ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்


ஸ்ரீ காமகோடி ப்ரதீபம்
மலர் -21 இதழ் -9,10 ரௌத்ர வருஷம் ஐப்பசி- கார்த்திகை1
அக்டோபர்- நவம்பர் - 1980


ஸ்ரீ பாஸ்கர ராயர்

கி.வா.ஜகந்நாதன்

அம்பிகையைப் பரதேவதையாகக் கொண்டு வழிபடும் பக்தர்கள் ஸ்ரீ வித்யோபாசகர்கள். அவர்களுக்கு வேதத்தைப் போலப் புனித நூலாக விளங்குவது ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம். அதற்குப் பலர் பாஷ்யம் எழுதியிருக்கிறார்கள். அவற்றில் எல்லாம் சிறப்பாக இருப்பது ஸ்ரீ பாஸ்கரராயர் இயற்றிய பாஷ்யம். ஸௌபாக்ய பாஸ்கரம் என்று அதற்குப் பெயர்.

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் பிரம்மாண்ட புராணத்தின் உத்தர காண்டத்தில் உள்ள லலிதோபாக்கியானத்தில் இருக்கிறது.

பாஸ்கர ராயர் பதினேழாவது நூற்றாண்டில் தோன்றியவர். மகாராஷ்டிர தேசத்தில் உள்ள பாகா என்னும் ஊரில் கம்பீர ராயர் என்னும் பேரறிஞருக்கும் கோனாம்பிகை என்னும் அன்னைக்கும் புதல்வராக உதித்தார். இவரைத் தந்தையார் உரிய காலத்தில் காசிக்கு அழைத்துச் சென்று அங்கே உபநயனம் செய்து வைத்தார். ந்ருஸிம்ஹாத்வரி என்னும் பண்டிதரிடத்தில் இவர் வேத சாஸ்திரங்களைக் கற்றார். ஏழாம் ஆண்டிலேயே இவர் தம்முடைய அறிவுச் சிறப்பால் சபேசுவரர் என்ற அரசருடைய பெருமதிப்பைப் பெற்றார். கங்காதர வாஜபேயி என்பவரிடம் தர்க்க சாஸ்திரத்தைப் பயின்றார். அதர்வ வேதத்தில் ஆழ்ந்த பயிற்சி உடையவரானார்.

சிவதத்த சுக்லர் என்பவர் இவருக்கு ஸ்ரீ வித்யையை உபதேசித்தார். பாஸூரானந்த நாதர் என்னும் தீஷா நாமத்தை இவர் பெற்றார். ஆனந்தி என்னும் பெண்மணியை இவர் மணம் புரிந்துகொண்டார். பிறகு பார்வதி என்ற மங்கையையும் மணந்தார். பல இடங்களுக்குச் சென்று பலரோடு வாதம் செய்து வெற்றி பெற்றார். காசியில் ஸோமயாகம் செய்தார். இவருடைய புகழ் எங்கும் பரவியது.
இவருடைய ஆசிரியராகிய கங்காதர வாஜபேயி என்பவர் தமிழ் நாட்டில் காவிரிக் கரையில் உள்ள திருவாலங்காட்டில் வாழ்ந்து வந்தார். இவர் சில காலம் கிருஷ்ணா நதிக்கரையில் தங்கியிருந்தார். அப்பால் தமிழ் நாட்டிற்கு வரவேண்டுமென்ற விருப்பம் ஏற்பட்டது. அக்காலத்தில் தஞ்சையில் மகாராஷ்டிர மன்னர் ஆண்டு வந்தார். அந்த மன்னர் பாஸ்கர ராயருடைய பெருமையை அறிந்து வழிபட்டார். ஆகவே இவருக்கு ஓர் அக்ரகாரத்தையே வழங்கினார். பாஸ்கர ராயர் அங்கே தங்கித் தம்முடைய கடமைகளை ஆற்றிவந்தார். பல நூல்களை இயற்றினார். இவர் வாழ்ந்தமையால் அந்த ஊர் பாஸ்கர ராஜபுரம் என்ற பெயரைப் பெற்று விளங்குகிறது.

