ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்


ஸ்ரீ காமகோடி ப்ரதீபம்
மலர் -21 ரௌத்ர வருஷம்: ஆவணி-புரட்டாசி ஆகஸ்டு-செப்டம்பர் 1980 இதழ் 7,8


ஹரதத்தர்

தஞ்சை ஜில்லவிலே காவேரி நதியின் வட கரையிலே கஞ்சனூர் என்ற ஓர் சிவஸ்தலம் இருக்கிறது. அவ்வூரில் காச்யப கோத்திரத்தில் உதித்த வாசுதேவர் என்று பெயருள்ள ஓர் வைஷ்ணவப் பெரியார் வசித்து வந்தார். அவர் மகாவிஷ்ணுவிடம் பரம பக்தியிள்ளவர். புத்திரனை வேண்டி மகாவிஷ்ணுவைக் குறித்து தவம் செய்து வந்தார். முடிவில் திருமாலின் அம்சமாக அவருக்கு ஓர் குழந்தை பிறந்தது. வாசுதேவர் அக் குழந்தைக்கு சுதர்சனர் என நாமகரணம் செய்வித்தார்.

குழந்தை சுதர்சனர் வளர்பிறைச் சந்திரன் போல் வளர்ந்து வந்தார். ’விளையும் பயிர் முளையிலே’ என்பார்கள். சுதர்சனர் தன் இனச் சிறுவர்களுடன் சேராமல் சிவனடியார்கள், விபூதியணிந்துள்ள சிறுவர்கள் இவர்களுடனேயே சேர்ந்தும், விளையாடியும் பொழுதை போக்குவார். சாப்பிடும் வேளை போக மற்றச் சமயங்களிலெல்லாம் சிவன் கோவிலிலேயே திருவிளையாடல் புராண சம்பந்தமான விளையாட்டுக்களை விளையாடிக் கொண்டிருப்பார்.

வயது ஆக ஆக சுதர்சனருக்கு சிவபக்தி வளர்ந்து வந்தது. பரம வைஷ்ணவரான வாசுதேவர் தம் குழந்தையின் செய்கையைக் கண்டு மிக வருந்தினார். குழந்தைக்கு அனேக உபதேசங்கள் செய்தார். குழந்தை சுதர்சனருக்கு இவ்வுபதேசங்கள் ஒன்றும் செவியில் ஏறவில்லை. வாசுதேவர் கோபங்கொண்டு குழந்தை சுதர்சனரைத் தூணுடன் கட்டிப்போட்டு அன்ன ஆகாரமில்லாமல் வைத்தார். அன்பிற்கு வசப்படாதது கோபத்திற்கா வசப்படப் போகிறது!

தான் தவமிருந்து பெற்ற பிள்ளை, குறிப்பிட்ட தெய்வத்தை வணங்குகிறான் என்பதற்காக அன்னம் போடாமல் வீட்டை விட்டே துரத்தி விட்டார். கோபம் எதைத்தான் செய்யாது? குழந்தை சுதர்சனர் தகப்பனார் வீட்டில் இல்லாத போது அன்னையிடம் வந்து" அம்மா பசிக்கிறது. சாதம் போடு" என்றார். பெற்ற தாய் மனம் புழுங்கினாள். "குழந்தாய்! நீ அப்பா வார்த்தையைக் கேள். உன் பசியைத் தீர்க்க முடியாத நான் இருந்து என்ன பிரயோஜனம்? நீ பசித்திருக்கப் பார்க்கவா, நான் உன்னைத் தவமிருந்து பெற்றேன்? உனது பசி தீர அன்னமிட முடியவில்லையே! உனது தந்தை உனக்கு அன்னமிடக் கூடாது எனக் கடுமையாக உத்தரவிட்டிருக்கிறார். நான் அவர் கட்டளையை எவ்வாறு மீறுவேன்?" என்று பலவிதமாகப் புலம்பினாள். "அம்மா! அப்பா சொல்படி நடப்பதுதான் உங்கள் கடமை. உங்களது பரிபூர்ண ஆசீர்வாதத்தால் எனக்கு யாதொரு குறையும் ஏற்படாது. எல்லாம் வல்ல இறைவன் ரக்ஷிப்பான். நீங்கள் கவலைப்படாதீர்கள்" என்று கூறி, சிவாலயத்தை அடைந்தார். அக்னீச்வரரையும், கற்பகாம்பிகையையும் வலம் வந்து தக்ஷிணாமூர்த்தி ஸன்னிதியில் உட்கார்ந்து சிவநாமம் ஜபித்துக்கொண்டிருந்தார். காலை முதல் உணவில்லாததினால் குழந்தை சுதர்சனர் களைத்துப் போய் தக்ஷிணாமூர்த்தி ஸன்னிதியிலேயே தூங்கிவிட்டார். அர்த்தயாமம் ஆயிற்று. அர்ச்சகர்கள் ஆலயத்தைப் பூட்டிக்கொண்டு வீட்டுக்குப் போய்விட்டார்கள். சுதர்சனர் தூக்கம் தெளிந்து விழித்துப் பார்த்தார். ஆலயம் பூட்டியிருக்கிறது. எங்கும் நிசப்தம். தியானத்திற்கும், மனமுருகிப் பிரார்த்திப்பதற்கும் ஏற்ற சமயம். ஈசன் ஸன்னிதிக்குச் சென்றார். ஈசா! இவ்வுடலைப் பெற்றெடுத்த எனது தாய் தந்தையர், அண்ட சராசரங்களுக்கும் தாய் தந்தையரான உங்களை வணங்கினேன் என்பதற்காக என்னை அன்னம் போடாமல் வீட்டைவிட்டுத் துரத்தி விட்டார்கள். நான் உங்களையே சரணமடைந்தேன். எனக்கோ பசிக்கிறது. குழந்தை பசித்திருக்க பார்த்து சும்மா இருக்கும் தாய் தந்தையர் உண்டோ? எனக்கு இவ்வுலகில் எல்லாம் நீங்களே", என்று கண்ணீர் சொரிய ஏங்கி பிரார்த்தித்தார். வணங்கினார். தயாமூர்த்தியான அக்னீசர் கற்பகாம்பிகையுடன் பிரசன்னமானார். குழந்தை சுதர்சனர் ஜோதி வடிவமான அம்மையப்பனைக் கண்டுப் பேரானந்தம் அடைந்தார். ஈசன் தக்ஷிணாமூர்த்தியாக இருந்து கொண்டு சுதர்சனருக்கு விபூதி, ருத்திராக்ஷம் அணிவித்தார். சிவதீக்ஷை செய்வித்து ஹரதத்தர் என தீக்ஷாநாமம் அளித்தார். "நீ முற்றும் அறிந்தவன் ஆவாய்" என அனுக்ரஹித்து மறைந்தார்.

