ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்


ஸ்ரீ காமகோடி ப்ரதீபம்
மலர் -10 இதழ் -3 ஸெளம்ய வருஷம் சித்திரை மாதம் -1
13-4-1969


ஸ்ரீ சங்கர பகவத்பாதரும் ஹிந்துமத ஒற்றுமையும்

பாரத தேசத்தில் பல ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக ஸநாதன தர்மம் என்று வழக்கமாகச் சொல்லி வந்த தர்மம், இப்போது ஹிந்து மதம் என்று சொல்லப்பெற்று வருகிறது. ஸநாதன தர்மம் என்றால் ‘என்றைக்கும் உள்ள தர்மம்’ என்று பொருள். இந்தத் தர்மம் எப்போது நம் நாட்டில் ஆரம்பித்தது என்று சொல்ல முடியாது. புத்த, முஸ்லிம், கிறிஸ்துவ மதங்களைப் போல ஹிந்து மதத்தை ஆரம்பித்த தலைவர் என்று யாரையும் காணவில்லை.
மக்களுடைய பரம்பரை உணர்ச்சியில் ஹிந்து மதம் எப்போது ஆரம்பித்தது என்று ஆராயப்படவில்லை. இந்தத் தர்மத்துக்கு அடிப்படைப் பிரமாணம் வேதம். அநாதியானது; ஒருவராலும் இயற்றப்பெறாதது. இந்த வேதத்தை அடிப்படையாகக் கொண்ட தர்மம், நாளடைவில் நம் தேசத்திலேயே பல பிரிவுகளாகக் காட்சியளிக்கிறது.
பிராமணமான வேதத்தின் உட்கருத்துக்களில், அவ்வப்போது தோன்றின மதத்தலைவர்கள் வேறுபாடான கருத்துக்களை வெளியிட்டதன் பயனாக, தர்மத்தில் பல பிரிவுகள் ஏற்பட்டன என்று நாம் எண்ண வேண்டியிருக்கிறது. தெய்வ உணர்ச்சியை நல்ல முறையில் வளர்த்துத் தெய்வத்தின் உண்மையை தெரிந்து கலந்து ஒன்றாவதுதான் மனிதனின் குறிக்கோள் எபதுதான் வேதத்தின் அடிப்படை உபதேசம். தெய்வ வழிபாடு செய்வது, இந்த உணர்சியை அடைவதற்குத்தான். அதற்கான பல வழிகளை வேதத்தை நன்கு அறிந்தவர்கள் காட்டுகிறார்கள். ஆகவேதான் மத வேற்றுமைகள் நம் தேசத்தில் ஏற்பட்டன. இந்த உண்மையைக் காளிதாஸ மகாகவி பின்வரும் ச்லோகத்தில் அறிவிக்கிறார்.
பஹுதாப்யாகமைர் பிந்நா: பன்தான: ஸித்திஹேதவ: |
த்வய்யேவ நிபதந்த்யோகா ஜாஹ்நவீயா இவார்ணவே ||
மனிதனுடைய நோக்கத்தை அடைய வேதங்களினாலேயே பல வழிகள் காட்டப்பெற்றுள்ளன. இதற்கான ஓர் அழகான உவமையையும் கவி காட்டுகிறார். கங்கையிலிருந்து வரும் வெள்ளம் பல சிற்றாறுகளாக வந்து கடலில் போய்ச் சேருவது போல என்று. வேதத்திலிருந்து ஏற்பட்ட பல வழிகளும் ஒரே கடவுளையே போய் அடைகின்றன.
ஹிந்து மதப் பிரிவுகளினால் ஏற்பட்ட வேற்றுமை காரணமாக, வேதத்தின் அடிப்படைப் பிரமாணத்தை ஒப்புக்கொள்ளாத பெளத்த ஜைனர்களினால்  மேலும் அதிகமான வேற்றுமைகள் நம் நாட்டில் உண்டாயின. நாளடைவில் இந்த ஜைன பெளத்த மதங்கள் கூடப் பல உட்பிரிவுகளை ஏற்படுத்திக் கொண்டன. இவை யாவற்றையும் நாம் ஆராய்ந்து பார்க்கும்போது ஹிந்து மதம் பல வழிகளில் மக்களிடையே வேறுபாட்டை அடைந்துவிட்டது என்பது தெரிகிறது.
பிறகு, முஸ்லிம் கிறிஸ்துவ மதங்கள் இங்கே வந்தபிறகு மதமாற்றத்தில் அவர்கள் தீவிரமாக ஈடுபடவே, மத வேற்றுமைகள் மேலும் அதிகரிக்கலாயின. பாரதத்தின் தற்கால நிலை யாதெனில், உலகிலே உள்ள அத்தனை மதங்களையும் பின்பற்றும் மக்களின் பிரதி நிதிகள் இங்கே வசிக்கக் காண்கிறோம். அநேகமாக அழிந்தேபோன ஜோராஸ்டர் மதத்தை நம்புகிறவர்களான சிலர் பாரத தேசத்தில் பம்பாயில்தான் மிகுதியாக இருக்கிறார்கள்.