இறுதிக் காலத்தில் இவர் திருவிடைமருதூரில் வந்து வாழ்ந்தார். மகாதானத் தெருவில் ஒரு வீட்டில் இருந்து வந்தார். இவருடைய பெருமையை அறிந்த பல பெரியவர்களும் ஸ்ரீ வித்தியோபாசகர்களும் இவரை வந்து தரிசித்துச் சென்றார்கள். மந்திர சாஸ்திரத்தில் கரைகண்ட பெரும் புலவராகிய இவரிடம் தம் ஐயங்களைச் சொல்லித் தெளிவு பெற்றுச் சென்றார்கள்.

மாலை வேளையில் தம்முடைய இல்லத்தில் வாசல் திண்ணையில் இவர் அமர்ந்திருப்பார். தம் காலைத் தூணில் உதைந்துகொண்டு திண்ணையில் சாய்ந்தபடியே இருப்பாராம். திருவிடைமருதூரில் எழுந்தருளிய ஶ்ரீமகாலிங்க சுவாமியைத் தரிசித்து வருவதற்காக மாலை வேளையில் அந்த வீதிவழியே ஒரு சந்நியாசி போவாராம். அப்போதும் பாஸ்கர ராயர் தம் காலை மடக்காமல் தூணில் உதைந்தபடியே அமர்ந்திருப்பாரம். துறவியாகிய தமக்கு இல்லறத்தாராகிய இவர் மரியாதை தரவில்லையே என்று அந்தச் சந்நியாசிக்குக் கோபம்.

ஒருநாள் பாஸ்கர ராயர் திருவிடைமருதூர்த் திருக்கோயிலுக்குச் சென்றார். அப்பொது அந்தத் துறவியும் வந்திருந்தார். அவை இவரை கண்டதும் தம் கோபத்தை வெளிபடுத்த எண்ணிணார். அருகிலிருந்த சிலரிடம், "இவர் அகங்காரியாக இருக்கிறார். சந்நியாசியைக் கண்டால் எழுந்து நின்று வணங்குவது இல்லரத்தாருக்கு முறை. இவர் வாசல் பக்கம் காலை நீட்டிக்கொண்டிருப்பார். என்னைக் கண்டு காலை மடக்குவது கூட இல்லை" என்று சொன்னார்.

:இவர் பெரிய மகான். ஸ்ரீ வித்தையில் இவருக்கு நிகராக யாரும் இல்லை. இவர் அப்படிச் செய்திருக்கமாட்டார். தாங்கள் வேறு யாரையோ கண்டிருப்பீர்கள்" என்று சிலர் சமாதானம் கூற வந்தார்கள்.

"இவர்தான் அப்படி உட்கார்ந்திருந்தார். என் கண்ணையே நான் நம்பமுடியாதா"? என்றார் துறவி.

அப்போது சிலர், பாஸ்கர ராயரைப் பார்த்து, "சுவாமி, இந்த யதி சொல்வது உண்மைதானா? உண்மையானால் அப்படித் தாங்கள் செய்தது நியாயமாகுமா?" என்று கேட்டார்கள்.

இவர் சிரித்துக் கொண்டே, "நான் எழுந்து சென்று இவரை வணங்கியிருந்தால் இவருக்கு ஆபத்து வந்திருக்கும்" என்றார்.

"இது வீண் கற்பனை. எனக்கு மரியாதை கொடுக்காததோடு இப்படி ஒரு மிரட்டலும் செய்கிறார்" என்றார் துறவி. "அப்படி என்ன ஆபத்து வரும்?" என்று கேட்டார்.

உடனே பாஸ்கர ராயர், "சுவாமி, தங்களை நான் வணங்க எண்ணினாலும் அது தீங்காக முடியுமே என்று எண்ணி அப்படிச் செய்யவில்லை. தங்களுடைய தண்ட கமண்டலங்களையும் மேலே அணிந்த காஷாய வஸ்திரத்தையும் தனியே வையுங்கள். அவற்றை நான் வணங்குகிறேன். அவற்றிற்கு என்ன கதி நேருகின்றதென்பதைக் கண்ட பிறகும், தங்களை வணங்கச் சொன்னால் அப்படியே செய்கிறேன்" என்றார்.

