ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்


ஸ்ரீ காமகோடி ப்ரதீபம்
மலர் -10 இதழ் -4 ஸெளம்ய வருஷம் வைகாசி மாதம்
14-5-1969


அன்னையின் வடிவம்

உலகத்து நாயகி அவள். தன்னை நாடி வருவபவர்களுக்கெல்லாம் வேண்டுவார் வேண்டுவன எல்லாம் தருகிறாள். கேட்டவற்றையெல்லாம் தரும் கற்பகமாக அவள் விளங்குகிறாள். ராஜராஜேஸ்வரியான பராசக்தி ஒவ்வோர் ஊரிலே ஒவ்வொரு பெயருடன் தன் மெய்யடியார் துயர்தீர்க்க, தன் குழந்தைகள் நல்வாழ்வு வாழ வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு எழுந்தருளி அபய வரத ஹஸ்தங்களால் தன் கருத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று நின்று, அருள் செய்கிறான்.
தேவி பராசக்தி ஏன் நிற்க வேண்டும்? ஸ்ரீ மஹாலக்ஷ்மியை எல்லா ஆலயங்களிலும் அமர்ந்த திருக்கோலத்திலேதான் காண்கிறோம். அவள் செல்வத் திருமகள்: சஞ்சலை என்று பெயர் பெற்றவள். ஆகவே நொடியிலே வேறெங்கும் சென்றுவிடப் போகிறோமே என்ற கருத்துடன் அமர்ந்து அருள் செய்கிறாளோ என்று தோன்றுகிறது. ஆனால் அன்னை மட்டும் ஏன் நிற்க வேண்டும்? காஞ்சிமா நகரிலே உள்ள காமாட்சி மட்டுமே அமர்ந்த கோலம். மற்ற எல்லாத் தலங்களிலும் நின்ற நிலையிலே அருள்பவர் ஆடவல்லவனாகிய அம்பல வாணன் மட்டும். மற்ற உத்ஸவ மூர்த்திகளான சிவபெருமான் அமர்ந்த திருக்கோலமாக சோமாஸ்கந்தராகவேதான் காட்சி தருகிறார். அன்னை மட்டும் ஏன் நிற்க வேண்டும்?
திருமயிலையில் எழுந்தருளியுள்ள அன்னை கற்பகத்தை ஒரு கவிஞர், ‘மங்கலமாய் எங்கும் நின்றவளாம், மயில்போல உருவம் எடுத்தவளாம்’ என்று போற்றுகிறார்.
‘உட்கார்ந்தவன் எழுவதன் முன்னே நின்றவன் நெடுந்தூரம் போவான்’ என்பது முதுமொழி. தன் அடியார் அழைக்குமுன்னே ஓடிவந்து அருள் செய்தற்காகவே விழிப்புடன் நின்றுகொண்டே இருக்கிறாளாம்!
அன்னையின் அருள் பெருக்கு எத்தகையது என்பதற்கு எத்தனை எத்தனையோ சான்றுகள் கூறலாம். திருக்கடையூரில் வாழ்ந்த அபிராமி பட்டரை அறியாத தமிழ்ப் பெருமக்கள் இருக்க முடியாது. இவர்மீது அன்னை அருள்மாரி பொழிந்தது, அற்புதமான கவிதை மலர்களாக மலர்ந்து, நம்மை வசீகரிக்கும் தன்மை பெற்றது. அன்னை தன் அடியாரைத் தடுத்து ஆட்கொண்டது பற்றி நினைக்கும்பொழுதெல்லாம், எத்தனையோ மகான்களின் கவிதைகள் நம் கண்முன்னே விரிகின்றன. வடமொழி, தென்மொழி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய எந்த மொழியை எடுத்துகொண்டாலும் அவளது பேராற்றல் அருள்வாரிதி நம்மைத் திகைக்கச் செய்யும். அவர்களுள் மிகமிகச் சமீபகாலத்தில் சோழமண்டலத்தில் வாழ்ந்த பெரியார் அபிராமி பட்டர். பிரசித்தி பெற்ற மூககவியைப் போலவே இவரது இயற்பெயரும் யாருக்கும் தெரியாது. அபிராமியையே வழிபட்டதனால் அபிராமி பட்டர் என்ற பெயர் நிலைத்து நின்று விட்டது. இவருடைய அற்புதமான ஒலிமாலைகளை, ‘சிந்தைக்கு இனிய செவிக்கினிய வாய்க்கினிய வந்த இருவினைக்கு மாமருந்து’ என்று போற்றுகிறது அடியார்களது நெஞ்சம். ஒரு பாட்டின் கடைச் சொல்லே தொடக்கமாக உள்ள நூறு பாடல்களைக் கொண்ட அபிராமி அந்தாதி அது. சிவநேகச் செல்வரும், அன்னையின் மெய்யடியார்களும் திருமுறைகளைப் போலவே இதையும் பாராயணம் செய்து பயன் பெறுவர்.
