ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்


ஸ்ரீ காமகோடி ப்ரதீபம்
மலர்: 21       ரௌத்ர வருஷம் - சித்திரை, வைகாசி ஏப்ரல், மே - 1980   இதழ் :3,4


பகவத் கீதையும் பத்மபுராணமும்
ஔவை எஸ்.என்.ராதாகிருஷ்ணன்

கடன் நீங்கிச் சுகம் ஏற்பட அத்.12, சுலோ.7 பாராயணம் செய்யவும் என்கிறது மந்த்ரஸாரம். அதன் கருத்து:

அப்படி என்னிடமே மனத்தைப் புகுத்திய அத்தகையவர்களை ஜனன மரணமாகிய ஸம்ஸாரத்திலிருந்து உடனே கரை சேர்த்துவிடுவேன்.

வேத சாஸ்திரங்களை நன்கு கற்ற அந்தணன் ஒருத்தனின் மனைவி பரபுருஷர்களுடன் கூடிக் குலாவித் திரிந்தாள். ஒரு நாள் இரவு நேரத்தில் ஓர் வேங்கைப் புலியைத் தன் காதலன் என்று நினைத்து, "ஏன் வேங்கைப் புலி உருவில் வந்து இருக்கிறீர்கள்?" என்று கேட்டாள். செய்யத் தகாதவர்களுக்கு யாகம் செய்து வைத்தும், மிகவும் பாபமான அன்னங்களைப் புசித்தும் வந்த என்னை ஒரு நாய் கடித்ததால் இறந்தேன். இப்பொழுது வேங்கைப் புலியாகப் பிறந்திருக்கிறேன்’ என்றான் அவன்.

"நான் முன் பிறவியில் செய்த பாவங்களை நினைத்துச் சாதுக்களையும், பதிவிரதைகளையும் இப்பொழுது ஹிம்ஸிப்பதில்லை. நீ விபசாரி. உன்னை நான் கொல்லப் போகிறேன்" என்று அது தன் வரலாற்றைக் கூறி, அவளைச் சாப்பிட்டுவிட்டது. பிறகு அவன் நாய் மாமிசம் உண்ணும் குலத்தில் பிறந்தான். அப்பொழுதும் அவன் நடத்தை கெட்டு அலைந்தான். எதிர்பாராமல் கோயிலில் யாரோ கீதை பதிமூன்றாம் அத்தியாயத்தைப் பாராயணம் செய்வதைக் கேட்டு அவன் முக்தி அடைந்தான். இப்படி இந்த அத்தியாயப் பெருமையைப் பத்மபுராணம் சிறப்பிக்கிறது.

எண்ணிய காரியம் கைகூட அத்.13, சுலோகம் 13 பாராயணம் செய்யவும் என்று மந்த்ரஸாரம் குறிப்பிடுகிறது. அதன் கருத்து:

பிரஹ்மம் எல்லாவிடத்திலும், கைகளும், கால்களும், கண்களும், தலைகளும், முகங்களும், காதுகளும் பரவப் பெற்றிருக்கும். உலகில் எல்லாவற்றிலும் பரவி நிற்பது அதுவே.

பரபுருஷர்களுடன் இருந்ததால் தன் மனைவியைக் கொன்ற ஒருவன் மறுபிறவியில் முயலாகப் பிறந்தான். அவன் மனைவி வேட்டை நாயாக ஓர் அரசரிடம் வளர்ந்தாள். அரசர் கட்டளைப்படி வேட்டை நாய் அந்த முயலைத் துரத்திப் பிடித்தது. முயல் வேட்டைநாயின் பிடியிலிருந்து தப்பிச் சென்று ஓர் ஆச்ரமத்தில் உள்ள குட்டையில் விழுந்தது. அதைத் துரத்தி வந்த நாயும் குட்டையில் பாய்ந்தது. இரண்டும் திவ்யரூபத்துடன் முக்தி அடைந்தன. காரணம், அந்த ஆச்ரமத்திலுள்ள ஞானி கீதையில் அத்தியாயம் பதினான்கைப் பாராயணம் செய்து வந்ததே ஆகும். அவ்வத்தியாயப் பெருமையைப் பத்மபுராணம் இவ்வாறு சிறப்பிக்கிறது.

மரணகாலம் அறிய அத்.14, சுலோகம்.14 பாராயணம் செய்யவும் என்று மந்த்ரஸாரம் குறிப்பிடுகிறது. அதன் கருத்து:

ஸத்வகுணம் மேலிட்டிருக்கும்போது மரணமடைபவன் உத்தமனான ஆத்ம தத்துவத்தை அறிந்தவர்கள் அடையும் நிர்மலமான லோகங்களை அடைகிறான்.

