கோபப் பிரசாதம்
சைவத் திருமுறைகள் பன்னிரண்டு. தேவாரம், திருவாசகம், பெரிய புராணம் போன்றவை திருமுறைகளைச் சார்ந்தவையே. இந்த வரிசையில் பதினோராம் திருமுறை என்பது ஒரு தொகை நூல்; பல பெரியோர்கள் பாடிய பாடல்கள் இதனில் இருக்கின்றன. அவற்றுள் நக்கீரர் என்ற புலவர் பெருமான் பாடியருளிய கோபப் பிரசாதம் என்பது ஒன்று. பரமேசுவரனுடைய நிக்ரக அனுக்ரக வரலாறுகள் பலவற்றைக் கூறிப் பிறகு அவருக்குரிய பெருமைகளையும் அப்பாடல் விவரிக்கின்றது. மொத்தம் அதனிலுள்ள வரிகள் எண்பத்தேழு. இருந்தாலும் பாட்டு மிகுந்த அர்த்த புஷ்டியுள்ளதாக அமைந்திருக்கிறது.
இப்பாடலில் கூறப்பட்டபடி ஈசுவரனுடைய கோபத்துக்கு ஆளானவர்கள் பிரமன், காமன், யமன், திரிபுரர், யானை, இராவணன், சூரியன், தக்ஷன், அக்னி, சந்திரன், சலந்தரன், தாருகன், கருடன், ஆகியோர். அவருடைய அருளுக்குப் பாத்திரமானவர்கள் திருமால், கண்ணப்பன், சண்டேசுவரன், சாக்கியன், நந்தி, பிருங்கி, நந்திமாகாளன், பார்த்தன், மார்க்கண்டேயன், சிலந்தி, சனகாதி முனிவர் முதலியோர்.
இவ் வரலாறுகள் சிவபிரானுடைய நிக்ரக அனுக்ரகங்களை முழுவதும் அறுதியிட்டுக் கூறப்பட்டன அல்ல; அவருடைய செயல்களை முழுமையும் கூறுவதென்பது எவராலும் ஆகக்கூடியதுமன்று. ஆனால் நக்கீரர் கூறியருளிய ஜாப்தாவிலிருந்து ஈசுவரனுடைய கோபத்துக்கும் அருளுக்கும் பதவியோ, ஜாதியோ, தொழிலோ, பெருமை சிறுமைகளோ காரணமில்லையென்பதும், அவருடைய சட்டத்துக்கு மீறுகிறவர்கள் தண்டிக்கப்படுவதும், அதற்கு உட்படுகிறவர்கள் அனுக்ரகிக்கப்படுவதும் நிச்சயமென்பதுமான உண்மையையே நக்கீரர் நமக்குச் சொல்ல முற்பட்டார் என்பதை நாம் உணரவேண்டும். காமன், யமன், சூரியன், அக்னி, சந்திரன், கருடன் முதலிய தேவர்களும், திரிபுரம், இராவணன், சலந்தரன், தாருகன் போன்ற அசுரர்களும் யானை, கருடன் ஆகிய பிராணி உருவினரும் அவருடைய கோபத்துக்குள்ளானவர்கள். அதேமாதிரி அனுக்ரகத்துக்குப் பாத்திரமானவர்களும் தேவர்கள், அசுரர்கள், மனிதர், பிராணி முதலியோரும் உண்டு.
’திரு உருவத்தோடு செங்கண் ஏறும் அரி அன திண்திறல் அசுரனுக்கு அருளியும்’ (வரி 14) என்று ஓர் அசுரனுக்கு ஈசுவரன் இருஷபவாகனத்தையும் சாரூபத்தையும் கொடுத்தார் என்று குறிக்கப்பட்டிருக்கிறது.
இன்னும் அவருடைய கோபத்தின் கொடுமையையும், அருளின் பெருமையையும் இவ் வரலாறுகள் விளக்குகின்றன. பிரமன் சிரம் இழந்தான்; மன்மதன் எரிந்துபோனான்; யமன் உயிர் இழந்தான்; திரிபுரம் சாம்பலாயிற்று; தக்ஷன் தலை இழந்தான்; சூரியனுக்குப் பல் போயிற்று; அக்னியின் கை ஒடிந்தது; இன்னும் இவ்வாறே பிறவும்.
