ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்


ஸ்ரீ காமகோடி ப்ரதீபம்
மலர் -21 இதழ் -9,10 ரௌத்ர வருஷம் ஐப்பசி- கார்த்திகை1
அக்டோபர்- நவம்பர் - 1980


கார்த்திகை தீபம்

ஒவ்வொருவரும் தினந்தோறும் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் படுக்கையின் மேல் உட்கார்ந்து கொண்டு, உள்ளங்கைகள் இரண்டையும் கையோடு கை தேய்த்து பிறகு விரித்து கண்களுக்கு முன்னே வைத்துப்பார்க்க வேண்டும். அப்போது கீழ்க்கண்டவாறு மனதில் தியானம் செய்து கொள்ள வேண்டும்.

இரண்டு உள்ளங்கைகளினுடைய நுனிகளிலும் ஸ்ரீ லக்ஷ்மீ வசிப்பதாகவும் மத்திய பாகத்தில் ஸ்ரீஸரஸ்வதி தேவி வசிப்பதாகவும், கைகளின் அடிப்பாகத்தில் பார்வதி தேவி வசிப்பதாகவும் பாவனை செய்து கொள்ள வேண்டும்.

பிறகு கீழ்க்கண்ட சுலோகத்தைக் கைகளை கூப்பிக்கொண்டு சொல்ல வேண்டும்.

"ஸமுத்ரவஸனே தேவி பர்வதஸ்தன மண்டலே
விஷ்ணு பத்னி நமஸ்துப்யம் பாதஸ்பரிசம் க்ஷமஸ்வமே"
பொருள்: சமுத்திரத்தை ஆடையாக உடையவளும், பர்வதங்களை ஸ்தனங்களாகக் கொண்டவளும், ஸ்ரீவிஷ்ணு பத்தினியான ஹே பூமாதேவியே! நான் இப்பொழுது பூமியின் மேல் கால் வைப்பது முதல் இன்னும் பலவிதமான அபசாரங்களைச் செய்வேன். அவைகளை மன்னித்துக்கொள்.

பிறகு அத்ரி, ப்ருகு, குத்ஸ, வஸிஷ்ட, கௌதம, காச்யப, ஆங்கிரஸ முதலிய ஸப்த(ஏழு) மகரிஷிகளையும்,

அஸ்வத்தாமா, பலிசக்ரவர்த்தி, வியாசர், ஹனுமான், விபீஷணன், க்ருபர், பரசுராமர்- இந்த ஏழு சிரஞ்சீவிகளையும்,

அகல்யா, த்ரௌபதி, ஸீதா, தாரா, மண்டோதரி- இந்த ஐந்து நித்திய கன்னிகைகளையும்,

நளசக்கரவர்த்தியையும், யுதிஷ்டிரரையும் (தரும புத்திரரையும்), ஸ்ரீ கிருஷ்ணரையும் நினைத்து சகலவிதமான பாபங்களும் போகும்படி பிரார்த்தனை செய்யவேண்டும்.

பிறகு தாய், தந்தை, குரு இவர்களை மனதால் நமஸ்கரித்துவிட்டு, முகம் பார்க்கும் கண்ணாடியில் முகத்தைப் பார்த்துவிட்டு, பிறகு காலைக் கடன்களைத் தொடங்க வேண்டும்.

ஸ்ரீ லக்ஷ்மீ ஐந்து இடங்களில் வசிக்கிறாள். தாமரைப் பூவிலும், யானையின் தலைப் பாகத்திலும், பசு மாட்டின் பின் பாகத்திலும், பில்வதளத்திலும், பெண்களின் வகிட்டின் முன் பாகத்திலும் வசிக்கிறாள்.

பசு மாட்டின் சாணத்தை பக்குவப்படுத்தி அதிலிருந்து தயாரிப்பதே திருநீறு(விபூதி) ஆகும். விபூதியின் நிறம் வெளுப்பு. இறைவன் வெளுப்பாகவும் தூய்மையாகவும் இருக்கிறான் என்பதை நினைவூட்டுவதே விபூதியாகும். ஆகவே, எல்லாரும் பல் தேய்த்த பிறகும், ஸ்நானம் செய்த பிறகும் நெற்றியில் திருநீறு இட்டுக் கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி விபூதி இட்டுக் கொள்வதினால் தரித்திரம் விலகி, இறைவனின் அருளினால் ஸ்ரீ லக்ஷ்மீ கடாக்ஷம் கிடைக்கும்.
.

தமிழ் நாட்டில் அநேகம் க்ஷேத்திரங்கள் இருக்கின்றன. அந்த க்ஷேத்திரங்களில் பல புண்ணிய க்ஷேத்திரங்களும் இருக்கின்றன. அந்த க்ஷேத்திரங்களிலுள்ள அநேகம் கோவில்கள் நாயன்மார்களாலும் ஆழ்வார்களாலும் பாடல் பெற்றனவாக உள்ளன. அவைகளுள் பஞ்ச பூத க்ஷேத்திரங்கள் என்ற ஐந்து கோயில்கள் மிக முக்கியமானவை.