மறுநாள் அர்ச்சகர்கள் காலையில் கோயிலைத் திறந்தார்கள். சுதர்சனர் என்ற ஹரதத்தர் சிவப்பழமாக ஆலயத்திலிருந்து தனது வீட்டையடைந்தார். ஒரே நாளில் இவருக்கு ஏற்பட்ட சகல சாஸ்திர அறிவையும் தெய்விகமான முக ஒளியையும் கண்டு அனேக வைஷ்ணவர்கள் இவரிடம் வாதாட வந்தார்கள். நமது ஹரதத்தர் எல்லோரையும் வாதில் வென்றார். பிரஹ்லாதனுடைய சரித்திரத்தையும், கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்ற வாக்யத்தையும், பக்தியினால் எதையும் சாதிக்கலாம் என்ற சித்தாந்தத்தையும் அடியோடு மறந்து ஆடம்பரமான செய்கைகளால் விஷ்ணுவை வசப்படுத்தி விடலாம் என்று எண்ணிய அவ்வூர் வைஷ்ணவர்கள் நமது ஹரதத்தரை பழுக்கக் காச்சிய இரும்பு நாற்காலியின் மேல் அமர்ந்து பரமேச்வரனுக்கு பரத்வம் கூறும்படி கூறினார்கள்.

ஸுரியனுக்கே ஒளியையும் சூட்டையும் தருபவனான ஈசனின் பக்தனை தீ என்ன செய்துவிடும்! ஹரதத்தர் சம்மதித்தார். அவ்வூரிலுள்ள வரத ராஜப் பெருமாள் கோவில் ஸன்னிதியில் பெருங்குழி வெட்டித் தீ மூட்டினார்கள். நடுவில் நாற்காலி போடப்பட்டது. அது பழுக்கக் காய்ந்தவுடன் ஹரதத்தர் பிரம்ம தீர்த்தத்தில் நீராடி சிவச் சின்னம் அணிந்து, அம்மையப்பனையும் வரதராஜரையும் வலம் வந்து நமஸ்கரித்தார். "ஹே ஈசா! சிவனே பரம் என்பது உண்மையானால் இவ்விரும்பு பீடம் குளிர்ந்திருக்கட்டும்" என்று சொல்லி பழுக்க காய்ந்த இரும்பு பீடத்தின் மீது அமர்ந்தார். இவ்வற்புதத்தைக் கண்ட சகல ஜனங்களும் ஹரதத்தரைத் துதித்து சிவ பூஜையிலும், சிவ பக்தியிலும் ஈடுபட்டுச் சைவர்களானார்கள்.

சில காலம் கழித்து கமலாக்ஷி என்ற ஓர் உத்தமியை மணந்து கொண்டார். இல்லற தர்மத்தில் இருந்துகொண்டு சிவனைப்பற்றி உபன்யாசங்கள் செய்து காலம்கழித்து வந்தார். இவர் செய்த அற்புதங்களை பல. இவர் சிவபரமாக அனேக நூல்கள் செய்திருக்கிறார். தை மாதம் சுக்ல பக்ஷ பஞ்சமியன்று சிவ சாயுஜ்ம் அடைந்தார். இந்த மஹாபக்தரான சிவதத்தருடைய கோவிலும் அவர் பூஜை செய்த ஸ்படிக லிங்கமும் கஞ்சனூரில் இன்றும் விளங்குகின்றன.

Home Page