ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்


ஸ்ரீ காமகோடி ப்ரதீபம்
மலர் -10 இதழ் -1 கீலக வருஷம் மாசி மாதம்
12.2.1969


குரு பக்தி மகிமை…

குருவே தெய்வம். குருவே பிரம்மா. குருவே விஷ்ணு. குருவே மகேசுவரன். குருவே தேவர்கள். குருவே ஸாக்ஷாத் பரப்பிரம்மம். இது முற்றும் உண்மை. ஸ்தோத்திரத்துக்காகச் சொல்லப்பட்டதல்ல இது.
குருவை உள்ளன்போடு பூஜித்தால் சிவ-விஷ்ணு பேதம் இல்லாமல் எல்லாரையும் பூஜித்ததாகிறது.
பிரம்மா சிருஷ்டிக்கிறார். சிவன் சம்ஹாரம் செய்கிறார். விஷ்ணு காப்பாற்றுகிறார். இதற்காக நாம் அவர்களை வணங்குவதில்லை. அவர்களிடமிருந்து அநுக்கிரகம் பெற்று நம் ஆசைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காகவும் கஷ்டங்களிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காகவுமே வணங்குகிறோம். சுகமும் துக்கமும் கலந்தே வாழ்வு முழுவதும் இருக்கும். கஷ்டமில்லாத முழுச் சுகமும், சுகமில்லாத முழுக் கஷ்டமும் பெற முயலுவது வீண். இரண்டிலும் மனம் தளராமல் சமநிலை எய்த முயல வேண்டும். இதுவே வாழ்வின் லட்சியம். கடவுள் இத்தகைய தன்மை வாய்ந்தவர். இந்தச் சமநிலையை நாம் இந்த வாழ்வில் அடைந்துவிட்டால் அதுவே நாம் ஈசன் அருள் பெற்றதாக ஆகும்.
மூக கவி, ஒரு ச்லோகத்தில், காமாட்சி அம்மனுடைய அருளைப் பெற்றவர் எப்படி இருப்பார் என்பதைச் சொல்லியிருக்கிறார். “காட்டில் இருந்தாலும் மாளிகையில் இருந்தாலும் ஒரே சந்தோஷமும், காமவிகாரத்தை உண்டுபண்ணும் வஸ்துக்களைப் பார்க்கும்போதும் ஓட்டாஞ்சல்லியைப் பார்க்கும்போதும் ஒரே மனநிலையும், பகவனைப் பார்த்தாலும் நண்பனைப் பார்த்தாலும் சமதிருஷ்டியும் உள்ளவனாக இருப்பான்” என்று மூக கவி வர்ணித்திருக்கிறார். கீதையிலும் கண்ணன் இந்தக் கருத்தையே உபதேசிக்கிறார்.
இந்தச் சமநிலையை அடைய நாம் ஈசனை நாடவேண்டும். ஈசன் நம் கண்ணுக்குப் புலப்பட மாட்டான். பார்க்க முடியாதவனைத் தியானம் செய்வது கஷ்டம். சங்கு சக்ரம் பீதாம்பரத்துடன் உள்ள திருமாலைத் தியானம் செய்ய முற்பட்டால், சங்கைத் தியானிக்கும்போது சக்கரம் மறைந்துவிடுகிறது. பாத கமலத்தை நினைத்தால் கருணைக் கண் நினைவுக்கு வரவில்லை.
சிவபெருமானின் புலித்தோலைத் தியானம் செய்யும்போது சிரசில் உள்ள சந்திரன் மறைந்துவிடுகிறது. சூலத்தைப் பார்த்தால் முடியிலுள்ள கங்கை தெரிவதில்லை. சிவனை நினைக்கும்போது திருமாலை நினைக்க  முடிவதில்லை.
ஆதலால் சிவன் விஷ்ணு ஸ்வரூபமாக விளங்கும் குருவைப் பூஜிப்பது சுலபம். சமநிலையடைந்து சாந்த ஸ்வரூபமாக விளங்கும் குருவை நாம் ஸதா தியானிப்பதனாலும், அவரது அநுக்கிரகத்தினாலும் ஞானோபதேசத்தினாலும் நமக்கும் அந்த மனநிலை ஏற்படும். குருவை நேரில் தரிசனம் செய்யும் பாக்கியமும், ஞானத்தை நேரில் உபதேசிக்கப்பெறும் பாக்கியமும் கிடைக்கின்றன.
தான தர்மங்கள் செய்தாலும் யாக யஜ்ஞம் செய்தாலும், ஸ்தலதீர்த்த யாத்திரைகள் செய்தாலும் காமம் குரோதம் கோபம் இவற்றுக்கு அடிமையாகி ராகத்வேஷத்துக்கு வசப்பட்டால் ஒன்றும் பயன் இல்லாமற் போய்விடுகிறது.
