ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்


ஸ்ரீ காமகோடி ப்ரதீபம்
மலர் -10 இதழ் -4 ஸெளம்ய வருஷம் வைகாசி மாதம்
14-5-1969


ஆழ்வார்கள் பிரபாவம்

திருமழிசையு முள்ளுணர்ந்து, தம்மில்
புலவர் புகழ்க்கோலால் தூக்க உலகுதன்னை
வைத்தெடுத்த பக்கத்தும், மாநீர் மழிசையே
வைத்தெடுத்த பக்கம் வலிது.
தம்மை நாடி வந்த தபோதனர்களான அத்ரி, ப்ருகு, வஸிஷ்டர், பார்கவர், ஆங்கிரசர் முதலிய மகரிஷிகளுக்கு எம்பெருமான் திருமழிசையின் பெருமையை எடுத்துக்காட்டி, “மழிசைப்பதிக்குச் சென்று தவம் செய்யுங்கள்” என்று கூறினான். தேவசிற்பியான விசுவகர்மா துலாக் கோல் நாட்டி, அதன் ஒரு தட்டில் ஜம்பது கோடி யோசனைப் பரப்புள்ள பூமி முழுவதையும் மற்றொரு தட்டில் திருமழிசை என்ற புண்ணிய க்ஷேத்திரத்தையும் வைத்து நிறுக்க, மண்ணுலகம் முழுவதையும் நாட்டிய தட்டு மேலோங்கி நிற்க, மழிசை க்ஷேத்திரத்தை இட்ட தட்டு கனமடைந்து தாழ்ந்து நின்றது. இதைக் கண்ணுற்ற தபோதனர்கள் அதற்கு மஹீஸார க்ஷேத்திரம் என்று பெயரிட்டுத் திருமழிசைக்குச் சென்று, தவம் இயற்றலாயினர்.
அவர்களில் ஒருவரான பார்கவர் வேள்வியொன்று செய்து தவமியற்றி வருகையில் அதைக் கண்டு அழுக்காறுற்ற தேவர்கள் அந்தத் தவ ஒழுக்கத்தை அழிக்கக் கருதி அரம்பை மேனகை உருவசி திலோத்தமை முதலிய அப்ஸரப் பெண்களை ஏவினர். இவர்கள் பலவாறு முயன்றும் பயன் பெறாததனால், கனகாங்கி என்ற அழகியை அனுப்பினர் தேவர்கள். அவள் அந்த முனிவரின் முன்னிலையில் ஆடல்பாடல்களைச் செய்து அவரை வசப்படுத்தித் தவத்தைக் கலைத்தாள். முனிவர் அவளது மோகவலையில் அகப்பட்டுத் தவத்தை நீத்துச் சிற்றின்பத்தில் ஈடுபட்டிருந்தார். அந்த மாது கருத் தரித்துத் திருவாழியின் அம்சமான உருவற்ற ஒரு மகவைப் பெற்று, அதை வெறுத்து, அருகில் இருந்த ஒரு புதரில் எறிந்துவிட்டுத் தன்னுலகம் சென்றாள்.
பின்பு தம் வசமடைந்த பார்கவர் தவமிழந்ததற்கு வருந்தி மீண்டும் தவமியற்றலானார். புதரில் எறியப்பட்ட அந்தப் பிண்டம் ஆண்குழந்தை வடிவமாக உருப் பெற்றுப் பசிதாகம் துன்புறுத்த அழுதுகொண்டிருந்தது. அவ்விடத்துக்கு அருகில் திருக்கோயில் கொண்டிருந்த ஜகந்நாதன் பிராட்டியுடன் அங்கு எழுந்தருளி, அந்தக் குழந்தையைத் தேற்றி மறைந்து சென்றார். குழந்தை மீண்டும் அழத் தொடங்கியது.
அப்பொழுது பிரம்பறுக்க அங்கு வந்த திருவாளன் என்ற வேளாளன் அந்த அழுகை இடத்துக்குச் சென்று குழந்தையைக் கண்டு பேரானந்தம் கொண்டு அதை எடுத்துச் சென்று, மகப்பேறு இல்லாத தன் மனையாளிடம் கொடுதான். அவளுக்கு அந்தக் குழந்தையிடம் உண்டான பேரன்பினால் பால் சுரக்க, அவள் அந்தப் பாலைக் கொடுக்க முயன்றபொழுது குழந்தை அதை ஏற்றுக்கொள்ளமல் பசிதாகமின்றி வளர்ந்து வந்தது.
இவ்வண்ணம் மிக்க அதிசயமாக வளர்ந்து வந்த அந்தத் தெய்வக் குழந்தையைப்பற்றிக் கேள்வியுற்ற ஒரு வயோதிக வேளாளன் அதைத் தரிசிக்கக் கருதித் தன் மனைவியுடன் பசுவின் பால் கொண்டுவந்தான். அவனுடைய பக்திக்கு இரங்கி அந்தக் குழந்தை அந்தப் பாலைக் குடித்தது. ஒரு நாள் அந்தக் குழந்தை தான் குடித்துச் சேடித்த பாலை அந்தத் தம்பதிகளுக்குக் கொடுத்து, “இதை நீங்கள் பருகுங்கள்” என்றது. அதைக் குடித்த அந்த மாது கருத்தரித்து நாளடைவில் ஒரு மகவைப் பெற்றாள். அதற்கு அவர்கள் கணிகண்ணன் என்று பெயரிட்டு வளர்ந்து வந்தனர். அந்தக் குழந்தை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து, பல கலைகளை உணர்ந்து பகவத் பக்தி மிகுந்து பாகவதரையும் கொண்டாடி வளர்ந்தது.
ஏழாண்டு வரையில் பார்கவகுமாரர் பிரம்பறுப்பானிடம் வளர்ந்து வந்தார். பிறகு அங்கிலிருந்து புறப்பட்டு, பரதத்துவம் எது என்று ஆராய்ந்து, லோகாயதம், பெளத்தம், சமணம் என்ற மதங்களின் நூல்களை ஆராய்ந்து அவற்றில் திருப்தி கொள்ளாமல், சைவ சமயத்தைத் தேர்ந்தெடுத்து அதில் ஈடுபட்டுப் பரமசிவனைத் தியானித்து வந்தார். ஒரு நாள் முதலாழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார் அங்கு எழுந்தருளி, அவரைத் திருத்தி வைஷ்ணவராக்க முயன்றார். இதைக் கண்ட சில சிவனடியார்கள் அவரிடம் வந்து வாதாடி, அவரைச் சைவராக்க முயன்றனர். அவர் அவர்களைப் பொருட்படுத்தவில்லை. பேயாழ்வார் அவருக்குப் பஞ்சஸம்ஸ்கார பூர்வமாக உபதேசம் செய்து அங்கிருந்து சென்றார்.