பூர்ணிமையின் பொலிவிலே, முழு வடிவிலே தாயின் அற்புத வடிவை அமர்த்திப் பூசனை, மானஸிக பூஜை செய்துகொண்டிருந்த பட்டரை உலகம் பித்தன் என்று இகழ்ந்தது; பேயன் என்று பரிகசித்தது; எள்ளி நகையாடியது. ஆனால் தஞ்சையை ஆண்டுவந்த அரசர் சரபோஜி மன்னர் கண்டதென்ன? மகாதேஜஸ்வியாக ஒளி வீசுகின்றார் இந்தப் பெரியார். அரையிலே கந்தைதான்; ஆயினுமென்ன? உலக சிந்தையே சிறிதுமில்லாத மெய்ஞ்ஞானிபோல் அல்லவா தோன்றுகிறார் என்று நினைக்கிறார். மக்கள் உன்மத்தன், பித்தன் என்று சொல்லுவதைப் பொருட்படுத்தாமல் அருகில் சென்று, “ஸ்வாமி, இன்று என்ன திதி?” என்று வினவுகிறார். பட்டர் சந்த்ரமண்டல நடுவிலே வீற்றிருக்கும் அன்னையின் திருவுருவுக்கு அர்ச்சனை செய்துகொண்டிருந்த சமயம். “தாரா-காந்திதிரஸ்காரிநாஸாபரணபாஸுரா| கதம்பமஞ்ஜரீக்லுப்தகர்ணபூரமநோஹரா ||” என்று மலர்களைத் திருவடிகளிலே தூவும் சமயம். அரை குறையான ஒலியில் இன்று என்ன இதி என்று யாரோ கேட்பது தெரிகிறது. “பெளர்ணமிதான்” என்ற சொல் அர்ச்சனைகளுக்கு இடையே அவர் வாயினின்றும் எழுகிறது.
அன்று அமாவாஸ்யை, கடலாடச் சென்று மீளும் நடுவழியில் அமிருத கடேசுவரப் பெருமானை, காலனைக் காலால் உதைத்த காலஸம்ஹார மூர்த்தியை வழிபட வந்த அரசர், ‘அல்லாத காலனைமுன் அடர்த்தான் தன்னை’ச் சேவித்துப் பின் அபிராமசுந்தரியைச் சேவிக்க வந்து நிற்கும் சமயம். காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க இறைவியின் முன்னே நின்றார் சரபோஜி மன்னர். கூடியிருந்த மக்கள், ‘பார்த்தீரா! நாங்கள் பித்தன் என்றோம்; நீர் ஏற்கவில்லை’ என்று சொல்வது போல, பயத்துடன் கூடிய மெல்லிய நகையொலி மண்டபம் முழுவதும் நிறைந்தது. அரசர் திகைத்தார்.