உடன் இருந்தவர்கள் யாவரும் என்ன நிகழப்போகிறதோ என்ற ஆவலுடன் இருந்தனர். சந்நியாசி தம் தண்ட கமண்டலங்களையும் காஷாய உடையையும் ஓர் இடத்தில் வைத்துவிட்டு விலகி நின்றார். பாஸ்கர ராயர், "மஹாத்ரிபுரஸுந்தரி" என்று சொல்லிக்கொண்டே அவற்றின்முன் விழுந்து நமஸ்காரம் செய்தார். என்ன ஆச்சரியம்! அடுத்த கணத்தில் அவை துண்டு துண்டாக உடைந்தும் கிழிந்தும் போயின. கண்டவர்கள் யாவரும் வியந்தனர். துறவி பாஸ்கர ராயருடைய பெருமையை நினைத்து அஞ்சலி செய்தார். "தாங்கள் இல்லறவாசியானலும் துறவிகளுக்கு எல்லாம் மேற்பட்டவர்" என்று சொல்லிப் போற்றினார்.

காசியில் இவர் இருந்தபோது இவர் ஒரு யாகம் செய்தார். அப்போது பல சாஸ்திர விற்பன்னர்கள் அங்கே வந்திருந்தார்கள். இவரிடம் பொறாமைகொண்ட பலர் இவரை அணுகிப் பல கேள்விகளைக் கேட்டார்கள். அவற்றிற்கெல்லாம் தக்கபடி இவர் விடையிறுத்தார். வேதம், சாஸ்திரம், மந்திர சாஸ்திரம் முதலிய பலவற்றில் அவர்கள் வினா எழுப்பினார்கள். அவற்றுக்கெல்லாம் இவர் உடனுக்குடன் விடையிறுத்து வந்தார். அவற்றைக் கேட்டுப் பலரும் இவரை வணங்கி வழிபட்டனர்.

லலிதா ஸஹஸ்ரநாமத்தில் "மஹாசதுஷ்ஷஷ்டிகோடி யோகினீ கண ஸேவிதா" என்பது ஒரு திருநாமம். "அறுபத்து நான்கு யோகினிக் கூட்டத்தினரால் போற்றி வழிபடப்படுகிறவள்" என்பது அதன் பொருள். ஒரு பொறாமைக்காரர் இவரை அணுகி, "அந்த அறுபத்து நான்கு கோடி யோகினிகளப் பற்றிய விவரங்களைச் சொல்வீர்களா"? என்று கேட்டார்.

"சொல்லுகிறேன். நீங்கள் எழுதிக்கொள்ளுங்கள்" என்றார் இவர்.

உடனே அவர் ஏடும் எழுத்தாணியும் கொண்டு வந்து எழுதச் சித்தமானார். பாஸ்கர ராயர் ஒவ்வொரு யோகினியின் பெயரையும் அவளைப்பற்றிய விவரங்களையும் சொல்லத் தொடங்கினார்.

எழுதுகிறவர், "இவர் எவ்வளவு பேர்களைச் சொல்லப் போகிறார்! நூறு பேரைச் சொன்னாலே பெரிது" என்ற அலட்சிய பாவத்தோடு எழுதலானார். பாஸ்கர ராயரோ தட்டுத் தடங்கலின்றிச் சொல்லிக்கொண்டே வந்தார். எழுதுகிறவர் முதலில் உற்சாகத்துடன் எழுதினார். பிறகு சற்றே தளர்ச்சியுடன் எழுதினார். அப்புறம் பல்லைக் கடித்துக்கொண்டு எழுதினார். அவர் கை வலித்தது. விரல்கள் சிவந்தன.

அவருடைய சிரமத்தையறிந்து சற்றே நிதானமாகச் சொல்லத் தொடங்கினார் இவர். அவர் எழுதிப் பார்த்தார். இனிமேல் எழுத முடியாது என்ற நிலை வந்தது. ஏட்டையும் எழுத்தாணியையும் அப்படியே வைத்தார். இவருடைய திருவடிகளில் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணினார். "சுவாமி, என்னை மன்னிக்க வேண்டும். நான் அறியாமையால் தங்களைப் பரிசோதிக்கத் தொடங்கினேன். அதற்குரிய தண்டனையை இந்த அளவிலே பெற்றது போதும். என்னை க்ஷமித்து எனக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டும். தாங்கள் மனிதப் பிறவியல்ல. அம்பிகையின் திருவருள் முழுதும் பெற்ற தெய்வப் பிறவி" என்று சொல்லி விம்மினார்.