இந்தச் சூழ்நிலையில், பல வேற்றுமைகளுக்கும் ஆளாகியுள்ள ஹிந்து மதம் எப்படி நீடித்து வாழும் என்பதிலே ஜயப்பாடு அடைய வேண்டியதாக இருக்கிறது. ஹிந்து மதம் நீடித்து இருக்க வேண்டுமானால், பல வேற்றுமைகள் இருப்பினும் அவற்றில் ஒற்றுமையைக் கண்டு ஹிந்து மதத்தைச் சேர்ந்த மக்கள் அன்பு மனப்பான்மையை வளர்த்து, தங்களுக்குள் சண்டை இன்றி வாழ வேண்டியது மிகவும் அவசியம். அப்படி இல்லாவிட்டால் ஹிந்து மதமே அழியக்கூடிய நிலை ஏற்பட்டு விடக்கூடும் என்பது நிச்சயம்.
பாரத தேச மக்களிடம் கருணை காரணமாகவே தெய்வம் அவ்வப்போது சில பெரியோர்களை நம் நாட்டில் அவதரிக்கச் செய்து வருகிறது. அந்த மகான்கள் ஹிந்து மத ஓற்றுமைக்காகத் தம் வாழ்க்கையையே அர்ப்பித்திருக்கிறார்கள். இவ்வாறு அவதரித்த மஹான்களில் மிகச் சிறந்தவர் ஸ்ரீ சங்கர பகவத்பாதர் எனக் கூறின் மிகையாகாது.
வேதத்தின் அடிப்படைப் பிரமாணத்தை முதலில் அவர் ஸ்தாபிக்க முயன்று வெற்றியும் கண்டார். வேதங்களின் பொருளை அராய்ந்த பெரியோர்களிடத்தில் கண்ட வேற்றுமைகளிலும் ஸ்ரீ பகவத்பாதர் ஒற்றுமையைக் கண்டு, இதை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று பெருமுயற்சி செய்தார். ஹிந்து மதத்தைப் பின்பற்றுபவர்களின் வழிபாட்டு முறைகளை ஆராய்ந்து, இதில் ஆறு வழிகள் முக்கியமாக இருப்பதைக் கண்டு, இந்த ஆறு வழிபாடுகளிலும், ஒவ்வொன்றுக்கும் தனித்தனிப் பெயர் கொண்ட தெய்வம் காணினும் எல்லாமாக முடிவில் ஒரே தெய்வம்தான் என்ற உண்மையை அவர் மக்களிடையே பரப்பலானார். பல வழிபாடுகளை ஆறு வழிபாடுகளாக ஆக்கி, அவையும் ஒரே கடவுள் தத்துவத்தைத்தான் நோக்காகக் கொண்டுள்ளன என்ற பேருண்மையை ஸ்ரீ சங்கர பகவத்பாதர் கண்டதனாலும், அநேக மதங்களில் இருந்த அவைதிகமான ஆசாரங்களை நீக்கி, நடைமுறையில் இந்த ஆறு மதங்களைக் கைக்கொள்ளச் செய்ததனாலும் அவருக்கு ‘ஷண்மத ஸ்தாபனாசார்யர்’ என்ற பிரசித்தி அவர் காலம் தொடங்கியே ஏற்பட்டது. ஷண்மத ஸ்தாபனார்சார்யர் என்ற பெயர் அவருக்கு உள்ளதனால், அவர் அறு மதங்களைப் புதிதாக ஸ்தாபித்தார் என்று கொள்ளலாகாது. அவ்வாறு அவரோ அவரைப் பின்பற்றுகிறவர்களோ சொல்லவும் இல்லை.
ஸ்ரீ சங்கர பகவத்பாதர் தமது காலத்தில் எழுபத்திரண்டு மதங்களாகப் பிரிந்து இருந்தவற்றை ஆராய்ந்து, அவற்றில் பலவற்றைத் தள்ளியும், கடைசியாக அடிப்படையாகச் சைவம், வைஷ்ணவம், காணபத்யம், சாக்தம், கெளமாரம், ஸெளரம் என்ற ஆறே முக்கியமானவை என்று தீர்மானித்தும் இவற்றைப் பரப்பலானார். இந்த ஆறு மத வழிபாட்டின் பெருமைகளை ஸ்ரீபகவத்பாதர் தம்முடைய கிரந்தங்களினால் நன்றாகத் தெளிவுபடுத்தியிருக்கிறார். ஆனால், பல இடங்களில்- குறிப்பாக ‘ஹரிமீடே’ ஸ்தோத்ரம் போன்றவற்றில் – ‘ஒரே ஸத்தான பொருளுக்குத்தான் சிவன் விஷ்ணு சக்தி கணபதி ஆதித்தியன் குமாரன் என்றெல்லாம் பெயர்’ என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
மிகப் பிரசித்தரான கருப்புத்தூர் வேங்கடராம சாஸ்திரிகளின் குமாரர் கிருஷ்ணமூர்த்தி சர்மா இயற்றிய இந்த ச்லோகம் பகவத்பாதர் ஷண்மத ஸ்தாபனாசார்யர் என்பதைக் குறிக்கிறது.