நிஷ்டை கலைந்தது. அபிராமி பட்டர் கண்களை மலரவிழித்துச் சுற்றும் ஒரு முறை பார்த்தார். துறவிக்கு வேந்தன் துரும்பு என்றாலும், தாம் பூர்ணிமை என்று சொன்னத்தை நினைத்து வெட்கினார். உடனே கடல்மடை திறந்ததுபோல அமுதவெள்ளமாக வெளிவந்தது கவிதை. தாய் அபிராமவல்லி தன் குழந்தை அபிராமி பட்டரின் வாக்கை மெய்யாக்குவதற்குத் தன் காற்சிலம்பைக் கழற்றி வானில் வீசி, ‘அதோ பார் முழுமதி’ என்று சரபோஜி மன்னனுக்குக் காண்பித்தாள். அறிந்தோ அறியாமலோ செய்யும் பிழையையும் பொறுத்து மூடி மறைத்துக் காக்கும் பேரன்புதான் தாயின் திருவருள். ஆகவேதான் இறைவனது பெருமையைப் பற்றிப் பேசும்பொழுதுகூட, ‘தாயினும் சாலப்பரிந்து’ என்று பேசுகிறது தமிழ்மறை.
அந்த அருட்பெருக்கிலே பிறந்த அற்புதக் காட்சிகளை நூறு பாடல்களில் காட்டுகிறார் பட்டர்பெருமான். தாயின் அற்புதாமன ரூபஸெளந்தர்யம் எப்படித் தெரிகிறது, பாருங்கள் . அவளது எல்லையற்ற பேரெழில் அவர் கண்ணுக்குப் புலனாகிறது. ‘ஸிந்தூராருணவிக்ரஹாம்’ என்று செல்லுவது போல, அன்னை சிவந்த நிறமாகத் தோன்றவில்லை; பச்சைப் பசுங்கிளிபோல் பசுமையாக, மரகதவல்லியாகத் தோன்றுகிறாள். பசும்பொன் அணிகள் அழகுக்கு அழகு செய்கின்றன. நெற்றித் திலகம் பளிச்சென்று பொன்னிறமாகத் தெரிகிறது சின்னஞ்சிறு நுதலிலே.
உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக் குங்குமத் தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே !
தாயே! கதிரவன் உன் நெற்றியில் திலகமாகக் காட்சிதருகிறான். உன் பேரெழிலின் முன் அவனது ஒளி மங்கி மழுங்கிவிடுகிறது. உன் நிறம் அருணவர்ணமா? பசுமையா? மாணிக்கமா? மாதுளம்பூ உன் எதிரே நிற்க முடியாமல் உன் நிற அழகில் தோற்றுவிடுகிறதோ? அப்படியானால் ஏன் உன் அடியார்கள், ‘தாடிமீகுஸுமப்ரபா, அருணாம் கருணாதரங்கிதாக்ஷீம், என்று பேசுகின்றனர்? கருணை அலைவீசும் கண்கள் என்கிறார்களே. தாயே, உன் நிறம்தான் என்ன? சிவப்பா? பசுமையா? பாலபாஸ்கரன் நுதல்திலகமா? ஆம், திலகம்தான், இதே காட்சியைத்தான் புதுமைக் கவிஞர், “முற்றிய ஆழியிலே அலைவந்து மோதிஎறிகையிலே, கற்றைக்கதிர் எழவே உமை திருக்காட்சி வியப்பேனடி” என்கிறார்.
அது மட்டுமா? மலர்க்கமலை துதிக்கின்ற மென்கொடி, மின்னற்கொடி, வித்யுல்லதா. “கடாக்ஷகிங்கரீபூதகமலாகோடிஸேவிதா” என்று பேசுகிறது ஸஹஸ்ரநாமம். இத்தகைய பெருமைகளை உடைய உன்னைத் துதிப்பவர்களுக்கு எதுதான் கிட்டாது?
முதலில் திருமுக மண்டலத்தையும் திலகத்தையும் கண்ட அவர் தாயின் திவ்ய ஸெளந்தர்யத்தை ஏற இறங்க ஒரு முறை பார்க்கிறார். மரகதாங்கியா? அல்ல, மதிக்கின்ற, உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கமாகச் சிவந்த நிறத்தவளாகக் காட்சி தருகிறாள்.
