ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்


ஸ்ரீ காமகோடி ப்ரதீபம்
மலர் -21 இதழ் -9,10 ரௌத்ர வருஷம் ஐப்பசி- கார்த்திகை1
அக்டோபர்- நவம்பர் - 1980


கீதையில் முடிச்சுக்கள்

(ஸ்ரீ பரமாச்சார்யர்கள் ஸாதாரா முகாமில் 8.9.1980 அன்று அருளிய அமுதவாக்கின் ஸாரம்)

தொகுப்பு : முல்லைவாசல் ஆர்.கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி, எம்.ஏ.

ஸ்ரீகிருஷ்ண பகவான் பகவத்கீதையை உபநிஷத்ஸாரமாக அருளி உள்ளார். இதில் விஷயங்கள் ஸரளமாகவேதான் கூறப்பட்டுள்ளன. ஆனால் ’ப்ரஸன்ன கம்பீரம்’ என்று ஸம்ஸ்கிருதத்தில் கூறுவது போல எளிய நடையாக இருப்பினும் ஆழ்ந்த கருத்துக்கள் அதிகமாக உள்ளன. கீதையின் ச்லோகங்களில், ஸம்பிரதாயப்படி குருவிடம் பொருளைக் கேட்டு பன்முறை கீதை முழுவதையும் அராய்ந்து பார்த்துத்தான் உண்மையான கருத்தை அறிய முடியும். இதைக் காட்டுவதற்காகவே கண்ணபிரான் சிற்சில முடிச்சுக்களைச் சில இடங்களில் போட்டுள்ளார் போலும். சில கேள்விகளை எழுப்பி விட்டு பதில் கூறாமலே சென்று விட்டார். முடிச்சுப் போட்டு விட்டார். அவிழ்க்கச் சிரமமாக உள்ளது போல் இருக்கிறது. ஆனால் அதன் பதிலையும் ’சாவி’ (Key)-யையும் அவர் வைத்துத்தான் உள்ளார். இப்படி உள்ள இரண்டு இடங்களைக் கவனிப்போம்.

 

            1. அர்ஜுனன், தான் போரிட்டால் பலர் மடிவர்; அதனால் அந்த வம்சத்து ஸ்த்ரீகள் கெட்டு விடுவார்கள். ஸ்த்ரீகள் கெட்டுவிட்டால் வர்ண ஸாங்கர்யம் என்ற பெறும் குற்றம் ஏற்படுமே என்று கேள்வி எழுப்பி உள்ளான்.

 

स्त्रीषु दुष्टासु वार्ष्णेय जायतॆ वर्णसङ्कर्ः |

संकरॊ नरकायैव कुलध्नानां कुलस्य च |   

 

 

1-ஆம் அத்யாயத்தில், ஸ்ரீகிருஷ்ணர் இதற்குமட்டும் பதிலே கூறவில்லை. ஆத்மா நித்யமாதலாலும், யுத்தம் என்பது க்ஷத்திரியனுக்கு ஸ்வதர்மமானதாலும் நீ யுத்தம் செய்யத்தான் வேண்டும். வருந்தக்கூடாது என்று மட்டுமே போதித்து, உனது இந்தக் குழப்பம், மனசின் அழுக்கு ஸரியே இல்லை, இகழ்ச்சியே வரும் என்றும் பேசுகிறார். வர்ண ஸாங்கர்யம் வருமே, என்ன செய்வது? என்ற கேள்வி அப்படியே நிற்கிறது அல்லவா?

 

மேல் நோக்காகப் பார்த்தால் இப்படித்தான் தோன்றும். ஆனால் உண்மை அப்படியல்ல, 3-ஆவது அத்யாயத்தில் ஸ்வகர்மாவை கட்டாயம் செய்யவேணும் என்று கூறி வருமிடத்தில் "லோகஸங்க்ரஹம் என்பதன் பொருட்டாவது கட்டாயம் ஸ்வகர்மாவைப் பண்ணு. பெரியோர் செய்வதைத்தான் மற்றவர் பின்பற்றுவர். எனவேதான் எல்லாம் பெற்று, பேரானந்த வடிவான நானும்கூட கர்மாவைப் பண்ணுகிறேன்" என்று கூறிவிட்டு "நான் என் கடமையைச் செய்யாவிட்டால் இந்த உலக மக்களும் ஸ்வகர்மாவை விட்டுவிட்டு நாசமடைந்து விடுவார்கள். நான் ஸாங்கர்யத்தையும் உண்டு பண்ணியவனாக ஆகிவிடுவேன். இதன் மூலம் மக்களைத் துன்புறுத்தியவனாகவும் ஆவேன்" என்று அர்த்தமுள்ள ச்லோகத்தைக் கூறுகிறார்:

 

lउत्सींदॆयुरिमॆ लॊका न कुर्यां कर्म चॆदहम् |

सङ्करस्य च कर्ता स्यां उपहन्यामिमाः प्रजाः ||

 

            அதாவது "எதிரிகள் மரித்து ஸ்திரீகள் துஷ்டர்களாகி வரும் ஸாங்கர்யம் அத்துணை பெரியதுமன்று; தீர்மானமுமில்லை. ஆனால் தன் தர்ம-கர்மங்களைச் செய்யாமல் விட்டு விட்டால்தான் உலகில் ஒரே குழப்பமும், ஸாங்கர்யமும் பெரியதாக நிச்சயமாக ஏற்படும்" என்பது பகவானின் கருத்து. இவ்விதம் ஸாங்கர்யம் பற்றிய கேள்விக்கு பதில் வந்து விட்டது.

