ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்


ஸ்ரீ காமகோடி ப்ரதீபம்
மலர் -21 ரௌத்ர வருஷம்: ஆவணி-புரட்டாசி ஆகஸ்டு-செப்டம்பர் 1980 இதழ் 7,8


கோ ஸம்ரக்ஷணம்

பசு நம் நாட்டில் தெய்வமாகப் போற்றி வணங்கப்படுகிறது. பசுவை நாம் ’கோ மாதா’ என்று சிறப்பாக அழைக்கிறோம். கோ ஸம்ரக்ஷணம் செய்வதால் இஹலோக பரலோகங்களில் நாம் ஸுகம் அடையலாம். இந்த லோகத்தில் நாம் ஸுகம் ஆடைவதற்கு அதனால் நமக்கு அமுதமெனக் கிடைக்கும் பாலும், தயிரும், வெண்ணையும், நெய்யும் மற்றவைகளுமே சாக்ஷி. கோ ஸேவை செய்வதால், த்ரிமூர்த்திகள் முதலான ஸகல தேவதைகளும் த்ருப்தியடைகிறார்கள் என்று சாஸ்த்ரங்களும், இதிஹாஸ புராணாதிகளும் கூறுகின்றன. உதாரணமாக பவிஷ்யத் புராணத்தில்,

   "பசுவின் கொம்பின் ஆரம்ப பாகத்தில் ப்ரம்மாவும், விஷ்ணுவும், தலையின் நடுவே மஹாதேவனும் குடிகொண்டிருக்கிறார்கள்" என்று கூறப்பட்டிருக்கிறது. இம்மாதிரி தெய்வஸாந்நித்யம் பசுவிடம் இருப்பதால்தான் நாம் நித்யமும் गोब्रह्मणॆभ्यः शुभमस्तु नित्यं என்று வாழ்த்துகிறோம்.

"பெரியோர் எதைச் செய்கின்றனரோ அதையே மற்றவர்கள் அனுஷ்டிப்பார்கள்" என்று கீதையில் கண்ணன் கூறியபடி தானே கோபாலனாகவும், கோவிந்தனாகவும் ஆகி, நமக்கெல்லாம் வழிகாட்டியாக அமைந்துள்ளான்.

"ரகுவம்சம் என்ற பாற்கடலில் உதித்த சந்திரனான ஹே ராம!" என்று தியாகய்யர் பாடியுள்ளார். அப்படி உலகப் ப்ரஸித்தி பெற்ற ரகுவம்சம் ஒரு பசுவின் அனுக்ரஹத்தால்தான் உண்டாயிற்று.

ஒரு சமயம் பிருது சக்ரவர்த்தியின் விருப்பப்படி பூமிதேவி பசுவின் ரூபத்தை எடுத்துக் கொண்டாள். ஹிமாவான் கன்றாக ஆனார். மேரு பர்வதம் அப்பசுவைக் கறக்கவே உலகத்தில் அப்போது நிலவிய பஞ்சம் பறந்து, சுபிக்ஷம் நிலவிற்று என்று புராணம் சொல்கிறது. மஹாபாரதம் அனுசாஸன பர்வத்தில் கோவின் மஹிமையை விளக்க பின்வரும் கதைகள் உள்ளன.

மஹாலக்ஷ்மி பசுவை அணுகி, பசு எல்லா தேவதைகளுக்கும் தன் தேஹத்தில் இடம் தந்திருப்பதால் தனக்கும் இடம் தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாள். ஆனால் காமதேனு, லக்ஷ்மி சஞ்சல புத்தியுள்ளவள் என்ற காரணத்தால் மறுத்து விட்டாள். ஆனால் லக்ஷ்மி மிகவும் மன்றாடிக் கேட்டுக் கொண்டதின் பேரில் அவள் தன்னுடைய சாணம், மூத்ரம் இவைகளில் வசிக்கலாம் என அனுமதி தந்தாள். ஆகவே தான் அவைகளில் லக்ஷ்மி ஸாந்நித்யம் உள்ளதாக நாம் இன்றும் கருதுகிறோம்.

ச்யவனர் என்று மஹா தபஸ்வீ ஒருவர் இருந்தார். அவர் ஸமுத்ரத்தில் மூழ்கி 12 வருஷம் தவம் செய்து கொண்டிருந்தார். அவருடைய மகிமையை அறிந்த கங்கை, யமுனை முதலிய புண்ய நதிகள் அவரைப் ப்ரதக்ஷிணம் செய்த பிறகே கடலில் கலந்தன. ஒரு நாள் அவர் செம்படவர் வலையில் அகப்பட்டுக் கொண்டு கரையை அடைந்தார். செம்படவர்கள் தாங்கள் செய்த தவறை உணர்ந்து தவச்ரேஷ்டரின் பாதாரவிந்தங்களில் வீழ்ந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்கள். ச்யவனரோ, அவர்கள் அறியாமல் செய்ததற்கு தோஷமில்லை என்று கூறி, தாம் அவர்கள் வலையில் வீழ்ந்துவிட்டதால் அவர்கள் சொத்தாக ஆகிவிட்டதாகவும் எனவே தம் மதிப்புக்கேற்றபடி திரவியம் கொடுத்து, யாராவது தம்மை மீட்டால்தான் தாம் மறுபடி தவம் செய்யச் செல்லலாமென்றும் கூறினார். இந்த விஷயம் அரசனான நஹுஷன் காதில் விழவே அவன் ஓடோடியும் வந்தான். முனிவரைத் தமது விலையைக் கூறுமாறு ப்ரார்த்தித்துக்கொண்டான். ஆனால் ரிஷி தம் வாயால் சொல்ல மறுத்து விட்டார். அரசன் 1000, 10000, லக்ஷம், கோடி பவுன், பாதி ராஜ்யம் எல்லாம் தருவதாகச் சொல்லியும், அவை தம் மதிப்பாகா என்று முனிவர் கூறிவிட்டார். அந்தச் சமயம் அங்கே கவிஜர் (பசுவின் வயிற்றில் உதித்தவர்) என்ற முனிவர் வந்தார். அரசன் அவரை யோசனை கேழ்க்கவே அவர் ஒரு பசு மாடு தானம் செய்து விட்டால் அந்த ச்யவனருக்கு அது சம மதிப்புள்ளதாக ஆகும் எனச் சொன்னார். ச்யவனரும் ’ஆம்’ என்று ஓப்புக்கொள்ளவே அரசன் அப்படியே செய்தான். ச்யவனரின் அனுக்ரஹத்தால் செம்படவர்களும் நற்கதி எய்தினர். இதனால் பசுவின் உண்மையான மதிப்பு நன்றாக விளங்குகின்றதல்லவா? எனவே, கோ ஸம்ரக்ஷணம் செய்வது நமது கடைமையும் தர்மமுமாகும்.

நன்றி: காமகோடி

Home Page