் வருந்துவர்

நினையார் பிறவியை நீக்கும் பிரானை.,இந் நீணிலத்தே

எனையாள வந்த இராமா னுசனை, இருங்கவிகள்

புனையார் புனையும் பெரியவர் தாள்களில் பூந்தொடையல்

வனையார். பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள்சுரந்தே.

__BR__ அரங்கனை விளக்கிய இராமானுசன் பெரும் புண்ணியன்

மருள்சுரந் தாகம வாதியர் கூறும்,அவப்பொருளாம்

இருள்சுரந் தெய்த்த உலகிருள் நீங்கத்,தன் ஈண்டியசீர்

அருள்சுரந் தெல்லா வுயிர்கட்கும் நாதன் அரங்கனென்னும்

பொருள்சுரந் தான்,எம் இராமா னுசன்மிக்க புண்ணியனே.

__BR__ இராமானுச!எனக்கும் அருள் செய்தாயே!காரணம் என்ன?

புண்ணிய நோன்பு புரிந்துமி லேன்,அடி போற்றிசெய்யும்

நுண்ணருங் கேள்வி நுவன்றுமி லேன்,செம்மை நூற்புலவர்க்

கெண்ணருங் கீர்த்தி இராமா னுச!இன்று நீபுகுந்தென்

கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும், நின்றவிக் காரணம் கட்டுரையே.

__BR__ இராமானுசன் என் தீவினையை வேரோடு களைந்தான்

கட்டப் பொருளை மறைப்பொரு ளென்று, கயவர்சொல்லும்

பெட்டைக் கெடுக்கும் பிராணல்ல னே,என் பெருவினையைக்

கிட்டிக் கிழங்கொடு தன்னருள் என்னுமொள் வாளுருவி

வெட்டிக் களைந்த, இராமா னுசனென்னும் மெய்த்தவனே.

__BR__ இராமானுசனின் புகழையே போற்றுவேன்

தவந்தரும் செல்வம் தகவும் தரும்,சலி யாப்பிறவிப்

பவந்தரும் தீவினை பாற்றித் தரும்,பரந் தாமமென்னும்

திவந்தரும் தீதில் இராமா னுசன்தன்னைச் சார்ந்தவர்கட்

குவந்தருந் தேன்,அவன் சீரன்றி யானென்றும் உள்மகிழ்ந்தே.

__BR__ யாவருக்கும் வீடளிக்கவே இராமானுசன் வேதங்களை வளர்த்தான்

உண்ணின் றுயிர்களுக் குற்றன வேசெய்து, அவர்க்குயவே

பண்ணும் பரனும் பரிவில னாம்படி, பல்லுயிர்க்கும்

விண்ணின் தலைநின்று வீடளிப் பானெம் இராமானுசன்

மண்ணின் தலத்துதித்து, உய்மறை நாலும் வளர்த்தனனே.

__BR__ இராமானுசனே எம் இறைவன்

வளரும் பிணிகொண்ட வல்வினை யால்,மிக்க நல்வினையில்

கிளரும் துணிவு கிடைத்தறி யாது, முடைத்தலையூன்

தளரும் அளவும் தரித்தும் விழுந்தும் தனிதிரிவேற்

குளரெம் இறைவர், இராமா னுசன்றன்னை உற்றவரே.

__BR__ அடிமை செய்ய என்னைத் தூண்டியவன் இராமானுசன்

தன்னையுற் றாட்செய்யும் தன்மையி னோர்,மன்னு தாமைரைத்தாள்

தன்னையுற் றாட்செய்ய என்னையுற் றானின்று, தன்தகவால்

தன்னையுற் றாரன்றித் தன்மையுற் றாரில்லை என்றறிந்து

தன்னையுற் றாரை, இராமா னுசன்குணம் சாற்றிடுமே.

__BR__ மனமே இராமானுசனே சரணம் என்று கூறு

இடுமே இனிய சுவர்க்கத்தில், இன்னம் நரகிலிட்டுச்

சுடுமே யவற்றைத் தொடர்தரு தொல்லைச், சுழல்பிறப்பில்

நடுமே யினிநம் இராமா னுசன்நம்மை நம்வசத்தே

விடுமே சரணமென் றால்,மன மே!நையல் மேவுதற்கே?

__BR__ இராமானுசனால் நீசர் மாண்டனர்

தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும், தாழ்சடை யோன்

சொற்கற்ற சோம்பரும் சூனிய வாதரும், நான்மறையும்

நிற்கக் குறும்புசெய் நீசரும் மாண்டனர் நீணிலத்தே

பொற்கற் பகம்,எம் இராமா'னுசமுனி போந்தபின்னே.

