ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்


ஸ்ரீ காமகோடி ப்ரதீபம்
மலர் -21 இதழ் -9,10 ரௌத்ர வருஷம் ஐப்பசி- கார்த்திகை1
அக்டோபர்- நவம்பர் - 1980


களை இழக்காத கண்கள்

கே.வி. சேஷாத்ரிநாத சாஸ்திரி

வேதத்தின் கண்கள் ஜோதிடம். (வேதஸ்ய சக்க்ஷி: கில சாஸ்திர மேதத்)

கண்ணனின் கண்கள் சூரியனும் சந்திரனும். (சந்திர சூர்யௌ ச நேத்ரே) அந்தணனின் கண்கள் ச்ருதியும் ஸ்ம்ருதியும். (ச்ருதி ஸ்ம்ருதி ரூபே நேத்ரே த்விஜஸ்ய பரிசக்ஷதே)

ஜோதிடத்தின் துணையோடு காலத்தை அறிந்து ச்ரௌதத்தையும் ஸ்மார்த்தத்தையும் பகவதர்ப்பணமாகச் செய்து முடித்தால், காலம் வரும் பொழுது கண்ணன் நமது விருப்பங்களைப் பூர்த்தி செய்கிறான்.

தர்மத்தைக் கண்டுகொள்ள இந்த இரு கண்கள் தேவை. ஆனால் இந்தக் கண்களுக்கும் நம் கண்களுக்குமிடையே வேறுபாடு உண்டு. நம் கண்களுக்கு தர்மத்தைப் பார்க்கும் சக்தி கிடையாது. காலப்போக்கில் நம் கண்களின் பார்வை குறைந்துவிடும். சாளேச்வரம் வரும். உதவிக்குக் கண்ணாடியை நாடுவோம். காமாலைக் கண்கள் பொருளைத் தப்பாகப் பார்க்கும். மாலைக்கண் இரவில் செயல் படாது. கிட்டபார்வை, எட்டப் பார்வை, மற்றும் ஊனக்கண் இப்படி பல மாறுபாடுகள். இதற்கு முற்றிலும் மாறுபட்டவை தர்மத்தைக் கண்டு கொள்ளும் கண்கள். அதன் தகுதி என்றும் குன்றாது. தர்மத்தை விளக்கிக்காட்டும். அதற்கு ஸநாதனம் என்று ருஷிகள் வைத்த பெயர்.

அதில் ஒன்று இழக்கப்பட்டால் ஒற்றைக் கண்ணன் (காணன்); இரண்டுமே இல்லை என்றால் குருடன் (அந்தன்).

[ஏகேன ஹீன: காண: ஸ்யாத், த்வாப்யாம் அந்த: ப்ரசக்ஷதே] கண்ணிழந்தவன் ஒளியிழக்கிறான். ச்ருதி ஸ்ம்ருதிகளை இழந்தவன் தர்மத்தை இழக்கிறான். "இலை, புஷ்பம், பழம், தீர்த்தம் - இவை பக்தியோடு அளிக்கப்படும் போது நான் மகிழ்ச்சி அடைவேன். ஆதரவு அளிப்பேன்" - என்கிறான் கண்ணன்.

[பத்ரம்-புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி] பக்தியிருக்கிறது, கைகள் இருக்கின்றன. கண்ணன் பாதகமலங்களில் அர்ப்பணித்துவிடுவேன். கண்ணன் இருக்க கவலை இல்லை. ஆமாம், ரொம்பவும் பிடித்தமாக இருக்கிறது. ஆனால் கண்ணன் விரும்பும் இலை, புஷ்பம், பழம், தீர்த்தம் இவை எந்தக் கண்களால் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது? நமது கண்கள் அவனுக்குப் பிரியமானதைத் தெரிந்து கொள்ளாது. எளிய முறையான பக்தியைப் பின்பற்றவும் ச்ருதி-ஸ்ம்ருதி இரண்டும் தேவைப்படுகின்றன. கண்ணனே மறைமுகமாக இதைப் போதிக்கிறான்.

"ச்ருதி-ஸ்ம்ருதி இரண்டும் எனது கட்டளைகள், அவைகளை மீறுபவன் எனது கட்டளையை மீறுகிறான். எனக்குத் தீங்கு இழைக்கிறான். எனது பக்தனாக இருந்தாலும் எனக்கு அவனிடம் ப்ரியம் இருக்காது" - என்பது கண்ணன் கருத்து.

[ச்ருதி ஸ்ம்ருதி மமைவாக்ஞே யஸ்த உல்லங்க்ய கச்சதி ஆக்ஞாச்சேதி மம த்ரோஹி மத்பக்தோபி ந மே ப்ரிய:]

கருப்புக்கண்ணாடி குருட்டுத்தனத்தை ஸமுதாயத்திற்குத் தெரியாமல் மறைத்துவிடும். கண்ணன் எங்கும் நிறைந்திருக்கிறான்; உள்ளத்திலும் குடிகொண்டிருக்கிறான். எல்லாம் அறிந்தவன். அவன் நம்மை சோதித்துப் பார்த்துத்தான் ஏற்றுக் கொள்கிறான். கஜேந்திரனும், குசேலனும், த்ரௌபதியும் நமது நினைவில் பதிந்தவர்கள்.

நமது ரிஷிகள் கருணாமூர்த்திகள். நாம் வாழும் ஸமுதாயத்தை ஒட்டி நமது தகுதியையும் கவனித்து நடைமுறையில் கடைப்பிடிக்கக்கூடிய வகையில் தர்மங்களை எளிதாக்கி அனுக்ரஹித்திருக்கிறார்கள். பொருளாதாரத்தின் ஏற்றத் தாழ்வோ, நமது உடல் வலிமையின் மாறுபாடோ, தர்மத்தைக் கடைப்பிடிக்க இடையூறாக இராது. அவரவர் தகுதிக்கு ஏற்றவாறு பாகுபடுத்தி எளிதாக்கித் தந்திருக்கிறார்கள். நாம் விருப்பபடி செயல் படலாம். விருப்பம் தான் வேண்டும். விருப்பம் இல்லாவிட்டாலும் வரும் தலைமுறையினருக்கு இந்த வழியை அடைத்து விடாமல் நாம் காப்பாற்றிக் கொடுப்பது தர்மம்.

களை இழக்காத கண்களை காட்டிகொடுத்தாலே போதுமானது.

~~~~~~~

Home Page