அதேமாதிரி அனுக்ரகத்தின் அளவுக்கும் எல்லை இல்லை. கண்ணப்பனான வேடனும், சண்டியான அந்தணனும் கணநாதர்களாயினர்; கல்லாலடித்த சாக்கியன் கணபதவியடைந்தான். நந்தி நெற்றியிற் கண்னும் நீள் புயம் நான்கும் பெற்றான். அசுரன் அருள் பெற்ற கதை முன்பே சுட்டப்பட்டது; அவன் பெயர் புலப்படவில்லை. சிலந்தி கோச்செங்கணானாகி அரசு பெற்றது.
இவ்வாறு பிறப்போ பதவியோ காரணமாகாமல் ஈசுவரன் கோபிக்கவும் அருள்புரியவும் காரணத்தை நாம் காணவேண்டும். ஆகவே ஈசுவர சந்நிதியில் நல்லவர், கெட்டவர் என்ற வேற்றுமையைத் தவிர வேறெதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. சரீர தர்மத்தைக் கடைபிடிக்காமல் சிறிதளவேனும் தவறுவோமானால் அந்த அளவுக்கு வியாதி நிற்பதில்லையே. அதைப்போல் ஆத்ம தர்மத்திற்குச் சிறிது குற்றம் ஏற்பட்டாலும் ஈசுவர கோபம் வெளிப் படாமலிராது. சரீரப் பாதுகாவலுக்கு விதி விலக்குகள் இருப்பனபோல், ஆத்மப் பாதுகாவல்களுக்கும் விதி விலக்குக்கள் இருக்கின்றன. எல்லா சரீரங்களுக்கும் பொதுவான சுகாதார விதிகளும், இளமை, முதுமை, ஆண், பெண், வாதம், பித்தம் முதலிய வெவ்வேறு தன்மைகளால் மாறுபட்ட சரீரங்களுக்கும், இடம், காலம் முதலிய வேற்றுமைகளுக்கும் விசேஷ விதிவிலக்குகளும் இருப்பதை நாம் அறிவோம். அதைப் போலவே, மானிடர் யாவருக்கும் பொதுவாகப் பல ஆத்ம தருமங்களும், அவரவர்களின் தகுதி கேற்ற விசேஷ ஆசாரங்களும் இருக்கின்றன. இவற்றை நாம் நூல்களிலிருந்தும், பெரியோர்களிடமிருந்தும், சம்பிரதாயங்களினின்றும் அறிந்து கொள்கிறோம். எவ்வெக்காலத்தில் தனி மனிதனோ, சமூகமோ, தேசமோ, அல்லது உலகம் முழுமையுமோ இந்தச் சாமானிய தருமங்களினின்றும், விசேஷ தருமங்களினின்றும் சிறிதேனும் மாறுபடுமானால் அதற்கேற்றபடி ஈசுவர தண்டனை உண்டாகிறது, இது தவறுவதே இல்லை. இதில் ஈசுவரனுக்கு வேண்டியவர் வேண்டாதவர் என்பது கிடையாது. தண்டனையும் பாபத்திற்குத் தகுந்ததுபோலக் கொடுமையாயிருக்கும்.
திரிபுரங்களென்ற மூன்று மகா பட்டணங்கள் ஒரு நொடியில் சாம்பலாயின. இதைவிடக் கொடிய கோபம் உண்டோ? அனுக்ரகமும் இப்படியேதான்; கொடைக்கும் அளவில்லை.
