ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்


ஸ்ரீ காமகோடி ப்ரதீபம்
மலர் -23 துந்துபி வருஷம்: செப்டம்பர், அக்டோபர் 1982 இதழ் 1&2


குருபக்தியால் நற்கதி பெற்றவர்; “ஆருணி”
ஆத்ம வித்யா பூஷணம் ஸி.எஸ்.வி குருஸ்வாமி சாஸ்திரி

“கடைப்பிடிப்பவற்கு கடினமானாலும் குருவினுடைய உத்தரவை அநுஸரித்து நடக்கும் சிஷ்யன் உலகம் போற்றும் அறிவையும், பெருமையையும் அடைகின்றான்."
(மஹாபாரதம்: ஆதிபர்வம்; 3-அத்தியாயம்)
முன்னொரு காலத்தில் மிகுந்த அறிவாளியும் எப்போதும் தவத்தில் ஈடுபாடுடையவரான தௌம்யர் என்ற முனிவர் இருந்தார். அவருக்கு, உபமன்யு, ஆருணி, வேதன், என்ற பெயர் கொண்ட மூன்று சிஷ்யர்கள் இருந்தனர். ஒரு ஸமயம் ஆசிரியர் பாஞ்சாலதேசத்தைச் சேர்ந்தவனான ஆருணி என்ற சீடனை, வயலுக்குச் சென்று அதனுள் இருக்கும் நீரை வெளியில் செல்லாதபடி வடிமடையை மண்களால் அடைத்து வரும்படிக் கூறி அனுப்பினார். அதன்படி ஆருணி வயலுக்குச் சென்று வடிமடையில் நிறம்ப மண்களை நிரப்பி அடைத்தான். நீரின் வேகமானது அந்த மண் அணையை சில நிமிடங்களிலேயே கரைத்துவிட்டது. இவ்விதம் பல முறைகள் தன்னால் கட்டப்பட்ட மண் அணைகள், எளிதில் நீரால் கரைக்கப்படுவதை நோக்கி மனம் நொந்தான். குருவின் உத்தரவைச் செயலில் கொண்டு வரமுடியவில்லையே என்று ஏங்கினான். முடிவில் ஆருணி – வடிமடையில், தன் உடலையே அணையாகச் செய்து நீரை வெளியே செல்லாமல் தடுக்க திட்டமிட்டு அதனில் படுத்துக்கொண்டான். அவனுடைய உடலால் வடிமடை அடைக்கப்பட்டவுடன், நீரின் ஒரு சிறிய துளி கூட வெளியில் செல்லவில்லை. இப்படி மூன்று தினங்கள் சென்றுவிட்டன. நான்காவது தினத்தில் தௌம்ய முனிவர்-சிஷ்யர்களை நோக்கி “மூன்று நாட்களாக ஆருணியைக் காணவில்லையே. அவன் எங்கு சென்றான்” என்று வினவினார். “ஹே குரோ – தங்களின் உத்தரவின்படி வயலின் வடிமடையை அடைக்கச் சென்றிருக்கிறான்” என்று சிஷ்யர்கள் பதிலளித்தனர். அதனைச் செவியுற்ற தௌம்யர், உடனே சிஷ்யர்களுடன், வயலை அடைந்தார். “ஹே ஆருணே! குழந்தாய்! தாமதியாமல் என் அருகாமைக்கு வந்து சேருவாயாக!” என்று உரக்கக் கூவி அழைத்தார். குருவின் குரலைக் கேட்டவுடன் ஆருணி அணையை இரண்டாகப் பிளந்து அதனிலிருந்து எழுந்து வந்தான்.

’ஹே குரோ! தங்களுடைய ஆணைப்படி வயலின் வாய்மடையை மண்ணால் அடைக்கமுடியாததினால் நான் அதில் படுத்திருந்து அடைத்தேன். தங்கள் குரலைக் கேட்டு புறப்பட்டு வந்தேன்’ என்று கூறி வணங்கினான். மேலும் வேறு எந்த பணியைச் செய்யவேண்டுமென்று வினவினான். அதைக்கேட்ட தௌம்யர் மிக்க மகிழ்ச்சி அடைந்து ஹே ஆருணே! உன் குரு பக்தியை மெச்சினேன். அணையைப் பிளந்துகொண்டு எழுந்து வந்ததால், உனக்கு இன்று முதல் உத்தாளகன் பெயர் வழங்கப்படட்டும். உனக்கு வாழ் நாளில் எல்லாவிதமான சிறப்புகளும் தடையின்றி குறையில்லாமல் ஏற்படட்டும். நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும், தர்ம சாஸ்திரங்கள் அனைத்தும் உன் உள்ளத்தில் எப்போதும் தெளிவாகத் துவங்கட்டும்” என்று ஆசி கூறினார். ஆருணியும் குருவை வணங்கி தந்நாட்டிற்குச் சென்றான்.

Home Page