பெருமாநீள்படை

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

முதற்பத்து

பெருமாநீள்படை

'பகவான் நம் மீது கொண்டிருக்கும் அன்பு, இரக்கம், அநுக்ரஹம் ஆகியவை இயற்கை. இவை நம் செயலால் ஏற்படுபவை அல்ல' என்கிறார் ஆழ்வார்.

கலி விருத்தம்

கருமாணிக்கம் என் கண்ணில் உள்ளது

2774. பொருமா நீள்படை யாழிசங் கத்தொடு,

திருமா நீள்கழல் ஏழுல கும்தொழ,

ஒருமா ணிக்குற ளாகி நிமிர்ந்த,அக்

கருமா ணிக்கமென் கண்ணுள தாகுமே.

பக்தியுடன் தொழுதால் பரமன் நம் எதிரில் நிற்பான்

2775. கண்ணுள் ளேநிற்கும் காதன்மை யால்தொழில்

எண்ணி லும்வரும் என்னினி வேண்டுவம்,

மண்ணும் நீரு மெரியும்நல் வாயுவும்,

விண்ணு மாய்விரி யுமெம்பி ரானையே?

மனமே எம்பிரானையே தொழு

2776. எம்பி ரானையெந் தைதந்தை தந்தைக்கும்

தம்பி ரானை,தண் டாமரைக் கண்ணனை,

கொம்ப ராவுநுண் ணேரிடை மார்வனை,

எம்பி ரானைத்தொ ழாய்மட நெஞ்சமே!

நெஞ்சே!நீ எப்போதும் எம்பெருமானை விடாதே

2777. நெஞ்ச மே!நல்லை நல்லை!உன் னைப்பெற்றால்

என்செய் யோம்?, இனி யென்ன குறைவினம்?,

மைந்த னைமல ராள்மண வாளனை,

துஞ்சும் போதும் விடாது தொடர்கண்டாய்.

நெஞ்சே!மூவடி கொண்டானை நீயும் கண்டாயே

2778. கண்டாயே நெஞ்சே!கருமங்கள் வாய்க்கின்று, ஓர்

எண்டானு மின்றியே வந்தி யலுமாறு

உண்டா னையுல கேழுமோர் மூவடி,

கொண்டா னை,கண்டு கொண்டனை நீயுமே.

நாம் துன்பத்தை அடைய விடான் மணிவண்ணன்

2779. நீயும் நானுமிந் நேர்நிற்கில், மேல்மற்றோர்,

நோயும் சார்கொடான் நெஞ்சமே!சொன்னேன்,

தாயும் தந்தையு மாயிவ் வுலகினில்

வாயு மீசன் மணிவண்ண னெந்தையே.

எந்தையே!'எம்பெருமானே!'என்று சொல்வேன்

2780. எந்தை யேயென்றும் எம்பெருமா னென்றும்,

சிந்தை யுள்வைப்பன் சொல்லுவன் பாவியேன்,

எந்தை யெம்பெரு மானென்று வானவர்,

சிந்தை யுள்வைத்துச் சொல்லும்செல் வனையே.

செல்வ நாரணன் என்னை விடான்

2781. செல்வ நாரணன் என்றசொல் கேட்டலும்,

மல்கும் கண்பனி நாடுவன் மாயமே,

அல்லு நன்பக லுமிடை வீடின்றி,

நல்கி, என்னை விடான்நம்பி நம்பியே.

ஆதியஞ்சோதியை நான் மறப்பேனோ?

2782. நம்பி யைத்தென் குறுங்குடி நின்ற,அச்

செம்பொ னேதிக ழும்திரு மூர்த்தியை,

உம்பர் வானவ ராதியஞ் சோதியை,

எம்பி ரானையென் சொல்லி மறப்பனோ!

என் மணியை இனி மறவேன்

2783. மறப்பும் ஞானமும் நானொன் றுணர்ந்திலன்,

மறக்கு மென்றுசெந் தாமரைக் கண்ணொடு,

மறப்பற என்னுள்ளே மன்னினான் றன்னை,

மறப்ப னேவினி யானென் மணியையே?

இவற்றைப் படித்தால் கல்வியறிவு வாய்க்கும்

2784. மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர்

அணியை, தென்குரு கூர்ச்சட கோபன்,சொல்

பணிசெ யாயிரத் துள்ளிவை பத்துடன்,

தணிவி லர்கற்ப ரேல்கல்வி வாயுமே.

நேரிசை வெண்பா

மாறனை வணங்கி வாழ்த்திடுக

பொருமாழி சங்குடையோன்,பூதலத்தே வந்து,

தருமாறோ ரேதுவறத் தன்னை, - திரமாகப்

பார்த்துரைசெய் மாறன் பதம்பணிக என்சென்னி,

வாழ்த்திடுக என்னுடை வாய்.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is இவையும் அவையும்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  வாயுந்திரை
Next