ஒரு சேனாதிபதி மனைவி மக்களுடன் தன் அரசனைக்கொன்று தானே அரசனாக நினைத்தான். ஆனால் விஷுசியினால் (காலராவில்) இறந்தான். பிறகு குதிரையாகப் பிறந்து அந்த அரசனிடமே வந்து சேர்ந்தான். காற்றில் பறந்து வந்த ஓர் ஓலையில் அரைகுறையாக எழுதப்பட்டிருந்த கீதை பதினைந்தாவது அத்தியாயத்தை அவ்வரசன் படித்ததினால் அந்தக் குதிரை முக்தி அடைந்தது. இவ்வாறு இவ்வத்தியாயப் பெருமையைப் பத்மபுராணம் கூறுகிறது.

வயிற்று வலி நீங்க அத்.15 சுலோ.14 பாராயணம் செய்யவும் என்று மந்திரஸாரம் குறிப்பிடுகிறது. இதன் கருத்து:

நான் வைச்வாநரனென்ற ஜாடராக்னியாக இருந்து பிராணிகளின் தேகத்தில் அமர்ந்து, பிராணன் அபானம் இவைகளின் துணை கொண்டு நான்கு விதமான அன்னத்தையும், ஜீரணம் செய்விக்கிறேன். (பக்ஷ்யம், போஜ்யம், லேஹ்யம், சோஷ்யம் என்று அன்னம் நான்கு வகைப்படும். அதாவது பற்களால் கடிப்பவை, கடிக்காமல் விழுங்குபவை, நாக்கால் நக்குபவை, வாயால் உறிஞ்சக் கூடியவை என்பதையே இங்கு நான்கு வகையான அன்னம் எனப்படுகிறது.)

கூர்ஜர தேசத்து பட்டத்து யானை மிகவும் மதம் கொண்டு யாருக்கும் அடங்காமல், அட்டகாசம் செய்தபடி தெருவில் ஓடியது. ஓர் அந்தணன் ஸ்நானம் செய்து கீதை பதினாராவது அத்தியாயத்தை பாராயணம் செய்தபடி அதன்முன் வந்தான். யானை உடனே அவனிடம் அடங்கியது. இதை அறிந்த அரசன் தானும் அதைப் பாராயணம் செய்து முக்தியை அடைந்தான் என்று இவ்வத்தியாயப் பெருமையைப் பத்மபுராணம் கூறுகிறது.

சத்ருஜயம் அடைய அத்.16, சுலோ. 21. பாராயணம் செய்யவும் என்று மந்த்ரஸாரம் குறிப்பிடுகிறது. அதன் கருத்து:

காமம், குரோதம், லோபம் இம் மூன்றும் நரகத்துக்கு மூன்று வழிகள். அவை ஆத்மாவை அழிப்பவை. ஆகவே இம் மூன்றையும் விலக்கிவிட வேண்டும்.

கீதை பதினாராவது அத்யாய மஹிமையைக் கூறும் பத்மபுராணக் கதையில் கூறுவது: பட்டத்து யானை மதம் பிடித்து ஓடுகையில் அதனை அடக்கப்போன ஒரு சேவகன் அதனால் மிதிக்கப்பட்டு இறந்து யானையாகப் பிறவி எடுத்தான். அதனை விலைகொடுத்து வாங்கிய மாளவமன்னன், அதற்கு ஜுரம் கண்டதால் எவ்வளவோ வைத்தியம் செய்தும் பலன் அளிக்காமல் போகவே, அந்த யானை கூறியபடி, கீதை பதினேழாம் அத்தியாயத்தை பாராயணம் செய்த அந்தணர் மூலம் நீர் தெளிக்கச் செய்து அதை முக்திபெறச் செய்தான். இவ்வாறு பதினேழாம் அத்யாயப் பெருமையைப் பத்மபுராணம் குறிப்பிடுகிறது.

சத்ருபயம் நீங்க அத்.17, சுலோ.17 பாராயணம் செய்யவும் என்று மந்த்ரஸாரம் குறிப்பிடுகிறது. அதன் கருத்து:

பலனை விரும்பாமல் பகவதாராதனை என்ற எண்ணத்துடன் கூடியவர்களால் அதிக சிரத்தையோடு (மனோ வாக் காயங்களால்) செய்யப்படும் தவம் ஸாத்விகம் எனப்படும்.