இப்படிக் காட்சி தருகிற அன்னையை நோக்கி, “அம்மா, உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கமல்லவா நீ?” என்கிறார். உணர்வு என்பது எதைக் குறிக்கிறது? நுண் உணர்வின்மை வறுமை, அஃதுடைமை பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம் என்றல்லவா கூறுகிறார், உன்னைப் பிள்ளைத் தமிழாலே வழிபட்ட குமரகுருபார்? அன்பு, பக்தி, வாத்ஸல்யம் இவற்றையே அவர் நுண்ணுணர்வு என்று குறிக்கிறார். அத்தகைய மெய்யடியார்களால் எப்போதும் முப்போதும் மதிக்கப்பெறும் மாணிக்கம் அல்லவா நீ? உன்னையன்றி எனக்கு வேறு யார் துணை? நீயே எனக்கு எல்லாம். ஸர்வஸ்வமும் நீயே. பல பாடல்கள்-நூறு பாடல்கள்- பாடியும் அவருக்குத் திருப்தி ஏற்படவில்லை. ‘எல்லோரும் வாருங்கள், சுகமிருக்குது பாருங்கள்’ என்று நந்தன் கூவி அழைத்தது போல, ‘அன்னையைத் தொழுபவர்களுக்கு என்னவெல்லாம் கிடைக்கும் தெரியுமா?’ என்று ஆசைகாட்டி அழைக்கிறார் பட்டர்.
தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவம் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.
நாம் முதலில் எதை வேண்டுகிறோம்? பொருள்செல்வம்தான்; சந்தேகமென்ன? நம்மை வசீகரிக்கும் முறை அந்த மெய்யடியாருக்குத் தெரியாதா? ஆகவே முதல்முதலாகத் தனம் தரும் என்றார். செல்வதை மட்டும் வைத்துக் கொண்டு எல்லா நலன்களையும் அடைந்துவிட முடியுமா? அறிவில்லாத மூர்க்கரிடம் செல்வம் இருந்து பயனென்ன? ஆகவேதான் கல்வி தரும். கல்வியும் அறிவும் கிட்டிவிடுகின்றன. கோழையாகவும், எடுத்த செயலைச் செய்து முடிக்கும் ஆற்றல் இல்லாத சந்தேகப் பிராணியாகவும் ஒருவன் இருந்தால் பயனென்ன? அவனால் யாருக்கு நம்மை? நாட்டுக்குத்தான் நன்மையா? வீட்டுக்குத்தான் நன்மையா? ஆகவேதான் நல்ல மனம் தரும் என்று சொல்லவில்லை; ‘ஒருநாளும் தளர்வு அறியா மனம்,. வாழ்க்கைப் போராட்டத்தில் எதுதான் வந்து எதிர்த்தபோதும் தளர்ந்து பின்வாங்கிச் சோர்ந்து போக மாட்டேன். அர்ஜுனன் சோர்ந்தபொழுது இறைவன் கீதோபதேசம் செய்தான். இங்கே இவனது சோர்வுக்கு எது மருந்து? அன்னையின் பேரருள். இதைத்தான் ‘ஒருநாளும் தளர்வறியா மனம் தரும்’ என்கிறார். அது போதுமா?
நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும். பிறருக்குத் தீங்கு நினைத்தல், பகைமை, காமக் குரோத லோப மோக மத மாச்சரியங்கள் என்ற அறுவகைப் பகைமையும் இல்லாத மனம் தருவாள். வையத்துள் வாழ்வாங்கு வாழ வேறு என்ன தேவை என்றே கேட்கிறார் பட்டர்.
குருபியாகவோ நோயுற்றவனாகவோ இருந்துவிட்டால் பிறர் இவன் சொல்லை மதிக்க வேண்டாமா? அதற்குத் தாய் என்ன கொடுக்கிறாள்? ‘தெய்வ வடிவம் தரும்.’ குழந்தைகளைப் பார்த்துப் பார்த்து அலங்கரிப்பதிலே இன்பம் காண்பவள் தாய். ஆஹாரத்திலும் சரி, அணிகளிலும் சரி, நல்லுரைகள் கூறுவதிலும் சரி. இங்கே ஒவ்வொன்றாகக் கொடுத்துவிட்டு அழகிய வடிவையும் கொடுக்கிறாளாம். ‘அம்மா! தாயே! அபிராம சுந்தரி!’ என்று ஒரு முறை அழைத்தால் போதுமாம்; ஓடிவந்து வாரி எடுத்து அணைத்து வேண்டுவதை எல்லாம் தருகிறாளாம். ‘வேண்டுவார் வேண்டுவன ஈவான் கண்டாய்” என்று சிவபெருமானைப் பேசுகிறது அப்பர் திருத்தாண்டகம்.