சாக்கியம் கற்றோம் சமண்கற்றோம் சங்கரனார்
ஆக்கியவா கமநூலா ராய்ந்தோம்,-பாக்கியத்தாற்
செங்கட் கரியானைச் சேர்ந்தோம்யாம் தீதிலமே
எங்கட் கரியதொன் றில்.
என்று எண்ணி, திருவல்லிக்கேணிக்கு வந்து யோகநிலையில் நின்று பகவத் தியானம் செய்துகொண்டிருந்தார். அப்பொழுது ஒரு நாள் ரிஷபவாகனாரூடராய்ப் பரமசிவன் பார்வதியுடன் ஆகாயமார்க்கத்தில் செல்ல, உமாதேவி இவரது தவ ஒழுக்கத்தைக் கண்டு கொண்டாடி, “இவன் யார்?” என்று தன் கொழுனனை வினவ, அவர் “இவன் நம்மை விட்டு நாராயணனுக்கு அடிமைப்பட்டவன்” என்றார். முனிவர் அவர்களைக் கண்டும் காணாததுபோல் பராங்முகமாக
இருந்தார். சிவபெருமான் அவர் அலட்சியம் செய்ததன் காரணத்தை வினவ, அவர், “உம்மால் எனக்கு ஆவது ஒன்றுமில்லை” என்றும் விடையளித்தார். சந்திரமெளலி தாம் வந்தது வீண்போகாதிருக்க எண்ணி அவரை, “உனக்கு இஷ்டமான வரம் வேண்டிப் பெற்றுக்கொள்” என்றார். திருமழிசைப்பிரான் அவரைப் பரிகசித்துப் பேசவும், சிவபெருமான் வெகுண்டு தமது நெற்றிக் கண்ணைத் திறந்து விட்டார். அதிலிருந்து வந்த காலாக்கினியைக் கண்டு திருமழிசைப்பிரான் சிறிதும் பயப்படாமல் தமது வலக் கால் பெருவிரலிலுள்ள ஒரு கண்ணைத் திறந்து விட, அதிலிருந்து பெருந்தீ எழுந்து, சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து எழுந்த அனலை அடக்கத் தொடங்கியது. அவற்றை அணைக்கச் சிவபிரான் தமது சடையிலுள்ள மேகங்களை ஏவவே, பெருமழை பெய்தது. சிறிதும் சலிக்காமல் திருமழிசைப்பிரான் இருந்ததைக் கண்டு வியந்து சிவபெருமான் அவருக்குப் பக்திஸாரர் என்ற திருநாமத்தைச் சூட்டினார்.
மற்றொருகால் கொங்கணசித்தன் என்ற ரசவாதியும், சக்திஹாரன் என்ற மற்றொரு சித்தனும் அவரிடம் வந்து அவரைப் பரிசோதனை செய்தனர். “எல்லாச் சித்தர்களையும் வென்று வந்த என்னை நீர் வென்றதனால் உமக்கு மேற்பட்ட சித்தன் எவனுமிலன்” என்று கூறி அவரை நமஸ்கரித்துச் சென்றான் ஒருவன். மற்றவனுக்குப் புழுதியை எடுத்துத் திரட்டி அவனிடம் கொடுத்து, “இது கற்களைப் பொன்னாக்கும்” என்று கூற, அவன் அதைக் கொண்டு அவரை வணங்கிச் சென்றான்.