ஸர்வஜ்ஞாபிதபூஸுரேண  திஷணப்ரக்யேன வாதம் சிரம்
க்ருத்வா தம் ச விஜித்ய சிஷ்யமதனோத் தத்வா துரீயாஸ்ரமம் |
ஸ்ம்ஸ்தாப்ய ச ஸந்மதானி  ஷடஸௌ த்வாஸப்ததிம் துர்மதாந்
யந்தர்தாப்ய யசஸ்விதாமதிகத: ஸ்ரீசங்கர: பாது ந: ||

ஸ்ரீ சங்கர பகவத்பாதரின் அத்வைத தத்துவத்தைப் பின்பற்றுகிறவர்கள் தினந்தோறும் தங்களுடைய பூஜாக்ரமத்தில் ‘பஞ்சாயதன’ பூஜைமுறையைப் பின்பற்றி ஆராதித்து வருகின்றனர். சிவகுமாரனான ஸ்கந்தனை இந்தப் ‘பஞ்சாயதன க்ரம’த்தில் சேர்க்காமல் தனிமையாக மூர்த்தியில் தியானித்து விசேஷ தினங்களில் வழிபட்டும் வருகின்றனர். இந்த ஆறிலும் முக்கியமாக உள்ளவை சைவமும் வைஷ்ணவமும். இந்த இரண்டு தத்துவங்களையும் விளக்கித் தனித்தனியாகப் பல நூல்கள் இருப்பினும் வேதம் என்ற சங்கிலியால் இவ்விரண்டும் இணைக்கப் பெற்றிருக்கின்றன.
ஒரே ஸத்வஸ்து பல பேதங்களையும் பெயர்களையும் அடைய வேண்டுமென்றால் அது எப்படி முடியும் என்பதையும் ஸ்ரீ பகவத்பாதர் விளக்குகிறார். ஒரே ப்ரஹ்மம் நிர்குணம் என்று இரண்டாக உள்ளதனால், உலக ஸம்பந்தம் வரையில் ஸகுணமாகும்: தனி ஸ்வரூபத்தில் நிர்குணமாகும் என்பதை, பாஷ்யம் முதலான கிரந்தங்களில் நிலைநாட்டியுள்ளார். இவ்வாறே ஸாங்க்ய நையாயிக தர்சனங்களை அலசிப் பார்த்தால் இவை எல்லாவற்றையும் உள்ளடக்கித் தனியாகப் பிரகாசிப்பது அத்வைதம் தான் என்பதையும் கிரந்தங்களின் வாயிலாகப் பல பிரபலப் பிரமாணயுக்திகளுடன் நிலை நாட்டியுள்ளார். இவ்வாறான பெருமுயற்சிகள் எல்லாமே ஹிந்துமத ஒற்றுமையை ஸ்தாபிப்பதற்குத் தான் என்பதில் ஜயமில்லை.
‘ஒன்றைக் கண்டுபிடிப்பதற்காகவும், எல்லா வழிகளிலும் ஒன்றைப் பார்ப்பதற்காகவுமே வாழ்க்கையை அர்ப்பித்தவன்’ என்று ஸ்ரீ சங்கர பகவத்பாதர் தம்மைத் தைத்திரீய உபநிஷத் பாஷ்யத்தில் கூறிக் கொள்ளுகிறார். ஒற்றுமையை நாடும் என்னை வேற்றுமையில் ஈடுபடும் பலரின் எதிரியான இருப்பதாகக் கூறுகிறீர்கள்” என்கிறார்.
ஸ்ரீ சங்கர பகவபாதர் காட்டிய இந்த மனப்பான்மையை, இக்காலத்தில் உள்ள எல்லா மதத்தினரும் பின்பற்ற வேண்டும். அவருடைய மற்றக் கொள்கைகளை ஒப்புக்கொள்ளாதவர்களுங்கூட இந்த ஒற்றுமை மனப்பான்மையைப் பின்பற்ற வேண்டுகிறோம்.

~~~~~~~

Home Page