இவ்வாறு இரண்டு பெரிய உண்மைகளை நமக்கு இப்பாடல் தெரிவிப்பதோடு, கோபப் பிரசாதம் என்னும் தொடர் மற்றொரு பொருளையும் காட்டி மூன்றாவதான ஒரு கருத்தையும் தெரிவிக்கிறது. அதாவது ஈசுவரனுடைய கோபமே பிரசாதம் ஆகும் என்பதாம். பரமேசுவரன் உலக பிதா; நாமெல்லோரும் அவருடைய குழந்தைகள். ஒரு தகப்பன் தன் குழந்தைகளுள் ஒன்று குற்றம் செய்யும் போது அதனைத் தண்டிப்பது இயல்பே; அவ்வாறு தண்டிக்கும்போது தகப்பன் அகங்காரத்தாலாவது வெறுப்பாலாவது அவ்வாறு செய்வது அவனுடைய தோஷமாகும். பிள்ளையை நல் வழிப்படுத்த தண்டமே உற்றவழி என்று எண்ணி அவன் தண்டிப்பானானால், அவ்வாறு அவன் செய்வதைக் கருணை என்று தான் சொல்லவேண்டும். அதைப்போலவே, அகங்காரமோ வெறுப்போ இல்லாத ஈசுவரன் மக்களுக்கோ, சமூகத்துக்கோ, தேசத்திற்கோ பஞ்சம், பிணி, வறுமை, நோய் போன்ற தண்டனையைக் கொடுக்கும் போது, கருணையோடுதான் அவ்வாறு செய்கிறார் என்று நாம் நினைக்கவேண்டும். அப்படிக் கிடைக்கும் தண்டனைக்குக் காரணம் என்ன என்று அறிந்து கொள்ளவும், இனியாவது அப்படிப்பட்ட குற்றம் வராமல் பாதுகாத்துக் கொள்ள வழிகளை நாடவும் நாம் முயலவேண்டும். இதுவே புத்திசாலித்தனத்துக்கு அடையாளம்.
இப்பொழுது நம்மைச் சூழ்ந்து நாம் காண்பதென்ன? எரிமலையில் உட்கார்ந்திருப்பவர்கள் கூட நம்மைவிடக்கவலையற்றவர்களாக இருக்கக்கூடும். பணக்காரர்க்களுக்கும் கவலை; ஏழைகளுக்கும் கவலை. ஒருவராவது மனநிம்மதியோடு இருப்பதாகக் காணவில்லை. அரசாங்கங்களுக்கு இருக்கும் கவலைகளுக்கு எல்லையில்லை. வியாபாரிகளுக்கும் நிம்மதியில்லை. எல்லோரும் பிறருக்குச் சீர்திருத்தம் செய்ய முற்படுகிறார்கள்; தம் நிலையைச் சீர்திருத்த எவரும் கவலைப்படுவதில்லை. பிறர் குற்றம் செய்பவர்களாகவே நம் கண்களுக்குப் படுகிறார்கள். நம் குற்றம் நம் கண்ணில் படுவதேயில்லை. இந் நிலைக்குக் காரணம் யாது? ஈசுவரனுடைய கோபத்துக்கு இன்று உலகம் ஆளாயிருக்கிறது என்பது கண்கூடு. அது நமக்கு பலவித துன்பங்களை விளைவித்துக் கொண்டிருப்பதோடு நம்முடைய புத்தியையும் உண்மையைக் காணமுடியாதபடி மயக்கிக் கொண்டிருக்கிறது. ஈசுவரன் உலகத்தின்மீது இவ்வாறு கோபித்துக் கொண்டிருப்பது, நமக்கு அறிவைப் புகட்டி, நம் குற்றத்தை உணரச்செய்து, நல்வழியில் நம்மைச் செலுத்தவே தான் இருக்கவேண்டுமென்று நாம் உணரவேண்டும்.
அவர் நம்மை முற்றிலும் கைவிட்டு விடவில்லை யென்பதற்கு எத்தனையோ அத்தாக்ஷிகள் இருக்கின்றன. அவற்றையும் நாம் அறிந்துகொண்டு ஈசுவரனின் கருணையை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அப்படியும் நாம் அறிவு பெற்று நம்மைச் சீர்திருத்திக்கொண்டு, நாம் செல்லும் குற்ற வழிகளிலிருந்து விலகி நடக்க முயலாவிட்டால் தக்ஷன் பட்ட பாட்டையும், திரிபுரம் அடைந்த நிலையையும் இப்பாடல் நினைப்பூட்டுகின்றது. பெரியோர் வாக்கு பொய்யாகாது. பரமேசுவரனின் கோபத்தைப் பிராசத மாக்கிக் கொள்ளமுயல்வோம்.
|