புண்ய கர்மாக்களைச் செய்தால் அடுத்த ஜன்மத்தில் மோட்சம் கிட்டும் என்று சொல்லியிருக்கிறது. ஆனால் காமக் குரோதங்களை ஜயித்துச் சமநிலை எய்தினால் அதுவே மோட்ச நிலை. இந்த ஜன்மத்திலேயே மோட்சம் பெறலாம். நாம் ஒவ்வொருவரும் இந்த ஆயுளிலேயே மோட்சம் பெற முயல வேண்டும். அதற்காகவே எல்லா முயற்சியும் இருக்க வேண்டும். மற்றக் காரியங்கள் எல்லாம் வீணே. ஈசனிடத்தும் குருவினிடத்தும் எல்லா மக்களுக்கும் நம்பிக்கையும் உள்ளன்பும் ஏற்பட, நம்மாலான முயற்சிகளைச் செய்ய வேண்டும்.
ஜம்பது ஆண்டுகளுக்கு முன்பு நம் நாட்டில் எல்லாருக்கும் கடவுள் பக்தியும் குரு பக்தியும் நிரம்பியிருந்தன. இப்பொழுது நிலை முற்றும் மாறிவிட்டது. கோவில்களும் குளங்களும் பாழடைந்து வருகின்றன. குருகுலங்கள் குறைந்துவிட்டன. ஆஸ்பத்திரிகளும் பள்ளிக்கூடங்களும் ஏராளமாக ஏற்பட்டு வருகின்றன. இவை வேண்டாமென்று சொல்லவில்லை. ஆனால் இதனால் நாட்டில் வியாதி குறைவதாகத் தெரியவில்லை. அதிகமாக இருப்பதாகவே தெரிகிறது. பள்ளிக்கூடங்கள் அதிகமானதற்காக மக்களிடம் அறிவும் பண்பும் நேர்மையும் நல்லொழுக்கமும் வளர்ந்ததாகக் காணப்படவில்லை. இந்தக் குணங்கள் குறைந்து வருவதாகவே தெரிகிறது.
அரசியலிலும் இந்தச் சரிவைப் பார்க்கிறோம். காந்திஜி தலைமை வரையில் எப்பொழுதும்‘ராமநாம’ பஜனையுடன் அரசியலில் ஈடுபட்டுவந்தார். அவர் ராமநாம மகிமையினால் மிகப் பெரிய வெள்ளைக்கார சாம்ராஜ்யத்துடன் போராடி வெற்றி கண்டார். ஈசுவர பலத்தையும், ஆத்மிக பலத்தையும் நம்பி, காந்தி காரியங்களைச் செய்து வந்தார். ஆனால் இப்பொழுதுள்ள அரசியல் தலைவர்கள் கடவுளை நம்பிக் காரியங்களைச் செய்வதாகக் காணப்படவில்லை.
முஸ்லிம்கள் மதப்பற்று அதிகமுள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்களது தீவிர மதப்பற்று அவர்களுக்கு ஒரு ராஜ்யத்தையே கொடுத்துவிட்டது. மேலும், காச்மீரப் பிரச்னையில்கூட ஜக்கிய நாட்டில் அவர்களுக்கு ஆதரவு இருப்பதாகத் தெரிகிறது. காச்மீர விஷயத்திலும், மற்ற எல்லாப் பிரச்னைகளிலும் நம் தலைவர்கள் ஈசன் அருளையே தீவிரமாக நம்பிக் காரியங்களைச் செய்தால் நமக்கு நலன் ஏற்படும் என்பதில் ஜயமில்லை.
நமது அறிவையே நம்பிக் காரியங்களைச் சாதித்துவிடலாம் என்று எண்ணுவது சரியல்ல. அவன் அருளாலேதான் எதுவும் கிட்டும். இந்த உணர்ச்சி எல்லாருக்கும் ஏற்பட வேண்டும்.
இதற்காக நாடெங்கும் கோபுரங்களும் கோவில்களும் குளங்களும் மீண்டும் திகழ வேண்டும். கோபுர தரிசனம் செய்யும்போது நம்மை ஆட்டி வைக்கும் ஈசன் இருக்கிறார் என்ற எண்ணம் ஏற்படும். இந்த எண்ணத்தை உண்டுபண்ணும் பணியே எல்லாப் பணியையும் விடச் சிறந்த பணி.
கிராமந்தோறும் அன்பர்கள் ஒன்றுசேர்ந்து வார வழிபாட்டுச் சங்கங்கள் அமைத்துக்கொண்டு, வாரத்தில் ஒரு தினமாவது பஜனை செய்துகொண்டு வீதிவலம் வரவேண்டும்.

Home Page