பகவத்கீதையில் பதினெட்டாவது அத்தியாயம் ஸகலசாஸ்திரங்களின் ஸாரம். விவேகம் என்ற கொடியின் வேர், ஸநகாதிகளை மகிழ்விப்பது. அதற்கு ஒப்ப இக்கதையும் அமைந்துள்ளது. இந்த அத்தியாயத்தைப் பாராயணம் செய்த ஓர் அந்தணருக்கு இந்திரபதவி கிடைத்தது. இதனை அறிந்த இந்திரன் தானும் புஷ்கலம் வந்து அதனைப் பாராயணம் செய்து முக்தி அடைந்தான் என்று இவ்வத்தியாயப் பெருமையைப் பத்மபுராணம் சிறப்பிக்கிறது.

’முயற்சியில் வெற்றி பெற’ அத்.18, சுலோ.66 பாராயணம் செய்யவும் என்று மந்த்ரஸாரம் குறிப்பிடுகிறது. அதன் கருத்து:

எல்லா தர்மங்களையும் விட்டு என்னை ஒருவனையே சரணமடைவாயாக! நான் உன்னை ஸகல பாவங்களிலிருந்தும் விடுவிக்கிறேன். கவலைப் (வருத்தப்) படாதே!

இனி கீதை உபதேசம் நடைபெற்ற இடம் எங்குள்ளது என்பதையும் தற்போது அதன் தனிச் சிறப்புப்பற்றியும் பார்ப்போம்:

ஹரியானா மாநிலத்தில், டில்லி-அம்பாலா ரெயில் பாதையில் அமைந்துள்ள குருக்ஷேத்திரம் காலங்காலமாக தர்மக்ஷேத்திரம் என்று புகழ் பெற்று தழைத்து வந்துள்ளது. அஷ்டதர்மம் வளர்க்க வேண்டும் என்பதற்காகக் குருமஹாராஜா இந்த க்ஷேத்திரத்தில்தான் தம் தேகத்தைத் தியாகம் செய்தார். இதே புனித தலத்தில் மஹரிஷி வேதவியாஸர் வேதங்களைத் தொகுத்தார். வசிஷ்டரும், விச்வாமித்திரரும் இங்குதான் முக்தி அடைந்துள்ளனர். இத்தகைய பெருமைகளையுடைய குருக்ஷேத்திரத்தை அடுத்துள்ள ’ஜ்யோதி ஸரஸ்’ என்னுமிடத்தில் புகழ் பெற்ற ஓர் ஆலமரத்தின் அடியில் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அர்ஜுனனுக்கு கீதை உபதேசம் செய்தார்.

     இந்த புனித ஸ்தலத்தில் மனங்கவரும் வண்ணம் வசீகரமான தேரில் அமர்ந்து அர்ஜுனனுக்கு உபதேசம் செய்யும் நிலையில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் சலவைக் கல் சிலையும், ஆதிசங்கரர் தம் சிஷ்யர்களுக்கு கீதா பாஷ்யம் அருளும் வகையில் அமைந்துள்ள சலவைக் கல் சிலையும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இந்த மகத்தான திருப்பணி ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு பரமாசார்யர்களால் நடத்திவைக்கப்பட்டது. இந்த மஹத்தான வைபவம் நடந்த சமயம் காஞ்சி ஆசார்யர்கள் அருளிய செய்தியில், பகவத் கீதையின் ’தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே’ என்னும் சுலோகத்தைக் குறிப்பிட்டு, அதன் கருத்தையும் விளக்கி, ஒருவன் தன் கடமைகளைச் செவ்வனே செய்வானாகில், அதுவே சத்தாகவும், உயர்ந்ததாகவும், தூயதாகவும் ஆகி ஜயத்தை, வெற்றியைத் தருகிறது. ’ஜய’ என்ற சொல் 18 என்னும் எண்ணைக் குறிக்கிறது. கீதையில் 18 அத்தியாயங்கள், மஹாபாரதத்தில் 18 பர்வங்கள். கீதையில் முதல் ஸ்லோகத்திலும் ’ஜய’ என்ற சொல் இருக்கிறது. அதுவே கீதையின் சாராம்சத்தைத் தெளிவுபடுத்துகிறது. ஒவ்வொருவரும் தர்ம வழியைப் பின்பற்றி, வெற்றியையும், மகிழ்ச்சியையும் அடைய முயல வேண்டும் என்று கிருஷ்ண பகவான் உபதேசித்துள்ளார்.

Home Page