"உங்களுக்கு கஷ்டமாயிருப்பதை முன்பே சொல்லக்கூடாதோ? நான் அப்போதே நிறுத்திக்கொண்டு, மறுபடியும் சௌகரியமான நேரத்தில் வந்து எழுதும்படி சொல்லியிருப்பேனே! உங்களுக்கு விருப்பமானால் மறுபடியும் வந்து சேருங்கள்’ சொல்லுகிறேன். எழுதிக்கொள்ளலாம்" என்றார் இப்பெரியார்.

"அபசாரம்! அபசாரம்! இனிமேல் தங்களுக்கு இத்தகைய அபசாரத்தைச் செய்ய மாட்டேன்" என்று சொல்லி அவர் விடைபெற்றுச் சென்றாரம்.

பாஸ்கர ராயர் தம்முடைய 95-ஆவது வயசில் திருவிடைமருதூரில் அம்பிகையின் திருவடிகளை அடைந்தார். பாஸ்கரராஜபுரத்தில் இவரைச் சமாதி செய்து அதிஷ்டானத்தை நிருமித்தார்கள். இவருடைய மூத்த மனைவியார் அங்கே ஸ்ரீ பாஸ்கரேசுவரர் ஆலயத்தை அமைத்து வழிபட்டார். அந்த ஆலயத்தில் இன்றும் பூஜை முதலியவை முறையாக நடைபெற்று வருகின்றன. ஆனந்தவல்லி என்பது இந்தக் கோயிலில் உள்ள அம்பிகையின் திருநாமம்.

பாஸ்கய ராயர் நாற்பதுக்கு மேற்பட்ட நூல்களை இயற்றியிருக்கிறார். மீமாம்ஸா பாஷ்யம், வியாகரணம், யாப்பியல், ஸ்ம்ருதி, துதிகள், மந்திர சாஸ்திரம், பாஷ்யங்கள் ஆகிய பல துறைகளில் அமைந்தவை அவை. காசி முதலிய இடங்களில் சில ஆலயங்களை நிறுவியிருக்கிறார்.

இவருடைய லலிதா ஸஹஸ்ரநாம பாஷ்யத்தைப் பார்த்தால் இவருடைய மேதாவிலாசம் நன்கு புலப்படும். வேதம், ஆகமம், புராணம், மந்திர சாஸ்திரம், ஸ்ரீ வித்யை முதலியவற்றில் இவருக்குள்ள பரந்த அறிவு யாவரையும் வியப்பில் ஆழ்த்துவதற்குரியது. இவருடைய மாணாக்கர்கள் பலர். அவர்களில் ஒருவராகிய, ஜகந்நாதர் என்ற உமாநாதர் ஸ்ரீ பாஸ்கர விலாஸம் என்ற நூலில் இவருடைய பெருமையையெல்லாம் விரித்துரைத்திருக்கிறார்.

லலிதா ஸஹஸ்ரநாம பாஷ்யத்தில் இவர் 168 நூல்களிலிருந்து மேற்கோள்காட்டுகிறார். உபநிஷத்துக்கள், ஸ்மிருதிகள், புராணங்கள், தந்திரசாஸ்திரங்கள், தோத்திர நூல்கள், காவிய, கல்பசூத்திரங்கள், ஆகமங்கள், உபபுராணங்கள், கீதை, இதிகாசங்கள், யோக சாஸ்திரம், ஸம்ஹிதைகள் என்ற பலவகை நூல்களை இவர் நன்கு அறிந்திருந்தார் என்பதை அந்த மேற்கோள்கள் தெளிவுபடுத்தும்.

இத்தகைய மகானுடைய அதிஷ்டானத்திருக்கோயில் தமிழ் நாட்டில் இருப்பது இந்த நாட்டின் பெருமையை அதிகப்படுத்துகிறது. மகான்களுடைய திருக்கோயில்கள் தனிச்சிறப்புடையவை. பல பெரிய தலங்கள் சித்தர்களுடைய சமாதியின் மேல் எழுந்தவை. அவை வழிபடுபவர்களுக்குப் பலவித நன்மைகளை அளித்துக்கொண்டு விளங்குகின்றன. பாஸ்கரராஜபுரத்திலுள்ள பாஸ்கரேசுவரர் திருக்கோயிலும் அத்தகைய புனித ஆலயங்களில் ஒன்று.

நன்றி : கலைமகள்

~~~~~~~

Home Page