பின்பு பக்திசாரர் வேறோர் இடம் சென்று ஒரு மலைக் குகைக்குள் இருந்து தவம் செய்துவந்தார். ஒரு நாள் திவ்யதேச யாத்திரையாகச் சஞ்சரித்து வந்த முதலாழ்வர்கள் மூவரும் அங்கு வந்து இவருடைய அழகிய திருமேனியை வெளியிலிருந்தே கண்டு அதிசயித்துக் குகையினுள் புகுந்து ஒருவரை ஒருவர் நமஸ்கரித்து அளவளாவி நால்வரும் ஒன்றுகூடி அங்கே தவம் செய்திருந்தனர். இவ்வாறு சில காலம் சென்றபின் அனைவரும் பேயாழ்வாரின் அவதார ஸ்தலமான மயூரபுரிக்கு வந்து, அங்கு அவ்வாழ்வார் தோன்றிய இடமாகிய கைரவ தீர்த்தத்தின் கரையில் சில வருஷங்கள் இருந்து யோகு செய்து, பின்பு முதலாழ்வார்கள் மூவரும் தேசசஞ்சாரம் செய்யப் புறப்பட்டனர்.
அப்புறம் திருமழிசைப்பிரான் தமது பிறப்பிடமான மகீசாரபுரம் சென்று, ஒரு நாள் திருமண் அணியத் தொடங்கியபோது, அது அகப்படாமல் மனங் கலங்கினார். அப்பொழுது திருவேங்கடமுடையான் அவர் கனவில் தொன்றி, “கச்சி வெஃகாவை அடுத்த பொற்றாமரைப் பொய்கையில் உள்ளது” என்று கூறினார். உடனே இவர் அங்கே சென்று திருமண் கண்டு களித்து அதை எடுத்துத் தரித்துக் கொண்டார். அந்த நகரிலேயே பகவத் தியானம் செய்துகொண்டு அநேக வருஷங்கள் எழுந்தருளியிருந்தார்.
அப்பொழுது கணிகண்ணர் அங்கு வந்து இவருக்குச் சுசுரூஷை செய்து கொண்டிருந்தார். அங்கு ஒரு கிழவி வந்து, தான் என்றும் யுவதியாக இருக்க வரம் பெற்று அதிசுந்தரியானாள். அந்த நகரத்துப் பல்லவ மன்னன் அவளை மணந்து பட்டமகிஷியாக்கி வாழ்ந்து வந்தான். அரசன் அவள் எப்பொழுதும் ஒரு படியாக இருப்பதற்குக் காரணத்தை வினவ, அவள், “கணிகண்ணரை அநுவர்த்தித்தால் நீங்கள் கருதியது கைகூடும்” என்று உரைத்தாள். அரசன் அவ்வாறே சென்று கணிகண்ணரை வேண்ட, அவர், “என் குரு எங்கும் வர உடன்படார்” என்று சொல்ல, மன்னன் சிந்தை கலங்கினான். அவனுடைய அமைச்சர்கள் மன்னனைத் தேற்றி, “கணிகண்ணர் தெய்வப்புலமையுடையவராதலால் அவர் பாடியபடி யாவும் அமையும்” என்று கூற, மறுநாள் அவன் வந்த பொழுது, “எனக்கு அழியாத இளமை வருமாறு கவிபாட வேண்டும்” என்று அரசன் பிரார்த்தித்தான். கணிகண்ணர் நரஸ்துதி செய்ய மறுத்தார். அரசன் மீண்டும் அவரை நிர்ப்பந்திக்க அவர்,