இங்கே பட்டர் அவ்வளவோடு திருப்தி அடையவில்லை. எனக்குத் தெரிந்த சிலவற்றைச் சொன்னேன். இது மட்டுமல்ல, இன்னும் என்ன என்ன நல்லன உண்டோ அவை எல்லாவற்றையும் ஒருங்கே தாவல்லது இவளது பேரருள். ஆகவே, ‘நல்லன எல்லாம் தரும்’. யாருக்கு? அவளுடைய மெய்யடியாருக்கு. அன்பர் என்பவர்க்கே. கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே. அவள் கண்களை மலரவிழித்து நோக்க வேண்டும் என்பதில்லை. கடைக்கண் பார்வை ஒன்றே அருள்மாரியாகிப் பொழிந்து நம்மை வாழ்விக்கும். நலன்கள் எல்லாம் தாமே நம்மைத் தேடி ஓடி வரும். இப்படிப்பட்ட தாயின் புகழைச் சிறுசிறு காட்சிகளாகக் காட்டுகிறார். அவற்றில் இரண்டை இதோ பார்ப்போம். ஒன்று-கேள்வி; மற்றொன்று காட்சி. கேட்கிறார்.
உறைகின்ற நின்திருக்கோயில் நின்கேள்வர் ஒரு பக்கமோ?
அறைகின்ற நான்மறையின் அடியோ? முடியோ? அமுதம்
நிறைகின்ற வெண்திங்களோ கஞ்சமோ, என் நெஞ்சகமோ?
மறைகின்ற வாரிதியோ? பூரணாசல மங்களையே!
தாயே, நின் உறைவிடம் எது? இறைவனது வாமபாகம் மட்டும்தானா? வேதத்தின் அடியோ? வேதாந்தமோ? அல்லது அமுதுடன் பிறந்தானே, அந்தப் பூர்ணசந்திரனா? பின் ஏன் உன்னைச் சந்திரமண்டலத்தில் தியானிக்க வேண்டும்? அல்லது தாமரை மலரா? ஏழையேனது இதயகமலமா? மறைகின்ற வாரிதி. அமுதம் நிறைந்த கடலா? ‘ஸதாஸாகராந்தே மணித்வீபமத்யே’ என்று ஏன் சொல்லுகிறார்கள்? “இப்படிப் பலவிதமாகச் சொன்னால் என் போன்ற குழந்தைகளுக்கு எப்படிப் புரியும், நீயே சொல்லம்மா!” என்கிறார்.
இதன்பின் அற்புதமான காட்சி கண்முன்னே விரிகிறது. அம்மா இதோ தெரிகிறாள். மேலும் மேலும் கேள்விகளும் விடைகளும் எதற்கு?
சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்ய பட்டும்
பென்னம்பெரிய முலையும் முத்தாரமும் பிச்சி மொய்த்த
கன்னங்கரிய குழலும் கண்மூன்றும் கருத்தில் வைத்தே
தன்னந்தனி இருப்பார்க்கிது போலும் தவம் இல்லையே!
வேறு தவமும் வேண்டுமா என்று கேட்கிறார் பட்டர். இந்த அற்புதமான அந்தாதியைப் படிக்கக் கொடுத்துவைத்த தமிழ் மக்களாகிய நாம் பாக்கியசாலிகள். பொருளையே விரும்பாத இவருக்குத் களத்துக்குக் குறுணிமானியமாகச் சரபோஜி மன்னர் அளித்த செப்புப் பட்டயம் பட்டரின் ஸந்ததியாரிடம் இருக்கிறது. இவரைப் பற்றிய கர்ணபரம்பரைக் கதைகள் பல உண்டு.

~~~~~~~

Home Page