 

2. இதேபோல் மற்றுமொரு கேள்வி 5-ஆவது அத்யாயத்தில் வருகிறது. "மக்கள் மோஹமடைவதற்குக் காரணம் ஞானமாகிய ஆத்ம ஸ்வரூபம் அஞ்ஞானத்தால் மூடப்பட்டு, மறைக்கப்பட்டுள்ளதுதான். எனவே ஞானத்தால் அந்த அஞ்ஞானம் போக்கடிக்கப்பட்டால், அப்போது ஞானத்தால் பரம்பொருள் விளங்கும்" என்று கீழ்க் கண்ட ச்லோகத்தில் கூறுகிறார்:

 

अज्ञानॆनावृतं ज्ञानं तॆन मुह्यन्ति जन्तवः |

ज्ञानॆन तु तदज्ञानं यॆषां नाशितमात्मनः ||

 

ஆனால் அஞ்ஞானத்தால் மறைத்துமூடி அமுக்கப்பட்ட ஞானம் எவ்வாறு அஞ்ஞானத்தைப் போக்கடிக்க முடியும்? முடியுமானல் எவ்வாறு அதனால் மூடப்பட்டு இருக்க முடியும்? முன்பே போக்கி விரட்டி அடித்திருக்க வேணுமே? என்றெல்லாம் வரும் கேள்விகள் நிற்கின்றன. பதில் கூறப்படவில்லை. என்ன செய்வது?

 

இங்கு ஸ்ரீகிருஷ்ணர் கேள்வி கேட்டதைத் தாமே பதில் சூக்ஷ்மமாக 10-ஆவது அத்யாயத்தில் கூறியுள்ளார். "பெரியோர்கள், அறிவாளிகள் என்னை உடல், மனம், வாக்கு எல்லாவற்றாலும் பக்தி பண்ணுகிறார்கள். எப்போதும் என்னிடமே அன்புடன் ஈடுபட்டு வருகிறார்கள். இத்தகைய பக்தர்களுக்கு நானே அந்த ஞானத்தை அளித்து விடுகிறேன்" என்று கூறிவிட்டு அத்தகையவர்களுக்குத் தான் நான் அஞ்ஞானத்தை விரட்டும் ஞான ஓளியை ஆத்மபாவஸ்தனாக இருந்து அளித்து அஞ்ஞானத்தை போக்குகிறேன் என்று இவ்விதம் கூறுகிறார்:

 

तॆषामॆवानुकम्पार्थमहमज्ञानजं तमः |

नाशयाम्यात्मभावस्थः ज्ञानदीपॆन भास्वता || (10-11)

 

            ஞானரூபியாயிருப்பினும் பரமாத்மா ஸர்வ ஸாக்ஷியாக உள்ளதால் எவருக்கும் விரோதி அல்ல. ஆனால் அதே ஞானவடிவமான இவர் "ஆத்மபாவம் எனப்படும் வேதாந்த மகாவாக்யார்த்த ஞானமாகிய மனதினுடைய அகண்டாகார வ்ருத்தியில் பிரதிபிம்பித்து ஆத்மபாவஸ்தராக ஆகி அஞ்ஞானத்தை விரட்டுகிறார். எனவே சுத்த சைதன்யம் அறியாமையைத் தெரிவிக்கும் ஜோதிஸாக இருப்பினும், அகண்டாகாரமான "அஹம் ப்ரஹ்மாஸ்மி" என்ற நிலையில் நிலைத்த மனோவ்ருத்தியினுள் புகுந்து அறியாமையை நிவர்த்தி பண்ணும் என்பது கருத்து. எனவே முன்பு 5-ஆவது அத்யாயத்தில் கேட்ட கேள்விக்குப் பதிலை இங்கு மறைமுகமாகப் பகவான் கூறிவிட்டார்.

 

            இதை வைத்துத்தான் பின்பு வந்த ஸ்ரீவித்யாரண்யர் போன்றவர்கள் உதாரணங்களுடன் இதே விஷயத்தை இவ்விதம் விளக்குகின்றனர். எவ்வாறு சூர்ய கிரணம் ஜோதிர்மயமாக உள்ளதாயினும் தனிப்பட்ட கிரணம் பஞ்சு முதலியவற்றை ப்ரகாசப்படுத்தி விட்டு நின்றுவிட்டாலும் கூட, அதே கிரணங்கள் குறிப்பிட்ட "லென்ஸ்" வழியே சென்றால் அந்தப் பஞ்சு முதலியவற்றை அழித்து விடுகிறதோ இதே போலத்தான் ஆத்மஸ்வரூபமான அறிவும் தனிப்பட்ட ரீதியில் அறியாமைக்கு விரோதியாயில்லாமல் அதை விளக்குவதாக அமைந்தாலும் கூட, அகண்டாகார வ்ருத்தியில் (மனசின் நிலை) உட்புகுந்து (having reflected in the special stage of mind) அறியாமையை எரித்து விடுகிறது.

 

எனவே நாமனைவரும் வேதாந்த சாஸ்திரங்களைக் கேட்டு, மனனம் செய்து நிதித்யாஸனம் பண்ணி அந்த உன்னதமான மன நிலையை அடைய படிப்படியாக முயல வேண்டும்.

மேலும்...

Home Page