  1. ப்ருத்வீ (மண்மயமான) லிங்கம்- ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் கோவில், காஞ்சி க்ஷேத்திரம்

2. அப்பு- ஜலம்- லிங்கத்தைச் சுற்றி எப்போதும் ஜலம் சுரந்து கொண்டே இருக்கும். திருவானைக்காவல்.

3. வாயு- காற்று- எப்போதும் சந்நிதி தீபம் அசைந்து கொண்டே எரியும்.  ஸ்ரீ காளஹஸ்தி க்ஷேத்திரம்.

4.ஆகாயம்- ஸ்ரீ நடராஜர் கோயில் சுவரில் இடைவெளி ரூபமாக இறைவன் காட்சியளிக்கிறார். சிதம்பரம்.

5.தேஜஸ்- ஜோதிஸ்வரூபம்- நெருப்பு- திருவண்ணாமலை.  ஆண்டுதோறும் கார்த்திகை பௌர்ணமியன்று ஜோதிஸ்வரூபமாக (அக்னி வடிவமாக) இறைவன் காட்சியளித்து, இறை நினைவையூட்டும் வகையில் அண்ணாமலை தீபம் ஏற்றப்படுகிறது.

அடிமுடி காணாத ஜோதிஸ்வரூபம் தோன்றிய க்ஷேத்திரம் திருவண்ணாமலை.  முன்னொரு யுகத்தில் மூன்று அரக்கர்கள் லோகத்தை இம்சை செய்து வந்தார்கள்.  அவர்களை ஸ்ரீ பரமசிவன் தன்னுடைய புன்சிரிப்பினாலேயே ஸம்ஹாரம் செய்த நாள் திருக்கார்த்திகை பௌர்ணமியாகும்.

மகாபலி சக்ரவர்த்தி என்றோர் அரசன் இருந்தான். அவன் ஒரு காலத்தில், அரச பிறவி எடுப்பதற்கு முன் பிறவியில், எலியாக இருந்தபோது, ஓர் சிவன் கோவிலில் அணையும் தருவாயிலிருந்த தீபத்தை ஒளிரும்படியாகத் தூண்டி விட்டதாகவும், அதன் பிறகு அவன் மகாபலி சக்ரவர்த்தியாகப் பிறப்பெடுத்ததாகவும், பிறகு ஸ்ரீ பகவான் வாமனாவதாரம் எடுத்து, தனது திருவடியையே அவனது தலையில் வைத்து அருள் பாலித்ததாகவும் கூறப்படுகின்ற நன்னாளும் இந்த கார்த்திகைப் பௌர்ணமி நன்னாள் தான்.

இவ்வரலாறு ஞாபகமாகத்தான்- சக்கரவர்த்தி மகாபலியின் ஞாபகமாகத்தான் "மாவளி" சுற்றப்படுகிறது என்றும் அறியப்படுகிறது. அன்றைய தினம் பௌர்ணமியானதால், இயற்கையாகவே ஒளியுள்ள இரவாகும்; இருந்தபோதிலும் கோவில்களில் சொக்கப்பானை கொளுத்துவதின் மூலமும், வீடுகளில் தீபங்கள் ஏற்றுவதின் மூலமும் ஜனங்கள் ’மாவளி’ சுற்றுவதின் மூலமும் மேலும் ஒளியைப் பரப்புகிறோம். இதன் பொருள் அறியாமை அஞ்ஞானம் அகன்று, ஞான ஒளியும், அறிஒளியும், அத்துடன் அன்பொளியும், மங்கல ஒளியும் பெற வேண்டும் என்ற நோக்கமே.

இந்தக் கார்த்திகை உற்சவத்தில் சொக்கப்பானை கொளுத்துவது சிவன் கோயில்களில் மட்டுமில்லாமல், விஷ்ணு கோவில்களிலும், மற்றும் கிராமக் கோவில்கள் உள்பட எல்லாக் கோவில்களிலும் கொளுத்துவது மிகவும் விசேஷமாகும்.

இந்த அண்ணாமலை தீபத்திற்குக் கார்த்திகை தீபம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. கார்த்திகை மாதத்தில் க்ருத்திகா நட்சத்திரத்தை ப்ரதானமாக வைத்துக்கொண்டு அண்ணாமலை தீபம் வருவதால் இதற்கு"கார்த்திகை தீபம்" என்ற பெயரும் ஏற்பட்டது.

நன்றி-"இந்து சமய மன்றம்"

~~~~~~~

Home Page