__BR__ இராமானுச நின் திருவடிகளிலேயே என்னை இருத்து

போந்ததென் னெஞ்சென்னும் பொன்வண்டு, உனதடிப் போதில் ஒண்சீர்

ஆம்தெளி தேனுண் டமார்ந்திட வேண்டி,நின் பாலதுவே

ஈந்திட வேண்டும் இராமா னுச!இது அன்றியன்றும்

மாந்தகில் லாது,இனி மற்றொன்று காட்டி மயக்கிடலே.

__BR__ இராமானுசன் என்னை உய்யக்கெண்டான்

மயக்கும் இருவினை வல்லியிற் பூண்டு,மதிமயங்கித்

துயக்கும் பிறவியில் தோன்றிய என்னைத் துயரகற்றி

உயக்கொண்டு நல்கும் இராமா னுச!என்று துன்னையுன்னி

நயக்கும் அவர்க்கி திழுக்கென்பர், நல்லவர் என்றும்நைந்தே.

__BR__ இராமானுச!நின்னருள் என்னிடம் எப்படி வளர்ந்தது?

நையும் மனமுன் குணங்களை உன்னி,என் நாவிருந்தெம்

ஐயன் இராமா னசனென் றழைக்கும், அருவினையேன்

கையும் தொழும்கண் கருதிடுங் காணக் கடல்புடைசூழ்

வையம் இதனில்,உன் வண்மையென் பாலென் வளர்ந்ததுவே?

__BR__ இராமானுசன் எனக்கு நன் ஞானம் அளித்தான்

வளர்ந்தவெங் கோப மடங்கலொன் றாய்,அன்று வாளவுணன்

கிளர்ந்தபொன் னாகம் கிழித்தவன், கீர்த்திப் பயிரெழுந்து

விளைந்திடும் சிந்தை இராமா னுசனென்றன் மெய்வினைநோய்

களைந்துநன் ஞானம் அளித்தனன், கையிற் கனியென்னவே.

__BR__ இராமானுச நின் புகழ் பேசுவது ஒன்றுதான் எனக்கு வேண்டும்

கையிற்ற கனியென்னக் கண்ணனைக் காட்டித் தரிலும்,உன்றன்

மெய்யிற் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான்,நிரயத்

தொய்யில் கிடக்கிலும் சோதிவிண் சேரிலும் இவ்வருள்நீ

செய்யில் தரிப்பன், இராமா னுச!என் செழுங்கொண்டலே!

__BR__ அடியேனுக்கு இருப்பிடம் இராமானுச பக்தர் கூட்டமே

செழுந்திரைப் பாற்கடல் கண்டுயில் மாயன், திருவடிக்கீழ்

விழுந்திருப் பார்நெஞ்சில் மேவுநன் ஞானி,நல் வேதியர்கள்

தொழுந்திருப் பாதன் இராமா னுசனைத் தொழும்பெரியோர்

எழுந்திரைத் தாடும் இடம்அடி யேனுக் கிருப்பிடமே.

__BR__ இராமானுசனின் இருப்பிடம் என் இதயம்

இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம், மாலிருஞ் சோலையென்னும்

பொருப்பிடம் மாயனுக் கென்பர்நல் லோர்,அவை தன்னொடுவந்

திருப்பிடம் மாயன் இராமா னுசன்மனத் தின்றவன்வந்

திருப்பிடம், என்றன் இதயத்துள் ளேதனக் கின்புறவே.

இராமானுச என்னை உன் அடியார்க்கடியன் ஆக்கு

இன்புற்ற சீலத் திராமா னுச,என்றும் எவ்விடத்தும்

என்புற்ற நோயுடல் தோறும் பிறந்திருந்து, எண்ணரிய

துன்புற்று வீயினம் சொல்லுவ தொன்றுண்டுன் தொண்டர்கட்கே

அன்புற் றிருக்கும் படி,என்னை யாக்கியங் காட்படுத்தே.

மனமே இராமானுசனின் திருவடி நம் தலைமீது தாங்கவேண்டுமென்று திருமகளைப் போற்றுவோம்

அங்கயல் பாய்வயல் தென்னரங் கன்,அணி ஆகமன்னும்

பங்கய மாமலர்ப் பாவையைப் போற்றுதும், பத்தியெல்லாம்

தங்கிய தென்னத் தழைத்துநெஞ் சே!நந் தலைமிசையே

பொங்கிய கீர்த்தி, இராமா னசனடிப் பூமன்னவே.

தசக அடிவரவு - பூ சீரிய GF ஆண்டு மண் அடி கொழுந்து சார்ந்தது சோர்வு மருள் மயக்கும்.

திருவரங்கத்தமுதனார் திருவடிகளே சரணம்

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is இராமானுச நூற்றந்தாதித் தனியன்கள்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  இயல் காற்று (வடகலை ஸம்ப்ரதாயம்)
Next