ஆடவர்கள் எங்ங னகல்வார் அருள்சுரந்து
பாடகமும் ஊரகமும் பாம்பணையும் –நீடியமால்,
நின்றான் இருந்தான் கிடந்தான் இதுவன்றோ,
மன்றார் பொழிற்கச்சி மாண்பு.

என்று பாட, அரசன் வெகுண்டு, தன்னைப் பாடாமல் அவ்வூரைப் பாடிய புலவரை ஊரை விட்டு வெளியேற ஆணையிட்டான். கணிகண்ணர் பக்திஸாரரிடம் இதை விளம்பி, “அடியேனுக்கு விடைதர வேண்டும்” என்று சொல்ல, ஆழ்வார், “நானும் பெருமாளை எழுந்தருளப் பண்ணிக்கொண்டு உன்னுடன் வருவேன்” என்று கூறிக் கோயிலுள் சென்று கடவுளைத் தொழுது,

கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீகிடக்க வேண்டா-துணிவுடைய
செந்நாப் புலவனும் செல்கின்றேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்.

என்று பிரார்த்தித்த மாத்திரத்தில், பகவான் ஆழ்வாரின் அபிமதப்படி எழுந்து வர, மூவரும் அவ்வூரை நீத்து அருகிலுள்ள ஓர் இடத்தை அடைந்து அங்கு வசித்தனர். அந்த திருப்பதியில் இருந்த மற்றப் பெருமான்களும் ஊரை விட்டகலவே அந்த நகரம் இருள் மூடப்பட்டது. மன்னவனும் அமைச்சரும் அவர்கள் இருந்த இடத்தைத் தேடி வந்து, அவர்களைச் சரணம் புகுந்தனர். அப்பொழுது ஆழ்வார் பகவானை நோக்கி,

கணிகண்ணன் போக்கொழிந்தான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீகிடக்க வேண்டும்-துணிவுடைய
செந்நாப் புலவனும் செலவொழிந்தேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்படுத்துக் கொள்.
என்று முன்பாட்டை மாற்றிப் பாட, யாவரும் மீண்டும் திருவெஃகாவை அடைந்தனர். இவ்வாறு பக்தர் சொன்னவாறு பகவான் செய்ததனால் அவருக்கு ‘யதோக்தகாரி’ என்றும் ‘சொன்னவண்ணம் செய்த பெருமான்’ என்றும் பெயர்கள் வழங்கி வரலாயின. இவர்கள் சென்று ஓரிரவு தங்கியிருந்த ஊர் ‘ஓரிரவிருக்கை’ என்று பெயர் பெற்றது.

~~~~~~~

Home Page